பலவிதமாய் அறியுன்னது அன்யயொன்னாய்
விலஸுவதாம் ஸமயென்னு மேலிலோதும்
நிலயெயறிஞ்ஞு நிவர்ன்னு ஸாம்யமேலும்
கலயிலலிஞ்ஞு கலர்ன்னிருன்னிடேணம்
(ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 38)
பலவென்றறியப்படுவது பிறிது
ஒன்றென ஒளிர்வது நிகரெனப்படுவது
நிலையை அறிந்து விடுதலை அடைந்தபின்
நிகர்நிலையில் கரைந்து கலந்திடு
*
இச்சொற்களை புரிந்துகொள்வதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக மலையாளத்தில் நிவர்ன்னு என்றால் ஒருவர் நேர்மையானவராதலை குறிக்கும். நடராஜ குரு அந்தப் பொருளில்தான் அதை தன் உரையில் பயன்படுத்துகிறார். ஆனால் நான் அதன் சமஸ்கிருத மூலத்தை எடுத்துக்கொள்கிறேன். அதில் இரண்டு நிரப்புச் சொற்கள் உண்டு: ஒன்று ப்ரவ்ருத்தி – செயலின் பாதை, மற்றொன்று நிவ்ருத்தி – விடுதலையின் பாதை. செயலின் பாதையில் சிக்கிக் கொண்டோர் பல செயல்-எதிர்ச்செயல் சூழல்களிலும், வினையின் தளைகளிலும் மாட்டிக் கொள்கின்றனர். இதிலிருந்து விடுதலை பெற முயல்பவரே நிவ்ருத்தி எனப்படுபவர். இந்தப் பொருளில்தான் நான் நிவர்ன்னு என்ற சொல்லை புரிந்துகொள்கிறேன் – தன் விடுதலையை தேடியடைபவன் என்ற பொருளில்.
நமது மனம் பல பகுத்தறியும் முன்முடிவுகளில் சிக்கியிருப்பது. அத்தகைய மதவெறியிலிருந்து நம் மனதை மீட்டெடுப்பதையும் நிவர்ன்னு என்று கொள்ளலாம். ஒருவர் தன்னை கிறித்துவராகவோ இஸ்லாமியராகவோ கருதலாம். மெய்யான பிற மதம் எதுவும் இல்லை என்றும், அத்தகைய மீட்பு இல்லை என்றால் வாழ்வே இல்லை என்றும் எண்ணலாம். அவரது மனம் ஒரு வகையான கருத்தில் சிக்கியிருக்கிறது. அவரைப் பொறுத்தவரை அது சரியானதாக, சிறந்ததாக இருக்கலாம். ஆனால் அது பலரையும் அவருக்கு எதிராக நிறுத்துகிறது, அவரால் தன் வாழ்வை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. இப்படியாக நாம் பல பிரிவுகளை, வேறுபாடுகளை வளர்க்கிறோம். அவையே மோதலுக்கான அடிப்படையாக ஆகின்றன. அப்படிப்பட்ட மதவெறியிலிருந்து நம் மனதை விடுவிப்பதைப் பற்றியே இந்தப் பாடல் பேசுகிறது.
ஸாம்யமேலும் என்ற சொல் தனித்துவம் வாய்ந்தது. ஸாம்யம் என்பதை நிகர்த்தன்மை என்று கொள்ளலாம். ஒருவர் டென்னிஸ் விளையாடலாம், இன்னொருவர் கால்பந்து விளையாடலாம். மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டும் வேறு வேறாகத் தோன்றலாம். ஆனால் அவற்றில் ஒரு அடையாளத்தை தேடினால் இரண்டுமே விளையாட்டுகள் என்பதும் பொழுதுபோக்கவும் உடற்பயிற்சிக்கும் பயன்படுபவை என்பதும் உங்களுக்கு தெரிகிறது. ஆடும் விதம் வேறுவேறாகத் தோன்றினாலும் அவற்றில் நிகர்த்தன்மை உள்ளது.
