ஒரு மதம் அந்யனு நிந்த்யம் ஒன்னில் ஓதும்
கரு அபரன்றெ கணக்கின் ஊனமாகும்
தரயில் இதின்றெ ரஹஸ்யமொன்னுதான்
என்னறிவளவும் ப்ரமமென்னறிஞ்ஞிடேணம்
(ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 45)
ஒரு சமயம் பிறனுக்கு வெறுப்பாகின்றது
ஒன்றன் கரு பிறன் கருத்தில் ஊனமாகின்றது
இதன் மந்தணம் உலகிலொன்றே
அதனையறிவதுவரை உள்ளது குழப்பமே
**
ஒருவர் பொதுவாக எப்போதும் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை வைத்து அவருக்கென ஒரு பண்புநலன் உண்டாகிறது. அதன் மூலம் அவர் நடவடிக்கைகளை ஊகிக்க முடிகிறது. ‘அவர் உண்மையான கிறிஸ்தவர். அதனால் அவர் சொன்ன சொல்லை காப்பாற்றுவார்’ என்கிறோம். அல்லது ‘அண்டை அயலாருடன் ஒருபோதும் சண்டையிட மாட்டார்’ என்போம். அவரது நடவடிக்கையை கவனித்துக் கொண்டே இருந்தால் குறிப்பிட்ட சூழலில் அவர் எப்படி எதிர்வினையாற்றுவார் என்று நம்மால் கணிக்க முடியும்.
ஒருவர் தேரும் பழக்கவழக்கம் வழியே அவரது பண்புநலன் வெளிப்படுகிறது. பழக்கவழக்கங்களோ நமது விழுமியங்களில் இருந்து வருகின்றன. அகவயமான எதிர்ப்பின்மையிலிருந்தும், பல இயல்கைகளிலிருந்து ஒன்றை தேரும் நமது விருப்பாற்றல் மூலமாகவும் விழுமியங்கள் மீதான பற்றுக்கோள் உருவாகிறது.
செயல்களே விருப்பை மெய்யாக்குகின்றன. ஒன்றன் மீது விருப்பு தோன்றுவதே எளிதானதல்ல. உங்கள் முன் ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகள் இருக்குமென்றால் ஒரு முரண் தோன்றுகிறது. ஒவ்வொரு தேர்வையும் நீங்கள் மதிப்பிடுகையில் உங்களது உள்ளார்ந்த அவாக்களைப் பொறுத்து அவற்றின் மேன்மை உங்களுக்கு புலனாகிறது. ஒரு அவா நீங்கள் நல்ல பெயர்பெறவேண்டும் என்கிறது. மற்றொன்று உங்களது ரகசிய வேட்கைகள் எப்படியாவது நிறைவேறவேண்டும் என்கிறது. அத்தகைய வேட்கை நிறைவேற்றம் சமூகத்தால் இழிவாக கருதப்படும் என்றால், சமூகத்தால் நீங்கள் எவ்வளவு மதிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டி வருகிறது. சமூக எதிர்பார்ப்பும் தனியரின் வேட்கை நிறைவேற்றமும் மோதுகையில், சில சமயங்களில், உங்களது ஆழ்ந்த வேட்கைகளைத் தாண்டி, நெடுநாள் நீடிக்கக்கூடிய சமூகத்தின் மதிப்பே முக்கியம் என்று நீங்கள் முடிவெடுக்கலாம். கணநேரம் நீடிக்கக்கூடிய எளிய மகிழ்ச்சியா நெடிதுநீளும் மகிழ்வா என்பதை முடிவுசெய்யவேண்டி வருகிறது. இரண்டிலும் அடிப்படைக் கூறு மகிழ்ச்சிதான். கண நேரம் இருப்பதா, நீடித்து நிற்பதா, பாதுகாப்பானதா, பாதுகாப்பற்றதா என்பதே கேள்வி.
