அருளிய ஶக்திகளெத்துடர்ன்னு ரண்டாம்
பிரிவிவயில் ஸமதன் விஶேஷமேகம்;
விரதி வரா விஷமாவிஶேஷமொன்னி
த்தரமிவ ரண்டு தரத்திலாயிடுன்னு
(ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 39)
முற்சொன்ன ஆற்றல்களை மேலும் இரண்டாய்
பிரிக்கலாம் அவற்றில் நிகர் என்பதன் பண்பொன்று
பிறிதென்பதன் பண்புகளுக்கோர் முடிவில்லை
இவ்வாறாய் இரண்டும் இரண்டு வகை
*
33-ஆவது பாடலில், அறிவு தனது இயல்கையை அறிந்துகொள்ள பல அறியப்பட்ட பொருள்களாக மாறுகிறது என்று கூறப்பட்டது. தெளிந்த நிலை இருண்ட நிலை என பலவற்றிற்குள் அது செல்கிறது. சில சமயங்களில் அறிபவர்-அறியப்படுவது என்ற இருமை நிலையை அது உருவாக்குகிறது. வேறு சில சமயங்களிலோ செயலற்ற சாட்சியென இருக்கிறது. அந்நிலையில் அறிபவர் எனும் கூறுக்கு முதன்மை அளிக்கப்படுவதில்லை. விழிப்புணர்வுகளாக நனவில் மின்னுபவற்றை எல்லாம் அது நோக்கிநிற்கிறது. சில சமயம் அறியப்படும் உலகம் முற்றிலுமாக கைவிடப்பட்டு ‘நான்’ ‘நான்’ என எண்ணிக்கொண்டு அகத்தில் குவிந்தபடி அமர்ந்திருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் அகத்திலும் புறத்திலும் என கவனம் மாறி மாறி குவிகிறது. சில சமயம் தெளிவாக சில சமயம் தெளிவில்லாமல். எதையுமே அறியாமல், அறிதல் என்னும் புலத்திலிருந்தே விலகியிருக்கும் கணங்களும் உண்டு. இறுதியாக, அகம் புறம் என்ற இருமையே இல்லாமலாக்கும் திறனும் அதற்குண்டு. அது எதிர்மறையானதாக இல்லாமல், குணங்களைக் கடந்த நிலையில் நேர்மறையாகவே இருக்கும்.
அறிவின் இந்த இயக்கத்தை ஆராய்ந்தால், அது எப்போதும் தனக்குள்ளேயே இயங்கிக் கொண்டிருப்பதை காணலாம். வாழ்வின் கிடைமட்ட நகர்வை காண்கையில் அது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு வரிசையாகச் செல்கிறது. ஒவ்வொரு நொடியும், அதற்குக் குறைவான நேரமும், ஒரு குறிப்பிட்ட கூறின் மேல் கவனம் குவிகிறது; அடுத்த நொடியே மொத்த காட்சியும் மாறி வேறொரு ஆர்வத்தில் கவனம் குவிகிறது. இப்படி மனம் ஒவ்வொரு ஆர்வமாக தாவிச் செல்வதற்கு ஒப்புமையாக ஒரு தேர்ச்சக்கரத்தின் ஆரங்களைக் குறிப்பிடுகிறார் நாராயண குரு. ஆரக் கம்பிகள் பல இருந்தாலும் தேரின் மொத்த எடையும் சக்கரமையத்திற்குக் கீழே செங்குத்தாக இருக்கும் ஒற்றைக் கம்பியால்தான் தாங்கப்படுகிறது. தேர் நகர நகர எடை அடுத்தடுத்த கம்பியின் மேல் சுமத்தப்படுகிறது. ஆர்வம் கணம் கணமென மாறினாலும் மொத்த விளைவு ஒன்றாக இருப்பதை இந்தப் படிமம் நமக்கு உணர்த்துகிறது.
ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல் அல்லது இருண்மை நம்மை தடுக்கும்போது நாம் அந்த எதிர்மறை நிலையிலேயே தேங்கிவிடவேண்டிய அவசியமில்லை. நம் வாழ்வில் கையாள்வதற்கு இரண்டு வழிகள் உண்டு. நுண்ணுயிரிகளில் தொடங்கி பெரும்பான்மையான பாலூட்டிகள் வரை பல உயிரினங்களிலும் வளர்ச்சி என்பது இயற்கையின் கருவிகளால் நிச்சயிக்கப்படுகிறது. அவற்றிற்கென ஒரு நிரல் அமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். அவற்றைப் பொறுத்தவரை வாழ்வென்பது ஒரு தொடர் நாடகம். அதில் எதையும் வருத்தத்தோடு திரும்பி நோக்க வேண்டியதில்லை. எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமை என எதுவும் அவற்றிற்கில்லை. அவை எதையும் திட்டமிட வேண்டியதில்லை. கூடு கட்டி முட்டையிட வேண்டிய பறவை, நாளை அதை எப்படி செய்யப்போகிறோம் என எண்ணிக்கொண்டிருப்பதில்லை. காலையில் விழித்ததும் இயல்பாக சென்று குச்சிகளையும், பஞ்சையும், இலைகளையும் எடுத்துவருகிறது. கூடு கட்டத் தொடங்கிவிடுகிறது. கட்டி முடிக்கும்போது முட்டையிடுகிறது. இவை எல்லாம் இயற்கையாக நடந்தேறுகின்றன. எவராவது கூட்டைக் கலைத்து, முட்டையை உடைத்துவிட்டால் சிறிதுநேரம் அங்கேயே சுற்றிவந்துவிட்டு பின் அதை மறந்துபோகிறது.
இயந்திரத்தனமாக இருப்பதாகத் தோன்றினாலும், பறவையின் செயல்களில் ஒரு முழுமை உள்ளது. அதே போல்தான் நீரோடையில் செல்லும் ஒவ்வொரு துளியும், மலையுச்சியில் தொடங்கி நடமிட்டபடி ஆழியைச் சென்றடைகிறது. தான் செல்வது மென்மையான நிலத்திலா, அருவியில் வீழ்கிறோமா, தூய்மையுடன் இருக்கிறோமா, நகரங்களின் கழிவுகளால் மாசுபட்டிருக்கிறோமா அது என்றெல்லாம் சிந்திப்பதில்லை. எதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ என்று கவலைப் படுவதில்லை. எண்ணங்களற்று வெறுமனே சென்றுகொண்டிருக்கிறது.
மனிதராகிய நம்முடைய அணுகுமுறையோ வேறு. நம்மில் சிலர் விலங்குகளிலிருந்தோ, ஓடையின் நீர்த்துளிகளிலிருந்தோ வேறுபட்டவகளல்ல என்பது உண்மைதான். வருவனவற்றை எல்லாம்
எதிர்கொண்டு போய்க்கொண்டேயிருப்போம். ஆனால், நம் அனைவரிலும் ஒரு வேறுபாடு இருக்கிறது. விலங்குக்கோ நீர்த்துளிக்கோ எவரிடமும் எந்தக் கடப்பாடுமில்லை. ஆனான் மனிதன் வாக்குகள் அளிக்கிறான், கடமைகளில் சிக்கிக் கொள்கிறான். ஒன்றிலிருந்து இன்னொன்றிற்குச் செல்கையில் பழைய கடமை அவனை இழுக்கிறது. திரும்பிப் பார்க்கிறான். இதற்கு மாறாக எப்போதும் உயிர்த்துடிப்புடன் மொத்த சூழல் பற்றிய உணர்வோடு அவன் இருக்கலாம். அவ்வாறிருந்தால் எந்தவொரு குறிப்பிட்ட ஆர்வத்தினாலும் மதியிழந்து, மெய்மையை உணராமல் இருக்க நேராது. வாழ்வை இயந்திரமயமாக்கும் விலங்காற்றல் மிக வலியது. பலராலும் அதை எதிர்த்து நிற்க முடியாது. மைய ஒழுக்கில் கலந்து அதோடு ஒழுகத் தொடங்கிவிடுவோம். வாழ்வின் பொருளும் அதன் முக்கியத்துவமும் உணர்ந்தவர்களை அரிதாகவே காண முடிகிறது. ஒரே சமயத்தில் பத்தாயிரம் சூரியர் ஒளிர்ந்தால் ஏற்படும் தெளிவு போன்றது அந்த உணர்வு..
