அறிவு நிஜஸ்திதியிங்கறிஞ்ஞிடானாய்
தர முதலாய விபூதியாயி தானே
மறியுமவஸ்தயிலேறி மாறி வட்டம்
திரியுமலாதசமம் திரிஞ்ஞிடுன்னு
(ஆத்மோபதேச சதகம் – பாடல் 33)
அறிவு தன்னியல்பறிவதற்கிங்கே
நிலம் முதலாய கூறுகளாகி
சுழன்றேறி மாறி வட்டமிட்டு
எரியும் கொள்ளிபோல் சுழல்கிறது
*
எல்லா காலங்களிலும் உலகெங்கிலும் மானுடர் படைப்பை விளக்க முயன்று வந்துள்ளனர். இந்த முயற்சியில் பல கதைகள் இட்டுக் கட்டப்பட்டன. செமிடிக் மதத்தினரைப் பொறுத்தவரை ஆதியில் ஒரு இருட்குழியில் வாழ்ந்த கடவுள் மட்டுமே இருந்தார். அவர் ஒரு உலகை படைக்க எண்ணினார்; ஆறு நாட்களில் இன்றுள்ள அனைத்தையும் தன் விழைவு கொண்டே அவர் படைத்தார்.
படைப்பு குறித்த தொன்மத்தை நம்பாத அறிவியலாளர் பெரு வெடிப்பொன்று நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். மிக ஒடுங்கிய பொருளொன்று பல்வகை விண்மீன்கள், கிரகங்கள், கோள்கள் அடங்கிய அமைப்புகளாக பரந்து விரிந்தது. உயிர் தோன்றி பின் பரிணாம வளர்ச்சி பெற்று நனவு தோன்றியது. இன்றும், மதவாதிகளும், அறிவியலாளரும் நனவின், உயிர் வாழ்தலின் பொருள் என்ன என்று கண்டுபிடித்துவிட முயன்றுகொண்டிருக்கின்றனர்.
இப்பாடலில் நாராயண குரு இந்தக் கேள்விக்கான தனது அணுகுமுறையை முன்வைக்கிறார். இவ்வுலகம் எவ்வாறு தோன்றியது என்று அறியும் ஆவலை தணித்துக் கொள்வது மட்டுமல்ல அது. இங்கு உரையாடலின் மையமாக இருப்பது அகம். நாம் குறிப்பிடும் அகம் என்பது ஒரு தனித்த உயிரியின் ஆன்மா மட்டுமானதல்ல என்பதை ஏற்கனவே நிறுவி விட்டோம். உருப்பெற்றவை அனைத்திற்குமான ஒற்றை மெய்மை அது. இந்த நனவைக் கொண்டுதான் நாம் காண்பதும், கேட்பதும், எண்ணுவதும், உணர்வதும், அனுபவிப்பதும் நடைபெறுகின்றன.
அகத்தின் வழியே நம்மால் புற உலகை காண முடியும். அதே சமயம் நமது கவனத்தை புறத்திலிருந்து அகம் நோக்கி திருப்பி அதன் மூலத்தை அறியவும் முடியும். புறம் நோக்கி நாம் காண்பது அறிதல். ஆனால், நம் அகம் நோக்கி திரும்புவோமென்றால் அது அறிதல் அல்ல. பொருட்களைப் பற்றி அறிவதற்கு நாம் பழக்கப்பட்டிருப்பதால் உணர்தலும் ஒருவகை அறிதல் என்றே நமக்குத் தோன்றுகிறது. ஆனால் அப்படி அல்ல. அது ‘ஆதல்’. எதுவாக ஆதல்? அறிவெனவே ஆதல். உணர்தலில் அறிதல் என்பது அறிவை அறிதல் என்றால் அது ஒரு புறப்பொருளை அகம் காண்பது என்றாகும். அப்படியும் அல்ல. அகம் புறம் என்ற வேறுபாடு தோன்றும் அக்கணமே ஆதல் இல்லாமலாகிறது.
