ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 37

விஷமதயார்ன்னெழுமன்ய வென்னுகொள்வான்

விஷமமகண்ட விவேகஶக்தியென்யே

விஷமயெ வென்னதினால் விவேகமாகும்

விஷயவிரோதினியோடணஞ்ஞிடேணம்

                (ஆத்மோபதேச சதகம் – பாடல் 37)

இடையூறுகளால் நிரம்பிய பிறிதென்பதை 

இடையறா பகுத்தறிவன்றி வெல்லுதல் இயலா

இடையூறுகளை வென்றபின் அமைக

புலன்நுகர்வின் எதிரியாம் பகுத்தறிவோடே 

*

நாம் நாடுவது அமைதியை – இடையறா இன்பத்தோடு தொடர்புறுத்திக் கொள்ளக்கூடிய அமைதியை. இடையறா இன்பமுள்ள இடத்தில் அமைதியும் தவழ்கிறது. அந்த இன்பம் மெய்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டுமே சாத்தியமானது. மெய்மை மாறாத ஒன்று; இன்று மெய்யென இருப்பது நாளையும் அவ்வாறே இருக்க வேண்டும். ஆக, மெய்மை என்பது மாறாதது, தொடர்ச்சியானது. மெய்மைக்கு அக ஒருமை ஒன்றுண்டு; அதை நீங்கள் உணர்வீர்கள் என்றால் நீங்கள் இசைவான நிலையொன்றில் இயல்பாக அமைவீர்கள்.

அன்பு ஒரு பெரும் இசைவு நிலை. வெறுப்பு அதற்கு எதிரான நிலை. அமைதி பரிதவிப்பிற்கு நேர்மாறானது; இசைவு நிலை முரண்பாட்டுக்கு எதிரானது; மெய் மெய்யற்றதற்கு எதிர்; இருத்தல் ஆதலுக்கு எதிரானது. ஆக, நம் வாழ்வில் இருமையின் புதிர் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது; அதை அவிழ்க்க நாம் முயன்றுகொண்டே இருக்கிறோம்.

நமது நனவு இயங்குகையில், அதன் மையத்திலிருந்தே ஒரு இருமை எழுகிறது. அதில் ஒரு பாதி ‘நான்’ எனவும் மறுபாதி ‘இது’ எனவும் உணரப்படுகிறது. ‘நான்’ எனவும் ‘பிறிது’ எனவும் இதை காணலாம். பிறிதென்பது ‘நான்’ என்பதைப் போலல்லாமல் பற்பல பகுதிகளாக தோன்றுகிறது. ‘இது என் நண்பன்’, ‘இது ஒரு பானை’, ‘இது எனது கை’, ‘இது அறிவு’ என்றெல்லாம் சொல்கிறோம். இவற்றிலெல்லாம் நாம் ‘இது’ என்று சொல்வது எதை? அது பிறித்தறிய முடியாத ஒன்று. ‘இது’ என்ற தகுதி எதனால் ஏற்படுகிறது என்பதை மட்டுமே நாமறிவோம். தகுதிகளை எல்லாம் எடுத்துவிட்டோமென்றால் ‘இது’ என்பதை புரிந்து கொள்வது அரிது. மொத்த உலகுமே ‘இதன்’ பெருக்கம்தான். ‘இதுதான் இது’ அல்லது ‘இதுதான் அது’ என்று சொல்லலாம். சேய்மையில் அவை இரண்டல்ல.

‘இது’ என்ற கருத்து மனதில் நுழைந்து பற்பல பகுதிகளாக் நனவை பகுத்தபடியே செல்கிறது. இதன் இறுதி விளைவாக, நம்மில் உள்ள ‘நான்’ எனும் நனவுக்கும் ‘இது’ எனும் தன்மைக்கும் இடையேயான தொடர்பு உருவாகிறது. ‘நான்’ எனும் நனவு வெறும் ஒரு தத்துவக் கருத்து அல்ல. தன்முனைப்பு எனும் தகுதியுடன் சமூகத்தால் வடிவமைக்கப்பட்டது அது. இந்த தன்முனைப்பு மாறிக்கொண்டே இருக்கும் நமது மனநிலைகளால் கண்காணிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சில சமயம் அது உயர்ந்த நிலையில் இருக்கிறது, சில சமயம் பேரார்வம் கொண்ட நிலையில் இருக்கிறது, சில சமயம் மிகவும் சோர்வுடன் இருக்கிறது. எப்போதும் ஒன்றே போல் இருப்பதில்லை. நம்மை அமைதியிழக்கச் செய்யும் மனநிலைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

