தனுவில் அமர்ன்ன ஶரீரி தன்றெ ஸத்தா
தனுவில் அதென்ற இதென்ற தென்னு ஸர்வம்
தனுத யொழிஞ்ஞு தரிச்சிடுன்னு ஸாக்ஷா
லனுபவஶாலிகளாம் இது ஓர்க்கில் ஆரும்
(ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 48)
உடலின் உள்ளுறையும் அகமது தன் மீத்தெளி
நனவில் அது எனது இது எனது என்றனைத்தையும்
உடலடையாளமின்றி உணரும் என்றால்
மெய்மையடைந்தோரே எல்லோரும்
*
நமக்கு பல சார்புகள் உண்டு. சமயம், அரசியல், சமூகம், ஒழுக்கம் இவை சார்ந்த கொள்கைகள் நம்மிடம் இருக்கின்றன. அன்றாட உறவுமுறைகளில் ஒரு அற ஒழுக்கத்தை பேணுதல் அவசியம் என்று எண்ணுகிறோம்.
ஒரு விதியை பின்பற்றி வாழமுடியாதென்றால் அவ்விதியை அமலாக்குவது இயலாத ஒன்று. ஒழுக்க விதியொன்றை சமூகம் ஏற்க வேண்டுமென்றால அது யார்மீது சுமத்தப்படுகிறதோ அவர்களுக்கு அது தெளிவாக புரிய வேண்டும்; அதற்கான திறன் அவர்களுக்கு இருக்க வேண்டும். முதல் பாடலிலிருந்து நாற்பத்தியெட்டாவது பாடல் வரை தனது வாதத்தை அன்றாட அனுபவத்தோடு எவ்வளவு அணுக்கமாக வைக்க முடியுமோ அப்படி வைத்திருக்கிறார் நாராயண குரு.
இவ்வுலகிலிருந்து முற்றாக விலகி நம்மில் நாம் ஆழ்ந்து வாழ முடியும். அங்கு கால-வெளி இல்லை, பெயர்-வடிவு இல்லை, வினையாற்றுபவன்-வினை இல்லை, அறிபவன்-அறிபடுபொருள் என்ற இருமை இல்லை, துய்ப்பவன்-துய்க்கப்படுவது இல்லை. அறிவெல்லை கடந்த தூய இருப்பு அது. எவ்விதமான கொடுக்கல்-வாங்கல் சிக்கலும் அங்கு இல்லை. அதனால் அங்கு எந்த விதிக்கும் தேவை இல்லை. அந்த நிலையிலிருந்து வெளிவரும்போதுதான் உங்களுக்கு ஒர் விதி தேவைப்படுகிறது. கடந்த நிலையிலிருந்து வெளிவருதல் என்பது உங்கள் உடல் பற்றிய நனவு உங்களில் தோன்றுவது. உங்கள் உடலை ஒரு தனி பொருளாக நீங்கள் உணர்கையில் எல்லா வேறுபாடுகளும் தோன்றுகின்றன. ‘நான்’ என்று நீங்கள் சொல்கையில், ‘இது’வும் தோன்றுகிறது.
ஒரே சமயத்தில் கடந்தநிலையிலும் உள்ளார்ந்த நிலையிலும் நாம் இருக்கிறோம் என்பதை நாம் முதலில் உணரவேண்டும். கடந்தநிலையில் உடலில்லாமல் நம்மை எண்ணிப்பார்க்க முடியும். உள்ளார்ந்த நிலையில் நாம் ஒரு உடலுக்குள் இருப்பதாக உணர்கிறோம். சூழலுக்கு மிகப்பொருத்தமான சொல்லையே குரு தேர்ந்தெடுப்பார். சமஸ்கிருதத்தில் உடலுக்கு பல இணைச்சொற்கள் உண்டு – சரீரம், தேகம், தனு என. இவற்றில் தனு என்பதற்கு சிறப்பான இடமுண்டு. உடல் என்பதை நீங்கள் நினைத்துப்பார்க்கையில், அதன் நீட்சி, பருண்மை, எடை ஆகியவை அடிப்படைகள். நீட்சி என்பது வெளியை ஆக்ரமித்துக்கொள்வது. பருண்மை என்பது அதன் இயற்கை உள்ளடக்கம். இது புவியீர்ப்புக்கு உட்பட்டது. அதையே நாம் எடை என்கிறோம். ஆயினும், உடல் என்பதை நாம் கருத்தாக சுருக்க முடியும். அங்கு நீட்சிக்கு அவசியமில்லை. அதற்கு நீட்சி இல்லை என்று பொருளல்ல, அதை நாம் வலியுறுத்துவதில்லை, அவ்வளவே. அதன் பருண்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, அதன் எடையையும் கழிப்பதில்லை. இவற்றை எல்லாம் செய்கையில் உங்கள் உடல் என்பது ஒரு குறிப்பிட்ட எண்ணமாக ஆகின்றது. அதுவே தனு எனப்படுவது.
