ஒருமதமாகுவதின்னுரப்பதெல்லா
வருமிது வாதிகளாருமோர்க்குவீல;
பரமதவாதமொழிஞ்ஞ பண்டிதன்மா
ரறியுமிதின்றெ ரஹஸ்யமிங்கஶேஷம்
(ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 47)
எல்லோரும் சொல்வது ஒருமதமாதலே
தம்மதம்பரப்புவோர் இதை எண்ணுவதில்லையே
பிறர்மதம் மறுக்காத அறிஞர் இம்மறையை
அறிவர் குறைவொன்றுமின்றியே
*
இப்பாடலின் முதன்மைச் சொல் ரகசியம்-மறை என்பது. அறிவர் அறிந்ததும், மதம் பரப்புவோர் மறப்பதுமான மந்தணம் ஒன்றுள்ளது என்கிறார் குரு. பதஞ்சலியின் யோக சூத்திரம் அகமல்லாததை அகமென எண்ணுவதே அறியாமை என்கிறது. இது பலவகைகளில் வெளிப்படலாம்: மனநலம் பிறழலாம்; இன்பநாட்டத்தில் தீவிரம் ஏற்படலாம்; உங்களை ஏற்காதவர் மீது, போட்டிச் சூழலில் உங்களது நோக்கங்களுக்கு இடையூறாக இருப்பவர் மீது வெறுப்பு ஏற்படலாம்; உளவியல் அழுத்தங்களுக்கு ஆளாகலாம்.
கருத்தியல் சார்ந்த வெறிகொண்டவரிடம் இதையெல்லாம் காணலாம். அது சமயம் சார்ந்ததாக இருக்கலாம், அரசியல் தொடர்பானதாக இருக்கலாம், தனிமனப்போக்காக இருக்கலாம் அல்லது வெறும் பித்தாக இருக்கலாம். வெறுப்பு உங்களுள் நுழைகையில் ஒரு தீய அரக்கனின் பிடிக்குள் நீங்கள் சிக்கியவர் போலாகிறீர்கள். பிறரது பார்வைக் கோணம் உங்களுக்கு தெரியாமல் போகும் அளவுக்கு உங்களுக்குள் பெரும் மனத்தடை ஏற்படுகிறது. ஒற்றை நிலைப்பாடு ஒன்றை பற்றிக்கொள்கிறீர்கள். அதிலிருந்து சிறிது விலகி நின்று வேறொரு இயல்கை இருக்கக்கூடும் என்பதை உங்களால் பார்க்க முடிவதில்லை.
எனது இளமைப் பருவத்தில் நான் மகாத்மா காந்தியை சந்தித்தேன். நவ இந்தியாவை வடிவமைத்தவர் அவர்; பெரும் புனிதராக மதிக்கப்பட்டவர். கிறிஸ்துவின் அஹிம்சையை முழுதாக நம்பியவர். அமைதியெனும் மதமாக இந்தியாவை ஆக்கவேண்டும் என்று கற்பித்தவர். ஒருவரையொருவர் அன்பு வழியே வெல்லவேண்டும் என்று கூறியவர்.
அது பிரிட்டன் படைவலிமை கொண்டு இந்தியாவை ஆண்ட காலம். துப்பாக்கியும் பீரங்கியும் படைக்கலமெனக் கொண்ட பிரிட்டன் படைகளை இந்தியர்கள் அஹிம்சையையும் அமைதியையும் போற்றி முழங்கியபடி எதிர்த்துநின்றனர். இளைஞனாக இருந்த எனக்கு இது மடத்தனமாகத் தோன்றியது. மார்க்ஸிய லெனினிய குழுக்களால் ஏறத்தாழ மூளைச்சலவை செய்யப்பட்டிருந்தவன் நான். ரஷ்யாவில் நிகழ்ந்தது போன்ற புரட்சி ஒன்றுதான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்று நம்பினேன். சுரண்டுவோர்-சுரண்டப்படுவோர் என, உடையோர்-இல்லாதோர் என மானுடத்தை இரண்டு வர்க்கங்களாக பிரித்துவிடலாம் என்று நம்பவைக்கப்பட்டிருந்தேன். ஆனாலும், எனது தந்தை சுரண்டப்பட்டவரா அல்லது சுரண்டியவரா என்பதை என்னால் முடிவுசெய்ய முடியவில்லை.