இன்பநாட்டத்திலிருந்தே அனைத்து வேட்கைகளும் தோன்றுகின்றன. ஒருவருக்கு பல வேட்கைகள் இருக்கமுடியும் என்பதே இங்கு வேட்கைகளின் பிரபஞ்சங்கள் பல உண்டு என்பதை காட்டுகிறது. ஒவ்வொரு வேட்கையிலும் கருவென இருப்பது இன்பத்தின் கூறு. அத்தகைய இன்பக் கூறுகளின் பெருங்கூட்டங்கள் வடிவான குழுக்களாக வந்து நம் மனங்களில் கூட்டுத் தாக்கம் ஒன்றை ஏற்படுத்துகின்றன. உங்கள் மனைவியோ, கணவனோ, அண்டை அயலாரோ நீங்கள் செய்வதை மகிழ்வோடு ஏற்கிறார்கள் என்றால் அந்த கூட்டு ஒப்புதல் உங்கள் ஏற்புக்கு மேலும் ஒரு தூண்டுதலாகிறது. ஏனெனில், இரண்டு நன்மைகள் உங்களுக்கு ஏற்படுகின்றன – ஒன்று தனிப்பட்ட விருப்பு நிறைவேற்றம், மற்றொன்று பலரது ஒத்துழைப்பு. நீங்கள் தனியராக அனுபவிக்கக் கூடிய ஒன்றிற்கும் பலரோடு பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒன்றிற்கும் இடையில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டி வந்தால் நீங்கள் இயல்பாகவே எல்லோரும் ஏற்கக் கூடிய ஒன்றையே தேர்ந்தெடுக்கக் கூடும்.
குழந்தைப்பருவத்திலிருந்தே இத்தகையே தேர்வுகள் அவசியமாகின்றன. இளமையில் நீங்கள் பெரியவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. அவர்கள் தாங்கள் முதியவர் என்பதாலேயே தங்களை அறிவில் மேம்பட்டவராக எண்ணிக்கொள்பவர்கள். The Little Prince என்ற நூலில் Saint Exupery இதுகுறித்து விவாதிக்கிறார். பெரியவர்கள் தங்களை அறிந்தவர்களாக கருதிக்கொள்வதோடு உங்களுக்கு எது நல்லது என்று தாங்கள் கருதுகிறார்களோ அதை உங்கள் மீது திணிக்க தமக்கு உரிமை உண்டு என்றும் எண்ணுகின்றனர். குழந்தைக்கு நன்மை என்பதெல்லாம் புரிவதில்லை, பெற்றோர் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் மட்டுமே உள்ளது.
பற்றுறுதி கொண்டவர்களைச் சார்ந்தே குழந்தைகள் இருக்கவேண்டியுள்ளது. “இதுவே உன் பற்றுறுதியாகவும் இருக்கவேண்டும்” என்றும் குழந்தையிடம் சொல்கின்றனர். இதை எதிர்த்து வெல்ல பொதுவாக குழந்தைகளால் முடிவதில்லை. அடி கிடைக்கும் என்பதால் பெரும்பாலான சிறுவர்கள் எதிர்ப்பதில்லை. எதிர்ப்பதை குறைத்துக்கொண்டால்தான் நல்லது என்பதால் பெற்றோர் சொல்வதை ஏற்றுக்கொண்டுவிடுகின்றனர்.
ஆக, தனக்கான விழுமியங்களை குழந்தை அறிவதற்கு வெகுமுன்பாகவே, பலப்பல புறவய விழுமியங்கள் அதன் மனதில் ஏற்றிவைக்கப்பட்டுவிடுகின்றன. அவற்றில் எண்பது சதவீதத்திற்கும் மேலானவை பாவ்லோவின் தூண்டல் துலங்கள் கட்டுப்படுத்தல்கள்தாம். குழந்தைகளுக்கு சிறந்த கல்வி அளிப்பதாக நாம் பெருமை கொள்கிறோம். ஆனால் பாவ்லோவ் தன் நாய்களுக்கு அளித்ததைவிட சிறந்த கல்வி அல்ல அது. நீங்கள் மணியை அடித்துவிட்டு உணவு கொடுத்தால் மணி அடிக்கும்போதெல்லாம் பரிசு கிடைக்கும் என்று அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.