‘தேகம்’ போன்ற பருண்மையை சுட்டி நிற்கும் சொல்லை குரு உபயோகப்படுத்தி இருக்கலாம். ஆனால் தான் சொல்ல வருவதற்கு மிகச் பொருத்தமான ‘தனு’ என்ற சொல்ல பயன்படுத்துகிறார். உங்கள் உடலில் இருந்தபடி ‘நான்’ என்று எண்ணுகையில் உங்கள் உடல் கிட்டத்தட்ட இல்லாத ஒன்றாகிவிடுகிறது. உங்களது இயல் வடிவான நிறத்தையோ, எடையையோ, உடல்நலத்தையோ, பருமனையோ, இளைப்பையோ நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இவை எவ்வளவு சுருங்கினாலும், நீங்கள் ஒரு உடலெடுத்த உயிரி என்பதை நீங்கள் மறந்துவிடுவதில்லை.
சௌந்தர்யலஹரீயில், அன்னையின் காலடிப் புழுதியை எடுத்து உலகைப் படைக்கிறான் பிரம்மன். அதில், ‘தனு’ வுடன் தொடர்புடைய ‘தனீயாம்’ என்பது பிரபஞ்சப் புழுதியில் மிக மிக நுண்ணிய துகளை குறிக்கிறது. அதுபோல, உங்கள் உடலை உங்கள் மனநிலையோடு ஒப்புவைத்து பார்த்தால், நீங்கள் எளிதாக மனதிலிருந்து உடலுக்கும் உடலிலிருந்து மனதுக்கும் செல்ல முடியும். அப்போது உங்களிடம் ஒரு நெகிழ்வு, ஒரு நீர்மை உண்டாகும். பொருண்மையும் நுண்மையும் எளிதாக ஒன்று இன்னொன்றாக மாறமுடியும்.
அடுத்ததாக ‘சரீரி’ என்ற சொல்லை குரு பயன்படுத்துகிறார். நீங்கள் ஒரு உடலை கொண்டிருந்தாலும் அது அல்ல நீங்கள் என்பதை குறிக்கும் சொல் அது. உங்களுக்கு உடல்சார் எல்லைகள் இரண்டு உண்டு. ஒன்று உங்களுடையதேயான இயல் உடல் எல்லை; அது ஊடுருவமுடியாமை என்னும் இயல்விதியின் கீழ் வருவது; நான் நிரப்பும் அதே வெளியை நீங்கள் எடுத்துக்கொள்ள இயலாது. காதலர் இருவர் ஒருவருக்குள் ஒருவர் கலந்துவிட விழைந்தாலும் அவர்கள் உடல்கள் அவர்களை தடுக்கின்றன. அவர்களிடையேயான அன்பையும் ஈர்ப்பையும் தாண்டி உடல் ஊடுருவமுடியாமையை தக்கவைத்துக்கொள்கிறது.
