ஸமயிலும் அன்யயிலும் ஸதாபி வன்னு
இங்கமருவதுண்டு அததின் விஶேஷஶக்தி
அமிதயதாகிலுமாகெ ரண்டிவற்றின்
ப்ரமகலயால் அகிலம் ப்ரமேயமாகும்
(ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 40)
நிகரிலும் பிறிதிலும் உறையும் ஆற்றல்
நிலைபெறும் வந்திங்கமர்ந்து
நில்லாது ஊசலாடும் இவற்றின் செயலால்
எல்லாம் உணரப்படும் பொருளாகும்
*
‘நான் உங்களுக்கு முக்கியமான ஒன்றை கற்பிக்கப் போகிறேன்’
‘நாம் இணைந்து தியானம் செய்வோம்’
மேற்சொன்னதில் முதல் கூற்று ‘நான்’ என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. அதில் நான் உங்களை என்னில் இருந்து வேறுபடுத்திக் கூறுகிறேன். ‘முக்கியமான ஒன்று’ என்று கூறுகையில் குறிப்பிட்ட ஒன்றின் மீது அழுத்தம் தரப்படுகிறது. ஆக, முதல் தொடரில், மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட கருத்துகளின் மீது நமது கவனம் ஈர்க்கப்படுகிறது.
‘நாம் இணைந்து தியானம் செய்வோம்’ என்று நான் கூறும்போது எந்த எல்லையும் வகுக்கப்படவில்லை. ‘நாம்’ என்ற சொல் இந்த அறையில் இருப்பவர்களை குறிக்கலாம் அல்லது உலகில் உள்ள அனைத்து மக்களையும் குறிக்கலாம். அதில் ‘நான்’ என்ற குறிப்பே இல்லை. மிக விரிந்த பார்வை இது. மேலும், தியான உணர்வின் பண்பு என்பதே ஒன்றாதல், இணைதல், அமைதிப்படுத்துதல் எனலாம்.
முதல் தொடருக்கும் இரண்டாவது தொடருக்கும் இடையில் முரண் எதுவும் இல்லை என்பதையும் நாம் உணரவேண்டும். ஒன்று இன்னொன்றை முழுமையாக்குவது. ஒன்று குறிப்பானவற்றை பேசுகிறது, இன்னொன்று பொதுவானதைப் பேசுகிறது. ஆனாலும் அவற்றிற்கிடையே கச்சிதமான இசைவும், முழுமையாக்கமும் உள்ளன. இதில் குறிப்பிட்டு சொல்லப்படுபவை ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.
வேறு பல சூழல்களில் ‘நான்’ என்பது மையமாக அமைந்து, பிற அனைத்தும் ஒதுக்கி வைக்கப்படுகையில் அது தன்னல நோக்கம் கொண்டதாக ஆகின்றது. அதே போல் அனைத்தையும் உள்ளடக்குவது ஒரு கட்டாயம் என்ற நிலையில், எடுத்துக்காட்டாக ‘நாட்டில் அனைவருடைய நடவடிக்கையும் ஒரு குறிப்பிட்ட முறையில் இருக்க வேண்டும்’ என்று விதிக்கப்படுகையில் அது தனியரின் பிரிக்கமுடியாத உரிமைகளை பறிப்பதாகிறது. எனவே, இந்தக் கருத்துகளை நாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றால் தீமை விளையக்கூடும்.
அகம் நோக்கி திரும்பி நம்மில் மையம் கொள்ளும்போதுதான் அறிதல் நிகழ்கிறது. மீண்டும் மீண்டும் மையம் நோக்கி திரும்புவது மிக அவசியம். அறிவு தனது எல்லையை விரித்துக்கொள்வதும், முடிந்தவரை அனைத்தையும் உள்ளடக்குவதும் அவசியம். இப்படியாக, நனவென்பது மையத்திலிருந்து புற எல்லைக்கும் மீண்டும் மையம் நோக்கியும் நகரும் ஒரு துடிப்பாக ஆகிறது.
