ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 36

அறிவினு சக்திஅனந்தமுண்டு இதெல்லாம்

அறுதியிடாம் சம அன்ய என்னிவண்ணம்

இருபிரிவாய் இதில் அன்யஸாம்யமார்ன்னு

உள்ளுருவில் அமர்ன்னு தெளிஞ்ஞு உணர்ன்னிடேணம்

           (ஆத்மோபதேச சதகம் – பாடல் 36)

அறிவின் ஆற்றல்கள் எண்ணற்றவை 

ஒன்றென்றும் பிறிதென்றும் பகுக்கலாம் அவற்றை

இவ்விரு பிரிவில் பிறிதென்பதை ஒன்றுடன் கலந்தே

அகத்தே பெறுதல் வேண்டும் தெளிவே

*

மனம் விழிப்பு நிலையில் இருக்கையில் ஏற்படும் ஏதோ சில பதிவுகளே அறிவு என நாம் எண்ணுகிறோம். ஆனால் அது ஒரு கூறு மட்டுமே.

தன்னொளி கொண்டு ஒளிரும் அறிவையே அகம் என நாம் ஏற்கனவே வரையறுத்துள்ளோம். அதன் மூலமே நமது உணர்தல்கள் அனைத்தும் ஏற்படுகின்றன. ‘நனவு’ என்று சொல்கையில் அதன் அடிப்படையான நனவிலியையும் சேர்த்தே குறிப்பிடுகிறோம். உண்மையில், நனவென்பதே பொது நனவிலியின் மிகச் சிறிய கூறுதான். அதே போல், அறிவு என்று நாம் கூறுகையில் அறியப்படுவதன் முந்தைய நிலையையும் அறியப்படும் நிலையையும், அது நகரும் திசையையும், அத்தகைய நகர்வுகான காரணத்தையும், அது பாதிக்கக் கூடியதையும், எங்ஙனம் பாதிக்கும் என்பதையும், எழக்கூடிய தூண்டலையும், அந்தத் தூண்டலுக்குக் காரணமானதையும்  சுட்டுகிறோம். இவை அனைத்தையும் ஒரே வீச்சில் கணக்கில் கொண்டுதான் அறிவு எனும் சொல்லை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அறிவின் ஆற்றல்கள் எண்ணற்றவை எனும்போது இருப்பின் முழுமையையே நாம் சுட்டுகிறோம். ‘இருத்தல்’ எனும் சொல்லுக்கு இன்னொரு எல்லை இருக்கிறது. நமது அறிவுத் தேட்டத்தின் துவக்கத்திலிருந்தே மொழியின் சாத்தியத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்றை வெளிப்படுத்திய உடனேயே அந்த வெளிப்பாடு ஒரு கருத்துருவின் எல்லைக்குள் அடங்கிவிடுகிறது. கருத்தாக்கம் செய்ய இயலாதவற்றை எல்லாம் கருத்துருக்கள் வடிவில் வரையறுத்துச் சொல்ல முனைகிறோம். ஒரு கருத்துருவின் வரம்பெல்லை காரணமாக மேலும் பல கருத்துருக்களைக் கொணர்ந்து அதை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிவருகிறது.

ஹென்றி பெர்க்ஸன் இதனை, எவ்வளவு தாமிர நாணயங்கள் கொண்டும் ஒரு தங்க நாணயத்தை ஈடுசெய்ய முடியாது என்று விளக்குவார். ஒரு நாள் முழுதும் சில்லறை நாணயங்களை கொட்டிக்கொண்டே இருந்தால் கூட அந்த தங்க நாணயத்திற்கு ஈடு செய்த நிறைவு உங்களுக்கு ஏற்படாது.