“இது எனது உடல், இது எனது மனம், இது எனது அறிவாற்றல்” என நீங்கள் சொல்லும்போது அவ்வுடலுக்குள் வைக்கப்படக்கூடியவற்றால் ஆன ஒரு அடையாளத்தை நீங்கள் காண்கிறீர்கள். ‘எனது மனம்’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். அது இந்த ஒரு உடலுக்குள் நிகழக்கூடிய கருத்தாக்கங்களை, இவ்வொரு அலகிற்குள் ஏற்படும் உணர்ச்சிகளை், புலனுணர்வுகளை மட்டும் குறித்து நிற்கிறது.
ஒருவரது அனுபவங்கள் உடலெனும் எல்லைக்குள் நிகழ்வதாகத் தோன்றலாம். ஆனால் அதே நபர் ‘எனது மனைவி’, ‘எனது கணவன்’ அல்லது ‘எனது குழந்தை’ என்பதையும் ‘எனது உடல்’ என்பதைப் போலவே சொல்கிறார். இங்கு மற்றொரு உடலுடன் நிறுவப்படும் உறவு உடல் சார்ந்ததல்ல. அங்கு ‘எனது’ என்பது எதைக் குறிக்கிறது? ஒரு விழுமிய தளத்தில், உறவின் தளத்தில் உங்களால் உங்கள் உடலின் பருண்மையை, உங்கள் இணையரின், குழந்தையின், நண்பரின், ஏன் உங்கள் நாயின், உங்கள் வாகனத்தின் பருண்மையை மறக்க முடியும். ஒரு உறவை நிலை நிறுத்தி அதில் உடலின் எல்லையை கடந்து செல்ல முடிகிறது.
தன்னுணர்வின் எல்லை என்பது முடிவற்ற விரிவு கொண்டது. தனது விரிவைப் பொறுத்து மாறிக்கொண்டே இருப்பது. சாதாரண தன்னுணர்விலிருந்து கடந்தநிலையிலான தன்னுணர்வாக அது மாறுகிறது. கடந்தநிலையிலான தன்னுணர்வு சமூகத் தன்னுணர்வு அல்ல, அது நனவின் ஒரு மையம் மட்டுமே. இங்கு நனவின் மையம் என்பது செயலின்றி நோக்கிநிற்கும் சாட்சி அல்ல. ஏனெனில், ‘என் குழந்தை, ‘எனது நண்பர்’ என்றெல்லாம் சொல்கையில் அன்பெனும் பிணைப்பு ஒருவரை உடல்சார் எல்லைகளிலிருந்து மீறிச் செல்ல வைக்கிறது. நீங்கள் தன்னலம் கருதாத ஒரு துறவி போன்றவர் என்றால், நீங்கள் அனைத்தின்மீதும் அன்பு கொண்டவராய் இருக்கிறீர்கள். நீங்கள் ‘எனது பிரபஞ்சம்’ என்றும் சொல்லலாம்.
இத்தகைய மனப்பாங்கு இவ்வுலகில் நிறைந்தே உள்ளது. பிரெஞ்சு அரசாங்கம் பசிபிக் பெருங்கடலில் அணுகுண்டு பரிசோதனை செய்ய முடிவெடுத்தபோது ஆஸ்திரேலியர்களும் நியூசிலாந்தினரும் ஜப்பானியரும் பரிசோதனை நடத்தப்படவிருக்கும் இடத்துக்குச் சென்று தங்க முடிவெடுத்தனர். ‘அணுகுண்டு உலகிற்கு கேடுவிளைவிப்பது. உலகை அழிக்கும் முன் எங்களை அழியுங்கள்’ என்று கூறி இறந்து போக விழைந்தனர். ‘உலகும் மானுடமும் எங்கள் அன்புக்குரியவை. மானுடம் அழிவதை நாங்கள் விரும்பவில்லை. அதற்காக இறக்கத் தயாராக இருக்கிறோம்’ என்றனர். இது எவ்வகையான அடையாளம்? ‘இது என் மனைவி. இவரை நான் காப்பாற்ற விரும்புகிறேன்’ என்றோ ‘இது என் குழந்தை, அதற்காக நான் எதையும் செய்வேன்’ என்றோ சொல்வது போன்றதல்ல. அவர்கள் தங்களை வாழ்வின் எதிர்காலத்துடன், உலகநன்மையுடன் அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்.