உங்களைப் பற்றி தீவிரமாக சிந்தித்து, உங்கள் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், புலனுணர்வுகளையும் உங்களது நனவின் மையத்திற்கு கொண்டுவர முடியும். பின்னர் அந்த நனவு மையத்தை நகர்த்த/மாற்ற முடியும். காட்டாக, அதை உங்கள் புருவமையத்திற்கு கொண்டு வர முடியும். மனதில் ஓம் எனும் மந்திரத்தை சொல்லி தியானிக்கலாம். அது குறிப்பிட்ட பாதிப்பை ஏற்படுத்தும். பின்னர் அதனை தொண்டை மையத்திற்கு கொண்டு வந்து ஒலிபிறக்கும் தொண்டையை உங்கள் மொத்த நனவின் மையமாக்கலாம். அப்படி வைத்து ஓம் எனும் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கலாம். அது புருவ மையத்தில் வைத்து செய்வதிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்… உங்கள் நனவு மையத்தை இதயத்திற்கு கொண்டு வரமுடியும். அங்கு, நீங்கள் மூச்சை இழுப்பதும் விடுவதும் உணரப்படும். மூச்சின் லயத்தை உணர்ந்து நனவை குவித்து ஓம் ஓம் ஓம் என உச்சரிக்கையில் அனுபவத்தின் தொனி மாறுகிறது. அதை உங்கள் உந்திக்குக் கொண்டுவந்து வயிற்றின் கீழ்ப்பகுதியை மையமாக உணரலாம். உந்திக்குள் அதை வைத்து ஓம் ஓம் ஓம் என்று சொல்ல வேண்டும். அங்கிருந்து பிறப்புறுகளுக்கு கொணரலாம். ஓம்… ஓம்… ஓம்… இறுதியாக முதுகுத்தண்டின் நுனிக்கு… ஓம்… ஓம்… ஓம்…
மனதை மையத்தில் குவித்து ஒரே மந்திரத்தைதான் மீண்டும் மீண்டும் உச்சரித்துகொண்டிருந்தீர்கள். ஆனால் விளைவு எப்போதும் ஒன்றாக இருக்கவில்லை. நாம் செய்வது எதுவாக இருந்தாலும் மனம் ஒன்றிணைப்பதையும் வேறுபடுத்துவதையும் மாறி மாறி செய்துகொண்டே இருக்கிறது.
மேலும், தலை, உடல், கைகால், சிறுவிரல் என உடலில் உள்ள உறுப்புகளையெல்லாம் நமது கட்டைவிரலில் இருந்து வேறுபட்ட ஒன்றாக எண்ணிப்பார்க்க முடியும். பார்வை வேறு கேட்டல் வேறு எனவும் தொடுகை வேறு சுவைத்தல் வேறு என்றும் உணர முடியும். இவ்வாறு உடலை வேறுபடுத்திப் பார்ப்பதற்கு எல்லையே இல்லை என்றாலும் ‘நான்’ என்று நீங்கள் சொல்லும்போது இவை எல்லாம் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. ‘நான்’ என்ற அறிதலில் சுவைக்கும் மணத்திற்கும், உடலுக்கும் மனதிற்கும் என எவ்வித வேறுபாட்டையும் நீங்கள் உணர்வதில்லை.
தனியர்களை தனித்தனியாக அறிய முடியும். ஒவ்வொருவரையும் தனிப்பட்டவராக மனம் அறியக்கூடும். பின்பு அவர்களது பெயரையும், தனிப்பட்ட பண்புகளையும் மறந்து ‘தியானம் செய்ய இங்கே கூடியுள்ளவர்கள்’ என பொதுமைப்படுத்த முடியும். அன்கே ஒவ்வொருவரது பெயரும் பண்புகளும் மறைந்துபோகின்றன.
எந்த ஒரு முரணியக்கச் சூழலையும் ஒரு பாதி மட்டுமே புரிந்துகொள்வது பயன் தராது.