முதலில் ‘அறிவு’ என்பதன் அடிப்படைகளை பார்ப்போம். ‘நான்’ எனப்படுவதே முதன்மையான, என்னிடம் எப்போதும் உள்ள அறிவு. அதை விட அணுக்கமான, தெளிவான, மாறாத அறிவொன்றில்லை. ‘நான்’ என்பதன் உள்ளடக்கம் ஒரு விழிப்புணர்வு. நான் என்னை அறிகிறேன் என்று சொல்கையில் முதலில் வரும் நான் என்பது வரையறுக்கப்படாதது. நான் அறிவேன் என்று நீங்கள் கூறுகையில் நான் என்பது அறிபவராக மாறுகிறது. ‘நான்’ என்பதை புரிந்துகொள்ள அறிதல் என்னும் கருத்துருவாக்கத்தை பயன்படுத்திக் கொள்கிறீர்கள். ‘நான்’ என்று நீங்கள் எண்ணியவுடன் ஒளிர்ந்த தெள்ளிய விழிப்புணர்வு தன்னை அதனுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறது. ஒரு விழிப்புணர்வை அடையாளம் கண்டு அதுவே ‘நான்’ என்ற முடிவுக்கு வருகிறீர்கள். அம்முடிவை எட்ட அறிதல் எனும் ஒரு செயல் நிகழ வேண்டியிருக்கிறது. விழிப்புணர்வெனும் செயல் ஒன்று இருப்பதைப் போலவே விழிப்புணர்வெனும் நிலை ஒன்றும் உள்ளது. அவற்றை வேறுபடுத்தி அறிவது எளிதல்ல.     

இதில் சொல்சார்ந்த வேறுபாடு மட்டுமே உள்ளது. நான் என்ற தன்னுணர்வும், நான் ஆக இருத்தலும், அறிபவனாக செயல்படும் நிலையும் எல்லாம் ஒன்றையே பல வகையாக சொல்வது மட்டுமே. சாரமாக நிகழ்வது ஒன்றே. தன்னுணர்வு குறித்த தன்னுணர்வு குறித்த தன்னுணர்வு என முடிவில்லாமல் தொடர்வது அது.

நான் அறிகிறேன் என்பது முதல் பகுதி என்றால் நான் இருக்கிறேன் என்பது இரண்டாவது. இதில் உள்ள நான் என்பதில் அறிதல் எனும் நிலையும், ஆதல் எனும் நிலையும் இணைக்கப்படுகின்றன. அது ஒரு இருத்தலியல் கூற்று. அனைத்து நிலைகளினூடாகவும் முழுமையை ஊடுருவுவது எது? இருத்தல், அறிதல், தேடல் என்பவற்றிற்கிடையே எந்த வேறுபாடும் இல்லை. ‘நான் யார்? நான் இன்னார்.’ என்று சொல்கையில் நீங்கள் ஒன்றை முன்வைக்கிறீர்கள், ஒரு தீர்ப்பை அளிக்கிறீர்கள். அந்தத் தீர்ப்பு, சிக்கலொன்றை தீர்த்துவைத்த ஆறுதல் உணர்வை உங்களுக்கு அளிக்கிறது. 

அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி ஒருவரது நனவென்பது எப்போதும் மாறாமல் இருப்பது. ஒரு வசதிக்காக இதையே நாம் கடந்தநிலை என்கிறோம். அந்த நிலைக்குள்ளேயே நாம் இருப்பை நிறுவியிருக்கிறோம். Husserl, Heideggar, Jaspers போன்ற மெய்யியலாளர் இவ்விரு கூறுகளும் பிரிக்கமுடியாதவை, ஆனால் வேறுவேறானவை என்பர். இரண்டையும் பற்றி விளக்கவேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்திருந்தனர். Kant தூய அறிவையும் (pure reason) பயன்பாட்டு அறிவையும் (practical reason) வேறுபடுத்திக் கூறுவார். கடந்த நிலை என்பது தூய அறிவின் ஒரு முக்கிய கூறு; பயன்பாட்டு அறிவோ அனுபவ தளத்திலேயே இயங்குவது.

என்னை ஒருவனாகவும் உங்களை வேறொருவராகவும் கருதாவிடில் என்னால் உங்களை காணவே முடியாது. நான் அகமென்றும் (subject) நீங்கள் புறமென்றும் (object) ஆக வேண்டும். காண்பது என்றால் நான் உங்களை நோக்கி என் பார்வையை செலுத்த வேண்டும், உங்கள் வடிவை, வண்ணத்தை குறிப்பிட்டு அறிய வேண்டும், உங்களை பிறரிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். உங்களது பின்னணியிலிருந்தும் உங்களை பிரித்தெடுக்க வேண்டும். நீங்கள் நீங்கள்தான் என்று முடிவெடுப்பதோடு, நீங்கள் நீங்களல்லாமல் வேறு எதுவும் அல்ல என்றும் நிச்சயப்படுத்திக்கொள்கிறேன். இந்த முடிவுக்கு வர, உங்களிலிருந்து ‘பிறி’தை நீக்குகிறேன்.