உங்களது அடையாளத்துடன் ஒரு உடலை சேர்த்தீர்கள் என்றால் அதுவே ஸத்தா தனு எனப்படுவது – உங்களது இருத்தலியல் உடல். (மீத்தெளிவான நனவு என்று சொல்லலாம்.) உங்களது வாழ்க்கை விழுமியங்களை இணைக்கும்போது உங்களது இருப்பு பொருள்பொதிந்ததாக ஆகிறது. ‘நான்’ என்று நீங்கள் சொல்வது வாழும் இருப்பொன்றை குறிக்கிறது. எந்த விழுமியங்களுக்காக நீங்கள் வாழ்கிறீர்களோ அவையெல்லாம் உள்ளடங்கிய உங்கள் இருப்பே உங்கள் அடையாளமாகிறது. தடையற்ற உங்களது இயக்கம், உங்களது புரிதல், பொருட்கள் சார்ந்த உங்களது மதீப்பீடுகள் என பலவும் சேர்ந்து உங்களது இருத்தலியல் இருப்பாக ஆகின்றன.
மேலும் மேலும் விழுமியங்களை சேர்த்து உங்களது இருத்தலியல் இருப்பை மேலும் விரித்துக்கொள்ள முடியும். இந்த உடல்சார் போதத்துடன்தான் ‘அவர் என்னவர்’, ‘அந்தக் கட்டிடம் எனது’, ‘அந்த வாகனம் எனது’, ‘இந்த நாடு எனது’, ‘உலகம் எனது’ என்று சொல்கிறீர்கள். இப்படியெல்லாம் சொல்வதற்கு நீங்கள் சாக்ரடீஸ் ஆகத் தேவையில்லை; ரமணராகவோ, யாஜ்ஞவல்கியாராகவோ ஆக வேண்டாம்: நீங்கள் அதை ஏற்கனவே உணர்ந்துதான் இருக்கிறீர்கள்.
‘புதிய விதி எதையும் நான் உன்மீது சுமத்தவில்லை. நீ அறியாத, உணராத அற ஒழுக்கம் எதையும் நான் விதிக்கவில்லை. உனது அன்றாட அனுபவத்திலிருந்தே பொதுமைப்படுத்தி ஒரு ஒழுக்க விதியை கொடுக்கிறேன். உனது உடல்சார் எல்லையை மீறி பிறருடன் உன்னை அடையாளப்படுத்திக் கொள்வதை நீ ஏற்கனவே அறிவாய். அப்படியிருக்கையில், அதை சற்றே விரிவிபடுத்திக்கொள், இனம்கண்டுகொள் என்று மட்டுமே சொல்கிறேன்’ என்கிறார் குரு. மெய்யறிதல் என்பது லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே இயல்வது என்று எண்ணுகிறோம். அந்த எண்ணத்தை உடைத்தெறிய விழைகிறார் குரு. ‘அப்படி எண்ணி மனம் தளராதே. நீ எந்தவிதத்திலும் குறைந்தவர் அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு விதிக்கப்பட்டதல்ல இது. ஏதோ ஒரு மெய்யறிதல் உன்னில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது’ என்கிறார். அப்படி இல்லையென்றால், உனது இணையர் நோயுறுகையில் நீ ஏன் பாதிக்கப்படுகிறாய்?
பிரசவ வலியில் மனைவி துடித்துக்கொண்டிருக்கையில் கணவன் கலவரமடைந்ததைக் கண்ட மருத்துவர் ‘உங்களுக்கு ஏன் இந்த பதற்றம்? இந்த மருத்துவமனையில் நான் பல பிரசவங்கள் பார்த்திருக்கிறேன். ஒன்றிலும் கணவன் இறந்துபோனதில்லை. பயப்படாமல் வீட்டுக்குச் செல்லுங்கள்’ என்றாராம். அம்மனிதரின் மனைவி அவரது ஸத்தா தனுவின் ஒரு பகுதி என்பது அந்த மருத்துவருக்குப் புரியவில்லை போலும்.