நாம் புரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு சொல் ‘கால’(ம்) (கலா, கலை) என்பது. யோகத்திலும் தாந்த்ரீகத்திலும் பயன்படுத்தப்படுவது அது. அதனை ‘நாதம்’, ‘பிந்து’ என்ற சொற்களின் பின்னணியில் வைத்து புரிந்துகொள்ள வேண்டும். நாதம் என்பது ஒலியின் மிக நுட்பமான அதிர்வு. நமது மொத்த உடலும் ஒரு உடைபடா ஒலியை கொண்டுள்ளது அதனை யோகியர் அநாஹதம் என்பர். உங்களது அக-உடல் வாழ்வின் மையம் பிந்து எனப்படுவது. நீங்கள் மேலும் கீழும் மூச்சு விடுவதை ‘ஹம்ஸ’ என்ற சொல்லை சொல்வதைப்போன்ற, ஒரு மந்திர உச்சரிப்போடு ஒப்பிடலாம். உங்கள் உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் இடையறா ஒலியைப் போன்றது அது. அது தானாகவே தனது மையத்தை தேடி அடையும். ஒருங்கிணைந்த மையம் ஒன்றில் உங்கள் நனவை நீங்கள் குவிக்கையில் அந்நனவு மையம் நோக்கி குவிந்தோ மையம் விட்டு விலகியோ ஒழுகுவது போன்றிருக்கும். அந்த மையம் கண்காணிக்கும் ஆற்றலாக இருக்கும். புருவங்களின் இடையில், இருதய மையத்தில், தொண்டையில், பிற மையங்களில் அதை உணரலாம்.
ஒரு குறிப்பிட்ட ஆர்வம் உங்கள் மையத்திலிருந்து எழுந்து விரிவடைந்து அந்த ஆர்வத்தின் முழுக்களனாக மாறுகிறது. ஒரு செயல்பாடாக, அகத்தின் இந்தக் கூறு ‘கால’(ம்) எனப்படுகிறது. பகுத்தறிய முற்படுவீர்களானால் இந்தக் காலம் எல்லா இடங்களிலும் வேற்றுமையையே காணும். ஒருமையை நாடுவீர்கள் என்றால் அனைத்தையும் ஒன்றெனக் காண்பதற்கான நூறு காரணிகளை கண்டடைவீர்கள். ஒருமை தேடும் காலம் என்பதை ஒரு கருத்தாக மட்டும் கொள்ளாமல் செயல் மெய்மையாகக் கொள்ள வேண்டும்.
நமது புறவயமான ரசனைகள் பலவிதமானவை. ஒருவரது உணவு இன்னொருவருக்கு நஞ்சாக இருக்கிறது என்பர். புனித லூக்கா, 13-ஆவது பாகத்தில் யேசு, ‘நான் அமைதியை கொணர்வேன் என நீங்கள் எண்ணினால் அது தவறு. நான் கொண்டு வந்திருப்பது பிளவையே. ஐந்து பேர் உள்ள குடும்பத்தில் மூவர் இருவருக்கு எதிராக இருப்பர். மூவர் இருக்கும் இடத்தில் இருவர் ஒருவருக்கு எதிரானவர். தந்தைக்கும் மகனுக்கும் இடையில், அன்னைக்கும் மகளுக்கும் இடையில், மருமகனுக்கும் மாமனாருக்கும் இடையில் முரண்பாடையே வைத்திருக்கிறேன்’ என்கிறார்.
இந்த முரண்பாடுகளுக்கெல்லாம் காரணம் என்ன? யேசுவை நினைக்கையில் ஒருமையையே எண்ணுகிறோம். எனவே, அவரது இந்தக் கூற்றை புரிந்துகொள்வது எளிதல்ல. ஒன்றை விலக்கி ஒன்றைச் சார்ந்து இயங்கும் சிறுமைகளைக் கடந்துசெல்வதே ஒருங்கிணைக்கும் கூறு என்பதை நாம் உணர்ந்தால் மட்டுமே அதன் பொருளை நாம் புரிந்துகொள்ள முடியும். உலகத்தோர் அனைவரும் சார்புகளால் நிறைந்தவர்கள், அதனால ஏற்பு என்பதே இல்லை. இதைக் கடந்தால் மட்டுமே ஏற்பு நிகழும், நீங்கள் இறையை காண முடியும்.