எளிய அறிதலில் கூட பல வேறுபடுத்தல்கள் உள்ளன. ஆனாலும், ஒன்றைப் பற்றி அறிதல் என்பதை மிக எளிதான ஒன்றாகவே கருதுகிறோம். அதை விவரிப்பதுதான் எளிதல்ல. உலகைக் கண்டவுடன் அது இருப்பதை அறிந்துவிடுகிறோம். அதில் எந்த சிக்கலும் இல்லை. மெய்யிலாளர் புழுதியைக் கிளப்பி விட்டு பார்வை மங்கிவிட்டதாக புலம்புகின்றனர் என்கிறார் Berkeley. அவர்கள் கிளப்பிய புழுதியால்தான் அவர்களால் தெளிவாக பார்க்க முடிவதில்லை.

அறிவியலாளர் செய்வதும் அதைப் போன்றதே. ஒரு பூவைப் பார்த்தால் அது எப்படி மற்ற பூக்களிலிருந்து வேறுபடுகிறது என்ற ஆர்வம் அவர்களுக்கு தோன்றுகிறது. அந்தப் பூவுக்கு குடும்பப் பெயர் (family name) சூட்டாமல் அவர்கள் ஓய்வதில்லை. அதைச் செய்ய அவர்கள் அந்தப் பூவை பிளந்து ஆராய்கின்றனர். அதன் சூலகம், இதழ்கள் போன்றவற்றை மற்ற பூக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். அப்போதுதான் அவர்களால் அதை வகைப்படுத்த முடியும். இதையெல்லாம் செய்வதன் மூலம் அறிவையெல்லாம் அவர்கள் பெருக்குவதில்லை. ஆனாலும் இவற்றை செய்யாவிட்டால் அவர்களுக்கு நிறைவு ஏற்படுவதில்லை. இப்படியாக, நாம் ஒவ்வொன்றையும் ஆராய்வதை நாம் தலைமேற்கொள்கிறோம். இதற்கெல்லாம் ஏதாவது மதிப்பு உண்டா? அனுபவ தளத்தில் சில பலன்கள் இருக்கலாம்.

‘நான்’ எனும் முதன்மைக் கருத்துடன் இந்த உரையாடலை நாம் துவங்கினோம்: ‘என்னை நான் அறிகிறேன்’. அடுத்தது ‘நான் உலகை உணர்கிறேன்’. இது பெரும் பகுப்பைக் குறிக்கிறது : நான் என்பது அகம், உலகம் என்பது புறம். பகவத் கீதை பதின்மூன்றாவது பகுதியில் அறிபவன் க்ஷேத்ரஞன் எனப்படுகிறான், அதாவது புலத்தை அறிபவன். நம் அகத்தை அனைத்தையும் அறிபவனாகவும் அகமல்லாததை அந்த அறிவின் புலமாகவும் அறிய இது முக்கிய கருதுகோளாக இருக்கிறது.

தன்முனைப்பு குறித்தும், அதன் எல்லை பற்றியும் பேசும் இருத்தலியல் உளவியலாளரின் மொழியிலும் இத்தகைய பயன்பாட்டைக் காணலாம். தன்முனைப்பின் எல்லையை விரிக்கலாம், சுருக்கலாம். இங்கமர்ந்தபடி உங்களில் ஒருவரைப் பார்த்து “அவர் நட்பானவர், அவரை எனக்கு பிடிக்கும்” என்றெண்ணுகிறேன். அவரை எனது எல்லைக்குள் எளிதாக சேர்த்துக் கொள்கிறேன். பாதுகாப்பாக உணர்கிறேன். இன்னொருவரைப் பார்த்து ‘அவர் அயலவர்; அவர் என்னைப் பற்றி என்ன எண்ணுகிறார் என்று நானறியேன். நான் என் எல்லையை சற்றே சுருக்கி அவரை வேலிக்கு வெளியே நிறுத்தி வைப்பேன்’ என்றெண்ணுகிறேன். ஆக, தன்முனைப்பின் எல்லை வரையறுக்கப்பட்டதல்ல; அதை நாம் மாற்றிக்கொண்டே இருக்கிறோம். அதை சுருக்கலாம், விரிக்கலாம்.