எல்லோருக்கும் தன் உடல் சார்ந்த அடையாளம் ஒன்று இருப்பதால் இத்தகைய ஒன்று பொது அனுபவமாகவே இருக்கிறது. உங்களது இணையரோ, அன்பு நண்பரோ உங்களிலிருந்து வேறுபட்டவர் இல்லை என்றால், நீங்களும் முழு உலகும் வெவ்வேறு அல்ல. அதை நீங்கள் சற்றே விரிவுபடுத்த வேண்டி இருக்கிறது, அவ்வளவே.
‘தனு’ என்பதே இப்பாடலின் அடிப்படைச் சொல். ‘இது எனது’, ‘அது எனது’ என்றெல்லாம் ஒருவர் தனது உடல்சார் எல்லைகளை மீறிச் சென்று உணர்கிறார். அவர் தன் உடலைப்பற்றியோ பிறரது உடலின் ஊடுருவமுடியாமை பற்றியோ எண்ணுவதில்லை. அவை எல்லாம் ஒருமை மெய்மைக்குள் அடங்குகின்றன.
ஒருமையே இணைக்கும் மந்தணம். நான் பேசுவதை நீங்கள் கேட்கும்போது உங்களது தனித்தன்மைகளை விட்டு, எனது தனிப்பட்ட இயல்புகளை மறந்து, எனது கருத்தாக்கமும் உங்களுடையதும் ஒன்றேபோல் ஆகும்போதுதான் ‘சொல்’ உங்களுக்கு பொருள்படுகிறது. நமக்குள் தொடர்புறுதல் நிகழவேண்டுமென்றால் நமது உடல்சார் எல்லையை கடந்துசெல்லவேண்டியுள்ளது.
அடுத்ததாக அனுபவம் என்னும் சொல்லை பயன்படுத்துகிறார் குரு, மற்றதைப் போல் ஆதல் அது. வெறும் ஒத்திருத்தல் மட்டும் அல்ல, மெய்யான அடையாளம். ஒன்று மற்றொன்றாய் ஆதல். உங்களது உடல் அமைப்பிலிருந்து மற்றொருவர் உடல் அமைப்புக்கு உங்களை மாற்றுதல். அந்த ஒருமைக்குள் உடல்சார்ந்த இருமை ஒரு பொருட்டல்ல. அதனால்தான் குழந்தைக்கு ஒரு விபத்து நேர்ந்ததாய் கேள்விப்படும் தாய் திகிலடைகிறாள். குழந்தையுடன் அவள் அமர்ந்திருக்கையில், விபத்து நிகழ்ந்தது யாருக்கு என்று எளிதாக சொல்லிவிடமுடியாது. துயரமும் வலியும் அவர்கள் இருவர் முகத்திலும் ஒரேபோல் இருக்கும்.
நமது அன்றாட வாழ்வில் இது மீண்டும் மீண்டும் நிறுவப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு பூனையைத் தூக்கி கொஞ்சும் நீங்கள் “என் செல்லக் குட்டி” என்று சொல்லும்போது உங்களது உடல்சார் எல்லைகளை, உங்கள் உடல் எனும் அடையாளத்தை தாண்டிச் செல்கிறீர்கள். இதுவும் மெய்யறிதலின் ஒரு பகுதிதான் என்று யாருக்கும் தெரிவதில்லை. அது இன்னும் செம்மையாக வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஒருவர் மெய்யறிந்தவர் என்று நீங்கள் சொல்கையில் அவர் ஒரு பூனையை அணைத்துக் கொள்கிறார் என்பதில்லை. அதற்கு மேல் ஒன்று இருக்கிறது. ஆனால், பூனையை அணைப்பதில் ஒரு தொடக்கம் நிகழ்கிறது.
