ஒரு பதினாயிரம் ஆதிதேயர் ஒன்னாய்
வருவது போலே வரும் விவேகவிருத்தி
அறிவினெ மூடும் அநித்ய மாயயாம் ஈ
இருளினெ ஈர்ன்னெழும் ஆதிசூர்யன் அத்ரே
(ஆத்மோபதேச சதகம் – பாடல் 35)
பதினாயிரம் கதிரவர் ஒன்றாய்
எழுவது போல் தோன்றும் பகுத்தறிவே
அறிவை மறைக்கும் நிலையில்லா மாயையாம் இந்த
இருளினைக் கிழித்தெழும் முதற்கதிரவனே
*
நம் ஆர்வத்தைத் தூண்டும் பொருட்களால் நிறைந்தது புற உலகு. நமது ஐம்புலன்களும் அப்பொருட்களின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டபடியே உள்ளன. ஆனால், எந்தக் கவர்ச்சியும் நிலைத்திருப்பதில்லை. எத்துணை இனிய ஒலியாக இருந்தாலும் அதை மட்டுமே விடாமல் கேட்டுக்கொண்டிருக்க நேர்ந்தால் சலிப்பே மேலிடும். அதை விட்டு வேறொன்றை நாடச் செய்யும். மகிழ்வூட்டும் தொடுகையே கூட வெகுநேரம் நீடித்தால் எரிச்சல் உண்டாகக் கூடும். மற்ற புலன்களுக்கும் இது பொருந்தும்.
ஒவ்வொரு புலனும் கணநேர ஆர்வத்தை நம் மனதில் எழச் செய்கிறது. மனம் மகிழ்கிறது. அதே புலன் வலிமிகு அனுபவத்தை ஏற்படுத்தி மனதை கொதிக்கச் செய்கிறது. ஆக, புற உலகே அனைத்து வலிகளுக்கும் இன்பங்களுக்கும் மூலமாக அமைகிறது. வலியும் இன்பமும் ஒரே போல் தோன்றி மறைபவை. பகவத் கீதையில், அர்ஜுனனிடம் “தோன்றி மறைபவை குறித்து ஏன் கவலை கொள்கிறாய்? வலியும் இன்பமும் கணத்தில் மாறுபவை அல்லவா?” என்கிறார் கிருஷ்ணன்.
புலன்கள் புற உலகுடன் தம்மை தொடர்புறுத்திக் கொள்கின்றன. நம் மனம் வழியாக நாம் தொடர்புறுத்திக்கொள்ளும் அக உலகொன்றும் உள்ளது. அங்கே நாம் புலன்கள் வழி அறியும் பொருட்களின் ஆவியுருவை தோற்றுவித்துக்கொண்டு கொடுங்கனவுகளை அனுபவிக்கிறோம். கற்பனைகள் கொண்டு ஒரு மாய சுவர்க்கத்தை உருவாக்கி அதில் திளைக்கிறோம். அதே போல் நமது அச்சங்கள் உருப்பெற்று நம்மை மனம்பிறழச் செய்கின்றன. இந்த அக உலகும் புற உலகைப் போலவே நிலையில்லாத ஒன்றுதான்.
கணநேர இன்ப துன்பங்களால் ஆன புற உலகுக்கும், கற்பனையும் கொடுங்கனவும் கொண்ட அக உலகுக்கும் இடையே ஊசலாடுகிறது நம் வாழ்வு. புற உலகை உணரவும், அக உலகை கற்பனை செய்யவும் நனவு தேவைப்படுகிறது. அந்த நனவுதான் – அதே அறிவுதான் – புற/அக உலகின் திரையின் மீது தன் ஒளியை, சிந்தனையை, பொருளை, விழுமியத்தை வீழ்த்துகிறது. அதுவே எல்லையில்லா அறிவாகவும், கூறப்படாத விழுமியங்கள் உறையும் ஆழமாகவும், ஏற்றப்படாமலும் ஒரு போதும் அணைக்கப்படாமலும் இருக்கப்போகும் விளக்காகவும் நமக்கு காட்டப்பட்டது. அது ஒளிர்ந்து கொண்டிருக்கிறது, பார்த்துக்கொண்டும் இருக்கிறது. மாறிக்கொண்டே இருக்கும் மனநிலைகளுக்குப் பின்னால் இருக்கும் மாறாத சாரம் இதுவே.
