அறிவது தர்ம்மியெ அல்ல, தர்ம்மமாம், ஈ
அருளிய தர்ம்மி அத்ருஶ்யமாகயாலே
தர முதலாயவ ஒன்னுமில்ல, தாங்குன்னு
ஒரு வடிவாம் அறிவுள்ளது ஓர்த்திடேணம்
(ஆத்மோபதேச சதகம் – பாடல் 32)
அறிவது தர்ம்மியை அல்ல தர்மங்களையே
தர்ம்மியை கட்புலனறிவதில்லை
உலகு முதலாயவை ஒன்றும் இல்லை
அறிவு தாங்கும் ஒரு வடிவமே என்றறிக!
*
இப்பாடலை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ப்ருஹதாரண்யக உபநிடதத்தின் முதல் அத்தியாயத்தில் நான்காவது பகுதிக்கு சங்கரர் எழுதிய உரையை நீங்கள் படித்திருக்க வேண்டும். சங்கரரது அனைத்து உரைகளையும் போலவே அதுவும் மிக விரிவானது, எளிதில் வாசிக்கக் கூடியது. அதை படித்திருக்கவில்லை என்றால் Kant எழுதிய ‘Critique of Pure Reason’-ஐ கவனமாக வாசிக்க வேண்டும். இருவருமே அறிவின் இரண்டு கூறுகளை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்கின்றனர்: ஒன்று அனுபவம் என்று கூறப்படுவது, மற்றொன்று அனுபவத்திற்கான காரணம் என கூறத்தக்கது. அனுபவம் என்பது நாம் அனைவரும் நன்கறிந்ததே: அனுபவம் ஒருவருக்கு அவசியம், அது மிக முக்கியமானது என்றுதான் அனைவரும் கூறுகின்றனர்.
உண்மையில் அனுபவம் அல்லது உணர்தல் என்பது என்ன? சுருங்கச் சொன்னால், ஒன்று என்னவாக உள்ளது என்பதை அறிதலே அனுபவம். அந்த ஒன்று ஏன் அப்படி உள்ளது என்பதை அறிதல் வேறு. இப்போது நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குப் புரிகிறது. இது ஒரு அனுபவம். நான் இங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் ஏன் உணர்கிறீர்கள்? இது ஏதோ கனவல்ல, விழிப்புநிலையில் ஏற்படும் மெய்யனுபவம்தான் இது என்று உங்களுக்கு ஏன் தோன்ற வேண்டும்? உங்களுக்கும் பிறருக்கும் ஏற்படும் அனுபவங்கள் தனிப்பட்டவை அல்ல, பொதுவானவை என்று உங்களை உணர வைப்பது எது? Kant ‘என்ன’ என்பதற்கும் ‘ஏன்’ என்பதற்கும் இடையில் ஒரு கோட்டை வரைகிறார். ‘ஏன்’ என்பது முன்னறிவு சார் முடிபு (a priori judgement) என்றும் ‘என்ன’ என்பது பின்னறிவு சார் முடிபு (posteriori judgement) என்றும் கூறுகிறார்.
‘நீங்கள் அனுபவம் அல்லது உணர்தல் என்று சொல்வதன் ஊற்றுமுகம் எது?’ எனக் கேட்கிறார் சங்கரர். உடல் என்பதே மூலம். ஒரு புலனுணர்வு, ஒரு அறிதல் அல்லது ஒரு நினைவின் மூலம் நாம் அடைபவைதாம் அனுபவங்கள். என்ன பெயர் கொடுத்தாலும் இவையெல்லாம் உடல் நிலை சார்ந்த விளைவுகளே. அதனால் அவற்றை அகம் என்று சொல்ல முடியாது. அவற்றின் மூலம் அகமல்லாததன் பண்புகளால் ஏற்கனவே மாசுபட்டது. அனுபவம் என்பதிலிருந்து விலகி அனுபவத்தின் மூலம் நோக்கி செல்ல வேண்டும் என்கிறார் சங்கரர்.