ஒன்றிலிருந்து பொதுமைக்கும் பின் மீண்டும் ஒன்றனுக்கும், செல்வதும் மீள்வதுமாக இருந்தால் மட்டுமே நம் வாழ்வு இசைவுடனும் சமநிலையுடனும் இருக்கும். இரண்டிற்குமே தனிப்பட்ட ஆற்றல் உண்டு. என் அறிதலையும், செயலையும் உணரும் ‘நான்’ என்பது தனிப்பட்ட ஆளுமை என்று நான் எண்ணவில்லை என்றால் எனது செயலுக்கான ஊக்கம் இருக்காது, என் செயல்களையும் சிறப்பாக ஆற்ற முடியாது. அதே சமயம், ‘நான்’ என்பதனோடு மட்டுமே என்னை அடையாளப்படுத்திக் கொண்டால் நான் சமூகத்திலிருந்து விலக்கப்படுகிறேன். பிற உடல்களில் உள்ளவற்றோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்ள இயலாது. தன்னலம் மட்டுமே நிறைந்தவனாகிறேன். உடலில் சிறையிருக்கும் என்னை நான் விடுவித்துக் கொண்டால் மட்டுமே பிறவற்றோடு கூட்டுறவு சாத்தியமாகும். அனைத்துடனுமான பரஸ்பர பகிர்ந்துணர்வு மூலம் மொத்த சமூகத்தின், உலகின், பிரபஞ்சத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகிறேன்.
என் நனவை, உடலைத் தாண்டி என் குடும்பம் என விரித்துக் கொள்கையில் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் எவ்வளவு அணுக்கமானவர் என உணர்கிறேன். இதையே பிற மானுடருக்கும், செல்லப்பிராணிகளுக்கும் என விரித்துக் கொள்ளலாம்; அங்கிருந்து அது பொதுச் சூழலுக்கும், நாட்டிற்கும், மொத்தப் பண்பாட்டிற்கும், அதன் வரலாற்றிற்கும் எதிர்கால இயல்கைகளுக்கும் விரியக்கூடும். மொத்த பிரபஞ்சத்தையும் அதன் பலநூற்றாண்டுகால வரலாற்றையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம். பால்மண்டலங்களின் நடனம் முதல் அணுக்களில் நிகழும் மாயங்கள் வரை அதில் அடங்கும்.
அதன் பின் காலமும் வெளியும் மறைந்து நமது நனவு உடலுக்குள் அடங்கிய ஒன்றாக இருப்பதில்லை. நாமில்லாத ஒரு உலகை நம்மால் தியானம் செய்ய இயலும். அது நமக்கு பெரும் விடுதலை அளிப்பதாக அமையும். இவ்வுலகில் எடைமிக்க ஒரு உடலில் பிணைக்கப்பட்டதாக இல்லாமல், காற்றுடனும் நீலவான் வெளியிலும் கலந்து பிரபஞ்சத்தை நிறைக்கும் ஒலியின் அதிர்வில் கரைந்து போக முடியும். பிரபஞ்சத்தின் வெப்ப விசையாக, மாபெரும் மின்காந்தப் புலத்தில் ஒற்றை மின்னலையாக மாற முடியும். அடையாளப்படுத்திக் கொள்வதற்கு நம் முன் உள்ள பெரும் இயல்கைகளை எண்ணிப்பாருங்கள். அடையாளத்தின் ஆற்றலைக் கொண்டு எதுவாகவும் ஆகலாம்.
நாம் எண்ணியிருந்த ஆழ்ந்த பொருள்களும் செயல்நோக்கங்களும் இன்மைக்குள் காணாமல் போகக்கூடும். மொத்த உலகுமே ஒரு தொன்மமாகத் தென்படக்கூடும். நீங்கள் ஒரு தொன்மம்; நான் ஒரு தொன்மம். அடுத்த கணமே நாம் உறுதி கொள்கிறோம். குறிப்பிட்ட செயல்நோக்கம் நம் மனதை நிறைக்கிறது, பெரும் தூண்டல் பெற்று நம் வாழ்விற்கு ஒரு குறிக்கோள் இருப்பதாகவும் அதை அடைந்தே ஆக வேண்டும் என்றும் உணர்கின்றோம். ஒரு கட்டாயம், அழுத்தம், விரைவு எல்லாம் தோன்றுகின்றன. ஆனால், ‘அப்படி எந்த அவசரமும் இல்லை. கவலை வேண்டாம். ‘நான்’ என்ற ஒன்றே இல்லை. எல்லாம் வெறும் கற்பனைதான்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம்.
உங்கள் நனவு உங்களை இறுக்கி ஒரு திடமான உடலாக உணரச் செய்யலாம். ஆனால் அதே நனவு உங்களை விடுவித்து கடந்து செல்லும் மெல்லிய காற்றாகவும் உணரச் செய்யும். யேசு சொன்னதைப் போல ‘காற்று தான் விரும்பும் இடத்தில் வீசும்’. உங்கள் சுதந்திரம் அப்படிப்பட்டது.