இந்த தன்முனைப்பின் எல்லை என்பது அறிபவனென்னும் அகத்திற்கும் அறிவுப்புலத்திற்கும் இடையிலான வேறுபாடு போன்றதல்ல. அறிவின் வரம்பிற்குள் வரும் அனைத்துமே புலத்தின் பகுதிதான். அது ஒருபோதும் எனது, பிறிது என்ற கருத்திற்குள் அடங்காது. என் நண்பர், எதிரி, அந்நியமானது, நானறியாதது என அனைத்தும் அதற்குள் அடங்குவது.

ஒன்றன் இருப்பை அதைப் பற்றி ஏதும் அறியாமலேயே நம்மால் கற்பனை செய்ய முடியுமா? Brezhnev-ஐ நானறியேன், Mao Sedong-ஐ நான் கண்டதில்லை என்று சொன்னால் இருவரைப் பற்றிய என் அறியாமையை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்பது பொருள். அதை செய்வதற்கு, அந்த அறியாமையை நான் என் மனதளவில் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆக, அறியாமையும் கூட ‘அறியாமை’ பற்றிய அறிதலே. நான் என் அறிவை மட்டுமே அறிவேன் என்று சொல்வதே தவறு. அறிவு எனும் சொல்லை நான் மேலோட்டமாக பயன்படுத்துகிறேன். ‘நான்’ என்பது அறிவல்லாமல் வேறென்ன? அறிவை அறியும் அறிவு அது; ‘நானறியேன்’ என்று சொல்லும் அறிவு.

நாம் அறிவை தேடும்போதும் கண்டடையும்போதும் அதை தேடுவது யார்?  எங்கிருந்து அறிவு கிடைக்கப் பெறுகிறது? இவையெல்லாம் பெரும் மர்மங்கள். தேடுகையில் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என எண்ணுகிறீர்கள், என்றாலும் ஒரு குறிப்பிட்ட திசையில் தேடுகிறீர்கள். உங்களை ஊக்குவிப்பது யார்? தேடி அடைய வேண்டிய அறிவொன்று உள்ளது என்று எந்த உள்ளுணர்வு உங்களிடம் சொல்கிறது? வாழ்வை வசதியானதாக்கியுள்ள பல்லாயிரம் கண்டுபிடிப்புகளை, தொழில்நுட்பக் கருவிகளை, கலைப்பொருட்களை பாருங்கள். அனைத்துமே எங்கிருந்து தோன்றியவை என்று சொல்ல முடியாது. எல்லாமே அறிவின் படைப்புகள். 

அறிவென்பது இயக்கமற்ற நனவாக, ஒரு விழைவாக, தேடி அடைந்து உணரும் வரை உங்களை அமைய விடாத ஒரு மாற்று விசையாக இருக்கலாம். அறிவென்பது ஒரு பேரார்வம், ஒரு கட்டாயம், ஒரு விடாமுயற்சி. அது அங்கீகாரத்தின் மகிழ்ச்சி. நிறைவு, சாதனை. மொத்த வாழ்வும், அதில் நிகழும் அனைத்தும் அறிவன்றி வேறல்ல.

அறிவு மாறிக்கொண்டே இருப்பது. அதன் இயக்கமின்றி, மாற்றமின்றி ஒரு கணமும் கடந்துபோவதில்லை. மாறும் பொருளென்று ஒன்று இருத்தல் வேண்டும். இந்தப் பொருள் எங்கிருந்தோ புதிதாக வந்துகொண்டிருக்க முடியாது. ஏனெனில், அது ஏற்கனவே முழுமையின் பிரதிநிதியாக இருக்கிறது. புதிதாக தோன்றுவது என்றால் அது எங்கோ, எதிலிருந்தோ தோன்றியது என்றும் வேறெங்கோ வளர்கிறது, விரிகிறது என்றும் பொருள்படும். அது அவ்வாறல்ல.