சங்கரர் கூற்றையும் Kant கூற்றையும் இணைத்து, தர்ம்மிக்கும் (நிலம்) தர்மத்திற்கும் (நிலத்தின் மீது தோன்றியது) இடையில் ஒரு கோடு கிழிக்கிறார் நாராயண குரு.
வேறொரு அறையில் இருக்கும் ஒருவரை நாமிருக்கும் அறைக்கு அழைப்பது போன்றதே நினைவு என்பது மேலைக் கருத்து. இங்கு இல்லாதவர் இங்கு வர வேண்டும், எனவே அவரை அழைக்கிறோம். அடுத்த அறையில் இருந்து அவர் இந்த அறையில் நுழைகிறார், நாம் வேண்டி அழைத்த ஒருவராக அவரை நாம் அறிகிறோம். ஆனால் உங்களது மூளையில், நினைவுப் பெட்டகம் என்று சொல்லத்தக்க ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு ஏதாவது வருகிறதா என்ன? நீங்கள் நினைத்துப் பார்க்கையில், உங்கள் மூளையின் ஏதோ இருட்டறையில் இருந்து பூட்டப்பட்ட கதவைத் திறந்துகொண்டு வெளிவந்து ‘இதோ வருகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு மூளையின் இன்னொரு பகுதிக்கு ஏதாவது செல்கிறதா? அப்படி ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை.
மூளை என்பது grey matter-ஆல் ஆனது. ஒரு நுண்ணோக்கியின் கீழ் அதை வைத்துப்பார்த்தால் நரம்பு செல்கள் மிதக்கும் சில நீர்மங்களைத்தான் பார்க்க முடியும். அந்த நரம்பு செல்கள் synapses எனப்படும் நுனிகள் கொண்டிருக்கும். அவை பிற நரம்பு செல்களுடன் பிணைந்திருக்கும். ஏதோ ஒன்று நிகழ்கையில் உங்களது ஆற்றல் ஒரு விதமாக கூச்சமடையும். நினைவு மீட்டலின் போது இந்த synapses அடையும் உருமாற்றம் மட்டுமே ஆய்வாளர்களின் கவனத்திற்கு வந்துள்ளது. நீரின் மேல்தளத்தில் சிற்றலைகள் எழுவது போன்ற, ஒரு நீர்ச்சுழல் போல தோன்றும் மாற்றமே அவர்கள் கண்டது. வேறெதுவும் மாறுவதில்லை. அந்த அலைகளின் பண்பு, இயக்கம், வீக்கங்கள், குழிகள் இவையே நினைவுகளாக கருதப்படுகின்றன.
பியானோவில் உள்ள தந்தி நாண்களால் குறிப்பிட்ட அலைவரிசையில் ஏற்படுத்தப்படும் அதிர்வுகளே பீத்தோவனின் ‘Appasisionata’ sonata என்று சொல்வது போன்ற மடமை இது. பியானோவை இசைக்க நீங்கள் அதில் உள்ள விசைக் கட்டைகளை தீண்ட வேண்டும். அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள சுத்தியல்கள் தந்திகளைத் தட்டி குறிப்பிட்ட சுருதியில் அதிர்வுகளை உருவாக்க வேண்டும். அதிர்வுகளிலிருந்து இசை தோன்றுகிறது என்று சொல்வதும், வீக்கங்கள் நினைவுகளை தோற்றுவிக்கின்றன என்று சொல்வதும் தேரை குதிரைக்கு முன்னால் கட்டுவது போன்றது.
அறிவியலாளர் உண்மையின் ஒரு கூறை ஏற்றுக்கொள்கின்றனர்: நினைவு என தனிப்பட்ட ஒன்று எங்கேயோ இல்லை என்றுதான் சொல்கின்றனர். இயற்பியல் சார்ந்த, வேதியியல் சார்ந்த அறிவுப் பின்புலத்தை வைத்து நாம் கண்டறியக்கூடுவது அவ்வளவுதான்.