இத்தகைய கற்பனையான வர்க்கப் பிரிவும் வர்க்கப் போராட்டமும் மிக நியாயமானவையாகத் தோன்றின. மகாத்மா காந்தி கொஞ்சம் மார்க்ஸை படித்து அவரது தத்துவத்தை புரிந்துகொண்டால் இந்தியாவை காப்பாற்றி விடலாம் என்று எனக்குத் தோன்றியது. காந்தி இங்கிலாந்தில் வாழ்ந்திருக்கிறார், மார்க்ஸையும் லெனினையும் அவர் படித்திருக்கலாம், புரட்சிபற்றி அவர் அறிந்திருந்தார் என்பதெல்லாம் எனக்கு தெரிந்திருக்கவில்லை. முட்டாள் இளைஞனாய் இருந்தாலும் கொள்கைவெறி ஏற்றப்பட்டிருந்தேன். எப்படியோ அந்தப் புனிதரின் அகத்தளத்தை அடைந்து வர்க்கப் போராட்டம் குறித்து அவருக்கு போதனை செய்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தேன்.
அந்த வாய்ப்பு கிடைத்தபோது மூச்சுவிடாமல் எனது பிரசங்கத்தை நிகழ்த்தினேன். வர்க்கப்போராட்டம் என்பது என்ன, அஹிம்சை எப்படி பயனற்ற ஒன்று என்பதையெல்லாம் அவருக்கு எடுத்துக்கூறினேன். அவர் அவ்வளவு கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது எனக்கு இன்றும் பெரும் வியப்பை தரக்கூடியது. நான் எனது முடிவை எட்டியபோது, அவர் அமைதியாக இருந்தார்.
‘மனமாரச் சொல்கிறாயா?’ என்று கேட்டார். அது எனக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. நான் அதை நம்பவில்லையென்றால் இவ்வளவு மெனக்கெட்டு அவருக்கு என் செய்தியை சொல்ல முயன்றிருப்பேனா? நான் மனதார அதை நம்புகிறேன் என்று உரத்துக் கூறினேன்.
‘உறுதியோடுதான் சொல்கிறாயா?’ என்று கேட்டார்.
‘நிச்சயமாக’
‘நான் சொல்வதில் எனக்கு உறுதிப்பாடு இல்லை என்று நினைக்கிறாயா?’
அதை நான் யோசித்திருக்கவில்லை. ‘ஆமாம். நீங்கள் அதை நம்பவே செய்வீர்கள்’ என்றேன்.
‘நான் நேர்மையோடிருக்கிறேனா?’
‘இருக்கலாம்’
‘நீ சொல்வது நான் சொல்வதற்கு முற்றிலும் முரணானது என்பது உனக்கு தெரிகிறதா?’
‘ஆமாம்’
‘ஒன்றுக்கொன்று முரண்பட்ட பார்வைகளுடன் உள்ள இருவருமே உறுதிப்பாடும் நேர்மையும் உள்ளவர்களாக இருக்க முடியும் என்பது உனக்கு தெரியவில்லையா?’
‘தெரிகிறது’
‘நீ நிற்கும் இடத்தில் நின்று என்னை பார்க்கச் சொல்கிறாய். நான் நிற்குமிடத்தில் நின்று நீ பார்க்கும் சாத்தியத்தை எண்ணிப்பார்த்திருக்கிறாயா? உனது கோணத்திலிருந்து பார்த்தால் நீ பார்ப்பது எனக்கு தெரியும். நான் அதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய். அதையே நீ என் கோணத்திலிருந்து பார் என்று அழைத்தால், அதை செய்ய நீ தயாராக இருக்கிறாயா?’
