ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 44

பல மத ஸாரவும் ஏகமெந்நு பாராது

உலகில்  ஒரானயில் அந்தர் என்னபோலே

பல வித யுக்தி பறஞ்ஞு பாமரன்மார்

அலவது கண்டு அலயாது அமர்ன்னிடேணம்

(ஆத்மோபதேச சதகம் – பாடல் 44)

மதங்கள் பல சொல்வது ஒன்றென்றறியாது

மத்தமா விளக்கிய குருடர் போல

பாமரர் பகரும் பலவும் கேட்டு 

அலைவுறாது அமைந்திடல் வேண்டும்

*

இது எளிய பாடலாக தோன்றக் கூடும்.  ஆனால் முந்தைய பாடலோடு ஒரு நுட்பமான தொடர்பு இதற்கு உள்ளது. 41-ஆவது பாடலில், ‘இது ஒரு குடம்’ என்பதில் முதலில் வரும் ‘இது’ என்பது எளிதில் அறிய முடியாத ஒன்று என கூறப்பட்டது. அதன் தகுதி குடம் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம். இந்தச் சூழலின் விளைவாகவே அறிவாற்றலை ஊற்றுமுகமாகக் கொண்ட இருத்தலின் இயல்நிகழ்வெனும் மாயம் தோன்றுகிறது.

மனம் உணரக்கூடியவற்றின் இயல்பை அறிவாற்றலே நிர்ணயம் செய்கிறது. மனம் ஒன்றை மதிப்புமிக்கது என முடிவு செய்தால் அது பெருமதிப்பு கொள்கிறது, ஒன்றை மதிப்பேதும் அற்றதாக நிர்ணயித்தால் அது மதிப்பிழக்கிறது.

சிலர் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் என்று நாம் சொல்வதுண்டு. சிலர் சரியாக புரிந்துகொள்ளாமல் ஒன்றை பெரிதுபடுத்துவதாகவும், சிலர் ஒன்றை குறைத்து மதிப்பிடுவதாகவும் சொல்கிறோம். இக்கூற்றுகளெல்லாம் மதியை – அறிவாற்றலை – குறைகூறுபவை. அதன் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குபவை. அறிவாற்றல் சற்று அதிகம் கொண்ட ஒருவர் ஒன்றைச் சொல்லும்போது, அவரைவிட அறிவில் குறைந்தவராக தம்மைக் கருதுவோர் அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள முயல்வது இயல்பு. இப்படியாக பலரும் தமக்கென ஒரு முடிவை எடுக்காமல் தூய நம்பிக்கையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றனர். இங்கு செயல்படுவதும் மதமே – மதியிலிருந்து பிறக்கும் மதம். வெறும் அறிவாற்றல் அடிப்படையிலான ஒரு முடிவு பொதுநம்பிக்கையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இது அறிவு என்று சொல்லும்போது, ‘இது’ என்பதே அனைத்து அறிவிலும் இணைப்புக் கூறாக இருக்கிறது, அறிவு என்பது அக்கூறின் தகுதிப்பாடாக இருக்கிறது (42-ஆவது பாடல்). அறிவாற்றல் அறிவை சிறுசிறு கோளங்களாக (களங்களாக) உயிர்ப்பூட்டுகிறது. உங்களை பற்றி இருக்கும் அதன்பிடியிலிருந்து விடுபட வேண்டுமென்றால், முழுமையான தரிசனத்தை நீங்கள் பெறவேண்டுமென்றால் நீங்கள் “இது” என்பதை தியானிக்க வேண்டும்.

நனவின் முன் ‘இது’ வைக்கப்படும்போது இருவிதமான அழுத்தங்கள் உண்டாகின்றன. ஒருபுறம் புலன் தகவுகள் சார்ந்தும், மறுபுறம் அறிவார்ந்த தொகுத்துக் கொள்ளுதல் சார்ந்தும் இவை ஏற்படுகின்றன. உங்களுக்குள் இரண்டு ஒளிகள் பாய்கின்றன. உடல்சார்ந்தும் உள்ளம்சார்ந்தும் நீங்கள் தூண்டப்பெறுகிறீர்கள். முதலில் வருவது உடல்சார் தூண்டல், இரண்டாவது அகம் சார்ந்தது. இரண்டையும் புரிந்துகொள்ள உங்களுக்கு விழிப்புணர்வெனும் ஒளி தேவைப்படுகிறது. இந்த விழிப்புணர்வின் மூலம் ஒரு பொதுக்கூறு. அது உங்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்துயிர்களுக்கும் பொதுவானது. 