அறிவு எண்ணற்ற ஆற்றல்களைக் கொண்டது என்றார் குரு. அவற்றை நிகர், பிறிது (சமம், அன்யம்) என்ற இரு பிரிவுகளுக்குள் அடக்கலாம். சமம் என்பது ஒருங்கிணைந்த நனவு. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும் போதும் அதே ஆர்வத்தின் தொடர்ச்சிதான் அது என்பதையும், இருத்தல் என்னும் ஒற்றைக் களத்தினுள் உள்ளது அதே நனவுதான் என்பதையும் நீங்கள் உணர்கிறீர்கள். அன்யம் என்பது இசைவுக் கூறு புலப்படாதபோது தோன்றுவது. ஒரு சமயத்தில் ஒன்றை மட்டும் நீங்கள் காண்கிறீர்கள், அதிலேயே சிக்கிக் கொள்கிறீர்கள். உங்கள் மனம் முழுக்க அதுவே நிரம்புகிறது. சிறிது நேரத்திற்கு நீங்கள் முழுதுமாக அதில் ஈர்க்கப்பட்டு விடுகிறீர்கள். கால-வெளியில் தெளிவையோ, வாழ்வின் பொருளையோ நீங்கள் சிறிதும் உணர்வதில்லை.
தொடர்ந்து, நம் அறிவில் தனித்த கூறொன்று உள்ளது என்றும் அது ஒவ்வொரு அறிவிலும் ஒரு தெளிவை தேடுகிறது என்றும் கூறினார் குரு. அது ‘விஷமம்’ எனப்படுவது – ‘இது ஒரு பானை’, ‘இது ஒரு நண்பர்’ என்று சொல்வது போல எளிதில் குறிப்பிட்டறிய முடியாதது. ’இது’ என்ன என்று நாம் அறிவதில்லை. ஒரு குறிப்பிட்ட விழிப்புணர்வுக்கு நமது கவனம் கோரப்படுகிறது என்று மட்டும் நாம் அறிகிறோம். ‘பானை’ அல்லது ‘என் நண்பர்’ என்று சொல்கையில் உடனடியாக நமது ஆர்வம் நாம் குறிப்பிட்டதன் மீது தாவுகிறது. ‘இது’ என்ன என்று நாம் கவலைப்படுவதில்லை. ஏனெனில், நமது ஆர்வம் தகுதிப்பாட்டில் அதாவது ‘விசேஷத்தில்’ சிக்கியிருக்கிறது.
நாம் இங்கு இரண்டு கருத்திணைகள் பற்றி பேசுகிறோம்: ஒன்றூ சமம்-அன்யம் (இசைவது-வேறுபடுத்துவது); மற்றொரு இணை (அன்யத்தின் ஒரு பிரிவான) விஷமம்- விசேஷம் (எளிதில் பகுத்தறிய முடியாதது-குறிப்பிட்ட பண்பு). அன்யம் என்பதை வேறுபடுத்தப்பட்டது என்றும் சமம் என்பதை முழுமையான் ஒன்றாக ஒளிர்வது என்றும் வரையறுக்கிறார் நாராயண குரு. திறந்த மனதோடு விழிப்போடு இருந்தால், ‘பிறிது’ என்ற வடிவில் தோன்றி நம்மை மயக்குவதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள முடியும் என்கிறார்.