பொருளில் ஒரு பேணுதலும் உண்டு; உருமாற்றமும் உண்டு என்பது இயற்பியலாளரின் முடிவு . அதன் மொத்த நிறை ஒன்றேதான் என்றாலும் அதற்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். ஒன்று இன்னொன்றாக மாறி அது வேறொன்றாகி அது மீண்டும் முதலில் என்னவாக இருந்ததோ அதுவாக மாறுகிறது.  ஆனாலும் மொத்தத்தில் அது ஒன்றேதான். அந்த மொத்தத்தையே பொருளில் உள்ள பேணுதலாகக் கருதுவர் இந்திய மெய்யியலாளர். மொத்தப் பொருளுக்குள் மாற்றத்திற்கான எண்ணற்ற இயல்கைகள் உறைகின்றன.

இவ்விரு கூறுகளுமே நம் வாழ்வில் எப்போதும் உள்ளவை. நான் விழித்தெழுந்து இன்றைக்கு நாம் தியானிக்கப் போகும் பாடலை தேடி எடுக்க வேண்டும். எழுத்தெண்ணி ஆராய்ந்து அவற்றை சொற்களாக்கி சொற்களை தொடர்களாக ஆக்க வேண்டும். சொற்றொடரின் தர்க்க ஒழுங்கை வைத்து அதை புரிந்துகொள்ள வேண்டும். இவையெல்லாமே அனுபவம் சார்ந்த செயல்பாடுகள்; இவற்றில் எதையுமே நான் தவிர்க்க முடியாது. இங்கு வந்து அமர்கிறேன், உங்களை அடையாளம் கண்டு, நான் இங்கு வந்த காரணத்தை மனதில் கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் இங்கு எதற்காக வந்திருக்கிறீர்கள், என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று உணர்கிறேன். இவையும் எளிய அனுபவம் சார் செயல்களே. எத்துணை உயர்ந்த ஞானம் சார்ந்ததாக இருந்தாலும் செயல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. 

நான் உங்களிடம் சொல்வது பொருள்பொதிந்ததாக இருக்க வேண்டும்; நீங்கள் அதைக் கேட்டு அதில் பொருள் காண வேண்டும். இப்படியாக, நாம் அனைவரும் எப்போதும் செயலில் ஈடுபட்டபடியே இருக்கிறோம். அனைத்துச் செயல்பாடுகளும் ஒரு நனவால் நிகழ்கின்றன. 

நமது கவனம் தனித்ததிலிருந்து பொதுவிற்கும் பொதுவிலிருந்து தனித்ததற்கும் மாறிக்கொண்டே இருக்கிறது. இங்கே பொதுக்கூறு சமம்  என்றும் தனித்த கூறு அன்யம் என்றும் கூறப்படுகிறது. 

நாம் தனித்ததில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருந்துகொண்டே இருக்கிறது. ‘நான்’ என்பதை சமம் என்றும் ‘நீ’ என்பத அன்யம் என்றும் கொண்டு நாம் பிளவுபடுகிறோம். கைகட்டி மௌனமாக அமர்ந்து, விந்தை உணர்வுகளை பகிர்ந்துகொள்வது இன்னொரு இயல்கை. அப்படி அமர்ந்தால் நாம் ‘பல(ர்)’ என்பதை மறக்கிறோம். ‘நான்’ என்பதையும் மறக்கையில் பேரமைதி எழுகிறது. அந்தப் பெருமகிழ்வு வெறும் மனஎழுச்சி மட்டுமல்ல. அனைத்தும் ஒன்றென ஆகும் மகிழ்வு அது. சில கணங்களாவது பிறிதென ஒன்றில்லாமல் ஆவது நமக்கு நிச்சயமாக தேவைப்படும் ஒன்று. 