அகம் புறம் நோக்கி திரும்புகையில் இவையெல்லாமாக அது தெரிவது ஏன்? படைப்பு குறித்த தொன்மங்களில் தெய்வம் தனிமையை உணர்ந்ததாகவும், தனக்கு துணை வேண்டும் என எண்ணி இவற்றையெல்லாம் படைத்தது என்றும் படிக்கிறோம். முதலில் தோன்றிய ஆவியின் (spirit) தனிமை குறித்து சில உபநிடதங்கள் பேசுகின்றன. வெறும் தொன்மங்களாக மட்டுமில்லாமல், ஆழ்ந்த தத்துவம் குறித்தும், மீஇயற்பியல் குறித்தும் பேசும் ப்ருஹதாரண்யகம் போன்ற உபநிடதங்கள் நம்முள் உள்ள அறிவே குறிப்பிட்ட வடிவங்கள் கொண்டு ‘விபூதி’யாக மாறி தன்னைத் தானே வெளிப்படுத்திக்கொள்கிறது என்று கூறுகின்றன.
ஆக, அகமே மாறுகிறது, உருமாற்றம் கொள்கிறது. அந்த உருமாற்றங்களில் பற்பல இயல்கைகள் உள்ளன. ஒரு கலைஞர் தன் கலைத்திறனை வெளிப்படுத்த எண்ணுவது போன்றது அது. அவர் எதுவும் செய்யாதிருக்கையில் அவரது திறன்களை எவரும் அறிவதில்லை. ஆகவே அவர் ஒன்றை வரைகிறார். ஆனால் அதைத் தவிர மிகப் பல் இயல்கைகள் உள்ளன. அவரால் ஓவியம் தீட்ட முடியும், சிற்பம் செதுக்க முடியும். கட்டுமானத்தின் வழியே, பொருட்களின் கலவை வழியே பல்வேறு படைப்புகளை உருவாக்க முடியும். ஒற்றைப் பேனாவோ தூரிகையோ கொண்டு எண்ணற்ற கலைப்படைப்புகளை அவரால் இயற்ற முடியும். அத்தனையும் ஒற்றை மனமொன்றின் வெளிப்பாடு மட்டுமே.
அதே போல், நாம் பேசும்போது நமது ஒற்றை மனதையும் பேச்சுறுப்புகளையும் மட்டுமே பயன்படுத்துகிறோம். என்றபோதும், முறையாகக் கையாண்டால் எண்ணற்ற ஒலியமைப்புகளை நம்மால் உருவாக்க முடியும். ஒவ்வொரு சொல்லை உச்சரிக்கும்போதும் ஒரு புதிய கருத்துரு உண்டாகிறது, அதில் பொருள் எழுகிறது. இவையும் ‘விபூதி’யே.
ஒரு இசைக் கலைஞரால் பல்வகையான ‘த்வனி’களை உருவாக்க முடிகிறது. ஒரு கவிஞரின் உதவியோடு சொற்களையும் பொருட்சாயல்களையும் (shades of meaning) கொண்டு அதனை விரித்துக்கொண்டே செல்ல முடியும். கவிதைக் கணத்தை இன்னிசையோடு இணைத்து முடிவேயில்லாத இசைக்கோவைகளை உண்டாக்க முடியும். ஒவ்வொரு இசைக்கோவையும் அக்கலைஞரின் இசைமையின் இயல்கையை வெளிப்படுத்தும்.
நாம் அகமெனக் குறிப்பிடுவது வெறும் இன்மையை அல்ல. நமது அகம் என்பது இயல்கைகளின் பேராழி. அதன் இயல்பென்பது வெறும் இருத்தல்தான் என்றாலும் வாழ்வெனும் தளத்தில் எல்லையற்ற படைப்பூக்கம் கொண்டது அது. தன்னை அது வெளிப்படுத்துகையில், அறிவே தன் இயல்கைகளை அறிய இவையெல்லாமாக மாறுவது போல் தோன்றுகிறது. காண்பதற்கு கண்களோ, நுகர்ந்து மகிழும் மனமோ இல்லாத நிலையில் மலைகளிடையே கதிரவன் எழுகையை கற்பனை செய்து பாருங்கள். அதைக் கண்டு மகிழ எவருமே இல்லையென்றால் வடிவம், வண்ணம், அழகு இவையெல்லாமே வீண் அல்லவா? வசந்தத்தில் எல்லா மலர்களும் மலர்ந்திருக்கையில் அவற்றின் அழகில் மனமழிய எவருமே இருக்கப் போவதில்லை, மயக்கத்தோடு முரல்வதற்கு வண்டுகளேதும் வரப்போவதில்லை.
இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கையில், மானுட மனமும் புலன்களும் எவருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல என்றுணரலாம். அவை இந்த முழு பிரபஞ்சத்திற்கு சொந்தம். பிரபஞ்சம் தன்னைத்தானே கண்டுகொள்ளூம் வழி அது.
பரிணாம வளர்ச்சி என்பதை ஏற்பவர்கள், முற்பட்ட நிலை மாறி இன்னும் சிறப்பான நிலையை எட்டுவதற்கு தன்னை தயார் செய்துகொள்கிறது என நம்புகின்றனர். அவர்கள் உடல் என்பது ஒரு குறிப்பிட்ட வடிவில் ஒருங்கிணைக்கப்பட்ட பொருள் என்றே கருதுகின்றனர். உலகில் உயிர் தோன்றி வளர்ந்த வரலாற்றை ஆராய்ந்தால் மனித இனம் தோன்றுவதற்கே அனைத்தும் நிகழ்ந்ததாகத் தோன்றும். அதுவே உச்சம் என்றால், மொத்த பிரபஞ்சமுமே தன்னை தான் அறியவே பொருளில் இருந்து உயிர்கொண்டதாகவும், அதுவே உயிரினங்களாகவும், அவையே உயர் உயிரிகளாகவும் ஆகி இறுதியில் நனவென்பது உருவாகும் வரை பரிணாம வளர்ச்சி பெற்றதாகவும் தோன்றும். நனவென்பது எட்டப்பட்ட பின் புலனுணர்வு, உணர்ச்சி, அறியும் ஆற்றல் என செம்மையாகி விரிவு பெற வேண்டிவந்தது. பின் இறுதியில் இவையெல்லாம் ஒன்றுசேர்ந்து காரண-காரிய சட்டகத்துள் அடங்கின. அதன் பின்னரே நனவால் பிரபஞ்சத்தை முழுதறிய முடிந்தது. அந்த பிரபஞ்சத்தை காண்பது யார்? பல பில்லியன் வருடங்களாக தான் உருவாக்கிய மனத்திறன்கள் (faculties) வழியாக பிரபஞ்சமே தன்னை பார்த்துக் கொள்கிறது என்பதே அறிவியல்வாதம்.
ஆத்மோபதேச சதகம் வழியாக காலம், வெளி, பெயர், வடிவம் ஆகியவற்றைக் கடந்து செல்வது எப்படி என்று நாம் அறிகிறோம். இப்படிப் பார்த்தால், அகம் என்பது முதலும் முடிவும் அற்றது. எந்த வடிவிலும் பெயரிலும் அதை அடக்க முடியாது. சிறப்புப் பண்புகள் எதுவும் அதற்கு இல்லை என்றாலும், நனவுசார் வாழ்வுக்கு நாம் அளிக்கும் ஒவ்வொரு பண்பும் அதன் பகுதியாகவே இருக்கிறது. ஆக, தன் இயல்பை அறிவதற்கு அந்த அறிவே இவை எல்லாமாக உருப்பெற்றுள்ளது என்று சொல்லலாம். இது அறிவியலாளரின் அணுகுமுறையிலிருந்து பெரிதும் வேறுபட்டதில்லை.
நனவின் முக்கிய பண்பென்பது அது மாறி மாறி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது என்பதுதான். ஒரு கணம் அது இருள்கிறது; எதுவுமிருப்பதில்லை, அது அங்கேயே வெறுமனே இருக்கிறது. பின் அது விழிப்பு கொண்டு நனவுலகில் வெளிப்படுகிறது. இங்கு அது பிறவற்றிலிருந்தெல்லாம் வேறுபட்டது போல தொடர்புறுகிறது. கற்பனை கொண்டு பறக்கிறது, எண்ணத்தில் மிதக்கிறது, அனைத்துவகை மனநிலைகளையும் உணர்கிறது. பின் மீண்டும் அசைவற்று நிற்கிறது.