இப்பாடலில், வேறுபடுத்தும் கூறுகளை இன்னும் ஆழமாக விளக்குகிறார் குரு. நீங்கள் பிறந்த நாள் முதல் இன்றுவரை நனவென்பது எப்போதும் தனது கருவிற்கு, மையத்திற்கு திரும்பிக் கொண்டேதான் இருக்கிறது. மையத்தை தொட்டபிறகு அங்கிருந்து புற எல்லைக்குச் சென்று பொருட்களை கையாள்கிறது. நடப்பது எச்செயலாக இருந்தாலும், ஒளிரும் விழிப்புணர்வுதான், தன்னுணர்வுதான் அனுபவத்தின் பொதுப்பண்பாக இருக்கிறது. அது தன்னொளிர்வு கொண்டது. ஒளியைப் பாய்ச்சுவதற்கு அங்கே அதைத்தவிர வேறெதுவும் இல்லை.
கண்களை மூடியபடியோ, திறந்துகொண்டோ அமர்ந்திருக்கையில் உங்களை ஒளிரச் செய்யும் நனவுதான் உங்களுக்கு உணர்வை அளிக்கிறது. அது எப்போதும் இருப்பது. சில சமயம் அது விழிப்புகொண்ட நனவாக இருக்கிறது. சில சமயம் கனவு போல் இருக்கிறது. பிற சமயம் ஆழுறக்கமாக இருக்கிறது. கனவு காண்பது பற்றி நீங்கள் உணர்வதில்லை. ஆனால் விழித்தவுடன் ‘நன்றாக உறங்கினோம்’ என்று நினைவுகூர்கிறீர்கள். அங்கு செயலற்றிருந்த நனவொன்று நீங்கள் அதனை நினைகூரவும் வைக்கிறது.
முக்குணங்களையும் கடந்து, அமைதியுடன், தன்னில் தான் முழுமையாகக் கரைந்து அமையும் யோகியாக நீங்கள் விழைந்தால், அந்தக் கடந்த நிலையையும் பிற மூன்று நிலைகளோடு தொடர்புறுத்திக் கொள்ள முடியும். அந்நிலையில் அறியப்படுவது தூய அறிவு.
இக்கணம் வரை ஏதோ ஒரு படிநிலையில் தூய அறிவென்பதை நீங்கள் உணர்ந்துதான் வந்திருக்கிறீர்கள். அது தன் உணர்வு மட்டுமே. அந்த நனவு நிலையில் இருவகையான ‘இத்தன்மை’ உங்களுக்கு ஏற்படுகிறது. ஒன்று ‘இது நான்’ என்கிறது; மற்றொன்று ‘இதுவே நானறிந்தது’ என்கிறது. ஒரு ‘இது’ அறிபவருடையது மற்றொன்று அறியப்படுவதனுடையது.
‘நான்’ என நீங்கள் உங்களது இரண்டு வயதில் சொன்னாலும், எழுபது வயதில் சொன்னாலும் அந்த ‘நான்’ என்பது ஒன்றைத்தான் குறிப்பிடும். ‘இதுதான் நான்’, ‘நானே இது’ என நீங்கள் சொல்லியபடியே இருக்கிறீர்கள். அதை நேற்று சொன்ன ‘நானும்’ இன்று சொல்லும் ‘நானும்’ ஒன்றேதான் என்பதில் உங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. அந்த ‘இது’ என்பது நொடிக்கு நொடி வேறொன்றை குறிப்பதல்ல.
அறிபவரின் ‘இது’ எப்போதும் மாறாமல் இருப்பது. ஆனால் அறியப்படுவதன் ‘இது’ எப்போதும் ஓன்றாக இருக்க முடியாது. சில சமயங்களில் ஒன்றையே மீண்டும் மீண்டும் குறிப்பிடக்கூடும் என்றாலும் அது மாறிக்கொண்டே இருப்பது. நனவின் அமைப்பு முடிவற்ற இயல்கைகளைக் கொண்டது. ஒரு ‘இது’ எப்போதும் ஒன்றாக இருப்பது; இன்னொரு ‘இது’ எல்லையற்றது என்கிறார் நாராயண குரு. விரதி என்றால் முடிவு, விரதிவரா என்பது முடிவற்றது. விரதி வரா விஷமம் என்பது அறிவதற்கு அரியது, ஆனால் முடிவற்றது. இன்னொரு விஷமம் ‘நான்’ என்பதைச் சார்ந்தது. ஒரு பொம்மையை விட்டு இன்னொன்றை தேடிச் செல்லும் குழந்தைகள் போலவே நமது புலன்களும் மனமும் கடந்துசெல்பவற்றின் மேல் கொள்ளும் ஆர்வம் முடிவிலாது மாறிக்கொண்டே இருக்கிறது.