இந்தப்பாடல் ஒரு பெரும் தொன்மத்தை சிதறடிக்கிறது. முழுமுதலை உணரும் நிலைக்கு மிக அருகில் வந்துவிட்டீர்கள். இப்போது அது உங்களுக்கு மிக அருகே, உங்களது உள்ளங்கையில் உள்ளது என்று சொல்லலாம். ‘இறைவனின் அரசு உங்களருகே, உங்கள் இதயத்தில் உள்ளது’ என்று சொன்ன யேசுவை மக்கள் இன்னும் ஐயப்படுகின்றனர். ‘அது அவ்வளவு அருகில் இருக்கிறதென்றால், அதற்கான அறிகுறிகள் எங்கே? மேகங்கள் இன்னும் இளஞ்சிவப்பாகாதது ஏன்? மரங்கள் ஏன் ஒளிரவில்லை? இறைவனின் குரலில் ஏன் அவை பேசவில்லை?’ என்று கேட்கின்றனர். ‘போலியானவர்களே, உங்களுக்கு எந்த அறிகுறியும் காட்ட மாட்டேன் நான்’ என்கிறார் யேசு.
மதம் சார்ந்த சொற்கள் எல்லாம் நம்மை அச்சுறுத்துகின்றன, குழப்புகின்றன. நாராயண குரு நமக்கு துணிவளிக்கிறார்: ‘அஞ்சாதே, நீயும் நல்லவரே. மெய்மை அடைதலின் சாரம் உனது அன்றாட வாழ்வனுபவத்தில் உள்ளது’ என்கிறார். அதை நீங்கள் உணர்கையில், தனிமையில் தோயும்போது மட்டுமல்லாது பிறருடன் வாழ்கையிலும் ஒரு நிறைவை நிறுவமுடியும். தனித்திருக்கையில் எப்போதும் நல்லவராயிருத்தல் எளிது. போப் முன்னிலையில் எல்லோரும் பண்போடும் பணிவோடும் மட்டுமே நடந்துகொள்வதால் அவருக்கு யாரையும் அறைய வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அவரை புண்படுத்தும் சொல்லொன்றும் சொல்லப்படுவதில்லை. பின் அவர் எதற்கு சினம் கொள்ள வேண்டும்? எப்போதும் நல்லவராயிருத்தல் அவருக்கு எளிது. ஆனால் அவரை சிக்கல்கள் நிறைந்த ஒரு சந்தையில் கொண்டு விட்டால் அவரது உண்மையான பாங்கு நமக்கு தெரிய வரும். முழுமுதலுடன் ஒன்றிய யோகிக்கு எவ்விதமான அற ஒழுக்கமும் தேவையில்லை.
உங்களுக்கு மெய்மை கைகூடுதல் என்பது இங்கு, இப்போது – நீங்கள் பிறரையும் பிறர் உங்களையும் தீண்டக்கூடிய சமூகத்தில் – நிகழவேண்டும். மெய்மை அடைதல் என்பதை ஏதோ புனிதமான ஒன்றாகக் கருதுகிறீர்கள். அதை அனைத்திலிருந்தும் விலக்கி தனியாக வைக்க எண்ணுகிறீர்கள். அதாவது, உங்களால் அதுவாக வாழ இயலாது என. உங்களுக்கு அது தேவையென்றால் அது எங்கும் எப்போதும் நிகழ வேண்டும். உங்களது முழுநிறைவென்பது எப்போதைக்குமானது; ஞாயிறன்று பள்ளி செல்லும்போது மட்டும் தேவைப்படுவதல்ல. இக்கணம் நீங்கள் முழுநிறைவு கொண்டவர் என்றால் அன்றாட வாழ்விலும் நீங்கள் முழுநிறைவு கொண்டவராகத்தான் இருக்க வேண்டும்.
அடுத்த பாடலுக்குப் பிறகு பெரும் மாற்றம் ஒன்று நிகழ்கிறது. நூறு பாடல்களையும் ஒரு மாலையாகக் கொண்டால், முதல் நாற்பத்தியொன்பது பாடல்கள் இறங்குமுகமான முரணியக்கமாக காட்சியளிக்கின்றன. ஐம்பதாவது பாடல் முதல், ஏறுமுகமான முரணியக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறங்குதல் எளிது, ஏறுவது எளிய ஒன்றல்ல.