ஓம் எனும் மறையை அறிந்தவருக்கு இது தெரியும். அவர் அதுவாகவே இருக்கிறார். அதுவே புலன்நுகர் பறவைகளை வீழ்த்தும், அனைத்தையும் செங்குத்தாக்கம் செய்யும் (all-verticalising knowledge) அறிவாகக் கருதப்படுகிறது. வாழ்வெனும் மரத்தின் கீழமர்ந்த ‘நோக்கிநிற்கும்’ நனவாக விளக்கப்படுகிறது. பல்வகை அடையாளங்கள் கொண்ட உலகில் ஒருமையைக் கொணரும் ஒளி இது. இவ்வொளிக்கு அடியோ முடியோ இல்லை. முடிவற்றது இது. இது ஒளிரும்போது இவ்வுலகே புதுமலர்களால் தொடுக்கப்பட்ட மாலைபோல இனிதாகிறது. அதற்கு தன்னை ஒப்பளிக்கையில் இங்கு-அங்கு, வான்-வெளி-பூமி என அனைத்து வேற்றுமைகளையும் துறக்கிறது புற உலகு. அக உலகிலோ, அறிபவர்-அறிவு-அறியப்படுவது என எந்தப் பாகுபாடும் இல்லாமலாகிறது.
சத்வ, ரஜோ, தமோ குணங்களைக் கடந்தது தூய அறிவு. பொருளற்ற நம் வாழ்வெனும் பாலைநிலத்தை பெருவிழுமியங்கள் நிறைந்த ஆழியாக மாற்றும் ஒலி வெள்ளமாகிறது அது. அவ்வாழியில் ஒவ்வொரு மணல் துகளும் விலைமதிப்பில்லா முத்தென ஆகிறது. அதற்கு தன்னை ஒப்பளிக்கும் ஒருவர் முழுமுதலின் அமுதை பருகுகிறார். அவருக்கு, பத்தாயிரம் வருடங்கள் ஒரு கணம் மட்டுமே.
அறிவுக்கெல்லாம் அறிவான, ஒளிகளுக்கெல்லாம் ஒளியான இதுவே இங்கு பகுத்தறிவு (விவேகவிருத்தி) எனப்படுகிறது. சங்கரரின் விவேகசூடாமணி மெய்யையும் மெய்யற்றதையும், அகத்தையும் அகமல்லாததையும், மாறிக்கொண்டே இருப்பதையும் மாறாததையும் வேறுபடுத்தி அறிவதன் இன்றியமையாமையைப் பேசுவதில் தொடங்குகிறது. புற உலகுக்கும் அக உலகுக்கும் இடையே அலைக்கழியும் நமக்கு ஒற்றை மெய்மையான இந்த மையப்புள்ளி பிடிகிடைப்பதே இல்லை.
ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை, பல்லாயிரம் பேரில் ஒருவர் தனது மெய்மையை கண்டடைகிறார். அதன் பின் தன்னொளியில் விழித்தெழ அவருக்கு கணத்தில் ஒரு பகுதி கூட தேவைப்படுவதில்லை. இளவரசனான சித்தார்த்தன் உலகின் துயர்களைக் கண்டு, அவனது அரண்மனையில் அவனுக்குக் கிடைத்த இன்பங்களில் இருந்த தீமையைக் கண்டு அனைத்தையும் உதறி ஞானம் தேடிச் சென்றான். குருமாரைத் தேடி நாடு நாடாகத் திரிந்தான். எங்கு திரிந்தும் தேடியும் புலன்வேட்கை துறந்தும் அவனால் கண்டடைய முடியவில்லை. இறுதியில், நம்பிக்கை முழுதும் இழந்து வாழ்வைத் துறக்க எண்ணி ஒரு மரத்தினடியில் அமர்ந்தான். மெய்மையை அறிந்தால் அன்றி எழுவதில்லை என்று உறுதி கொண்டான். ஒரு நாள், பல்லாயிரம் சூரியர் ஒன்றாக எழுந்தது போல் மின்னலென ஒளியை அறிந்தான். விழிப்படைந்தவனென, அருளப்பட்டவனென, புத்தனென ஆனான். அது நிகழ்வது வரை, அவன் பிறந்த கணம் முதல் அவனை விட்டு கணமும் அகலாத, அவனுள்ளேயே இருந்த அறிவு அவனுக்கு மறையெனவே இருந்தது. உண்மையில், அவனது தேடலைத் தூண்டி, அறிதலின் தேட்டத்தில் அவனைச் செலுத்தி, இறுதியில் தன்னை வெளிப்படுத்தியதே அவ்வொளிதான். அவனது ஐயங்கள் அனைத்தும் சடுதியில் மறைந்தன; அவன் மெய்மையைக் கண்டடைந்தான். அதன் அதிர்வு இன்றுவரை உலகுக்கு ஒரு ஆறுதலென, மாறா அறமென, பெரு மெய்மையென தொடர்ந்து வருகிறது.
