பொருது ஜயிப்பது அஸாத்யம் ஒன்னினோடொன்னு
ஒரு மதவும் பொருதாலொடுங்குவீல;
பரமதவாதியிதோர்த்திடாதெ பாழே
பொருது பொலிஞ்ஞிடுமென்ன புத்தி வேணம்.
(ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 46)
போரிட்டு வெல்வது நடவாது ஒன்றோடொன்று
பொருதி அழிக்கப்பட்ட மதமொன்றில்லை
இது நினையாது பிறமதம் பழிப்போன்
போரிட்டழிவான் வீணே என்றுணர வேண்டும்
*
மேலோட்டமாக இந்தப் பாடல் எளிய ஒன்றாகத் தோன்றலாம். ஆனால் பேராழமும் நுண்மைகளும் கொண்ட ஒன்று. மாதக் கணக்கில் இதிலேயே உழன்றாலும் பாடல் சொல்லவருவதை முழுமையாக நம்மால் கண்டடைந்துவிட முடியாது.
இந்திய தத்துவ தரிசனங்கள் ஆறில் பூர்வ மீமாம்ஸம் ஜைமினியாலும் உத்தர மீமாம்ஸம் பாதராயணாராலும் உருவாக்கப்பட்டது. ஜைமினியுடையது அறம் பற்றி பேசுவது பாதராயணருடையது ப்ரம்மம் பற்றியது.
நாம் சமம், அன்யம் குறித்து பேசினோம். அன்யம் என்பதில்தான் குறிப்பிட்ட பண்புகளை எதிர்கொள்கிறோம். அறம் என்பது ஒருவரது தனிப்பட்ட பண்புநலன். அதுவே அவரை பிறரிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இதனால்தான் உப்பும் சர்க்கரையும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டதாக இருக்கிறது. உப்பிலிருந்து உப்புத்தன்மையையோ சர்க்கரையிலிருந்து சர்க்கரைத்தன்மையையோ நீங்கள் பிரித்து எடுத்துவிடமுடியாது. அவையே அவற்றின் அறம். மறுபுறம் இருப்பது ப்ரம்மம். ப்ரம்மம் என்ற சொல்லே அனைத்தையும் உள்ளடக்கியதை குறிப்பது. எவ்விதமான பிரிவுக்கோ வேறுபாட்டிற்கோ அங்கு இடமில்லை.
ஒன்று பிரிப்பது; மற்றொன்று இணைப்பது. ஒருமையை காணாமல் வேறுபாடை மட்டும் பார்ப்பவர் மற்றவரோடு ஒத்துப்போகவே மாட்டார். ஒருமையை மட்டும் காண்பவர் பிறரை ஏற்கவோ மறுக்கவோ எண்ணுவதே இல்லை. சடங்குகள் சார்ந்த வாழ்வுக்கூறு எப்படி உருவாகிவந்தது என்பதை கூறுகின்றன ஜைமினியின் தர்ம சூத்திரங்கள். பாதாராயணரின் தரிசனமோ துறவெனும் கோட்டுபாட்டுக்கு வழிவகுத்தது. இவ்விரண்டு பள்ளிகளுமே வாழ்வை இரு மாறுபட்ட கோணங்களிலிருந்து பார்ப்பவை. இல்லறம் பேணுபவர் ஒன்றை தேர்ந்தெடுக்க, துறவி மற்றொன்றை கைக்கொண்டார். தொடக்கம் முதலே இந்தியாவில் இவற்றின் மீதான விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன; உலகத்தவர் அனைவருமே அவற்றின் விளைவை கருத்தில் கொள்கின்றனர்.
சமயம் என்பது தனியர் ஒருவரின் கருத்தல்ல. ஒருவரது வாழ்வை செலுத்தும் மதம் என்பது அவரே முழுதறியாத அவரது விழுமியங்களின் முழுமையை உள்ளடக்கியது. உங்களது உறுதிப்பாடுகளின் வேராழமும், அது உங்களை எவ்வளது தொலைவு இட்டுச்செல்லக் கூடும் என்பதையும், பிற எவற்றோடெல்லாம் அது பின்னிப்பிணைந்துள்ளது என்பதையும் நீங்கள் அறியமாட்டீர்கள். வாழ்வின் மொத்தம் என்பது புலப்படாத ஒன்று; பெரும்பாலும் கற்பித்துக்கொள்ளப்படுவது. அதன் மெய்யியல்பை, முழுமையை உணர்வது எளிய ஒன்றல்ல. ஒரு குழுவாக நம் சக மனிதர்களுடன் நாம் பகிர்ந்து கொள்வது அது. ஏனெனில், நமது வாழ்வின் வேட்கைகள் ஒரு தனியரில் மட்டுமே இருப்பவையல்ல; நாம் சார்ந்துள்ள சமூகத்தின் ஒட்டுமொத்த நனவிலியில் – அல்லது – முழுமையில் உள்ளவை.