மஹாபாரத்தத்தில் உடன்பிறந்தோர் இருவரின் குழந்தைகள் இரு குடும்பங்களாக பிரிகின்றனர். அங்கே நூறு பேருக்கு எதிராக ஐவர். பிளவுகள் பெருகுகின்றன. ஐவருக்கு இணக்கமானவர் ஒரு பிரிவாகவும் நூற்றுவருக்கு விசுவாசமானவர்கள் ஒரு பிரிவாகவும் ஆகின்றனர். அவர்கள் தங்களுக்குள் மோத முற்பட எழுகிறது பெரும்போர். களத்திற்கு வந்த அர்ஜுனன் அவனது எதிரிகள் யாரென்று பார்க்கும்போது எல்லா திசைகளிலும் தனது நண்பர்களையே கண்டு வியக்கிறான். தனது பாட்டனுக்கு எதிராக, ஆசிரியர்களுக்கு எதிராக, பங்காளிகளுக்கு எதிராக, ஆகச்சிறந்த நண்பர்களுக்கு எதிராக தான் படைக்கலம் கொண்டு நிற்கிறோம் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ‘இவர்களுக்கு எதிராக எப்படி போர் செய்வேன்? என் நண்பர்களையும் நெருங்கிய உறவினர்களையும் கொன்றுவிட்டு பின் எப்படி வாழ்வேன்? வாழ்வின் பொருள்தான் என்ன?’ என்று எண்ணுகிறான்.
இதேபோல்தான் நம்மைச்சுற்றிலும் கருத்துமாறுபாடு, பிரிவினை, சண்டை ஆகியவையே இருக்கின்றன. யேசு சொன்னது மிகக் கொடூரமானதாகத் தோன்றலாம். உண்மையில் பெரும்பாலான குடும்பங்களில் நிகழ்வதைத்தான் அது குறிப்பிடுகிறது. ஒரு வருடம் காதலில் திளைக்கும் இணை ‘இறைவன் அருள் எங்கள் மீது பொழிகிறது’ என்று மகிழக் காண்கிறோம். அடுத்த வருடம் அவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் நிற்கின்றனர். இவையெல்லாம் என்ன? இதுதான் ‘பிறிது’ (அன்யம்) எனப்படுவது. இவ்வாறு பிரிந்து செல்லுதலும், அன்னியமாதலும், ஒறுத்தலும்தான் நம்மைச் சுற்றி நடைபெறுகின்றன என்கிறார் நாராயண குரு. இவற்றால் பெருகும் கண்ணீர் ஆறுகள் வற்றுவதே இல்லை.
வெளியேற ஒரு வழி உண்டு: ‘சமம்’ எனும் நிகர்த்தன்மையை வளர்த்தெடுத்தல். பகவத் கீதை ஆறாவது அத்தியாயம் இதையே பேசுகிறது. முதன்மையாக, நிகர்த்தன்மைக்கு ஒரு அடிப்படை வேண்டும். பைபிளைப் பொறுத்தவரை உங்கள் தந்தையை, இறைவனை இருதயபூர்வமாக, ஆத்மார்த்தமாக மனதார விரும்புதலே அந்த அடிப்படை. அதன்பின் நிகழ்வது என்ன? மானுடருக்கெல்லாம் தந்தை ஒருவனே என்பதை, அதனால் அனைவரும் உடன்பிறந்தோர் என்பதை நீங்கள் கண்டடைகிறீர்கள். அதன் தொடர்ச்சியாக நாம் பொறுப்புடையவர்களாக ஒருவருக்கொருவர் கடப்பட்டவர்களாக ஆகிறோம். அடுத்தபடியாக, அண்டைவீட்டாரிடம் அன்பு செலுத்துகிறோம். ‘என்னைப் போலவே’ என்று நீங்கள் சொல்கையில் சமம் எனும் நிகர்த்ன்மை தோன்றுகிறது. இப்படியாக, தான் கொணர்ந்தது பிளவை என்று சொன்ன யேசுவே அதற்கு மருந்தையும் அளிக்கிறார். உங்கள் ஆன்மாவின் இயல்பு தன்னலமற்றது. முழுமையான புனிதமாக்கல் அது. உங்களை முழுதளிப்பது.