முன்னொரு காலத்தில், கலக்கமுற்றிருந்த இளைஞன் ஒருவன் ஜோர்டான் நதிக் கரையில் ஞானஸ்நானம் செய்வித்துக்கொண்டிருந்த மனிதர்பால் ஈர்க்கப்பட்டான். நசரத்தைச் சேர்ந்த யேசு எனப்பட்ட அவனுக்கு அவர் ஞானஸ்நானம் செய்வித்தபோது துறக்கத்தின் ஒளி புலனாகியது. அவனுள் இருந்த என்றுமுள ஆவி ஆகப்பெரும் மெய்மையை அவனுக்கு காட்டியது. அவ்வொளியைப் பெற்ற அவன் உலகின் ஒளியானான். இவையெல்லாம் நிகழ்ந்தது ஒரு கணத்தின் ஒரு சிறு பகுதியில். இன்றும் பல்லாயிரம் இதயங்களில் அன்பெனும் ஒளியை அவன் பாய்ச்சிக்கொண்டிருக்கிறான்.
சுட்டெரிக்கும் பாலையான அரேபியாவிலிருந்த ஒருவன் வெப்பம் தாளாது இருட்குகை ஒன்றின் தண்மையில் தஞ்சமைடைந்தான். அங்கு மோனத்தில் ஆழ்ந்தான். உறக்கம் அவனை மூடியது. தரிசனமொன்று அவனை விழிக்கச் செய்தது. ஒளிரும் முகமொன்று அவனெதிரே தோன்றி அவனை படிக்கச் சொன்னது. தான் படிப்பறிவில்லாதவன் என்று அதனிடம் இறைஞ்ச எண்ணினான். அதற்குள் ஒரு மாயமென எழுத்துலகம் அவன் முன் விரிந்தது. எழுதப்படாத நூல்களை, ஆட்டுத்தோலில் (parchment) பதிவு செய்யப்படாதவற்றை அவன் வாசித்தான்.
அப்படியாக புனித குரான் முகம்மதை வந்தடைந்தது. மெய்மையின், அன்பின், அமைதியின் இறைத்தூதுவனானான் அவன். அவன் பள்ளிக்குச் செல்லவில்லை, எவரும் அவனுக்கு கற்பிக்கவில்லை. அப்படியிருக்க அது எப்படி அவனை வந்தடைந்தது? ஞானத்தின் ஊற்று அவனுள் எப்போதும் இருந்தது. எதிர்பாரா கணமொன்றில் அது பொங்கி எழுந்தது. ஒளியால் நிரம்பியது. பெருந்தீயென அது அவனிடமிருந்து பரவியது.
குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் அர்ஜுனன் செய்வதறியாது நின்றிருந்தான். தன் வாழ்வு குறித்து, தன்னறம் குறித்து குழப்பமடைந்திருந்தான். அந்நிலையில் பிரபஞ்ச தரிசனமொன்றை அடைந்தான். புற உலகும் அக உலகும் விழுமியங்களின் கோவையானது. தன் நண்பனாகவும் வாழ்நாள் துணையாகவும் தான் கருதியிருந்த கிருஷ்ணன் எனும் ஒற்றைப் பெரும் மூலத்திலிருந்தே அனைத்தும் தோன்றுவதை அவன் கண்டான்.
அதைப்போலவே, இந்த அறிவு நமது வாழ்நாள் துணை. மொத்த ப்ரபஞ்சமும் நம் அகமெனும் மெய்மையில் மறைந்திருப்பதை அறியாமல் நாம் அதை நாள் முழுதும் சுமந்தலைகிறோம், இரவில் அதனுடனேயே உறங்கிப் போகிறோம். நாம் யாராக இருந்தாலும், அவ்வொளி நம்மை வந்தடையும் விதத்தில் எந்த வேறுபாடும் இல்லை. இறுதியில் நாம் அதை கண்டடைகையில் அனைத்தும் ஒரு மின்னலென நிகழ்ந்துவிடுகிறது.