கடந்துசெல்லும் நாடகம் அனைத்துமே நமது நனவின் அனுபவம் மட்டுமே என்பதை நாம் நினைவில் கொண்டால், நனவோடையில் ஒரு துளியென ஒழுகிச் செல்லாமல், அதன் கரையில் அமர்ந்து நோக்கி நிற்க முடியுமென்றால் வாழ்வு குறித்த நமது மனப்பான்மையே வேறாக இருக்கும். நமது இருப்பை எப்போதும் நோக்கிநிற்கும் சாட்சியாய் நாம் இருக்க வேண்டும் என்கிறது 39-ஆவது பாடல். ஆன்மீகமாக மட்டுமல்லாமல் அனைத்து தளங்களிலும் அனைத்து வழிகளிலும் இது நமக்கு உதவும். உணர்ச்சிகரமான சூழலில் சிக்கிக் கொள்ளும்போது விரதி விரா விஷமத்தை நினைவுகூருங்கள். உங்களை ஒரு மனநிலையிலிருந்து இன்னொன்றிற்கு, ஒரு உணர்ச்சிநிலையிலிருந்து இன்னொன்றிற்கு, ஒரு வகையான மதிப்பிடலில் இருந்து இன்னொன்றுக்கு இட்டுச் செல்வது அது. அதிலிருந்து விலகியிருக்கவும் முடியாமல், நோக்கிநிற்கவும் முடியாமல், நடுவுநிலையில் இருக்கவும் விடாமல் உங்கள்மேல் ஆதிக்கம் செலுத்துவது. பதிலாக, ஒவ்வொரு கணமும் நிகழ்வதோடு நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை அறிகையில் அச்சூழலின் பிடியிலிருந்து உங்களை நீங்கள் விடுவித்துக்கொள்ள முடியும்.
மேடையில் ஒரு நடிகர் தான் ஏற்ற கதாபாத்திரமாகவே மாறி மிக இயல்பாக நடித்தாலும், நாடகம் முடிந்தபின் தான் அதுவாக இருக்க மாட்டோம் என்பதை தன் ஆழத்தில் நன்கறிவார். உணர்வு ரீதியான கதாபாத்திரத்தின் ஏற்ற இறக்கங்களை அவர் தன்னுடன் எடுத்துச்செல்வதில்லை. மேடையில் இறந்து போகிறவர்கூட, திரை விழுந்ததும் எழுந்து நடந்து விலகுகிறார். ஒருவகையான எடையின்மையை, விடுதலையை இது அளிக்கிறது. தன் ஆளுமையின் மேல் பற்று கொண்டவருக்கு மிகவும் அரிய செயல் இது.
உண்மையில் நம் வாழ்வென்பது, இடையறா நடிப்புடன் இடையறாமல் நிகழ்த்தப்படும் ஒரு தொடர் நாடகமே. கணம் கணமென எழுந்து நமது கதாபாத்திரத்திலிருந்து நாம் விலகிச் சென்றுகொண்டே இருக்க வேண்டும். நாம் அதைச் செய்ய மறந்துவிடுகிறோம். நம் வாழ்வில் நிகழ்பவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். அவற்றில் ஆழ்ந்துபோகிறோம். ஆனால், பற்றொழித்து நிம்மதியாக அமர்ந்து அந்த நாடகத்தை பார்க்கப் பழகிக்கொண்டோமென்றால், அதுவே நமக்கு பெரும் வலிமையையும் பொறுமையையும் அளிக்கும். நீங்கள் யாரோ எப்போதும் அதுவாக மட்டுமே இருக்கிறீர்கள். சிலரைப் பொறுத்தவரை நீங்கள் நல்லவர், சிலருக்கு கெட்டவர் – இது கடந்துசெல்லும் கணத்தைப் பொறுத்தது. அவர்களது கருத்து உங்களை மேலும் நல்லவராகவோ, மேலும் தீயவராகவோ ஆக்குவதில்லை.