நிச்சயமாக நான் அதற்கு தயாராக இருக்கவில்லை. ஆனால் அதை நான் அன்று சொல்லவில்லை. அவர் தொடர்ந்து சொன்னார், ‘ இளைஞனே, உண்மை என்பது பல முகங்கள் கொண்டது. பல கோணங்களிலிருந்து அதை நீ பார்க்க முடியும். ஒவ்வொரு கோணத்திலிருந்தும் உனக்கு வேறொரு பார்வை கிட்டும். நீ சொல்வதையெல்லாம் நானும் அறிவேன். ஆனால் உனக்கு பொறுமையில்லை.’
அது சரிதான் என்று தோன்றியது. ஒரு வாரமாக அவர் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த நான், அவருக்கு என் போதனையை அளிப்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தேனே ஒழிய, அவர் சொன்ன எதையும் உண்மையில் நான் கேட்டிருக்கவே இல்லை. என்னையே கேட்டுக்கொண்டிருந்தேன், அவர் கூறியவற்றிற்கெல்லாம் எனது மறுப்புகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன்.
இந்த எளிய நிகழ்ச்சி என் வாழ்வின் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அது என்னை முழுமையான மௌனத்தில் ஆழ்த்தியது. அதற்குப்பிறகு, யாரிடம் பேசும்போதும், உண்மையை காண இன்னுமொரு வழி இருக்க முடியும் என்பது எனக்குத் தோன்றும். எனது மேடையை விட்டிறங்கி பிறரது மேடையில் ஏறிநின்று அவர் பார்வையை அறிய முயல்வேன். இவ்வுலகம் எத்துணை அற்புதமானது என்பதும் மானுடம் எவ்வளவு சிறந்த மரபைக் கொண்டது என்பதும் எனக்கு புரிவதற்கு அதுவே தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
முன்முடிவோடு ஒரு நிலைபாட்டை எடுத்துவிட்டீர்கள் என்றால் உலகம் முழுதும் உங்கள் முன்னோர் அள்ளிச்சேர்த்த பெரும்சொத்தை எல்லாம் பொருளற்றதாக ஒதுக்குகிறீர்கள் என்று பொருள். அதன் பின்னர் கிறிஸ்து பொருளிழக்கிறார். முஹம்மதும், புத்தனும், லாவோட்சுவும் பொருளற்றவராகின்றனர். பிற பண்பாடுகளின் அனைத்து பெரும் சிந்தனையாளரையும், கவிஞர்களையும், கலைஞர்களையும் அவர்களது பார்வைகளையும் நீங்கள் பழிக்கவே செய்வீர்கள்.
எகிப்தில் உருவான கலைகளை எல்லாம் கிரேக்கர் உள்வாங்க பல நூற்றாண்டுகள் பிடித்தன. அதிலிருந்து கிரேக்கப் பண்பாடு மெல்ல எழுந்து வந்தது. மானுடர் கைகளில் உருவான மிகச்சிறந்த சிற்பங்களை அவர்கள் தங்களது கடவுளருக்கு விட்டுச்சென்றனர். அவர்களுக்குப் பின்னர் எழுந்த துருக்கியர் ‘உலகில் உள்ள பொருளொன்றைப் போலச் செய்த எந்த உருவமும் அல்லாவிற்கு எதிரானது’ என்று முழங்கினர். சலவைக்கல்லில் பெரும் கலைஞர்கள் வடித்தெடுத்த சிற்பங்களை எல்லாம் உடைத்துத் தள்ளினர். ஒரு மடத்தனமான கருத்தியலின் அடிப்படையில் அந்தப் பண்பாடும், அதன் கலைச் செல்வங்களும், மனித மனத்தின் மிக அழகிய வெளிப்பாடுகளும் அழித்தொழிக்கப்பட்டன.