புலன்கொண்ட உயிர்கள் அனைத்திலும் இந்த ஒளியூட்டம் ஒரு பொதுவான மூலத்திலிருந்து வந்தாலும் அதன் குவிப்பு இடம்மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு கணம் அது இயல் தகவின் மீது குவிகிறது, மறுகணம் அக எண்ணங்கள் மீது குவிகிறது. அல்லது மீண்டும் அது அனைத்தறிவின் பொது மூலத்தில் குவிகிறது. இவற்றில் முதலிரண்டில் அறிவாற்றல் என்பதே புரிதலை நிகழ்த்துகிறது. நமது முடிவுகளை வெளிப்படுத்த நமது அறிவாற்றலையே நாம் பயன்படுத்துகிறோம். குழந்தைப்பருவத்திலிருந்தே நமது வளர்ச்சியில் இவை உறுதியாக கட்டமைக்கப்பட்டுவிடுகின்றன.

கேள்வி கேட்டு விடை பெறும் குழந்தை உண்மைக் கூற்றுகளை (statements of fact) அறிவதோடு, தொடர்புறுத்தலில் உள்ள சிக்கல்களையும் புரிந்துகொள்கிறது. ஒவ்வொரு விடையும் பலவற்றை கற்பிக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை மறைமுகமாகவே உள்ளன. காரண-காரியத் தொடர்பு குறித்து சிந்திக்கத் தொடங்கும் குழந்தை பொதுக் கூற்றுகளும் குறிப்பிட்ட நிகழ்வுகளும் இருப்பதை உணர்கிறது. தன்னால் தனிப்பட்ட முடிவுகளையும் பொதுமையான முடிவுகளையும் எட்ட முடியும் என புரிந்துகொள்கிறது. ஊகித்தறிவதும் பகுத்தறிவதும் அறிவுச் செயல்பாட்டின் பகுதிகளாகின்றன. பொதுக்கூற்று ஒன்று ஏன் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று அறிய விழைகையில் அறிந்த உண்மையிலிருந்து பொது உண்மையை  எட்ட முற்படுகிறீர்கள். இவ்வாறாக புற உலகிலிருந்து வருபவற்றையும், புறவயமானவையும் நினைவுகளும் தூண்டும் எண்ணங்களையும் அறிய உங்கள் அறிவாற்றலை ஒரு திறன்மிக்க கருவியாக்குகிறீர்கள். உங்களது தனிப்பட்ட வாழ்வின் சிக்கல்களைத் தீர்க்க சிறந்த கருவி அது என்று தெரிந்தபின் அதையே என்றென்றைக்குமான பற்றுக்கோடாக ஆக்கிக் கொள்கிறீர்கள். 

இதை நீங்கள் செய்தபின் நீங்கள் இன்னொரு தளத்திற்குள் நுழைகிறீர்கள். அது புறத்தூண்டல்களுடனோ அகவயமான எண்ணங்களுடனோ நேரடித் தொடர்பில்லாதது. இப்போது நீங்கள் ஒரு அடிப்படைத் தேவையால் தூண்டப்படுகிறீர்கள். தன்னை காத்துக்கொள்ள எண்ணுகையில் உங்களைச் சுற்றியுள்ள நம்பிக்கையற்ற சூழல் உங்களுக்கு புரியத் தொடங்குகிறது. ஓரிரு தலைமுறையினரைத் தாண்டி உங்கள் முன்னோர் எவரும் இப்போது உயிருடன் இல்லை. பிறக்கும் அனைவரும் இறந்தேயாக வேண்டும் என்ற நிலையில் நம்மைச் சுற்றிலும் நாம் மரணத்தை காண்கிறோம்.

கண்ணாடியில் உங்களை பார்க்கும்போது தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டதை, முகத்தில் புதிய சுருக்கங்களை, தோலின் நிறமாற்றத்தை கவனிக்கிறீர்கள். தவிர்க்க முடியாத முதுமை வந்துகொண்டே இருக்கிறது.  உடல் எப்படியும் அழியவே போகிறது. அதை விட்டுச் செல்ல உங்களுக்கு விருப்பமில்லை. ஆனால் எவரோ ஒருவர் உங்களிடம் உடல்தான் அழியக்கூடியது, ஆன்மா என்றுமிருப்பது என்று ஆறுதல் கூறுகிறார். ஆனால் அந்த ஆன்மா என்னவென்று நமக்கு தெரிவதில்லை. மனம் அமைதி பெறவேண்டுமென்றால் நம் கவனத்தை உடல்சார் உணர்வுகளிலிருந்து ஆன்மாவின் பக்கம் திருப்ப வேண்டியுள்ளது. அந்த ஆன்மாவோ ஊகிக்கத் தக்க ஒன்றாக மட்டுமே உள்ளது.  