நம் வாழ்வில் நம்மால் கட்டுப்படுத்த இயலாத பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆழ்ந்த உறக்கம் அமைதியை தரக்கூடும், ஆனால் மனக்கலக்கம் ஏற்பட்டால் உறக்கம் வருவதில்லை. ‘தூங்கு’ என்று நம்மை வற்புறுத்தி சொல்லிக்கொண்டால் மட்டும் நமக்கு தூக்கம் வந்துவிடுவதில்லை. தூக்க மாத்திரை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது தற்காலிக தற்கொலை மட்டுமே. சிறிது நேரத்திற்காக நச்சு மாத்திரைகளைக் கொண்டு உங்களை நீங்களே வதைத்துக் கொள்கிறீர்கள். அதே மருந்தைக் கொண்டு உங்களை நீங்கள் கொன்றுகொள்ளலாம, அது நிரந்தரத் தற்கொலை. இயற்கை மரணம் அவ்வாறு நிகழ்வதில்லை. விரும்பியபோது இறப்பது உங்களால் இயலாது, வேண்டுமானால் மரணத்தை விழைந்து உங்களை கொன்றுகொள்ளலாம். ஆனால் இங்கு நாம் எவ்வித கொலையும் செய்ய திட்டமிடவில்லை. இறந்தால் நல்லவிதமாக இறப்போம். அதே போல், இனிய உறக்கம் கொள்வது என்பது மாத்திரைகளின் உதவியோடு உறங்குவதிலிருந்து வேறுபட்டது.

உறக்கம் எவ்வாறு வருகிறது? இயற்கைக்கு ஒரு தாளகதி உண்டு. சூரிய ஆற்றல் உலகின் மறுபுறத்திற்குச் செல்கையில் நம் ஆற்றல் தேய்கிறது. செயல்பாடுகள் மட்டுப்படுகின்றன, உறக்கும் வருகிறது. மனம்  எண்ணங்களாலோ, விழைவுகளாலோ, ஊக்கிகளாலோ தூண்டப்பட்டால் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இயற்கையான உறக்கம் ஒரு பெரும் வரம், அது அகத்திலிருந்து மட்டுமே வர இயலும்.

அதேபோல, நாம் யாரையும் வற்புறுத்தி அன்பு செலுத்த முடியாது. எல்லா மதங்களும் அன்பு செலுத்தச் சொல்கின்றன. ஆனால், நான் என் அண்டை வீட்டாரிடம் சென்று “யேசு அண்டை வீட்டாரிடம் அன்புசெலுத்தச் சொல்லியிருக்கிறார். உங்களிடம் அன்பு செய்ய வந்திருக்கிறேன்” என்று சொன்னால், அவர் ‘போய் வேறு வேலையைப் பார்’ என்று என்னை துரத்துவார். உங்கள் அன்பை யார் மீதும் திணிக்க முடியாது. அது இயல்பாக வர வேண்டும். ஒருவர் என்னிடம் வந்து “எனக்கு உன் மீது பெரும் காதல்” என்று சொல்லலாம். அதில் சிக்கல் இல்லை. ஆனால் “நான் உன்னை பெரிதும் விரும்புகிறேன். நீ ஏன் என்னை ஒதுக்குகிறாய்?” என்று அவர் கேட்டால் எதுவும் செய்வதற்கில்லை. உங்களுக்கு என்னை பிடிக்கும் என்றால் எனக்கும் பரஸ்பர உணர்வு தோன்ற வேண்டும், இங்கு அப்படியில்லை. நான் இன்னொருவரை வற்புறுத்த முடியாது. அன்பு தானாக சடுதியில் தோன்றுவது. காதல் பெருகும் ஒரு சூழலை ஏற்படுத்தலாம். ஆனால், அன்பு இயல்பாக தோன்ற நீங்கள் காத்திருக்க வேண்டும். அது தூக்கத்தைப் போன்றது: இரண்டும் இயல்பாய் நிகழ்பவை.