‘நான்’ என்பதை மையப்படுத்தி அனைத்தையும் குறிப்பிட்ட ஒன்றாகக் கொள்ளுதல் ஒரு இயல்கை. இன்னொன்று உங்களை விரிவாக்கி பிரஞ்ச முழுமையோடு உங்களை இனங்காணச் செய்வது. இத்தகைய இயல்கைகள் எண்ணற்றவை என்றாலும் அவற்றை ‘இணைப்பது’ ‘தனிப்படுத்துவது’ என்ற இரண்டு வகைமைகளில் அடக்கிவிடலாம் என்கிறார் நாராயண குரு. இவ்விரண்டு ஆதாரங்களின் இடையே ஊசலாடுவதே நனவு. அதன் வழியாகவே நீங்கள் அனைத்தையும் அறிய முடிகிறது.
நனவில் உள்ள வேறுபாடுகளை களைந்துகொண்டே சென்றீர்கள் என்றால் இறுதியில் அறிபவருக்கும் அறியப்படுவதற்குமான வேறுபாடே இல்லாமல் ஆகி அனைத்தும் கடந்த நிலையை எய்துவீர்கள். எந்த மாறுபாடும் நிகழாத நனவுடன் சமாதி நிலையை அடைவீர்கள். ஒற்றைக் கருத்தினால் மருண்டு போவது இதன் நேர் எதிரான நிலை. அது உங்கள் மனதை பற்றிக்கொள்கையில் உலகமே உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. உங்கள் உணர்வு மழுங்கிப்போகிறது. ஒன்றைக் கருத்தால் மழுங்கிப்போனவர்களை நாம் மடையர் என்கிறோம். அவர்களுக்கு எந்தப் பிடிப்பும் இருப்பதில்லை, முழுமையான சித்திரம் அவர்களுக்கு பிடிபடுவதில்லை.
நீங்கள் ஒற்றை எண்ணத்தில் சென்று முட்டி நிற்கக்கூடாது. அதே சமயம் பொதுமைக்கூறுகளில் தொலைந்துபோகவும் கூடாது. இவ்விரண்டு இயல்கைகளுக்கு நடுவே இடையறாது ஊசலாடிக் கொண்டிருப்பதே ஆரோக்கியமான வாழ்வு. இந்த ஊசலாட்டத்திலிருந்தே உலகம் எனும் கருத்து முகிழ்க்கிறது. அதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை, அது தன்னியல்பாக நிகழ்வது.
இந்தப் பாடலில், நாம் குறிப்பிட்ட ஏதொன்றையும் செய்ய முயல்வதில்லை. நம்முடன் நாம் பழகி நம்மை தெரிந்துகொள்ளவும், நனவு எதனாலும் பாதிக்கப்படாமல் இருக்கையில் நம்முள் எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்துகொள்ளவுமே நாம் முயல்கிறோம்.
ஆன்மீகமாக, தனித்ததற்கும் பொதுவானதற்கும், அகவயமானதற்கும் புறவயமானதற்கும் இடையே ஊசலாடும்படிதான் உங்கள் மனம் படைக்கப்பட்டிருக்கிறது என்றும் இவை இயல்பான செயல்பாடுகளே என்றும் நீங்கள் அறியும்போது பெரும் விடுதலை அடைகிறீர்கள். நீங்களாகவே உங்கள் மேல் சுமத்திக்கொண்டுள்ள பொறுப்பும் சற்று குறைகிறது. குறிப்பிட்ட பாங்கை பின்பற்ற வேண்டும் என்று உங்கள் மனதை வற்புறுத்துவதற்கு பதிலாக, ‘இது இயல்பானதே. எனது மனம் மையத்தில் நிலைபெற்று ‘நான்’ எனும் நனவு இறுகுவது எனது இயல்பே. அதே போல், நிதானம் பெற்று அமைதியடைவதும் என் இயல்பே’ என்று எண்ணலாம். நனவு இந்த இருமடிப்புச் செயல்பாடுகளில் ஈடுபடுவதை நீங்கள் உணரலாம்.
நனவின் இச்செயல்பாட்டை சாட்சியென நோக்கிநிற்கும் மனப்பாங்கை வளர்த்துக்கொள்பவர் மெய்யான யோகியாகிறார்.