அது அன்னையின் அரவணைப்பென ஶ்ரீ ராமகிருஷ்ணரை வந்தடைந்தது. ஒளியூட்டுவதாய், புதிய மறைகளை வெளிப்படுத்துவதாய் அமைந்தது. அவருக்கான பாதையை மென்மையாக காட்டித் தந்தது. எப்படி நடந்துகொள்ள வேண்டும், தன்னை புற உலகுடன் எவ்வாறு தொடர்புறுத்திக்கொள்ள வேண்டும் என்று கற்பித்தது. அனைத்துக் கேள்விகளுக்கும் விடையாய், அத்தனை சிக்கல்களுக்குமான தீர்வாய் அவரது நாவில் அது எப்போதும் இருந்தது. அது அவரை எப்படி வந்தடைந்தது? எவரும் அறியோம். மிக எளிய மனிதர் அவர். படிப்பறிவில்லாதவர், எந்த குருவிடமும் எதையும் பயிலாதவர். இறையருள் அவருக்குக் கிட்டியபோது அனைத்து சமயங்களின் சாரத்தையும் அவர் தன்னுள் இணைத்துக்கொண்டார். மேலை ஞானமும் கீழை ஞானமும் ஓருங்கே கைவரப்பெற்ற ஒரு ஞானி அடையக்கூடிய தரிசனமே அவர் பெற்றது.
நாராயண குரு இப்பாடலில், அறிவு கைவரப் பெறுதல் பத்தாயிரம் ஆதித்யர்கள் ஒருங்கே எழுவதைப் போன்றது என்கிறார். அப் பேரொளி முதலும் முடிவுமற்ற மாயையின் ஆடலை நிறுத்துவது. எப்போதும் அரைக்கணப் பெருக்கத்தில் வாழ்வது. அரைக் கணம், நினைவென்ற வடிவில் ஒற்றைக் கணமாக மாற்றப்படுகிறது. நீங்கள் அறியாத பல தலைமுறை மானுடரின் நினைவு வழியாக பின்னோக்கிச் சென்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை உங்களால் எண்ணிப் பார்க்க முடியும் என்பது மிக விநோதமான ஒன்று.
அறிவியலாளரே கூட பெருவெடிப்பு குறித்தும், பதினைந்து பில்லியன் ஆண்டுகளாக நிகழ்ந்தவை பற்றியும் ‘பகுத்தறிவு’டன் பேசுகின்றனர். நமது மனம் ஒரு நூல்கண்டென அவிழ்ந்து எங்கோ மற்றொரு முனையில் உலகின் தொடக்கத்தையே கண்டுவிடமுடியும் எனத்தோன்றுகிறது. அல்லது, நமது மனதை எதிர்காலத்திற்குள் நீட்டி, இப்பிரபஞ்சத்திற்கு என்ன நேரும் என்பதையும், விண்ணுலக மெழுகுவர்த்திபோல் மெல்ல எரிந்து கொண்டிருக்கும் சூரியன் மறைந்து, கதிரவனோ, விண்மீன்களோ இல்லாத ஒரு நாளையும் கண்டுவிடக்கூடும். இக்கற்பனைகளெல்லாம், இக்கணம் அரை நொடியில் இயலக்கூடுவன.
அழிவிலாத நமது கற்பனை உலகு ஒரு அரைக்கணத்தில் இருந்தபடி இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்தக் கற்பனையை நம்மில் எழச்செய்த அந்த ஒளியே நம்மை விழித்தெழச் செய்து அக்கற்பனையை அழிக்கவும் கூடும். அவ்வாறு இவ்வொளியைக் கண்டடைந்து தம் வாழ்வின் இடர்களிலிருந்து மீள்வோர், மொத்த உலகுக்கும் மெய்மையைக் காட்டும் ஒளியாக மாறுகின்றனர்.
இது நம்மாலும் அடையக்கூடியதே. மிகச் சிறு பொழுது நம்மால் புற உலகிலிருந்தும் அக உலகிலிருந்தும் விலகி மூலத்தை அறிய முடியும் என்றால் அகமும் புறமும் அவ்வொரு ஒளியால் நிறைந்துவிடும். அது மட்டுமே நிகழவேண்டியது. அது நிகழுமென்றால், புத்தன் விழிப்படைந்ததற்கும், யேசு புனித ஆவியை உணர்ந்ததற்கும், முகம்மதின் கண்டடைதலுக்கும், அர்ஜுனன் ப்ரபஞ்ச் தரிசனம் பெற்றதற்கும், ராமகிருஷ்ணர் ஒருங்கிணைந்த தரிசனத்தை அடைந்ததற்கும், நாராயண குரு அடைந்த ஒருமைப் புரிதலுக்கும் காரணமான அருளை நாமும் பெறுவோம். அதுவே நமது மரபு. நாமே அது. அதை நம் அன்றாட வாழ்விலும் பகிர்ந்து கொள்ளலாம். ஓம்.