எந்த மதத்தையும் சாராதவர்களிலும், மதங்களுக்கு எதிரானவர்களிலும் கூட உள்ளோட்டமாக ஒரு மதம்சார்ந்த ஈர்ப்பு இருக்கும். மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாாக நம் காலத்தவரான அசாதாரணமான இருவரை சொல்லலாம் – ஒருவர் ஐன்ஸ்டீன் மற்றவர் ப்ராய்ட். யூத மதத்தில் பிறந்த இருவருக்கும் தங்களது மதப்பின்னணி சார்ந்த சாய்வு எதுவும் இருக்கவில்லை. என்றாலும் அவர்களது எண்ணங்களில் உள்ளோட்டமாக ஆற்றல்கொண்ட யூத உணர்வுகள் இருந்தன. அவர்கள் தங்களை யூதர்களாக கருதிக்கொள்ளவில்லை என்றாலும் யூதராக தாம் பிறரால் எதிர்க்கப்பட்டதற்கான எதிர்வினை அது. தாக்கப்படும்தோறும் உங்கள் உள்ளில் அசைவற்றுக் கிடக்கும் பண்புக்கூறு விசைகொள்கிறது. பிற கூறுகள் மிகச் சிறிய வயதிலே பயின்றுவருவதால் அவற்றை அவர்கள் கவனிக்கவில்லை. அல்லது அவர்களது பண்பாட்டின் பகுதியாகவே ஆகிவிட்டதால் அது புலப்படவே இல்லை என்றும் சொல்லலாம்.
இந்தப்பாடலை நாம் நுட்பமாக அணுகவேண்டியுள்ளது. படிப்படியாக செல்வோம். முதலில் ‘பொருது ஜயிப்பது அசாத்தியம்’ – சண்டையிட்டு வெல்வது நடவாதது – என்பது ஒரு பொதுவான கொள்கை. இன்னொருவரை உங்களால் உடல்வலிமை கொண்டு அடக்க முடியும். ஆனால் அங்கு நீங்கள் வெல்வது எதுவுமில்லை. அடக்குவதற்கும் வெல்வதற்கும் இடையிலான வேறுபாடு என்ன? ‘அவர் என் இதயத்தை வென்றார்’ என்கிறோம். சண்டையிட்டு ஒருவரது இதயத்தை உங்களால் வெல்ல முடியாது; உங்களை அவருக்கு அளிப்பதன் மூலம் முடியும். காதல்கொண்டு உங்களை பிறருக்கு ஒப்பளிக்கையில் நீங்கள் வெல்கிறீர்கள். ஆனால் வலிமையை பயன்படுத்தும்போது வெல்வதில்லை, அடக்குகிறீர்கள்.
முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்த வேறுபாட்டைதான்: போர் வழியே நாம் வெல்வதில்லை, எதிர்த்தரப்பை இன்னும் தீவிரமாக்குகிறோம். வேட்டையாடப்படும் விலங்கை தப்பமுடியாதபடி ஒரு மூலையில் நெருக்கிவிடும்போது அதற்கு ஒரே ஒரு தேர்வு மட்டுமே இருக்கும். திரும்பி உங்களை தாக்கும். இந்தச் சூழலில் நடைபெறுவது என்ன? வாழ்வின் பொருள் விலங்கின் உடலில் உள்ள ஒவ்வொரு அமைப்பிலும் தீவிரம் கொள்கிறது. ஒவ்வொரு அணுவும் வாழ்வின் பொருளென துடிக்கிறது. ஒருவர் சினம் கொள்ளும்போது அவரது உடல் நடுங்குகிறது. உங்கள் மீதான் வெறுப்பு அவரது கண்களில், அவரது பார்வையில், அவரது சொல்லில் திரள்வதை உங்களால் காண முடியும். அக்கணத்தில் முழுமையான பரிமாணம் ஒன்றை அடைகிறார். எவ்வித சமரசத்திற்கும் அங்கு இடமில்லை. நாயோ பூனையோ எலியோ எதுவாயினும், அதன் வாழ்வெனும் அடிப்படையை நீங்கள் தாக்க முயலும்போது, அப்படி ஒரு முழுமையை அடைந்துவிடும்.