பைபிளை படிக்கையில், யேசு கூட்டத்தை விட்டு விலகி நடந்து சென்றுகொண்டே இருப்பதை காண்கிறோம். மலையை நோக்கி செல்கிறார், கலீலியின் கரையில் நடக்கிறார். கடலுடனும், வானுடனும், மேகங்களுடனும் ஒன்றுகலக்கிறார். இயற்கையுடன் கலந்து அவரே இல்லாமலாகிறார். அமைதியான நிலவொளி தவழும் இரவில், மெல்லிய வெள்ளி நுரைகளுடன் அலையொலிக்கும் ஆழியின் அருகே பாழ் வெளியை நோக்கியபடி அவற்றோடு ஒன்றெனக் கலந்தவராக நிற்கும் தனியனை நாம் கற்பனை செய்ய முடிகிறது. அந்த நினைவே பேரமைதியை உண்டாக்குகிறது. பின்னர் அவரை மீண்டும் கூட்டத்தில் காண்கிறோம். பசித்தோருக்கு உணவளிக்க வேண்டியிருக்கிறது. நோயுற்றவரை குணப்படுத்த வேண்டும். பார்வையிழந்தவர் காண விழைகிறார், தொழுநோயாளி நலம்பெற விரும்புகிறார், கறைபட்ட பெண்மணி தூய்மையடைய எண்ணுகிறார். தேவைகளும் அரசியல் முரண்களும் கண்முன் உள்ளன. ஒருவர் முகத்தில் உமிழ்கிறார், ஒருவர் குற்றம் சாட்டுகிறார். விசாரணை நடக்கிறது, எடைமிகுந்த சிலுவை சுமத்தப்படுகிறது, ஆணிகள் அறையப்பட்டு குருதி பெருகுகிறது.

இவை அனைத்தும் ஒற்றை மனிதனின் வாழ்வில் நிகழ்கிறது! திரும்பிப் பார்த்தால் அனைத்தும் ஒரு  கனவில் நிகழ்ந்தவை போல காணாமல் போகின்றன. இவை அனைத்தும் புலன்களால் உணரத்தக்கவைதான் என்றாலும் அந்த இயல்நிகழ்வுக்குள்ளேயே ஒரு தன்-உண்மை உள்ளது, அது மெய்மையின் தொடர்பறா உயிர்த்துடிப்பு. மெய்மையற்ற நிழல்களை உருவாக்குவது மெய்யான ஒளியே. உங்களால் தியானத்தில் அமைய முடியும் என்றால் இவ்வுலக வாழ்விலேயே கடந்தநிலையை உங்களால் உணரமுடியும்.

உதாரணத்திற்கு, உங்களுடன் ஒருவர் தீவிரமாக வாதாடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது எந்தவிதமான செய்ல்பாடாகவும் இருக்கலாம். மோதலாகவோ, இனிய உறவாடலாகவோ இருக்கலாம். தேவை என்று நீங்கள் கருதும் அந்தச் சூழலின் அனுபவ மெய்மை உங்களுக்கு தெளிவாகத் தெரிந்திருக்கிறது. உங்களை அந்த ஆடலுக்கு ஒப்பளிக்கிறீர்கள். ஞானம் இல்லாத ஒருவர் சண்டையிடும்போதும், நேர்மறை செயல்பாட்டிலும் தன்னை மறக்கிறார். ஆனால் தியானத்தில் தன்னை நிலைநிறுத்தியவருக்கோ ஆடலின் களமும் மொத்தச் சூழலும் தெளிவாகிறது. இதனால் அகத்தில் விலக்கமும் புறத்தில் சூழலின் தேவைக்கேற்ற செயல்பாடும் நிகழ்கிறது. என்றாலும் அங்கே இரட்டை வேடம் இல்லை. உங்கள் ஆடலில் எந்த பாவனைகளும் இருப்பதில்லை. அந்தச் சூழலில் தன்னை இழக்கும் ஒருவருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு எதுவும் உங்களுக்கு நேர்வதில்லை. 

சமம் என்பதும் அன்யம் என்பதும் இவ்வாறு ஒத்திசைகையில் அகத்தில் பேரமைதி ஏற்பட்டு உங்கள் வாழ்வே அமைதியுறுகிறது. வாழ்வு இவ்வாறு ஒருங்கிணைந்த ஞானத்தால் பாதுகாக்கப்படும் என்றால் உங்களது ஆற்றல் எதுவும் வீணாவதில்லை. அத்தனையும் பாதுக்காக்கப்படுகிறது. இந்த நிலையில் நீங்கள் ஏற்கனவே அமைந்து விட்டீர்கள் என்றால் மட்டுமே இது உங்களுக்கு புரியக்கூடும். நீச்சயமாக அந்த நிலையை நீங்கள் அடைய முடியும். நீங்கள் எதுவாக இருந்தாலும், வாழ்வின் அத்தனை ஆடல்களுடன் இருந்தாலும் அதிலிருந்து விலகியும் உங்களால் இருக்க முடியும். உங்களின் ஆழத்தில் அந்தத் தனிமை உள்ளது. அது உங்களுடைய தனிப்பட்ட தனிமை அல்ல. பிரபஞ்சத்தின் தனிமை அது. இறையின் தனிமை, சாரத்தின் தனிமை, மெய்மையின் தனிமை. அதற்கு எதுவும் நிகழ்வதில்லை. அந்தத் தனிமையை தக்கவைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் பலவாக இருக்க முடியும்.