நமது புதிரான இருப்பை, எரியும் கொள்ளிக்கட்டை ஒன்றை இருட்டில் 8 போன்ற வடிவில் சுழற்றுபவனோடு ஒப்பிடுகிறார் குரு. இந்த 8 என்பது பல நிலைகள் வழியே நகரும் நனவைக் குறிப்பது. அங்கு எரிவது ஒரு புள்ளியில் மட்டுமே ஒளிர்கிறது. ஆனால் அதைச் சுழற்றுகையில் பல நெருப்பு வரிகளும் வடிவங்களும் தோன்றுகின்றன. அது பேனா கொண்டு எழுதுவது போன்றது: மிகச்சிறிய ஒரு புள்ளியிலிருந்துதான் சிறிதளவு மை வெளிவருகிறது. ஆனால் எழுதிச்செல்கையில் அந்த மை பல்வேறு வடிவாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வடிவாக்கமும் தனக்கென தனிப் பொருள் கொண்டது.
நீங்கள் எழுதுவதற்கும் உங்கள் சிந்தனைக்கும் இடையே என்ன வேறுபாடு? உங்கள் மனம் என்பது பேனாவின் முனையைப் போல நகரும் ஒரு நனவுப் புள்ளி. உங்கள் மனதில் அகம் நோக்கி திரும்புவீர்கள் என்றால், உங்களது நனவுப் புள்ளி வெறும் ஒளிர்வு மட்டுமே. அந்த ஒளிர்வை செயல்படவும் மலரவும் அனுமதித்தால், அது பேனா எழுதுவதைப் போல. காகிதத்தில் மை படச் செய்வது மட்டுமல்ல அது. அந்த மை ராமாயணமாகலாம், மஹாபாரதமாகலாம், Odyssey-யாகலாம், Divine Comedy-யாகலாம் – மிகச்சிறந்த எழுத்தாளரின் பேரிலக்கியமாகலாம்.
நமது தத்துவம், வரலாறு, கவிதை, ஓவியம் என அனைத்துமே ஒரு பேனா முனையைக் கடந்தே வந்துள்ளன. அதே போல, நாம் காணும் மொத்த பிரபஞ்சமும் அதன் விரிவும் நமது தனிப்பட்ட நனவிலிருந்து வரும் தொகுதியே. நமக்காக வேறெவரும் காண்பதில்லை, அறிவதில்லை. பிறரது அனுபவங்கள்கூட மறுசுழற்சி செய்யப்பட்டு, நாம் அவற்றை மெய்யாக அறிவதற்கு முன்னரே, நம்முடையவையாக்கப்பட வேண்டும். நாம் காணும் விரிவென்பது ஒரு சின்னஞ்சிறு பொறியிலிருந்து நாம் தோற்றுவித்ததே.
இப்பிரபஞ்சம் முழுதையும் படைத்தவர் என்று நாம் புகழும் அந்தப் படைப்பாளியே இன்னும் இங்கமர்ந்தபடி நமது இருப்பின் உட்கருவை படைத்துக்கொண்டிருக்கிறார் என்பது வாழ்வின் பேரதிசயங்களில் ஒன்று. உங்களது கருவும் பிரபஞ்சத்தின் கருவும் வேறுவேறல்ல. அந்த அடையாளத்தை நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணமும் அடைவீர்கள் என்றால் நீங்கள் பிரபஞ்சத்தின், உங்களது செயல்களின், உங்களது கருத்துகளின் மையமாவீர்கள். உங்களது எண்ணங்களே உங்கள் பிரபஞ்சத்தின் எண்ணங்களாக, கருத்துகளாக, மாறுபாடுகளாக ஆகிவிடும். இது உங்களை படைப்புப் புலத்துடன் ஒன்றுகலக்கச் செய்யும். நீங்கள் ஒரே சமயத்தில் முழுமுதலாகவும், அதனுள் இருக்கும் பற்பல உறவினர்களாகவும் இருப்பீர்கள். நீங்கள் எதையும் சாராத இருப்பு. அதே சமயம், பற்பல சார்பு நிலைகளுக்குக் காரணமும் நீங்களே.