பற்றற்றிருக்கையில், கடந்து போகும் கணத்தை உங்களால் சிறப்பாக மதிப்பிட முடிகிறது. அது உங்களது இறுதி வீடுபேற்றுக்காக அல்ல, இங்கு இப்போது நீங்கள் அடையக்கூடிய மீட்பிற்காக. உங்களது நனவு அறிபவருக்கும் அறியப்படுவதற்கும் இடையில் வேகமாக மின்னி மறைகிறது. அவை இரண்டிற்கும் இடையில் ஊசலாடுவது அதே நனவுதான், அதாவது நீங்கள்தான். எனவே, பற்றொழித்து உறுதியுடன் அமையுங்கள். அதே சமயம் முடிவிலா லயத்துடன் ஒழுகிச்செல்லும் வாழ்க்கையிலும் பங்குகொள்ளுங்கள்.
காலத்திற்கென ஒரு மனநிலை உண்டு. வசந்தகாலத்தில் பெருமகிழ்வோடும் நம்பிக்கையோடும் கனவுகாண்கிறோம், திட்டமிடுகிறோம், முடிவற்ற வாக்குறுதிகள் அளிக்கிறோம். இனி எப்போதும் வசந்தமே என நினைக்கிறீர்கள். இலையுதிர்காலம் வருகையில் மனநிலை மாறுகிறது. உங்கள் கனவுகளின் நிறம் மாறுகிறது – ஒளிர்நிறம் மங்குகிறது. கிளையிலிருந்து உதிர்பவை காற்றில் படபடத்து கண்காணா இடத்திற்கு பறந்து செல்கின்றன. தெருக் கூட்டுபவர் வந்து அனைத்தையும் ஒதுக்கித் தள்ளுகிறார். வசந்தத்தில் செய்த வாக்குறுதிகள் இலையுதிர்காலத்தில் பொருளிழக்கின்றன. பனிக்காலம் வருகையில் மீண்டும் மனநிலை மாறுகிறது. உங்கள் உள்ளுக்குள் சுருண்டுகொள்கிறீர்கள். நீங்கள் உங்களோடு தனித்திருக்கிறீர்கள்; உங்கள் முதன்மையான தேவை நீங்கள்தான். வெளியே கடுங்குளிர், பனி பெய்துகொண்டிருக்கிறது. பின், மீண்டும் வசந்தம் வருகிறது; நீங்கள் வெளியே வருகிறீர்கள்.
இது ஒரு இயல்கை. அது மரங்களுக்கு நல்லது, நமக்கல்ல. இலைகள் உதிர்ந்துவிட்டால் மரங்கள் வருத்தமடைவதில்லை, நாம் வருந்துவோம். பிரிந்து போன காதலரை பார்க்கும்போது உங்களது பற்று மாறிக்கொண்டே இருப்பதை எண்ணி கலங்குகிறீர்கள். மானுடருக்கு மட்டுமே இந்த வேடிக்கையான உணர்ச்சி ஏற்படுகிறது. மரங்களுக்கோ, அட்டைப்பூச்சிகளுக்கோ, பறவைகளுக்கோ அது இல்லை. அப்படி ஒன்று இருப்பதால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது.
இந்த மனப்பாங்கை வளர்த்துக்கொள்ளுங்கள். மனநிலையை உறுதிப்படுத்தி, நோக்கிநிற்கும் திறனை வளர்த்துக்கொண்டுவிட்டால் அன்றாடம் ஒரு எளிய விளையாட்டாகிவிடும். எங்கோ உள்ள, அந்நியமான ஒரு தத்துவம் அல்ல நமது நோக்கம். இங்கு நாம் கற்க விழைவது நமது அன்றாட வாழ்வையே என்பதை நினைவில் இருத்துங்கள்.