என்னிடம் எப்போதாவது ஆலோசனை கேட்கும் ஒருவருக்கு இன்று கடிதம் எழுதினேன். அன்பும் அர்ப்பணிப்பும் கொண்டவர் அவர். இறைவனையும் பிறரையும் பெரிதும் விரும்பும் அவருள் எப்போதும் ஒரு சிறு சந்தேகப் பொறி உண்டு. சில சமயம் அந்தச் சின்னஞ்சிறு பொறி திரண்டு பெரும் இருள்மேகமாக குழப்பமாக மாறிவிடும். அதன் பின் ஒரு ஆறு மாதத்திற்கு அனைத்தும் பொருளற்றதாக எரிச்சலூட்டுவதாக ஆகிவிடும். அந்த ஐயத்தை கைவிடும்படியும் எவ்வகையான ஒதுக்கமும் இல்லாமல் இருக்கும்படியும் அவருக்கு எழுதினேன். மனதார கொடுக்கும்போது முழுமையாகப் பெறுகிறீர்கள்.
‘என்னில் நிலைகொள். ஒரு பொருளை ‘அது’ வாக்குவது அதன் இருத்தலே. அதனை நிலையாக இருக்கச் செய்வதும் அந்த இருத்தலே. அந்த ‘இருத்தல்’ தான் நான் என உணர்வாயாக! நானன்றி எதுவும் இல்லை, ஏனெனில் நானே இருத்தல். அதை கண்டடைந்தபின் அதற்கு உன்னை முழுதளி. அனைத்திலும் திகழும் அந்த இருத்தலை; மெய்யை மெய்யாக்குவதும், நன்மையை நன்மையாக்குவதும், அழகை அழகாக்குவதும், அன்பை அன்பாக்குவதுமான, அனைத்திலும் திகழும் அந்த இருத்தலை நோக்கி உனது அன்பு பாயட்டும்’ – இது கீதை ஆறாவது அத்தியாயத்தில் கிருஷ்ணன் சொல்வது.
இடையறாத தியானம் மூலம் இதை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி அமர்ந்து, கண்களை மூடியபடி செய்யம் தியானமல்ல நான் சொல்வது. வாழ்வே ஒரு தியானம்தான். நம் வாழ்வில் கடந்துபோகும் ஒவ்வொன்றுமே ஒரு தியானம்தான். ‘இது இருக்கிறது’ என்றும் ‘இது இல்லை’ என்றும் நீங்கள் சொல்கையில் உங்களை அவ்வாறு சொல்ல வைப்பதே அந்த இருத்தல்தான். இதையே நாம் ஒரு கடவுள் எனப் போற்ற வேண்டும் என்கிறார் குரு. பிறர் மனமறிந்து ஒழுகும் உங்களது கரிசனம், ஒரு கலைஞனாக நீங்கள் உணரும் அழகு, ஒரு காதலனாக நீங்கள் உணரும் அன்பு என அதை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். அவற்றில் எல்லாம் உள்ளது இருத்தலின் அடிப்படையே. அதை உங்கள இதயம் வழியே நீங்கள் உணர்கிறீர்கள்.