மேலதிகமாக வடிவு பற்றி கூறுகிறார் நாராயண குரு. நமது தூய நனவில் ஒரு குறிப்பிட்ட வடிவம் ஏற்படுகிறது. அந்தப் பகுதியை மட்டும் தனியாக துண்டிக்கும்போது அதனை அனுபவ அறிவு என்கிறோம். அனுபவவாதிகள் (empiricists) அனுபவப் பகுதியை மட்டுமே கணக்கில் கொள்கின்றனர். Locke, Hume, Berkeley – இவர்களை எல்லாம் நாம் அனுபவவாதிகள் என்கிறோம். இது தவறான வகைப்படுத்தல். ஏனெனில், Locke மட்டுமே புலன்சார் அனுபவத்திற்கு முதன்மை அளித்தவர். Hume அதனை கேள்விக்குள்ளாக்கினார், Berkeley அதை மறுத்தார். அனுபவம் என்ற பின்புலத்தில் அவர்கள் ஒருவர் கருத்தை மற்றொருவர் மறுதலித்தார் என்பதால் அவர்கள் அனைவரையும் அனுபவவாதிகள் என்று சொல்வது பிழையான வகைப்படுத்தல்.
அனைத்து தத்துவவாதிகள் குறித்த அறிதல் இல்லாதவரிடம் பெயர்களை சொல்லிச் செல்வது வீண்வேலை. Locke, Hume, Berkeley இவர்களையாவது நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். Locke-ஐப் பொறுத்தவரை, ஒருவர் பிறவியிலேயே கொண்டிருக்கக்கூடிய எண்ணங்கள் என ஏதுமில்லை. மனிதன் முன்முடிவுகளற்ற தூய மனத்துடன் (tabula rasa) இவ்வுலகிற்கு வருகிறான். குழந்தையின் மனதில் எதுவும் பதிந்திருப்பதில்லை. அதன் புலன்கள் வழியே அதற்கு இவ்வுலகம் அறிமுகமாகிறது. வலியும் இன்பமும் ஏற்படுத்தும் மனப்பதிவுகளிலிருந்தும் இனிமையானதும் அற்றதுமான அதிர்வுகளிலிருந்தும் அது எண்ணங்களை உருவாக்கிக்கொள்கிறது. மக்கள் அதனிடம் பெயர்களை சொல்கிறார்கள், வடிவங்களை காட்டுகிறார்கள். அதன் வழியே பெயர்-வடிவம் சார்ந்த ஒருங்கிணைப்பு அதன் மனதில் நிறுவப்படுகிறது. மெல்ல மெல்ல காரண காரியங்களை தொடர்புறுத்திக் கொள்கிறது. விரைவில் காரண காரியக் கொள்கையை முற்றாக கைக்கொள்கிறது.
David Hume இதை கேள்விக்குள்ளாக்கினார்: ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்று நிகழ்வதால் மட்டுமே இரண்டிற்கும் இடையே ஒரு காரண காரியத் தொடர்பை ஏற்படுத்துவது முறையா? நீர் கொதிப்பதையும் தீ எரிவதையும் காண்கிறோம். தீ எரிவது முன் நிகழ்வு, நீர் கொதிப்பது பின் நிகழ்வு. ஆக, இரண்டையும் தொடர்புறுத்தி நீர் கொதிப்பதற்குக் காரணம் தீ என்றும் இந்த இணைநிகழ்வுகள் எப்போதும் சேர்ந்தே வரும் என்றும் சொல்கிறோம். ஒன்றையொன்று தொடர்ந்து நிகழ்வதாலேயே ஒன்று பிறிதொன்றிற்கான காரணம் என்கிறோம். இதற்குக் காரணம் உளவியல் ரீதியாக இது இவ்வாறு நம்முள் பதிந்துள்ளது, அது அவ்வாறிருக்கத் தேவையில்லை என்கிறார் அவர்.