மேலைநாடுகளைப் பொறுத்தவரை கற்பது என்பதே சமூகம் ஏற்கக்கூடியபடி நடந்துகொள்ளுதல். உணவு மேசையில் முட்டியை வைக்கக்கூடாது என்று சொல்லப்பட்டால் குழந்தை ஏன் என்று கேட்கக்கூடாது. ஏன் முட்டியை மேசையில் வைக்கக்கூடாது எனபது எனக்கும் புரியவில்லை. அப்படி வைத்துக்கொள்வது வசதியாகவே இருக்கிறது. ஆனால் பெற்றோர் அப்படி செய்யக்கூடாது என்று முடிவெடுக்கின்றனர். இது கட்டுப்படுத்தல் மட்டுமே. பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது இது.
நாராயண குரு இங்கு பேசுவது கிறிஸ்தவம் பற்றியோ இஸ்லாம் பற்றியோ அல்ல. அதை பொதுவுடைமை என்றோ கட்டற்ற சிந்தனை என்றோ சொல்லலாம். அது எதுவாகவும் இருக்கலாம். ஆனால் எதுவும் சுதந்திரமானது அல்ல. கட்டற்ற சிந்தனை இருக்கிறது என்றால் குழந்தை கட்டற்ற சிந்தனைக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது என்பதே பொருள். வாழ்க்கை இத்தகைய புதிர்களால் நிறைந்தது. பதினேழு அல்லது பதினெட்டு வயதாகும்போது ஒருவர் முற்சார்புகளின் மூட்டையாக ஆகிவிடுகிறார். அந்த முற்சார்பின் அடிப்படையில்தான் பிறரது பண்புநலனையும் அவர்களது நடவடிக்கைகளையும் விழுமியங்களையும் மதிப்பிடுகிறார்.
‘ஒரு மதம் அன்யனு நிந்த்யம்’ என்கிறார் குரு. “உன் மதம் எனக்கு ஒருபோதும் சரிவராது. நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்.” “ஏன்?” “அது என்னுடைய மதமல்ல. என்னுடையதில்லை என்றால் அது எப்படி நல்லதாக இருக்க முடியும்?” அடுத்து ‘ஒன்னில் ஓதும் கரு அபரண்டெ கணக்கினூனமாகும்’ என்கிறார். “உன் மத நூலில் சொல்லப்பட்டிருப்பது குறைவுபட்டது.” நபியின் வழித்தோன்றல் ஒருவர் ‘மனிதனுக்கு உகந்ததெல்லாம் குரானில் சொல்லப்பட்டுள்ளது. அதில் இல்லாத எதுவும் உண்மையாக இருக்க முடியாது. அதில் உள்ளது வேறு எங்காவது சொல்லப்பட்டிருந்தால் அது தேவையில்லாத ஒன்று” என்றார். “பைபிள் ஒன்றே போதும். எதற்கு மற்ற நூல்களெல்லாம்?” என்று சொல்லி அலெக்ஸாண்ட்ரியாவின் மாபெரும் நூலகத்தை எரித்தான் பேரரசன் தியோடோசியஸ்.
ஒருவிதத்தில் நாம் அனைவரும் ஒன்றையேதான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறோம். கிங் ஜேம்ஸ் பைபிள் பல அமெரிக்கப் பிரிவினரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அது அமெரிக்கப் பதிப்பு இல்லை என்பது மட்டுமே காரணம். மற்றவர்களோ அமெரிக்கப் பதிப்பை, அது கிங் ஜேம்ஸ் பதிப்பு அல்ல என்பதாலேயே, குப்பையெனக் கருதுகின்றனர். ஆனால் நூல் ஒன்றுதான். இரு வகையினருமே யேசு கிறிஸ்துவுக்கு தம்மை ஒப்புக் கொடுத்தவர்தான். ஆனாலும் அது குறித்து வாதிட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
நமது அளவுகோலை வைத்துக்கொண்டே பிறரது நம்பிக்கையை நாம் அளக்க விரும்புகிறோம் என்கிறார் நாராயண குரு. நமது ‘மதி’யே, அறிவுப்புலமே, நமது அளவுகோல். நமது குழந்தைப்பருவத்தில் நாம் பெற்ற வெகுமதிகளையும் தண்டனைகளையும் பொறுத்து நம்மில் உருவானது அது. என்னில் அப்படி உருவான எனது அளவுகோலைக் கொண்டு உங்களது உறுதிப்பாடுகளை நான் அளக்கிறேன். நமது அளவுகோல்களில் பொதுத்தன்மை என்று ஏதும் இருப்பதில்லை. நமது வாழ்வனுபவங்களின் அடிப்படையில், நிகழ்வுகளை நாம் புரிந்துகொள்வதன் அடிப்படையில் அது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒன்றாக உருவாவது. விளைவாக, நாம் பூசலிட்டுக்கொண்டே இருக்கிறோம். ஒன்றுகூடுவதற்கு முன்னரே சண்டையிடுவது என்று முடிவுசெய்துவிடுகிறோம்.