அவ்வாறு அழிக்கப்பட்டவை உயிரற்ற பொருட்கள்தான். ஆனால் பெருங்கருணையாளனின் பெயரால் எத்தனை தலைகள் உருண்டுள்ளன? இந்தியாவில் எங்காவது ஒரு இஸ்லாமியர் ஒரு பசுவை கொன்றுவிடுகிறார். நமக்கு பால் கொடுக்கும் மிக சாதுவான ஒரு உயிரை கொல்வது கொடுமையானதுதான் அல்லவா? அதனால் மிகவும் எரிச்சலடையும் ஒரு இந்து கோபத்தில் அந்த இஸ்லாமியரை குத்திக் கொன்றுவிடுகிறார். பசுவைவிட மனிதன் உயர்ந்தவனில்லையா? ஒருவன் பசுவை கொன்றான் என்பதற்காக அவனை நீங்கள் கொல்லவேண்டுமா? ‘உயிர் புனிதமானது’ என்பது இந்துவின் வாதம். ஆனால் அது பசுவாக இருந்தால் மட்டும்தான்போலும். மனித உயிர் புனிதமானதில்லையா? இதுவே ‘அஸ்மிதா’- தவறான அடையாளத்திலிருந்து உண்டாகும் இருள் எனப்படுகிறது.
நாராயண குரு சிவகிரி மடத்திற்கு சென்றபோது, அங்கு ஒரு சிறு ஆலயம் இருந்தது. முருகனின் அடையாளமாக ஒரு வேல் அங்கு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒரு பூசகர் பூஜை செய்துவந்தார். அவரை அடுத்து வந்தவர் நாராயண குருவின் பெரும் பக்தர். “குரு இங்கிருக்கையில் ஏன் இந்த மடையர்கள் ஒரு வேலை வழிபடுகிறார்கள்? வேலுக்கு பதிலாக குருவுடன் தொடர்புடைய ஒன்றை வைப்போம்’ என்று சொல்லி வேலை எடுத்தெறிந்துவிட்டு நாராயண குருவின் பழைய காலணிகளை பீடத்தில் வைத்து பூஜை செய்யத்தொடங்கினார். முதலில் இருந்த பூசகர் தான் வழிபட்டுவந்த பொருள் தூக்கியெறியப்பட்டு புதிய ஒன்று வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு மிகவும் எரிச்சல் கொண்டார். குருவிடம் சென்று முறையிட்டார்.
இருவரையும் அழைத்து விசாரித்தார் நாராயண குரு. ‘ஏன் ஒரு வேலை வைத்து வழிபடவேண்டும்? அது என்ன கடவுளா?’
‘இல்லை. அது கடவுள் இல்லை என்று நானறிவேன். அதை பார்க்கையில் நான் கடவுளை நினைக்கிறேன். அது வணங்குதற்குரிய ஒன்றாகிறது.’
‘அப்படியென்றால் அது கடவுளை குறித்து நிற்கிறது அல்லவா?’
‘ஆமாம்’
அடுத்துவந்தவரை நோக்கி ‘நீங்கள் ஏன் அதை எடுத்து எறிந்தீர்கள்?’ என்று கேட்டார்.
‘வேலை கடவுளாக எண்ணுவது மூட நம்பிக்கை.’
‘மரச் செருப்புகளை ஏன் அங்கு வைத்தீர்கள்?’
‘ஏனென்றால் அவை குருவுடையவை.’
‘நான் கடவுளா?’
‘உங்களில் வாழும் கடவுள் இருக்கிறார்’
‘அந்தக் காலணிகள்தான் நானா?’
‘அவற்றை பார்க்கையில் நான் உங்களை எண்ணுகிறேன்’
‘அவரும் அதையேதானே செய்தார்? நான் செருப்பாக மட்டும்தான் மாறமுடியுமா என்ன? என்னால் ஒரு வேலாகவும் ஆக முடியுமே’ என்றார் குரு.