அதையே உங்கள் மைய மெய்மையாகக் காணும்படி கோருகிறது கீதை. நான் நான் நான் என நீங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அந்த உறுதியை உங்களுக்கு அளிப்பது உங்கள் அகத்தில் உள்ள ஒளி. உங்கள் உள்ளே உள்ள முழுமுதல் அது. இருத்தலே அனைத்தின் மெய்மையும் உங்களது மெய்மையும் எனக் கண்டடைந்த பின் உங்களில் உள்ள மெய்மையே பிற அனைத்திலும் உள்ளது என்பதை அறிவது எளிது. இவ்வாறாகத்தான் நிகர்த்தன்மையை, ஸாம்யத்தை நீங்கள் அடையமுடியும். அது பேரமைதியைக் கொணரும்.
நீங்கள் காணும் நிகர்த்தன்மையை பிறர் காணவில்லை என்றாலும் உங்களுக்கு அமைதி கிடைக்குமா? உங்கள் வீட்டில் குழந்தைகள் ஆரவாரம் செய்கையில் ‘அவர்கள் வயது அப்படி, அவர்களுக்கு ஆற்றல் அதிகம், நாமும் அப்பருவத்தில் அப்படித்தானே இருந்தோம். என் குழந்தைகளை எனக்குப் பிடிக்கும் என்றால் அவர்களுக்கான சுதந்திரத்தை நான் அளிக்க வேண்டும். அவர்கள் விளையாடட்டும். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! என்ன ஒரு உற்சாகம்!’ என்றுதான் உங்களுக்குத் தோன்றுகிறது. ஆக, அடுத்தவர்களைப் பற்றி எண்ணுகையில் உங்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லை. ஆனால் உங்களைப் பற்றி மட்டும் தனியாகப் பிரித்து எண்ணுகையில் எரிச்சலடைகிறீர்கள்.
அந்தக் குழந்தைகள் உங்களுடையவை அல்ல, அண்டைவீட்டாரின் குழந்தைகள் என்றால், அவர்கள் நீங்கள் உங்களைச் சுற்றி போட்டுக்கொள்ளும் சிறிய வட்டத்திற்கு மிக வெளியே இருப்பவர்களாகிறார்கள். அவர்கள் வேறு யாரோ ‘பிறருக்கு’ உரித்தானவர்கள். அவர்கள் உங்கள் வீட்டிற்குள் வந்து களேபரம் செய்தால் உடனே உங்களுக்கு வெறுப்பு தோன்றுகிறது. அவர்களை விரட்டுகிறீர்கள். ‘அவர்களுக்கென வீடில்லையா? என்னை ஏன் தொந்திரவு செய்கிறார்கள்?’ ஐந்து நிமிடங்கள் கூட அவர்களை உங்களால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. உங்களது பார்வை – ‘திருஷ்டி’ மாறிவிடுகிறது.
உங்களில் உள்ள அகமே பிறரிலும் உள்ளது என அறியும்போது கருணை – ‘மைத்ரி’ பிறக்கிறது. யாருக்காவது உளச்சோர்வு ஏற்படும்போது அதை நீங்கள் பொறுத்துக்கொள்வதோடு, அவர்களை அணைத்து, அவர்கள் உணர்ச்சிகளை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ முயல்கிறீர்கள். இந்தக் கருணையை வளர்த்துகொள்ளும்போதுதான் தோழமை பிறக்கிறது.
உங்களது கருணை ஒரு செயல் மெய்மையாக, ‘கால’மாக மாறும்போது நீங்கள் அதனுள் கரைந்துபோகிறீர்கள். இப்பாடலில் சொல்லப்படும் ‘கலர்ன்னிருன்னு’ என்ற கருத்து உங்களது ஒருமை தரிசனம் எனும் செயல் மெய்மையில் நீங்கள் கரைவதைக் குறிப்பது. அகத்தில் பிரபஞ்ச உணர்வை அடைவதே ‘ஸாம்யமேலும்’. பிறரிலிருந்து வேறாக உங்களை நீங்கள் காண்பதில்லை. எல்லோருக்கும் அவரவர் தம் மதத்தை, வாழ்க்கை முறையை முன்வைப்பதற்கும், தமக்கேயான உணவுண்ணவும், தங்களது மொழியைப் பேசவும் உரிமையுண்டு. உங்கள் மனதில் உள்ள தடைகளை எல்லாம் நீக்கி விட்டீர்கள். ‘எல்லாம் எனதே’ என எண்ணுகிறீர்கள். மூவுலகும் எனது, அனைவரும் என் உறவினர். எனக்கு எந்த வேறுபாடும் இல்லை. அது ‘மைத்ரி’யாக, உண்மையான தோழமையாக ஆகிவிட்டது.