மற்றொரு இயல்கையும் உள்ளது; தனிப்பட்டதாக ஒவ்வொருவர் மனதிலும் உருவாக்கப்படாத அளவுகோல். ஸத், சித், ஆனந்தத்தை சார்ந்தது அது. ஸத் என்பது இருத்தல்; சித் என்பது மெய்மை; ஆனந்தம் என்பது விழுமியம். ஒவ்வொருவர் இதயத்தில் பொறிக்கப்பட்டுள்ள மெய்யிருப்பின் விழுமியம் அது. எல்லா அனுபவங்களிலும் இம்மூன்று கூறுகளும் இருந்தே தீரும்: இருத்தல் கூறொன்று, அவ்விருத்தலின் அறிவு; அவ்விருத்தலின் சாரம்/விழுமியம்.
அடிப்படையில் நம்மிடம் இருக்க வேண்டியது சார்பற்ற மனப்பான்மை. எவ்வகையான சார்பும் இல்லாத கோணத்திலிருந்து ஒவ்வொருவரது விழுமியத்தையும் விளங்கிக்கொள்ளக்கூடிய, தொடர்புறுத்தி அறியக்கூடிய மனம் உங்களுக்கு இருக்குமானால் அங்கு எந்த சிக்கலும் இல்லை. இவ்வகையில் சிந்திப்பதையே நீங்கள் பழகவேண்டும். இதை பழகிவிட்டால், பிறரது தொழுகைகளை உங்களால் புரிந்துகொள்ள முடியும். மதம் கடந்த, அறிவெல்லை கடந்த அம்மொழி உங்களுக்கு பொருள்படும். அனைவரது மதமொழியும் அதுதான். இந்தப் புரிதல் நம்மிடம் ஏற்பட்டுவிட்டால் பிறரது வழிகளை நாம் ஏளனம் செய்ய மாட்டோம். இது இல்லாதபோது பிறரை மதிப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்; உள்ளுக்குள் நகைத்துக்கொண்டே இருக்கிறோம். அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு சுட்டிக்காட்ட விழைகிறோம்.
எதற்கெல்லாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோமோ அவற்றிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்பதையே இப்பாடல் கூறுகிறது. மதி, மதம், தர என்ற அருஞ்சொற்களை குரு இங்கு பயன்படுத்துகிறார். அரும்பொருள் கொண்டவை இவை. ‘தரயில் இதின்றெ ரஹஸ்யம்” என்கிறார். தர என்பது நிலத்தைக் குறிப்பது. நிலம் அனைவரையும் தாங்குவது என்பதால் ‘பிரபஞ்ச ஆதரவு’ குறிப்புணர்த்தப்படுகிறது. நமது அடிப்படை ஆதாரமாக இருப்பது நிலம். உங்களது தனிப்பட்ட தேர்வுகளுக்கான ஆதாரமாக இருக்கும் அடிப்படை அறத்தின் மந்தணத்தை நீங்கள் அறியும்போது நீங்கள் பூசலிட வேண்டிய தேவையே இருப்பதில்லை.
‘இது குடம்’ என்று சொல்லப்படும்போது, ‘குடம்’ எனும் ‘விசேஷ’த்திலிருந்து நீங்கள் ‘இதை’ நோக்கி நகர வேண்டும். ‘இது’ என்பதை புரிந்து கொள்வது எளிதாக இருப்பதில்லை. எனவே நீங்கள் அதை மறந்துவிடுகிறீர்கள். உண்மையில் நீங்கள் தியானிக்க வேண்டியது ‘இது’ என்பதையே, குடத்தை அல்ல. சார்பற்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள இது உதவும்.