அமைதி என்பதும் இயல்பாக தானாகத் தோன்ற வேண்டியது. கவனக் குவிப்பு இயல்பான ஒன்று. உங்கள் கண்களைத் தீட்டி பார்ப்பதால் மட்டும் உங்களால் கவனத்தை குவிக்க முடியாது. இந்தியாவிலிருந்து வரும் குருமார், “இந்த மெழுகுவர்த்தியை ஒரு பீடத்தில் வைத்து அதையே நோக்குங்கள்” என்பர். அல்லது மூச்சுப் பயிற்சி செய்யச் சொல்வர். அதனால் களைப்படையும் நீங்கள் கொஞ்சம் படுக்கலாமா என யோசிப்பீர்கள். எதையோ அடைந்துவிட்ட திருப்தி உங்களுக்கு ஏற்படும். இந்த உலகே  

தந்திரங்களால் நிரம்பியது. உங்கள் நரம்பு மண்டலத்தை தந்திரமாகக் கையாளும் முறையை ஒருவர் கண்டுபிடிக்கிறார், அந்த முறைக்கு காப்புரிமை பெற்று அதை விற்பனை செய்கிறார். ஆனால் இவற்றிலெல்லாம் ஆன்மீகம்  என்பது சிறிதும் இல்லை.

‘பிறிது’ (அன்யம்) என்பதை வெல்வதே இங்கு கருதத்தக்க சவால். அன்யம் என்பதே பிறிதாம் தன்மையை வளர்த்தெடுப்பது. இந்தத் தன்மையால்தான் நாம் அல்லல் படுகிறோம். ‘பிறிதாம்’ தன்மை நம்மில் உள்ள ‘நான்’ என்பதுடன் உறவாடுகிறது. ‘பிறிது’ என்பது இல்லையென்றால் நம்மில் உள்ள ‘நான்’ என்பது போட்டியிட எதுவும் இருப்பதில்லை. பிறிதென்பதும் தன்முனைப்பும் இல்லாமல் ஆகும்போது அமைதி எழுகிறது.

பிறிதென்பதன் தாக்கத்தை இல்லாதாக்குவது எப்படி? ‘நான்’ என்பதும் ‘பிறிது’ என்பதும் ஒன்றாக வேண்டும். ‘நான்’ என்பது எந்த மெய்மையால் ஆனதோ ஆதே மெய்மையால் ஆனதுதான் ‘பிறிது’ என்பதும் என்று அறிதலே ஒருமையை கொணர்கிறது. இந்த ‘நான்’ என்பது கற்பனை செய்யப்பட்ட நனவின் மாற்றம் (fantasised modification of consciousness) என்றும் ‘பிறிது’ என்பது கற்பனை செய்யப்பட்ட நனவின் புறத்தெறிவு (fantasised projection of consciousness) என்பதையும் நாம் அறியலாம். இரண்டுமே பொய்யானவை. நான் என்றும் பிறிதென்றும் ஏதும் இல்லை என்று அறியும்போது நமக்கு இன்னல் எதுவும் இல்லாமலாகிறது. ஆனால் அது அத்துணை எளியதல்ல.

நமக்கென ஒரு உடல் இருக்கிறது, அதில் புலன்கள் உள்ளன. ஒவ்வொரு 

புலனுறுப்பும் ஒரு வகையான தூண்டலை ஏற்படுத்துகின்றது. ஒரு பொருளை பார்ப்பதனாலோ, ஒரு சொல்லை கேட்பதனாலோ பல தொடர் எதிர்வினைகள் எழுகின்றன. பலவித தூண்டல்கள் எல்லா திசைகளிலிருந்தும் நம்மை தாக்கிக் கொண்டே இருக்கின்றன. அவ்வண்ணம் இருக்கையில் அமைதியாக இருப்பதென்பது நடவாத காரியம் என்றே சொல்லலாம்.

இதில் நமக்குள்ள சிக்கல்களை எண்ணிப் பார்ப்போம். பல எதிர்வினைகளை ஏற்படுத்தும் தூண்டல்களில் தொடங்குகிறது அது. இரண்டாவதாக, நமது மனம் சில கவலைகள் எனும் மனச் சுழல்களில் சிக்கிக் கொள்கிறது. கவலைகளில் முக்கியமானவை இரண்டு வகை: ஒன்று கடந்ததை எண்ணி வருந்துவது, இன்னொன்று எதிர்வரக் கூடியது குறித்த கவலை. முதலாவது குற்றவுணர்வாக வருவது: ‘தவறு செய்துவிட்டேன், இப்போது என்ன செய்வது? எனது தனிப்பட்ட பிம்பம், சமூக பிம்பம் உடைந்துவிட்டது. என் நண்பர்களின் பார்வையில் நான் இனி மரியாதைக்குரியவன் அல்லன். சமூகம் என்னை சந்தேகத்துடன் பார்க்கிறது. எனது நேர்மை கேள்விக்குரியதாகிவிட்டது. இனி என்னை யாரும் மதிக்கப் போவதில்லை. மிக அரிய ஒன்றை என் வாழ்வில் நான் இழந்துவிட்டேன். நான் ஏமாற்றப்பட்டுவிட்டேன், தோற்கடிக்கப்பட்டேன்’. இப்படியெல்லாம் கடந்தவற்றைப் பற்றி எண்ணி வருந்துகிறோம். பயனற்றவர்களாக உணர்கிறோம், எரிச்சலடைகிறோம், கோபம் கொள்கிறோம், எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் ஏன அஞ்சுகிறோம்.