மன்சூர் ஹல்லாஜ் தாக்கப்பட்டபோது, அல்லாவுடனான தன் பிணைப்பை அவர் மேலும் நிச்சயமாக உணர்ந்தார். அவரது கைகால்கள் வெட்டப்பட்டன. வெட்டப்பட்டவை தன் கைகால்களே அன்றி அல்லா மீதான தன் அன்பு அல்ல என்பதை அவர் உணர்ந்தார். தூக்கிலிடப்பட்டு, தலையறுக்கப்பட்டு, துண்டம்துண்டமாக அவர் உடல் நறுக்கப்பட்டபோதும் ஒவ்வொரு சிறு துண்டும் ‘அன் அல் ஹக்’ ‘ நானே அல்லா’ என்று முணுமுணுத்தது. எரிக்கப்பட்டபோது தீக்கொழுந்துகளும், சாம்பல் துகள்களும் ‘அன் அல் ஹக்’ என்றே உச்சரித்தன. இறுதியாக அவரது சாம்பல் கடலில் எறியப்பட்டபோது ஒவ்வொரு அலையும் ‘அன் அல் ஹக், அன் அல் ஹக்’ என்று முணுமுணுத்தபடியே கரையை மோதியது. ஆக, சண்டையிட்டு நீங்கள் வெல்வதே இல்லை.
பற்றுறுதி கொண்ட இருவரிடையிலான பூசல் இருவருக்குமே நல்லதல்ல. அத்தகைய சூழலில் நிகழும் முரணியக்கம் இருமடங்கு இழப்பையோ அல்ல இரட்டைப் பயனையோ அளிக்கக்கூடும். நீங்கள் சண்டையிட்டால் கிடைப்பது இரட்டை இழப்பு; ஒன்றிணைந்தால் இரட்டைப் பயன்.
மதங்களுக்கிடையேயான பூசலால் எந்த மதமும் அழிந்துவிடவில்லை என்பதையே வரலாறு காட்டுகிறது. உலகில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு ஆற்றல்கள் பலமுறை யூதர்களை அழித்துள்ளன. ஆனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் புத்துயிர் பெற்று எழுந்தனர். ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகாலமாக அவர்களுக்கெதிரான அடக்குமுறை இருந்தே வந்தபோதும் அம்மதத்தின் அகவலிமை, ஆற்றல், செய்தி எதையும் ஒழிக்கமுடியவில்லை.
நசரத்தின் ஏழை யேசு பிறந்துவந்தபோது ரோமப் பேரரசு அதன் உச்சத்தில் இருந்தது. அவரை நசுக்குவது எளிது என்று அவர்கள் கருதினர். ஆனால் வீழ்ந்தது ரோமப் பேரரசுதான். பேரரசர்கள் கிறிஸ்தவ மதத்தை தழுவினர். கிறிஸ்து கற்பித்த எதையும் அழிக்கமுடியவில்லை. லூதரும் பிறரும் கத்தோலிக்கத்தை அடியோடு அழிக்க முயன்றனர். ஆனால் இன்றளவும் கத்தோலிக்க சபை வலிமையோடு நின்றிருக்கிறது. எதிர்ப்பாளர்களை தூக்கிலிட்டு எரிப்பதன்மூலம் ஒடுக்கிவிடலாம் என்று கத்தோலிக்கர்கள் எண்ணினர். ஆனால் ப்ராடஸ்டண்ட்களில் எண்ணிக்கை கூடவே செய்தது.