முறையான சிந்தனைக்குள் ‘தேவை’ என்ற கொள்கையை கொணர்ந்தவர் Descartes. பிறவியிலேயே அகத்தில் இருக்கக்கூடிய சான்று ஒன்றால் சிந்தனை உறுதிசெய்யப்படுகின்ற அறிவின் ஊற்றுமுகம் ஒன்று உண்டு என்றார் அவர். அதனை அவர் தற்சான்று (self-evidence) என்றார். இது கணிதத்தில் காணப்படும் ஒன்று. இரண்டும் இரண்டும் நான்குதான். ஐந்தோ மூன்றரையோ ஆகவே முடியாது. இரண்டும் இரண்டும் நான்குதான் என்று ஏற்கக்கூடிய ஒரு அகக் கட்டாயம் எல்லோருக்குள்ளும் உண்டு. அத்தகைய தற்சான்று ஒரு கணிதவியல் தேவை. Hume இதை ஏற்றுக்கொண்டாலும், நெருப்புதான் நீரை கொதிக்கச் செய்கிறது என்று நம்புவதில் கணிதவியல் தேவை உள்ளதா என்று கேட்டார். வேறு இயல்கைகளை கற்பனை செய்யமுடியும் என்பதால், அது வெறும் உளவியல் தேவை மட்டுமே.
ஆக, Locke-யின் அனுபவவாத நிலைபாடு கேள்விக்குள்ளாக்கப்பட்டு மறுக்கப்பட்டது. முழுமையாக அது நிராகரிக்கப்படவில்லை என்றாலும், Hume தற்காலிகமாக அதை ஒதுக்கி வைத்தார். அதன் பின்னர் Bishop Berkeley ‘பொதுவான் அனுபவம் என்பது வெறும் தனிப்பட்ட எண்ணம் மட்டுமே என்றார். உங்களது புலன்களைக் கொண்டே உங்களது மனப்பதிவுகளை நீங்கள் ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். அவை உங்களது மனதிற்குள் சரிபார்க்கப்பட்டு எல்லாமே உங்களது எண்ணங்களாக மட்டும் ஆகின்றன. இவ்வகையில் பார்த்தால், இது அனுபவவாதம் சார்ந்ததுதான் என்றாலும், Berkeley-ஐ அனுபவவாதி என்பதைவிட இலக்கியலாளர் (லட்சியவாதி) என்றே சொல்லவேண்டும்.
Berkeley தொடர்ச்சியாக Kant-ஐ கருதலாம். அவருக்கு முன்னோடிகளாக Descartes, Spinoza, Leibnitz, Locke, Hume, Berkeley ஆகியோர் இருந்தனர். சங்கரருக்கு முன்பாக பூர்வ மீமாம்சகர் இருந்தனர். அவர்கள், ‘நீங்கள் ஒரு செயலைச் செய்தால் அது ஒரு விளைவை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், காரணம் ஒவ்வொன்றிற்கும் ஒரு விளைவு இருக்க வேண்டும்.’ என்றனர். தெய்வம் ஒன்றை நீங்கள் அழைத்தால் அத்தெய்வம் எதிர்ப்பட்டு உங்களுக்கு வரமளிக்க வேண்டும். சொற்களின் அகஇயங்கியல் அடிப்படையிலான விரிவான அமைப்பொன்றை அவர்கள் ஏற்படுத்தியிருந்தனர். அவர்கள் நீரே நிலமாக உருவெடுத்தது என்றும், தீயே நீரானது என்றும், காற்றே தீயானது என்றும், வெளியே காற்றானது என்றும் வெளியின் சாரமே ஒலியானது என்றும் கொண்டனர். ஆக அனைத்துலகும் அடிப்படையில் ஒலி அதிர்வால் ஆனது. ஒலிகளின் அதிர்வு நம்மைச் சுற்றியுள்ள வடிவியல் பண்புகளாக ஆகும் என்றால் அவற்றை பல்வேறு ஒலிகளால் தீண்டி அவற்றின் பண்புகளை மாற்ற முடியும்.