மூடநம்பிக்கை என்பது ஒரு உளநோய். பகவத் கீதை பன்னிரண்டாவது அத்தியாயத்தில் அர்ஜுனன் கேட்கிறான், ‘நான் உன்னை எப்படி வழிபடுவது? வடிவும், பெயரும் அற்ற நனவெல்லை கடந்த மெய்மையாகவா அல்லாது உருவம் கொண்ட ஒன்றாகவா?’ அதற்கு கிருஷ்ணன் ‘மெய்மை என்னும் கொள்கையை அறிதலே தூய புரிதல். வழிகாட்டல் இல்லாதவருக்கு அது எளிதல்ல. ஏதோ ஒரு ஊடகம் அவர்களுக்கு தேவைப்படுகிறது. ஆனால் அது ஒரு குறியீடு மட்டுமே, அதுவே மெய்யல்ல என்பதை மக்கள் மறந்துவிடுகின்றனர்’ என்று பதில் கூறுகிறான். முழுமுதலுக்கு ஒப்புமையாக சொல்லப்படும் எதுவும் ஒருபோதும் முழுமையானதாக இருக்க முடியாது. அடிப்படை மெய்மையின் ஒரு குறிப்பிட்ட கூறை மட்டுமே ஒப்புமைகள் காட்டக்கூடும்.
முழுமுதலுக்கும் அதன் ஒப்புமைக்கும் பெரும் வேறுபாடு உண்டு. அதனால்தான் தாவோ பற்றி பேசப்படுவது தாவோ ஆக முடியாது என்பர். ஆனாலும் அதுகுறித்து பல்லாயிரம் சொற்களால் பேசப்படுகிறது. ஒவ்வொரு சொல்லும் ஒரு பகுதி வெளிப்பாடு என்பதால் அவ்வளவு சொற்களும் தேவைப்படுகின்றன. அது ஒருபோதும் முழுமையான வெளிப்பாடாக இருக்காது. இதுவே ரகசியம்.
பல்வேறு எடுத்துக்காட்டுகள் வழியாக இதை மிக அழகாக விளக்குவார் ஹென்றி பெர்க்ஸன். முழுமுதல் என்பது எத்தனை செப்பு நாணயங்களாலும் ஈடு செய்யமுடியாத ஒரு தங்கநாணயம் என்பார் அவர். அதேபோல், படைப்பூக்கத்தாலும் தரிசனத்தாலும் கவிஞனால் ஒரு மொழியில் எழுதப்படும் கவிதை பல மொழிகளில் பல முறை மொழிபெயர்க்கப்பட்டாலும் கவிதையை முழுமையாக கடத்திவிடமுடியாது என்பார். Notre Dame தேவாலயத்திற்குச் சென்று உள்ளிருந்தும், வெளியே இருந்தும், மேலிருந்தும் பல புகைப்படங்களை எடுத்து அவற்றையெல்லாம் சரியாக பொருந்தும்படி வைத்து இன்னொருவருக்கு காட்டினாலும் அங்கு சென்ற அனுபவத்தை அவருக்கு கடத்திவிட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு படமும் பார்வையின் ஒரு பகுதியே.
உட்பொதிந்த ரகசியத்தை அறிந்த எவரும் முழுமையற்ற பார்வை கொண்ட ஒருவருடன் மோத மாட்டார். ஒருவர் விடாமல், மதம் பரப்புவோர் அனைவரும் குறைவுபட்ட பார்வையையே முன்வைப்பர். பார்வையற்றோர் ஆராயும் யானை பற்றி கூறிய பாடலில் இதை முன்னரே கூறினார் குரு. இங்கு இன்னொரு ரகசியத்தை நாம் அறிய வேண்டும் என்கிறார். ‘நான் சொல்வதை கேளுங்கள்’ என்று நான் சொல்கையில், உங்களிடம் காட்டுவதற்கு என்னிடம் ஒரு துளி மெய் உண்டு என்பது பொருள். அதை உங்களுக்கு காட்டுகையில், நீங்களும் நானும் ஒரு மெய்மையை அறிந்தவராகிறோம். அது நம்மை இணைக்கிறது.