அண்மையிலான எடுத்துக்காட்டு ‘கம்யூனிஸம் தீயது, ஜனநாயகமே சிறந்தது’ என்று அமெரிக்கா எடுத்த முடிவு. கம்யூனிஸம் என்பது என்ன? ஜனநாயகம் என்றால் என்ன? என்பதை ஒரு பல்கலைக் கழகத்தில் வைத்து விவாதித்திருக்கலாம். அதை தவிர்த்து லட்சக்கணக்கான அமெரிக்க இளைஞர்களை வியட்நாமிற்கு அனுப்பி அதை முடிவு செய்ய முயன்றனர். போரிடுவதன் மூலம் கம்யூனிஸம் தீங்கானது என்று காட்ட எண்ணினர். தாங்கள் எதிர்த்துச் செல்வது, தம் நிலத்தோடு மிகப்பழமையான ஒரு பிணைப்பை உடைய மக்களின் நிலத்திற்கு என்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவே இல்லை. அங்கிருந்தவர்கள் கம்யூனிஸத்திற்காகவோ ஜனநாயகத்திற்காகவோ போராடவில்லை; தமது வாழ்வுக்காக, இல்லங்களுக்காக, இனிய நிலத்திற்காக போராடினர். எதிர்த்தரப்பில் ராணுவத்தினரோ கட்டாயமாக போரில் ஈடுபடுத்த்தப்பட்டனர். அவர்களுக்கு போரில் எந்த ஆர்வமும் இருக்கவில்லை. ஆக, நிகழ்ந்தது என்ன? அமெரிக்கர்கள் தோற்கடிக்கப்பட்டது மட்டுமன்றி ஜனாதிபதிகளும் போரை கட்டமைத்த பிறரும் மானுட வரலாற்றில் மிகப்பெரிய தீங்கை இழைத்தவர்களாக கருதப்படுகின்றனர்.
இது அண்மைக்கால எடுத்துக்காட்டு. நடுயுகத்தில் நடைபெற்ற கிறிஸ்தவ சிலுவைப்போர்களிலும் இதேதான் நிகழ்ந்தது. அவர்களால் இஸ்லாமியரையும் யூதர்களையும் ஒழிக்க முடிந்ததா என்ன? யூத ஆலயங்களும், தேவாலயங்களும், மசூதிகளும் எல்லா நாட்டிலும் அருகருகே நின்றுகொண்டுதானிருக்கின்றன.
மதம் என்பதன் உள்ளமைப்பை பார்த்தால், அதை ஏன் போர்மூலம் அழிக்கமுடிவதில்லை என்பதை புரிந்துகொள்ள முயலலாம். மேல், கீழ், இரு பக்கங்கள், ஒரு மையம் கொண்ட ஒரு மரத்தை யூத மதம் குறியீடாக புனைந்துள்ளது. மேலே இருப்பவை ஞானம், நியாயம், அறிவு. பக்கங்களில் இருப்பவை பெருமை, வலிமை, முடிவின்மை, மாண்பு. கீழே இருப்பது இறைமை. நடுவில் இருப்பது அழகு. மேலே இடம்பெற்றுள்ள சொற்களான ஞானம், நியாயம், அறிவு என்ற மூன்றும் ஒன்றையே குறிப்பது போல் தோன்றினாலும் அவை வேறு என்பதும் நமக்கு புரிகிறது. ஞானம் என்பது நியாயத்தை கடந்தது. ஞானம் எழும் ஆழம் நாம் அறியாதது. அதன் வீச்சும் முடிவின்மையும் நாமறியாதவை. அதன் பெருமை நமக்குத் தெரியாது. அது மிகப்பரந்தது, பேராழம் கொண்டது. நியாயம் என்கையில் அங்கு இயக்கம் உள்ளது. ஒரு தரிசனத்திலிருந்து இன்னொன்றுக்கு செல்கிறீர்கள்; ஒன்றையொன்று ஒப்பிட்டு பொருத்தப்பாட்டை அறிகிறீர்கள். அறிவென்பது கடலென்றால் நியாயம் என்பது அதன் மேற்பரப்பில் ஒன்றைத்தொடர்ந்து ஒன்றென எழும் அலைகள். அதில் ஒரு கச்சிதமும் ஒழுங்கும், தர்க்கமும் உள்ளது. ஆக, நீங்கள் விவேகி மட்டுமல்ல, நியாயவாதியும் கூட. வாதிட்டு நிறுவும் அறிவு உங்களிடம் உள்ளது.