பூர்வ மீமாம்சகர்கள் மாற்று மருந்தெனப் பயன்படுத்தும் வகையில் ஒலியை வடிவமைக்கமுடியுமா என்று ஆராய்ந்தனர். அதாவது, ஒருவகை ஒலி ஒன்றிற்கு காரணமாக அமையும் என்றால் மற்றொரு வகை ஒலி அதனை இல்லாமலாக்கும் என்று கருதினர். பின்னர் அதனையே மாற்றி வேறு வகையில் செய்ய முடியும். உங்களது ஒலிகளைக் கொண்டே உங்களால் பல ஆற்றல்களை உண்டாக்க முடியும். அதனால் அவர்கள் மிக விரிவான மந்த்ர அமைப்பு ஒன்றை தோற்றுவித்தனர். ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை சொன்னால் மழை பெய்யும் என்றனர். அதை அனைவரும் நம்பினர். செயலையும் அனுபவத்தையும் அடிப்படையாகக் கொண்ட தத்துவத்தை ஏற்ற அவர்களும் ஒருவகை அனுபவவாதிகளே.
அதன் பின் வந்த பௌத்தர்கள் அதை ஏற்கவில்லை. அவர்கள் (பூர்வ மீமாம்சகர்) அகம் புறம் என ஒரு இருமையை உண்டாக்குவதாகக் கூறினர். பௌத்தர்களைப் பொறுத்தவரை அகம் புறம் என்ற இரண்டுமே முழு மெய்மையின் கூறுகள்தான். இரண்டிற்கும் இடையேயான எந்த வேறுபடுத்தலும் அரை உண்மையாக, அதாவது மெய்யானதாகவும் மெய்யல்லாததாகவுமே இருக்க முடியும். இவற்றையெல்லாம் அவர்கள் அறியாமை என்றே கூறினர்.
அடுத்ததாக சாங்கியர்கள். அவர்கள் செயலை ஏற்கவில்லை, பௌத்தர்கள் கூறிய அறியாமையையும் ஏற்கவில்லை. ‘பூமி என்பது ஒரு அடிப்படைக் கூறு (elelment). அதற்கு எத்தனை பண்புகள்! அதை தொடலாம், ருசிக்கலாம், முகரலாம், செவியுறலாம், காணலாம். அதன் அடிப்படைகளை ஆராய்ந்து இறுதியில் அதனையே (தன்மாத்ர) சென்று அடையலாம். ஒரு பொருள் ஏன் தன்னையே இயங்கச் செய்ய வேண்டும்? அதற்கு இரண்டு கொள்கைகள் (நியமங்கள்) இருக்க வேண்டும். ஒன்று, செயலுக்கான அறிவுத்திறனை அளிப்பது, இன்னொன்று செயலுக்கான திறனை கொடுப்பது. தன்னொளிர்தல் (self-luminosity ஒன்று, தற்-செயலாற்றல் (self-volition) மற்றொன்று. இவற்றை அவர்கள் ‘புருஷன்’ என்றும் ‘ப்ரக்ருதி’ என்றும் அழைத்தனர்.
இறுதியாகத் தோன்றிய சிந்தனைப் பள்ளி ஒரு கருத்திற்கும் மற்றொன்றிற்கும் ஏதோ ஒரு பொருத்தப்பாடு இருக்க வேண்டும் என்றது. பொருட்களை இனவாரியாக, பேரினவாரியாக பிரித்துக்கொள்ளலாம். ஒரு பேரினத்திற்குள் பல ஒருங்கிணைந்த இனங்கள் இருக்கக் கூடும். இந்தப் பிரிவுகள் எல்லாம் சிறப்புப் பண்புகளையும் பொதுப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டவை. இவ்வாறாக அனைத்துலகும் பொதுமைப் பண்புகளாலும், சிறப்புப் பண்புகளாலும், அவற்றிற்கிடையேயான உறவுமுறைகளாலும் பகுக்கப்பட்டுள்ளது என்றது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த தத்துவவாதிகள் நியாயவாதிகள் அல்லது தர்க்கவாதிகள் எனப்படுவர்.