பாதுகாப்பற்றவர்களாக உணர்வது எதிர்காலம் குறித்த கவலையால். நாம் எண்ணியவை தவறாகப் போகின்றன. புதிதாக என்ன முளைக்கும் என்று நமக்குத் தெரிவதில்லை. புதிய சூழலை எப்படி எதிர்கொள்வது என்று தெரிவதில்லை. பங்குச் சந்தை திடீரென சரியலாம். சந்தையில் யாரேனும் ஒரு பொருளை பதுக்கலாம். நாளை எகிப்தின் முதல்வர் கோபம் கொண்டு சூயஸ் கால்வாயை மூடிவிட்டார் என்றால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படும். உலக சந்தையில் அனைத்தும் தாமதமாகும். அதே போன்ற நிலைமை பனாமாவில் ஏற்படலாம். ஒரு மடையன் மொத்த உலகையும் கலைத்துப்போட முயலலாம். யாரோ ஒருவர் நம்மீது  தாக்குதல் நடத்த திட்டமிடலாம்.

இத்தகைய கவலைகள் எல்லாம் மக்கள் மனதில் இருப்பவை. ஆனால் அவை காரணமாக நாம் இயற்றக் கூடிய வினைகள் மொத்த உலகையும் பாதிக்கக் கூடும். நாம் வாழ்வது ஒரு சமூகத்தில்; சமூகத்தை பாதிக்கக் கூடிய வஞ்சனைகளில் இருந்து நம் வாழ்வை தனிப்படுத்திக் கொள்ள நம்மால் இயலாது. அடுத்து என்ன வரும் என்று அஞ்சுகிறோம். இந்தக் கவலை எனும் சுழல்களில் இருந்து எப்படி வெளியேறுவது? அவை முழுக்க முழுக்க கற்பனைகள் அல்ல; அனுபவ யதார்த்தம் கொண்டவை. 

நம்மில் பல வகையான பசிகளை ஏற்படுத்தும் ஆழ்ந்த வேட்கைகளும் விழைவுகளும் மற்றொரு வகை இன்னல். உடலின் பசி என்பது உலகளாவிய பெரும் இன்னல். பல நாடுகளில் உணவுக்கான பசி என்பது அன்றாடச் சிக்கல். உளப் பசியும் உடல் வேட்கையும் நம்மை தகாத முறையில் நடந்துகொள்ளச் செய்வதால் அவை உடற்பசியை விட தீங்கானவை. உங்கள் வேட்கைகள் உங்களையே பாதிப்பவை. காமம் சார்ந்த சிக்கல்கள் கொண்ட இளம் நண்பர்கள் எனக்குண்டு. அவர்கள் தொடர்புறுத்திக் கொள்ளக்கூடிய சரியான நபர்கள் யாரும் இருப்பதில்லை என்பதால் பெரும்சிக்கலை எதிர்கொள்பவர்கள் அவர்கள். இன்னும் சிலர் அறிவுபூர்வமாகவும் ஆன்மீகமாகவும் பசி கொண்டவர்கள். பொருள்பொதிந்த உரையாடல் மேற்கொள்ள, தத்துவம் சார்ந்தும், ஆன்மீகம் சார்ந்தும் பேசுவதற்கு அவர்களுக்கு யாரும் இல்லை என்று எனக்கு எழுதுகிறார்கள். விழுமியங்கள் என ஒன்றுமே இல்லாத கொடும் பாலையில் தாம் வாழ்கிறோம் என்று உணர்கிறார்கள்.