தொடுகையில் மென்மையும், தொடுகையின் அக்கறையும் இருக்கின்றன. நீங்கள் தொடுவதும் இல்லை. ஏனென்றால் தொடுகையும் தொடப்படுவதும் ஒன்றே என நீங்கள் அறிவீர்கள். தொடுவதற்கான தேவையே நீங்கள் ஒன்றே என உங்களுக்கு உறுதியளிக்கிறது. நீங்கள் முத்தமிடுகையில், அணைத்துக் கொள்கையில் ‘எது நம்மை இரண்டென ஆக்கியது?’ என்ற ஏக்கமே உங்களை இயக்குகிறது. நாம் இரண்டல்ல, ஒன்றே. புலன்களின் இயக்கமும் மாறிக்கொண்டே இருக்கும் அன்றாடச் சூழல்களும் உங்களது மெய்யான இருப்பை துண்டாடுகின்றன போலும். இருத்தல் என்பது தன்னை மீண்டும் மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். அது பேரன்பாக, பெரும் பகிர்வாக, விந்தை உணர்வாக, அமைதலாக இயங்குகிறது.

ஒரு மாலை பல மலர்களாலும் ஒரு நூலாலும் தொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மலரையும் நாம் தனித்தனியாக ரசிக்கலாம். அதன் வண்ணத்தை, மணத்தை, மிருதுத்தன்மையை கவனித்து மாலையை மறக்கலாம். முழு மாலையை கவனித்தால் மலர்களெல்லாம் ஒன்றிணைந்து தமது தனித்தன்மையை இழக்கலாம். அல்லாமல் அதை மலர்களாகவும் மாலையாகவும் கருதலாம்; இதுவே ஒருங்கிணைந்த பார்வை, தரிசனம்.

நாராயண குரு நம்மை தனித்ததிலிருந்து தப்பித்து பொதுவை நோக்கி ஓடச்சொல்லவில்லை. இருமையிலிருந்து கடந்துசென்று இரண்டு ஆடல்களையும் ஏற்று வாழ்க என்கிறார். அப்போதுதான் நம் இருத்தலில் வாழ்வோம். ஆதலின் ஒவ்வொரு சிறு கூறையும் கடந்துசெல்ல அனுமதிப்போம். முந்தைய அழகிய பாடல் ஒன்றில், அது என்ன என்று அறிவதற்கு அறிவே இவையெல்லாமாக ஆகிறது என்றார் குரு. நாம் இதையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறோம். ஒரே வகை உணவை தினம் தினம் உண்பது நமக்கு உவப்பாக இருப்பதில்லை. மாவு, சர்க்கரை, அரிசி, காய்கறி என மூலப்பொருட்கள் ஒன்றுதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் புதிய விகிதத்தில் அவற்றைக் கலந்து புதுப்புது விதத்தில் சமைத்து பரிமாறுகிறோம். அறிவின் புதிய கூறை ஒரு குறிப்பிட்ட வெளிப்பாடு வழியாக கண்டடைகிறோம். அது பொதுவின் ஒரு பகுதியாக இருக்கிறது, பொதுவானது நாம் அனுபவித்து மகிழும் தனித்ததில் இருக்கிறது.

சிலர் இதை அவ்வாறு புரிந்துகொண்டாலும், வாழ்வை விட்டு விலகி ஓடுவதை நாம் பரிந்துரைப்பதில்லை. வாழ்வின் சொகுசுகள் எதுவும் அமைதலுக்குத் தடை என்று நாம் சொல்வதில்லை. எதையும் விலக்க வேண்டியதில்லை. உண்மையில், ஒவ்வொன்றையும் புதிய மனப்பாங்குடன் நோக்க வேண்டும். எல்லாம் ஒன்றே என்ற பழைய மனப்பாங்கே தேவைப்படும் மனப்பாங்கு. பெருமகிழ்வுடன் வாழும் அழகிய வளமிக்க வாழ்வே அது.

பாடல் 37

Leave a comment