அறிவாற்றலையே கருவியாகக் கொண்டு நாம் நமது ஊகங்களை உண்டாக்குகிறோம். ஒன்றன் இயற்பியல் பண்புகளை திறம்பட அளப்பதற்கு உதவுவது அறிவாற்றலே. அளவுகோல் போன்ற ஒரு கருவியை பயன்படுத்தும்போது நம்மால் துல்லியமாக அளக்க முடியும். ஆனால் பொருண்மைத் தளத்தில் மட்டுமே அது பயன்படும். அதில் நம்பிக்கைக்கு இடமில்லை என்பதையும் நீங்கள் ஏற்கனவே கண்டடைந்துவிட்டீர்கள். அது மாறிக்கொண்டே இருப்பது, சீரழிந்துகொண்டே இருப்பது. எவரோ நம்மிடம் சொன்ன ஆன்மாவின் அழிவின்மை என்பதில் மட்டுமே நாம் சிறிது நம்பிக்கை வைக்கலாம். நமக்கு நேரடி அனுபவம் இல்லை என்பதால் இங்கும் நமக்கு அறிவாற்றல் பயன்படாது. என்றாலும் நாம் நன்கு அறிந்ததும் நமக்கு ஆறுதல் அளிப்பதும் அதுவே.

ஆதலால் நீங்கள் இந்த அறிவாற்றல் எனும் கருவியை எல்லா சூழல்களிலும்  பயன்படுத்த விழைகிறீர்கள். மிகப் பழங்காலத்தில் என்றால் நீங்கள் உங்கள் அண்டைவீட்டாரிடம் ‘ ஆன்மா அழிவற்றது என்று யார் சொன்னது?’ என்று கேட்டிருப்பீர்கள்.

‘தேவாலயத்தில் கேட்டது.  பாதிரியார் அவ்வாறு சொன்னார்’

‘எல்லோரிடமும் ஒரு ஆன்மா இருக்கிறதா?’

‘நிச்சயமாக’

‘அனைவரது ஆன்மாவும் அழிவற்றதா?’

‘இல்லவே இல்லை. நம்மை காப்பவரை எவர் நம்புகிறாரோ அவருக்கு மட்டுமே இது பொருந்தும் என்றார் பாதிரியார்’

‘உங்களுக்கு பொருத்திப் பார்க்கத் தெரியவில்லை. ஆன்மா என்பது அழிவற்றது என்றால், அனைவருள்ளும் ஒரு ஆத்மா உள்ளது என்றால், அவை அனைத்துமே அழிவற்றதாகத்தான் இருக்க வேண்டும்’

‘இல்லை. அனைவருள்ளும் ஒரு ஆன்மா உண்டு. ஆனால் நீங்கள் ஏசு கிறிஸ்துவை நம்பவில்லை என்றால் அதற்கு பெரும் ஆபத்து’ என்பதே இதற்கு எதிர்வினையாக இருக்கும்.

‘யார் சொன்னது?’

‘எங்கள் பாதிரியார்’

‘அது ஏதாவது புத்தகத்தில் உள்ளதா?’

‘ஆம், அவரிடம் உள்ள தோலட்டை போட்ட புத்தகத்தில் உள்ளது. அவர் அதிலிருந்துதான் படிக்கிறார்’

‘நாம் அதை பார்ப்போம்’

‘ஆனால் அது லத்தீன் மொழியில் அல்லவா இருக்கிறது?’

‘அதை ஏன் மொழிபெயர்க்கக் கூடாது? அனைவரும் படிக்கலாமே?’

இப்போது கேள்வி கேட்பவர் சாத்தானின் தூதராக கருதப்படுகிறார். “உன்னுள் சாத்தான் குடியிருப்பதால்தான் நீ சந்தேகப்படுகிறாய். நாங்கள் உன்னை அழிவற்றவனாக்க கற்றுத்தருகிறோம். ஆனால் நீ அதை உன் கண்களால் பார்க்க விரும்புகிறாய். உனக்குள் நிச்சயம் சாத்தான் உள்ளது”. இதனால்தான் நடுயுகத்தில் பைபிளை லத்தீன் மொழியிலிருந்து மொழியாக்கம் செய்ய முயன்றவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர். ஆன்மாவின் நிலைபேற்றை தாங்களே அறிய விரும்பியதுதான் அவர்கள் செய்த பிழை.