இந்தப் பட்டியலை நாம் விரித்துக்கொண்டே செல்லலாம். இதிலிருந்து தப்புவது எப்படி என்றுதான் நாம் அறிய வேண்டும். சிறு முள் உங்கள் காலில் குத்தினால் போதும், சிறிது நேரத்திற்காயினும், உங்களது உள, உடல் சமநிலை குலைந்துவிடுகிறது. உங்கள் உடலில் பல வகையான நோய்கள் ஏற்படக் கூடும். நம்மில் பலர் மனநலம் கொண்டவர்களாகத் தோன்றுவதே பெரும் வியப்புதான். இவ்வுலகில் மனநிலை பிறழ்தல் மிக எளிதாக நிகழக்கூடிய ஒன்று. இருந்தும் ஓரளவு மனநலம் இன்னும் இவ்வுலகில் திகழ்கிறது.

வேறுபடுத்தும் கூறான அன்யம் நமக்கு எப்போதும் இன்னல்களைத் தருவதாக சுற்றி வருகிறது. உண்மையில், பிறிதாம் தன்மை காரணமாகவே மொத்த உலகும் இடைவிடாத சச்சரவில் சிக்கியுள்ளது. எவ்வகையிலாவது பிறிது குறித்த அச்சத்தை வென்று அனைத்தையும் ஒன்றென ஆக்க வேண்டும் என்கிறார் குரு. இங்கு ‘விஷய விரோதினி – புலன்நுகர்வுக்கு எதிரானது’  என்ற ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறார். விஷயம் என்பது உங்கள் மகிழ்ச்சிக்கு மூல காரணமானதை ஒரு பொருளின் மீது ஏற்றி அப்பொருளே உங்களை மகிழ்விக்கிறது என்று எண்ணுவது. சிக்கலின் அடிப்படை அதில்தான் இருக்கிறது. ‘இது இல்லை என்றால் எனக்கு மகிழ்ச்சி இல்லை’ என்று எண்ணிய உடனேயே நீங்கள் உங்கள் மகிழ்ச்சியிலிருந்து அன்னியப்படுகிறீர்கள். உங்களது நிகழ் நிலைக்கும் மகிழ்ச்சியை எதிர்கொள்ளக்கூடிய எதிர்காலத்துக்கும் இடையே ஒரு பள்ளத்தை ஏற்படுத்திவிடுகிறீர்கள்.  தற்போது நீங்கள் மகிழ்ச்சியுடன் இல்லை, எதிர்காலத்தில்தான் அப்படி இருக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறீர்கள். எப்படியாகிலும் நிகழிலிருந்து விலகி எதிர்காலத்துக்கு சென்றுவிட வேண்டும், அதுவரை மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்று உணர்கிறீர்கள். மகிழ்வாக இருக்கக்கூடிய எதிர்காலத்தில் இப்பொருள் எனக்கு கிடைக்காது போய்விடுமோ என்றும் உங்கள் தேடல் வீணென்றும் வருந்துகிறீர்கள். இப்படியாக, மகிழ்வின் நோக்கம் எனும் விஷயம் வழியாக நாம் நமது மகிழ்ச்சியிலிருந்து விலகிச் செல்கிறோம்.

அவ்வாறல்லாமல், மகிழ்வின் ஊற்றே நீங்கள்தான் என்றும் புறத்தே தேடியடைய ஏதுமில்லை என்றும் நீங்கள் அறிவீர்கள் என்றால், புறப் பொருள் மகிழ்ச்சியின் பகுதியாகிவிடுகிறது. உங்கள் மகிழ்ச்சியில் பங்குகொள்ள அதனை நீங்கள் அனுமதிப்பதால்தான் அதுவும் நிகழ்கிறது. இது நிகழ்வதற்கு பகுத்தறிவு அவசியம். எவ்வகையான பகுத்தறிவு? குரு சொல்லும் ‘அகண்ட விவேக சக்தி’ என்பது ஏதோ ஒன்றை நீங்கள் என ஆக்குவதோ உங்களை அதுவாக ஆக்குவதோ அல்ல. ஒருங்கிணைக்கும் பகுத்தறிவு அது, பிரிப்பது அல்ல. ‘இது’, ‘இது’, ‘இது’ என அனைத்தையும் உள்ளடக்கிய ‘இது’ ஆகும்போது ‘இது’வும் ‘நானும்’ ஒன்றாகிவிடுகிறது. 