சங்கரருக்கு முன்பாக இப்பள்ளிகளெல்லாம் இருந்தன. அவற்றை எல்லாம் ஒரு புறமாக வைத்து தனது கேள்விகளை அவற்றின் முன் வைத்தார். அதேபோல், Kant அந்த ஆறு அனுபவவாதிகளை ஒரு பக்கம் நிறுத்தி கேள்விகளை எழுப்பினார். கூரிய, ஆழமான கேள்விகளுக்குப் பின், அவர்கள் இருவருமே தங்கள் முன்னோடிகளின் வாதங்களை மறுதலித்தனர். தனது முன்னோடிகள் எல்லோரும் உடல்சார், புலன்சார் அனுபவங்களை அறிவுடன் குழப்பிக்கொண்டனர் என்றும் அதனால் அவர்களது வாதங்கள் பிழைபட்டவை என்றும் கூறினார் Kant. “நீங்கள் சொல்வதெல்லாம், உங்களது உடல்சார் நனவால் அல்லது தன்முனைப்பால் (bodily consciousness or an ego factor) ஏற்படும் அனுபவங்களின் பாதிப்புக்குள்ளானவை” என சங்கரர் கூறியதும் அடிப்படையில் அது போன்றதே.
இவ்விரு பெரும் மெய்யியலாளரும் கண்டறிந்து கூறியவற்றின் சாரத்தையே நாராயண குரு இந்த ஒரு பாடலில் வெளிப்படுத்துகிறார். நமது அனுபவங்கள் எல்லாமே தர்மத்தினுடையவை, தர்ம்மியுடையவை அல்ல. ஏனெனில், தர்ம்மி அனுபவங்களால் மாறக்கூடியதல்ல.
உடல்சார் நனவுடனும் சமூகத் தன்முனைப்புடனும் (social ego) நம்மை எப்படி தொடர்புறுத்திக் கொள்ள முடியும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இவ்விரண்டு தொடர்புறுத்தல்களும் பல சிந்தனைகளையும் முடிபுகளையும் நம்முள் ஏற்படுத்தக்கூடியவை. நாம் தியானம் என்று சொல்லிக்கொள்வது உண்மையில் தியானமே அல்ல. அது சிலவகை உடல் நிலைகள் மட்டுமே; சுவாசித்தல், குறிப்பிட்ட முறையில் அமர்தல், சில உடல் பகுதிகளைப் பற்றி கற்பனை செய்து கொள்ளுதல்; இவை குறித்த விழிப்புணர்வு மட்டுமே. மனதை அகம் நோக்கி திருப்புதல் என்பது உண்மையில் குறிப்பிட்ட இடத்தில் உள் நோக்குவது மட்டுமே; அது அடிப்படையில் ஒரு செயல்தான். ஆக, நாம் செய்வது ஒரு உடற்பயிற்சி, தியானம் ஆல்ல. ‘அதை ஏன் தியானம் என்கிறீர்கள்? அது ஒரு கேளிக்கை, ஒரு உடற்பயிற்சி. வேண்டுமானால் அதை உளவியல் பயிற்சி என்று சொல்லிக்கொள்ளலாம். அப்படிப் பார்த்தாலும் அதற்கும் அகத்திற்கும் தொடர்பே இல்லை’ என்றார் சங்கரர்.
சரியான தியானம் என்பது எளிய ஒன்றல்ல. முதலில் உங்களுக்குத் தெரிந்த பெயர்களை எல்லாம், உங்களுடையது உட்பட, உங்கள் மனதில் இருந்து வெளித்தள்ள வேண்டும். மனிதர்களின், பொருட்களின் பெயர்களை மட்டுமல்ல, கருணை, பொறுமை போன்ற கருத்துக்களுக்கு நாம் கொடுத்துள்ள பெயர்களையும். நீங்கள் எல்லா பெயர்களையும் ஒழித்துவிட்டீர்கள் என நம்பவில்லை. ஆனால், ஒலி கொண்ட அல்லது வாய்மொழியான அல்லது எழுத்துவழி அடையாளம் கொண்ட பெயர்கள் எதுவும் உங்களுக்குத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம்.