உங்களுக்கு அளிக்கப்படும் மதத்தில் இரண்டு மாறுபட்ட கூறுகள் உள்ளன. ஒன்று கிறிஸ்து போன்றவர் தம் அகத்தில் உணர்ந்தது. அதுவே ‘இது’. மற்றொரு கூறான ‘குடம்’ என்பது பீட்டர் கவனித்தது. பீட்டர் கவனித்தது எதை என்பது மட்டுமே உங்களுக்கு தெரியும். ‘இது’ என்ற கூறு நீங்கள் அறியாதது. ‘குடம்’ என்பது வெளிப்படையாக தெரிவது. குயவனது மனதில் இருந்தது என்ன என்பது நீங்கள் அறியாதது. அவன் செய்த குடத்தை நீங்கள் அறிவீர்கள் என்பதால் அதையே பற்றிக்கொள்கிறீர்கள்.
ஒரு குரு இறந்தபின், குறைந்தபட்சம் ஐந்து பேருக்கிடையிலாவது பூசல் நிகழக்கூடும். குருவை ஒவ்வொருவரும் ஒரு கோணத்தில் அணுகியிருக்கக்கூடும். ஒருவரது அவதானிப்பை இன்னொருவர் ஏற்பதில்லை. சாக்ரடீஸின் கல்வி முறையிலேயே ஆறேழு வகைமைகள் உண்டு. அவரைச் சூழ இருந்தவர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கற்பித்தல் முறை கொண்டவர்கள்.
தனியர் ஒவ்வொருவருக்கும் உண்டான சிறப்புக்கூறு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானது. எனவே, ‘மனிதர் பலர்; மதங்களும் பல’ என்று நீங்கள் சொல்லலாம். அல்லது ‘இருப்பது ஒரு மதம்தான்’ என்று சொல்லலாம். குழுக்களாக செயல்படும் மதங்களிலிருந்து இவை வேறுபட்டவை. மதக் குழு என்பது சமூகம் தரக்கூடிய சலுகைகளை பெறுவதற்காகவும், ஆட்சியதிகாரத்தின்மேல் தன் அழுத்தத்தை செலுத்துவதாகவும் இருப்பது. கிறிஸ்தவர்கள் ஒரு நிரையாக இல்லாதபோது கிறிஸ்தவரல்லாதவர்கள் அவர்களை சுற்றிவளைத்து கொல்லத்தொடங்கினர். ஆகவே அவர்கள் மறைவாக குழுமத் துவங்கினர்; மீன் சின்னத்தை அடையாளமாகக் கொண்டனர். ரோமப் படையினரின் வலிமையை அறிந்திருந்ததால் அதே முறையை பின்பற்றி இறையின் அரசாட்சியை பூமியில் கொண்டுவரமுடியும் என நம்பினர். “நாமும் திரள்வோம்; படைக்கலம் ஏந்துவோம்” என்றனர். வாளெடுத்தவன் வாளால் அழிவான் என்று யேசு கூறினாரே என்றால் “அது பரவாயில்லை. எமது இறைவனுக்காக நாங்கள் வாளெடுக்கலாம். சிலுவைப் போர் புரிவோம்” என்றனர்.
மதம் என்ற பெயரில் அத்தகைய முட்டாள்தனங்களே காலம் காலமாக அரங்கேறி வருகின்றன. ஒரு மதத்தில் மட்டுமல்ல; அனைத்து மதங்களிலும் இதே கதைதான். கருணையே வடிவான பேரன்பு கொண்ட தூயவர்களின் பெயரில் இந்த உலகில் அத்துணை உதிரம் சிந்தப்பட்டுள்ளது. நாராயண குரு இங்கே அனைவரின் உள்ளிலும் திகழும் கருணை இதயத்திடம் இறைஞ்சுகிறார். அனைவருக்கும் பொதுவாய் நம் அனைவரையும் தாங்கி நிற்கும் இந்நிலத்தின்பொருட்டு, குருதி சிந்துவதை நிறுத்துவோம். நாம் நிற்பதற்கு பொது ஆதாரமாய் நின்றிருக்கும் இந்நிலத்தைப் போலவே அனைத்து மதங்களுக்கும் பொதுநோக்காக இருப்பது மகிழ்ச்சியே என்பதை அறிவோம்.