இன்னொருவர் “ஆம், அல்லா அதை உறுதிசெய்கிறார்” என்கிறார். மற்றொருவர் “ஆன்மாவின் நிலைபேறு வேதங்களால் நிறுவப்பட்டுள்ளது” என்கிறார். இப்படி பல குழுவினரும் ஆன்மாவின் நிலைபேற்றுக்கு உத்தரவாதம் அளிக்கின்றனர். ஆனால் அவை எல்லாம் ஏதோ விநோத மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன; எவரிடமோ அரிய பெட்டி ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை கண்டடையும் வழி உங்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. இந்நிலையில்தான் புத்தர் தோன்றுகிறார். “ஆன்மா நிலையானதா?” என்று அவரிடம் கேட்டால் “ஆன்மா என்று ஒன்றிருந்தால் அதற்கு நிலைபேறு என்று ஒன்று இருக்கக் கூடும். ஆன்மா நிச்சயம் என்றால் அதன் நிலைபேறும் நிச்சயம்” என்று அவர் சொல்லக்கூடும். நீங்கள் குழம்புகிறீர்கள். “அநாத்மா, ஆன்மா என ஒன்றில்லை” என்கிறார் அவர்.

இவை எல்லாம் இருப்பது ‘மதி’ என்னும் அறிவுப்புலத்தில். இப்பாடலில், நம்பிக்கையைக் குறிக்க, அறிவுப்புலத்திலிருந்து தோன்றும் ‘மதம்’ என்பதை பயன்படுத்துகிறார் நாராயண குரு. சமயம் என்பதையும் குறிப்பது அச்சொல். சமயம் இரண்டு கூறுகள் கொண்டது. ஒன்று ஊகத்தை பயன்படுத்துகிறது. கிறிஸ்தவம், பௌத்தம், இந்துமதம், யூதமதம், இஸ்லாம், சீக்கிய மதம் போன்ற பெருமதங்களின் ஊற்று எது? அவை எல்லாமே ஒரு தெய்வீக வெளிப்பாடிலிருந்து தோன்றியவை. பெரும்பாலும் அந்த வெளிப்பாடு ஒரு தனி நபர் மூலம் நிகழ்ந்ததாய் இருக்கும். எடுத்துக்காட்டாக, கிறிஸ்தவம் முழுமைக்கும் கிறிஸ்துவின் சொல்லே அடிப்படை. 

கிறிஸ்து மீண்டும் மீண்டும் தன் சீடர்களை ‘நம்பிக்கை குறைந்தவரே, புரிதல் குறைந்தவரே’ என்றழைக்கிறார். அவர் நாடுவது, ‘மதி’ சாராத ஒரு முழுமை தரிசனத்தை. அதற்கு எவரது இடைபாடும் விளக்கமும் அவருக்கு தேவைப்படவில்லை. பின்னர் அவர் அதை மற்றவருக்கு காட்டினார். அவர்களுக்கு அது கைமாற்றப்பட்ட அறிவாகவே இருந்தது. தங்களது அறிவால் ஏற்பட்ட திரிபுகள் வழியேதான் அதை அவர்கள் கண்டனர். அதனால்தான் கிறிஸ்துவின் கற்பிக்கைகளுக்கு பீட்டர் கொடுத்த விளக்கமும் பால் கொடுத்த விளக்கமும் முரண்படுகின்றன. பீட்டர் உணர்ச்சி வழியாக புரிந்துகொண்டார், பால் தர்க்கவழியாக புரிந்துகொண்டார். அவர்களுக்கிடையே ஒருபோதும் உடன்பாடு நிகழவில்லை.