அடுத்ததாக, உங்கள் மனதில் இருந்து வடிவம் சார் நினைவுகளை ஓழியுங்கள். இப்போது உங்களால் ‘டெபோரா’ என்று சொல்லவோ, டெபோராவின் வடிவம் என்னவென்று எண்ணிப்பார்க்கவோ முடியாது. கழி, நிகழ், எதிர்வெனும் பகுப்பை மறந்துவிடுங்கள். நீங்கள் இருக்கும் இடத்தின் பெயரை அழியுங்கள். வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மேல், கீழ் என அனைத்து திசைகளையும் உதறுங்கள்.
ஏதோ ஒன்றை கைவிடும்படி நான் சொல்லும்போது, சடுதியில் அதை மட்டும் நீங்கள் நினைக்கிறீர்கள். அதற்கு முந்தைய கணம் வரை அது உங்கள் மனதில் இல்லை. உங்கள் சுவாசத்தை மறக்கும்படி நான் சொல்வது வரை நீங்கள் அதை எண்ணுவதே இல்லை. சுவாசித்தல் ஒரு செயல். சுவாசித்தலோடு, செயல்சார் உலகை, எவ்வகையான இயக்கமுமின்றி கையொழியுங்கள். அடுத்து காரண காரியம் எனும் இருமையை விடுங்கள். உங்களால் அறிய முடியும், உணர முடியும், சுவாசிக்க முடியும் என்பதை மறந்துவிடுங்கள். ‘நான்’ என்பதற்கும் ‘பிற’ என்பதற்கும் இடையிலான வேற்றுமையை அழியுங்கள். ‘நான்’ என்பதன் பயன்பாட்டையே பொருளிழக்கச் செய்யுங்கள். சுருக்கமாகச் சொன்னால், எதையும் செய்யுங்கள் என்றே நான் சொல்லவில்லை, அனைத்தையும் விட்டுவிடச் சொல்கிறேன். உங்களை எண்ணும்படி சொல்லவில்லை, (எதையும்) எண்ணாமல் இருங்கள் என்கிறேன். எதையும் நினைக்கச் சொல்லவில்லை, (எதையும்) நினைவில் இருத்த வேண்டாம் என்கிறேன். வெற்றிபெறச் சொல்லவில்லை, வெற்றிபெற வேண்டாம் என்றே சொல்கிறேன்.
அத்தகைய ஒரு நிலையை நாம் நிச்சயமாக அடைந்துவிடவில்லை. அப்படியே அடைந்தாலும் அந்த நிலையிலும் நனவின் இருப்பு தொடரும். அனைத்தையும் கைவிட்ட பிறகும் உங்களது நனவின் இருப்பிற்கான வெளியும் காலமும் எஞ்சி நிற்கும். அது மாற்றவியலா ஊடுருவமுடியாமை. (It is an irremediable impenetrability)
இதற்கு தவிர்க்க இயலாத, பொதுவான, நிச்சயமான இயல்பு ஒன்று உள்ளது என்கிறார் Kant. முன்னறிவு சார் முடிபுக்கு இரண்டு அடிப்படையான நிபந்தனைகளை வலியுறுத்துகிறார். ஒன்று பொதுத்தன்மை (universality) மற்றொன்று நிச்சயத்தன்மை (categorically imperative). தியானம் என்பதை உபநிடதங்கள் ஒரு கட்டளையாக வலியுறுத்துவதில்லை என்பதை சங்கரர் சுட்டிக்காட்டுகிறார். அதை ஒரு கட்டளையாகக் கொண்டீர்கள் என்றால் அதை வெறும் உடல் சார் செயல்பாடாக மட்டுமே நீங்கள் கருதுகிறீர்கள் என்று பொருள். அறிவு அறிவாக இருப்பதல்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்? இது தியானம் வழியே கைவரப் பெறுவது.