நாராயண குரு அனைத்து மதங்களுக்கான மாநாடு ஒன்றை நடத்தினார். ‘வாதிட்டு வெல்வதல்ல, அறிதலும் அறியத் தருதலுமே’ அதன் நோக்கம். வெல்வதற்கென வாதிடுவீர்கள் என்றால் யாருடன் வாதிடுகிறீர்களோ அவரது பார்வை தவறென்றும் உங்களுடையதே சரி என்றும் முன்னரே முடிவு செய்துவிடுகிறீர்கள். ‘உங்களிடமிருந்து அறிய விரும்புகிறேன்’ என்று ஒருவரிடம் கூறுகையில் அவரது புரிதலை நீங்கள் பெரிதாக மதிக்கிறீர்கள் என்று பொருள். பகிர்தல் மூலம் பிறரோடு உங்களால் ஒன்ற முடியும். அப்போது ‘நான்’ என்பது ‘நாம்’ ஆகிறது. நீங்கள் அறிந்ததை பிறருக்கு அளிக்க விரும்புகையில் உங்களிடம் உள்ள செல்வத்தின் சிறப்பும் அதை இன்னொருவரோடு பகிர்வதன் மதிப்பும் உங்களுக்கு தெரியவருகிறது. நீங்கள் உங்களுடையதை பிறருடன் பகிர பிறரும் தங்களிடம் உள்ளதை உங்களுடன் பகிர்கின்றனர். மிகச்சிறந்த வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள். இதுவே அறிவரின் ரகசியம்.
யோவாவின் சாட்சி ஒருவர் ஆர்வத்துடன் பேச வருகையில் தனது பேச்சினால் நன்மை விளையும்; இருவரும் யோவாவின் நற்சாட்சிகளென ஆகக்கூடும்; இப்போதிருக்கும் இருமை மறைந்து ஒருமை உண்டாகும் என்ற நம்பிக்கையுடன்தான் வருகிறார். அவரது பார்வையை உலகோர் அனைவரும் ஏற்றுக்கொண்டுவிட்டால் ஒரே ஒரு மதம்தான் இருக்கும் என்று எண்ணுகிறார். அதனால் உலகம் சிறப்புறும், நாமெல்லோரும் உடன்பிறந்தோரென, தோழர்களென ஆகிவிடுவோம். அவர் உங்களிடமிருந்து எதையும் ஏற்காவிட்டாலும், இதை நீங்கள் அவரிடமிருந்து ஏற்கலாம்.
வெவ்வேறு நம்பிக்கையாளரின் வாழ்வில் நீங்கள் நுழைந்து பார்க்கையில், அவர்களை ஒரு குறிப்பிட்ட மதத்தின் உறுப்பினராக பார்க்காமல் அவர்கள் மனதில் தோய்ந்து, அவர்களது வாழ்வை வாழ்ந்து அவர்களது தொழுகைகளை செய்து, அதன் ஆன்மாவுக்குள் மெய்யாக நுழைந்தீர்கள் என்றால் அது உங்களை பரவசப்படுத்தும். ஒரே மெய்மையின் வேறொரு பண்பை வேறொரு இனிமையை உங்களுக்கு காட்டும்.