இக்களம் ஆபத்துகள் நிறைந்தது. கிறிஸ்துவும், கிருஷ்ணனும், புத்தனும், முஹம்மதும் கொண்டிருந்தது ஒரு முழுமையான தரிசனம். அத்தகைய முழுமையான பார்வைக்குக் குறைந்த எதுவும் அபாயம் நிறைந்ததே. William James தனது ‘The Varieties of Religious Experience’ நூலில் தான் பேசுவது ‘கைமாற்றப்பட்ட சமயத்தைப்பற்றி அல்ல, முதன்மையான சமய அனுபவம் பற்றி’ என்கிறார். அதாவது, கிறிஸ்துவும் ராமகிருஷ்ணரும் உணர்ந்த முதன்மை சமயம் போன்ற ஒன்றைப் பற்றி. ‘ஶ்ரீ ராமகிருஷ்ணர் இப்படி எண்ணியிருக்க வேண்டும்’ என்று ஒருவர் சொல்வாறென்றால் அது ‘மத’த்தை உணர்வது; அசலானதை அறிவுசார்ந்து புரிந்துகொள்வது. மத தரிசனங்கள் அனைத்துமே இப்படித்தான் நமக்கு கையளிக்கப்படுகின்றன. 

ஆன்மீக தரிசனத்திலிருந்து மதம்சார் நம்பிக்கைக்குள் சென்றுவிட்டீர்கள் என்றால் நீங்கள் மெய்மையிலிருந்து விலகிவிட்டீர்கள் என்பதே பொருள். நாம் சண்டையிடுவது மதம் குறித்து மட்டுமே, ஆன்மீக தரிசனம் குறித்தல்ல. அத்தகைய தரிசனம் கொண்ட இருவரிடையே எந்த முரண்பாடும் இருப்பதில்லை; அவர்கள் ஒருவரில் ஒருவர் கலந்துவிடுகின்றனர். ஆனால் நீங்கள் ஒன்றை கேள்விப்படுகிறீர்கள்; அதை நீங்களாகவோ ஒரு மதகுரு வழியாகவோ விளங்கிக்கொள்ள முற்படுகையில் நீங்கள் ஒரு நிலைபாட்டை எடுக்கிறீர்கள். உங்களது பார்வையின் எல்லைக்குள் குறுகி நிற்கிறீர்கள். யாரிடமிருந்து அதை செவியுறுகின்றீர்களோ அவருக்கு கடன்பட்டவராக உங்களை உணர்கிறீர்கள். அவர் தனது அனுபவத்தின் லட்சத்தில் ஒரு சிறுதுளியை மட்டுமே சொல்வழியாகவோ அல்லது எடுத்துக்காட்டு வழியாகவோ கையளிக்க முடியும். அச்சிறு துளியே உங்களது ஆதாரமாக இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் அது உங்களுடையது அல்ல என்பதால், நீங்கள் செவியுற்றதிலிருந்து துளியும் உங்களால் நகர முடிவதில்லை. அப்படி செய்வதை அஞ்சுகிறீர்கள். மதநிந்தனைக்கு நீங்கள் தயாராக இல்லை.  அதை பற்றிக்கொள்ள விழைந்தாலும் அதன் நோக்கமோ விரிவோ உங்களுக்கு தெரிவதில்லை. விளைவாக, குறுகிய மதசிந்தனைக்கு நாம் பலியாகிறோம். நம் மதத்தை ஆதரிப்பதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே கருவி தருக்கம் மட்டுமே. முடிவிலாது பகுத்தறிய முற்படுகிறோம். இதில் பகுத்தறிவு பயனற்றதும் பொருளற்றதும் மட்டுமல்ல, தீங்கானதும் கூட. 

நாமறிந்த கருவி இது ஒன்று மட்டுமே. நம்மால் வேறு என்னதான் செய்யமுடியும்? குரு இங்கே ‘பல மத சாரவும் ஏகம்’ என்கிறார். முழுமுதலின் மெய்மை குறித்த அனைத்து அறிவுசார் புரிதல்களின் சாரமும் ஒன்றே. நம் மனதை ஆன்மாவோடு – நம் அக ஒளிர்வின் ஊற்றுமுகத்தோடு – இசைவிக்க முடியும்; அல்லது நம் புலன்கள் ஒளியூட்டும் புற உலகு நோக்கி திருப்ப முடியும். ஒன்று ஒளியின் ஊற்றுமுகத்தோடு தொடர்புடையது; மற்றது ஒளியூட்டப்பட்ட பொருள்கள் குறித்தது. 