இதனால்தான் நாராயண குரு முதல் பாடலிலேயே, எல்லாமாக உருவெடுக்கும் பிரபஞ்ச நனவான கரு எனும் அக உலகுடன் புற உலகுக்கு உள்ள பொது இணைப்பை காணும்படி கோரினார். நம் புலன்களை அடக்கி அதனை மீண்டும் மீண்டும் வீழ்ந்து வணங்க வேண்டும் என்றார். நம்முள் ஒளிரும் ஏற்றப்படாத விளக்கை நோக்கும்படி வேண்டினார். காண்பதெல்லாம் வெவ்வேறாகத் தோன்றினாலும் நாம் காண்பது அந்த ஒளியையே. அவ்வொளி நோக்கி திரும்பி அது நம்மை வழிநடத்த அனுமதிக்கையில் நாம் பெறுவது அகண்ட விவேக சக்தியை – இடையறா பகுத்தறிவை.

நமது இன்னல்களிலிருந்து எவ்வாறு மீள்வது என்பதையே இப்பாடல்கள் அனைத்திலும் குரு சொல்லி வருகிறார். பதின்மூன்றாவது பாடலில், “சத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களையும் கடந்ததை பாருங்கள். உங்கள் மனதின் மலர்கள் கொண்டு அவ்விறையை வழிபடுங்கள். புலன்களை அகம் நோக்கி திருப்பி, உங்கள் வாழ்வின் சுர வெப்பத்தை தணித்துக் கொள்ளுங்கள், உங்களை பிணைத்திருப்பவற்றை அறுத்தெறியுங்கள், ‘அதன்’ மேன்மையுடன் ஒன்றாகுங்கள்” என்றார். வெள்ளமெனப் பாய்ந்து பாலை நிலத்தை நிரப்பி மணற்துகள் ஒவ்வொன்றையும் அருமணியாக மாற்றும் அருளை நமக்கு காண்பித்தார். மன மலர்களை இறைக்கு அர்ப்பணிக்கக் கூறினார். இயலாவிடில் வழிபாட்டில் ஈடுபடச் சொன்னார். அல்லது வாழ்வின் மாயங்களைக் களைய தத்துவார்த்த தியானத்தில் ஈடுபடச் சொன்னார்.

உங்கள் அகத்தில் உறையும் அமைதியைக் கண்டடைந்து ‘சௌம்யன்’ என ஆவதே அறுதியில் நிகழ வேண்டியது. சமநிலை அடைவதன் மூலமே நீங்கள் அகத்தில் அமைதி பெறுகிறீர்கள். எப்போதும் இதை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் புதியதை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி வரும் ஒவ்வொன்றையும் சவாலாக ஏற்று, வழிபாட்டு மனநிலை வழியாக,  மீயுணர்வு வழியாக அக அமைதியை, ஒருமையை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். 

நீங்கள் எப்போதும் வென்றுகொண்டே இருக்க வேண்டியதில்லை. தோல்வியை ஏற்பதிலும், ‘’பிறிதை’ வெல்ல அனுமதிப்பதிலுமே மிகப்பெரிய வெற்றி இருக்கிறது. ஒரு விவாதத்தில் இருக்கும் நீங்கள் வென்றால் என்ன? தோற்றால் என்ன? அடுத்தவர் வெல்ல ஒரு வாய்ப்பு கொடுங்கள். அவர் தவறான வழியில் வெல்ல நினைத்தாலும், நீங்கள் அவரை வெல்ல அனுமதிக்கையில் அவர் நிலைமையை எண்ணிப் பார்ப்பார். அந்த வெற்றிக்கு தான் தகுதிகொண்டவரில்லை என்பது அவருக்கு உள்ளூர தெரியும். உங்கள் மௌனத்தின் மெய்மையை அவர் அறிவார். நீங்கள் தன்முனைப்பு கொள்வதிலை, அவரையும் தன்முனைப்பு கொள்ளும்படி செய்வதில்லை. அது அவரை திருத்துகிறது, தூயவராக்குகிறது. 

இப்படியாக, மௌனத்தின் வழியே, ஒருமை ஏற்படச் செய்வது வழியே உங்கள் அகத்தில் ஒருமைப் புரிதல் நிகழ்கிறது. அது அமைதியை, இசைவை கொணர்கிறது. அமைதியும் இசைவும் இருக்குமிடத்தில் அன்பு தானாக முகிழ்க்கிறது. அருளுக்கு உங்களை ஒப்பளிக்கையில், இறையின் கைகளில் உங்களை ஒப்படைக்கையில், பெற அரியவை எல்லாம் அளவிலாது கைவரப் பெறுகிறீர்கள். அந்நிலையில், இடையறா பகுத்தறிவு உங்கள் வசமாகிறது. எல்லா ‘இது’வும் பிரபஞ்ச ஒருமையின்வசம் அடங்குகிறது. 

பாடல் 38

Leave a comment