ஞானம் வழியாக, கருணை வழியாக, தோழமை மூலம் ஒருமையை அடையலாம். கீதையில் இங்கு, அர்ஜுனன் கிருஷ்ணனிடம் “இதெல்லாம் சரிதான். ஆனால் நான் அதுவாக வாழ வேண்டும். என் மனம் என் வசம் இல்லை. கடுங்காற்று போல் அது வருகிறது. சில சமயம் கடலில் அமைதியாகத் திகழும் கப்பலை ஒரு காற்று இழுத்துச்சென்று மோதி தூள்தூளாகச் செய்யும். என் மனமும் எனது முடிவுகளையும், நல் நோக்கங்களையும் அப்படியே செய்கிறது. நான் நல்ல முடிவெடுத்தாலும் ஒரு சூறைக்காற்றூ போல வந்து அதை சிதைக்கிறது என் மனம். நான் என்ன செய்யட்டும்?” என்று கேட்கிறான்.
கிருஷ்ணன் அதை ஏற்றுக்கொள்கிறார்: ‘அது அப்படித்தான் என் அருமை அர்ஜுனா. மனதை வலுக்கட்டாயமாக அடக்க முடியாது. சில சமயம் அது சுழற்காற்று போலாகும். ஆனால், எப்போதும் அது அப்படி இருப்பதில்லை என்பதை நீ உணர்கிறாய் அல்லவா? சிறிது நேரத்திற்கு அது அலைபாயும், புகையும், குமையும். சற்றுநேரம் கழித்து அது அமைதி அடையும். அப்போது நீ அதை நெருங்க முடியும். அதுதான் நீ அதற்கு சரியான பாதையை காட்ட வேண்டிய நேரம். மனம் அமைதியாக இருக்கையில், கொதித்தெழ எந்த அவசியமும் இல்லை என்று அதற்குக் காட்டு. உனது இயற்பண்பென்பது தெய்வீகமானது. இறை வடிவங்களே அனைத்தும். பதற்றம் கொள்ளாதே. ஆழத்தில் உன் மனமறியும். அடுத்த முறை அது வெறிகொள்கையில், இது சரியல்ல என்று தானே உணரும்; முன்பை விட விரைவாக அமைதி அடையும்.”
இப்படியாக கிருஷ்ணன், நீங்கள் எவற்றில் எல்லாம் மயங்கிக் கிடக்கிறீர்களோ அவற்றிலிருந்து விலகி உங்களது மனதை மெல்ல அடக்குவது எப்படி என்று சொல்கிறார். அதே போல், தொடர் பயிற்சி வழியாக (அப்பியாசம்) எல்லாவற்றையும் ஒன்றெனக் காண்பது எப்படி என்றும் அதை பழக்க முடியும் எனவும் வைராக்கியம், பற்றற்ற தன்மை வழியாக எப்படி ஒருநாள் உங்கள் மனம் உங்கள் ஒருமை தரிசனத்துடன் இசையும் என்பதையும் கூறுகிறார்.
இப்பாடலின் தியானம் என்பது உங்கள் பார்வையில் பல மனப்போக்குகள் மறைந்து போவது அல்லது சுருங்குவது என்று சொல்லலாம். அதற்கு பதிலாக உங்களது எல்லைகளை விரித்து உங்களது நிவ்ருத்தியை, விடுதலையை கண்டடைய வேண்டும். அப்போதுதான் ஒருமைத்தன்மையைக் காணும் மெய்மை வாழ்வின் மாறாத வழியாக மாறும்.