ஞானத்திற்கும் அறிவிற்கும் இடையிலான வேறுபாடு என்ன? ஞானம் என்பது என்றென்றைக்குமானது, தொடர்பறாதது, வாழ்க்கைக்கான எரிபொருளை கொடுத்துக்கொண்டே இருப்பது; அறிவு குறிப்பிட்ட சூழல் சார்ந்தது. ‘எங்களிடம் வந்துசேரும்போது ஞானத்திற்கும், நியாயத்திற்கும், அறிவிற்கும் நாங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுங்கள்’ என்கிறது யூத மதம். இதுவே அம்மதத்தை வடுப்படுத்த முடியாததாக்குகிறது. மேலும், ‘நான் என்பதில் ஒன்றுமில்லை. ஆனால் நான் பெருமிதம் கொள்ளும் ஒன்றை சேர்ந்தவன். அதுவே என் நாடிநரம்பில் ஆற்றல் சேர்க்கிறது. இவ்வுடலில், இம்மனதில், இந்த ஆவியில் உள்ள ஆற்றல் முழுமுதலின் பெருமையிலிருந்து பெறப்பட்டது. விலங்கின் ஆற்றல் அல்ல அது, அதன் மையத்தில் இருப்பது அழகு’ என்கிறது. இதை நீங்கள் எப்படி எதிர்க்க முடியும்? அழகின் எதிரில் நீங்கள் உங்கள் ஆயுதத்தை எல்லாம் இழக்கிறீர்கள். ஒருவர் தனது ஆற்றலை, துணிவை, வலிமையை அழகின் வடிவாய் கொண்டு உங்கள் எதிரில் வரும்போது அது உங்களை ஆற்றலிழக்கச் செய்வதோடு உங்களை திணறடிக்கிறது. அது உங்களில் நிறைந்து உங்களை பித்தாக்குகிறது. அதன் போதையில் ஆழ்ந்துபோகிறீர்கள்.
‘நாங்கள் வரலாற்றில் ஒரு நிகழ்வல்ல; நாங்கள் முதலும் முடிவும் இல்லாதவர்கள். முடிவிலியின் பெருமை அறிந்தவர்கள். எங்களை ஆளும் கொள்கை இது, எங்கள் இறைமை இது. இதை தோற்கடிக்கவே முடியாது’ என்கின்றனர் யூதர். இந்த எளிய ஆனால் நுண்மைகள் நிறைந்த கொள்கை கொண்ட மதம் உங்களை பேச்சற்றவராக்குகிறது. அதனுடன் உங்களால் மோத முடியாது; அதை எதிர்க்க நீங்களே விரும்ப மாட்டீர்கள்.
இதே போன்ற கொள்கைகள் எல்லா மதங்களிலும் ஏதோ ஒரு வகையில் இடம்பெற்றிருக்கும். கீதை வேதமரபை ஒரு மரமாக சித்தரிக்கும்:
ஒரு மரம் இருக்கிறது. அதன் வேர்கள் மேலேயும் கிளைகள் கீழேயும் இருக்கின்றன. அதை அறிந்தவர்கள் அது ஒருபோதும் தீர்வதில்லை என்கின்றனர். அது அழிக்கப்படுவதே இல்லை. அதன் இலைகள் வேதத்தின் பாடல்கள். ஞானமடைந்த ஒருவர் பெருமகிழ்ச்சி கொள்ளும்போது போற்றிப் பாடல்கள் அவரிலிருந்து எழுகின்றன. அவையே இம்மரத்தின் இலைகள். இம்மரத்தை அறிந்தவரே மெய்யறிந்தவர்.
பல திசைகளில் கிளைக்கும் அதன் கிளைகளே இயற்கையின் மூன்று குணங்கள். அவை பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆர்வ இலக்குகளை அவை உண்டாக்குகின்றன. மனம் பல ஆர்வங்களாக கிளைக்கிறது. பல்வேறு விருப்புகள் பல்வேறு ஆர்வங்களை சுட்டி நிற்கின்றன.