தன்னியல்பில் ஒளிரும் அறிவின் நிச்சயத்தன்மை; உருக்கொண்ட அனைத்திலும் இயங்கும் பொதுத்தன்மை – Kant குறிப்பிடும் இவ்விரண்டு பண்புகளும், நாராயண குரு இப்பாடல்கள் நெடுக பயன்படுத்தும் படிமங்களை ஒத்திருக்கின்றன. அனைத்திலும் மையமாக, நனவெனும் ஆகாயத்தில் ஒளிரும் கதிரவனென அகமும் புறமும் ஒளிரும் கரு உள்ளது. அந்த ஒளியே உங்களை சிந்திக்க வைக்கிறது; விழித்து, உறங்கி, உண்டு, முயங்கச் செய்கிறது; உருவெடுத்த மரத்தின் கீழே சாட்சி என அமர்ந்திருக்கிறது. ‘நான்’ என இருவர் சொல்லும் அடையாளமாக இருக்கிறது. நம் வாழ்வெனும் பாலையில் உள்ள ஒவ்வொரு மணற்துகளையும் மதிப்பிட இயலாத முத்தென ஆக்கும் வெள்ளமெனப் பாய்ந்து நிறைக்கிறது.
நமது கற்றலில், ‘நாம்’ எனும் ஒளியையே காண்கிறோம். என்றாலும் செயல்படத் தொடங்கியவுடன் அதை தொலைத்துவிடுகிறோம். புலன்களைக் கொண்டு, உடலெனும் நனவு கொண்டு, பெயர், வடிவம், காலம், இடம், காரணம், காரியம் என பலவற்றையும் கொண்டு அதை மாசுபடுத்துகிறோம். சப்பணமிட்டு அமர்ந்து, இதயத்துடிப்பில் கவனத்தை குவித்து, சுவாசக் குழாய்களை வருத்தி மூச்சு விட்டு – இவை எதுவுமில்லாமல் மிக இயல்பாக நிகழக்கூடியது அது ஒன்றே. நீங்கள் எதுவுமே செய்யத் தேவையில்லை. ஆனாலும் அது மிக மிகக் கடினமானது. ஏனெனில், உடலும், மனமும், புலன்களும் உங்கள் அகத்திற்குப் புறம்பான விழுமியங்களில் கவனத்தை குவிக்கின்றன. இவற்றிலிருந்தெல்லாம் உங்களை மீட்டு, தூயதான, இயல்பான அக மகிழ்வை மீட்டெடுக்கத்தான் நீங்கள் சப்பணமிட்டு அமர்ந்து அகம் நோக்கி கவனத்தை குவித்து, மூச்சை சீராக்க வேண்டியிருக்கிறது. சந்தையில் கிடைக்கும் பொருட்படுத்தத் தேவையில்லாத பொருட்களில் முட்டி நிற்காமல் இருக்க வேண்டியிருக்கிறது.
ஒரு தேவையை நீங்களாக கற்பனை செய்துகொள்கிறீர்கள். அது ஒரு பூதம் போல உங்களை பற்றிக்கொள்கிறது. நீங்கள் அதில் சிக்கிக் கொள்கிறீர்கள். ஒருவர் தேவை பற்றி பேசுவதற்காக ‘கர்மம்’ காத்திருக்கிறது. அவர் அதை சொன்னவுடன் பாய்ந்து அவரை பற்றிக் கொள்கிறது.
செயலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது என்பது சோம்பி இருத்தலுக்கான அனுமதி அல்ல. குரு இங்கு என்ன சொல்கிறார் என்பதை புரிந்துகொள்ள முயலுங்கள். கடந்த நூறு வருடங்களாக ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் அனுபவவாதத்தையே மக்கள் மனங்களில் திணித்துள்ளன. இந்தப் பாடல் மிக எளிய ஒன்றாக, அப்பாவித்தனமானதாக தோன்றலாம். ஆனால், ஒரு விதத்தில் அதுவே பெரும் முக்கியத்துவம் கொண்டதாக ஆகிறது. எனவே, ஒரு கணமேனும் பெயர், வடிவம், காரணம், காரியம், கடமை, சமூகம் என்ற குப்பைகளை தூர எறிந்துவிட்டு உங்களது அகம் எனும் பெரு விடுதலையை அனுபவியுங்கள்.