ஒளியூட்டப்பட்ட உலகின் மீது உங்கள் கவனம் குவியும்போது, இயல்பாகவே நீங்கள் பொருட்களை பகுத்து, அவற்றுக்கு உயிரூட்டி, வரையறை செய்கிறீர்கள். அப்படிப்பட்ட உலகில் உங்களது கருத்து மற்றவர் கருத்திலிருந்து மாறுபடுகிறது. அந்நிலையில், பரவலாக அறியப்பட்ட கதையில் வரும் யானையை பார்க்கச் சென்ற குருடர்களைப் போலாகிறீர்கள். புறத்தன்மை காரணமாக உங்கள் பார்வை வேறுபடுகிறது. தொலைநோக்கியின் தவறான முனைவழியாகவே எப்போதும் பார்ப்பீர்கள் என்றால் பொருட்கள் திருகலாகவே தெரியும். அது பெரும் மனக்குலைவை ஏற்படுத்தும். ஆனாலும், ஒரு வகையில், நம் அன்றாட வாழ்வில் நாம் செய்துகொண்டிருப்பது இதைத்தான். பேருண்மை பற்றி மட்டுமல்ல, எளிய உண்மைகள் குறித்துகூட நம்மிடையே ஒத்தகருத்து இல்லை. 

நமது மனச் செயல்பாடு எதிலும் நாம் முதலுடன் நேரடித் தொடர்பில் இருப்பதில்லை என்பதை மறந்துவிடுகிறோம். புலன்கள்வழி மனம் பெறும் பிம்பங்களை விளக்கிக்கொள்வதே நாம் செய்வது. பகுத்தறியும்போது நம் மனம் உண்மையின், தரவுகளின் முழுமையான சித்திரம் குறித்த தனது பதிவையே, மதிப்பீட்டையே முன்வைக்கிறது. தரவு என்பதே நாம் ஊகிக்கும் ஒன்றுதான்.  இயன்மை (fact) என்பதே ஒரு புனைவு. புனைவுகளை ஒப்பிட்டு நோக்கும் ஒரு நிரை மட்டுமே இருக்க முடியும். அது ஓரளவு பயனுள்ளது, நம்பகத்தன்மை கொண்டது. நம் உறுதிப்பாட்டை உரக்கச் சொல்லும்போதும் அணித்தான ஒன்றே நிகழ்கிறது (approximation).

‘முதலில் நீங்கள் இருப்பது அணித்தான் ஒரு உலகில் (world of approximation) என்பதை அறியுங்கள். அவ்வுலகில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் அறிவாற்றலால் எய்தப்படுவதே’ என்கிறார் நாராயண குரு. அறிவாற்றல் பெரும் மாயங்களை நிகழ்த்தவல்லது, அதைக் கடந்துசென்றால் அன்றி முழுமுதலுடன் நம்மால் ஒன்ற முடியாது என்பதை முந்தைய பாடல்களிலிருந்து அறிந்தோம். அடுத்த ஐந்து பாடல்களில் இது நம் சமூக வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைக் கூறுகிறார் குரு. 

20-ஆவது பாடல் வரை, பல வடிவங்களில் நம்மை வந்தடையும் முதற்பேரொளி பற்றி பேசினார் குரு. 20-ஆவது பாடல் முதல், அவ்வொளியைப் பெறும் தனிப்பட்ட மனம் குறித்தும் அது எப்படி செயல்படுகிறது என்பது குறித்தும் சொல்லி வந்தார். எப்படி தனியர் உறவுகள் வழியே சமூக மனமொன்றை பெறுகிறார், அந்த சமூக மனதின் ஆதிக்கத்திற்குள் நாம் எப்படி வீழ்கிறோம், கருத்து என்ற பெயரில் அது குருதிவீழ்த்துவது எப்படி என்பவற்றை பேசுவது அடுத்து வரும் பகுதி. இவ்வுலகில் அமைதியான வாழ்வொன்றை நாடுவீர்களென்றால், உங்கள் சமூக மனதை, உங்கள் தனிப்பட்ட மனதை, உங்கள் மனம் பெறும் ஒளியின் ஊற்றுமுகத்தை நீங்கள் அறியவேண்டும்.

பின்னர், இவற்றையெல்லாம் ஒருங்குபடுத்தி சுருக்கமாக ‘மனிதன் ஒரே கடவுளை, ஒரே இனத்தை, ஒரே மதத்தைச் சார்ந்தவன்’ என்ற தன் கூற்றை முன்வைத்தார் நாராயண குரு.  நமது சமூக விழுமியங்கள் ஒன்றே. தனியரின் சாரமும் ஒன்றே. இவற்றையெல்லாம் ஒளிரச்செய்யும் ஒளியும் ஒன்றே. இதுவே அவர் கண்டடைந்த ஒருமைப் புரிதல். இது அடுத்துவரும் ஐந்து பாடல்களில் விரிவாக விளக்கப்படும்.

Leave a comment