அறியப்படாத ஒன்றால் ஊட்டம் அளிக்கப்படும் வேர்களை அது மேலே கொண்டுள்ளது. அதுபோலவே அதை உறுதிப்படுத்தும் வேர்கள் அடியில் இருக்கின்றன. கீழே இருப்பவை கர்மா – நம்மை முழுமையுடன் பிணைக்கும் செயலும் எதிர்ச்செயலும். என்னைத் தொடுகையில் நீ இன்னும் நூறுபேரை தொடுகிறாய். ஏனெனில் நான் இன்னொரு நூற்றுவருக்கு உரித்தானவன். உன்னை நான் தொடுகையில் அறியாத பலரையும் நான் தொடுகிறேன். நமது கர்மாக்கள் நம்மை பிணைக்கின்றன. அவை சென்று எட்டியுள்ள ஆழமும் இருளும் நாம் அறியாதவை. இதை சிதைக்க எவராலும் முடியாது. இதுவே அறமெனப்படுவது.
உங்களை திணறடிக்கும் அழகைப் போல, இந்த மரத்தை கடந்துசெல்ல உதவுவது ஒன்றே ஒன்றுதான். கீதை அதனை ‘அசங்கம்’ என்கிறது. பற்றின்மை எனும் வாள் அது. உங்களோடு போரிடாமல் உங்களை ‘திகழ’ அனுமதிக்கிறேன். மட்டுமல்லாமல் உங்களை சேர்த்துக்கொள்கிறேன். உங்களை ஏற்கிறேன். உங்களை ஏற்கும்போதே என்னிலிருந்த போர் விழைவை கைவிடுகிறேன். எனது அமைதியைப் பார்த்து நீங்களும் அமைதியடைகிறீர்கள். எனவே, வெல்வது உங்கள் நோக்கமென்றால் இதயத்தை வெல்லுங்கள். போரிடுகையில் அழிவது மற்றவர் மட்டுமல்ல, நீங்களும்தான்.
பலராமனை எதிர்த்துவந்த ஒரு அசுரனைப் பற்றிய கதை உண்டு. அவனது சவாலை ஏற்று அவன் தலையை சிதைக்க கை ஓங்கினான் பலராமன். அசுரன் பலராமனைப்போல் இருமடங்கு பெரிதானான். பலராமனும் அவனளவுக்கு பெருகினான். உடனே அசுரன் மேலும் இருமடங்கு பெருகி மலைகளைப் பெயர்த்து அவன் மேல் வீச முயன்றான். தன்னால் அசுரனை அடக்கமுடியாது என்றுணர்ந்த பலராமன் கிருஷ்ணனிடம் உதவி வேண்டினான். கிருஷ்ணன் ‘அவனை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றான்.
அசுரன் கையில் ஆயுதம் எதுவும் இல்லை என்பதைக் கண்ட கிருஷ்ணன் கைகளை விரித்து புன்னகை செய்தான். அசுரன் மானுடர் அளவுக்கு சுருங்கினான். மயக்கும் புன்னகையுடன் ‘வா நண்பனே’ என்றான் கிருஷ்ணன். அருகில் வந்த அசுரன் கிருஷ்ணனை விட சிறிய உருவு கொண்டான். கிருஷ்ணன் அவனை தட்டிக்கொடுத்தான். அவன் மேலும் சுருங்கி மிகவும் சிறியதானான். சின்னஞ்சிறு உருவு கொண்ட அவனை கையிலெடுத்து தடவிக்கொடுத்தான் கிருஷ்ணன்.
“எப்படி அவனை இவ்வளவு சுருக்கினாய்? எனக்கு புரியவில்லையே?” என்றான் பலராமன். “இவன் பெயர் என்னவென்று தெரியுமா அண்ணா?” “இல்லையே” “இவன் பெயர் குரோதன். சினம். நீங்கள் சினம் கொள்கையில் அவனுக்கு தீனி போடுகிறீர்கள். பிறரது சினத்தில் வாழ்பவன் அவன். உங்கள் சினம் இல்லாதாகும்போது அவனுக்கு உணவு இல்லாமாலாகிறது. சிறுத்துக்கொண்டே செல்கிறான். என் அன்பை் கொடுக்கும்போது, உண்ண ஏதுமின்றி அவன் சுருங்கிப்போகிறான்” என்றான் கிருஷ்ணன்.
புத்தர் கற்பித்ததன் மையமும் இதுதான்: ‘வெறுப்பால் வெறுப்பை அணைக்கவே முடியாது; ஆனால் அன்பால் அனைத்தையும் வெல்லலாம்.’