ஶ்ரீ ராமகிருஷ்ணர் தனது மெய்மை தேட்டத்தில் எல்லா மதங்களையும் முயன்று பார்த்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் பெற்ற அனுபவம் தனித்துவம் கொண்டதாக இருந்திருக்கிறது. கிறிஸ்தவர் வழியில் கடவுளை அறிய முயன்றபோது தேவாலயத்திற்கு தவறாது சென்றனர். பாதிரியாரின் முன்னிலையில் பணிவோடு அமர்ந்து பைபிளை ஆழ்ந்து வாசித்தார். உண்ணா நோன்பிருந்து யேசுவை அல்லாது பிறிதொன்றை எண்ணாதிருந்தார். முழுமுதலை அல்லாவாக உணர முற்பட்டபோது இஸ்லாமியரைப் போல் ஆடை அணிந்தார். முல்லாக்களுடன் அமர்ந்து குரானை செவியுற்றார். தவறாது நமாஸ் செய்தார். அவர்களது நோன்புகளை எல்லாம் தானும் மேற்கொண்டார். ஒவ்வொரு மதத்தின் தனிப்பண்பையும் ஆழமாக உணர்ந்தார். ஆனாலும் அவற்றின் சாரம் ஒன்றே என்பதை அவரால் கண்டுகொள்ள முடிந்தது.
மிக மேலோட்டமான வேறுபாடுகளே நம் வழியில் தடைகளாக இருக்கின்றன எனும்போது அத்தகைய பெரும் செல்வத்தை நாம் ஏன் கைவிடவேண்டும்? நமது மடத்தனமும் மதவெறியுமே நம்மை தடுக்கின்றன. இதனால் ஏற்படுவது, ஒன்று இரட்டை நன்மை அல்லது இரட்டை இழப்பு. மதம் சார்ந்து மட்டுமல்லாமல் இதை நீங்கள் உங்களது அன்றாட வாழ்வில் உங்கள் குடும்பத்தாரோடு, கணவன்-மனைவியிடையே, நண்பர்களிடையே, அண்டைவீட்டாரோடு, காதலரோடு, அலுவலகத்தில் செயல்படுத்திப் பார்க்கலாம். எவருடனான பரிவர்த்தனையிலும் இது செல்லுபடியாகும். எதையும் இன்னொரு கோணத்தில் பார்க்கமுடியும் என்பதை நீங்கள் அறிவீர்கள். தனித்த, ஒற்றைப்படையான சிந்தனைக்கு பதிலாக முரணியக்கம் வழியான இணைவு நிகழக்கூடும்.
பிறரது கோணத்திலிருந்து பார்க்க நம்மை தயாராக வைத்திருப்பதே அடிப்படை தேவை. உங்களது நிலைபாட்டை இறுகப்பற்றிக்கொள்ளும் உரிமை உங்களுக்கு இல்லை. இருத்தலியல் நோய்நீக்கத்திற்கு (existential therapy) Fritz Perls இதை மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொண்டார். அவர் அளித்த சிகிச்சையில் ஒரு முரணின் இருபக்கங்களின் குறியீடாக இரு நாற்காலிகள் இருக்கும். நோயாளி அவற்றில் மாறி மாறி உட்கார்ந்து இரு தரப்பையும் சொல்வார். ஒரு விவாதத்தின் இரு பக்கங்களோடும் அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் மனம் புதிய ஒரு நெகிழ்வை எப்படி அடையமுடியும் என்பதை கற்பிக்க அது மிகச் சிறந்த வழி. புதிய தெளிவொன்று பிறக்கும். மிக நுட்பமாக அது உங்களில் ஒரு நடுவுநிலையை ஏற்படுத்தும். பின் நீங்கள் அதுவும் அல்லர் இதுவும் அல்லர்.
நூறாவது பாடலில் நாராயண குரு அதுவும் இல்லை இதுவும் இல்லை என்று கூறப்போகிறார். இதை உங்கள் வாழ்வில், உங்கள் குடும்பத்தாருடன், நண்பர்களுடன் முயன்றுபாருங்கள். அருமையான் உலகொன்றை நீங்கள் சமைப்பீர்கள்.
பிரிவினைவாதத்தை யாரும் விரும்புவதில்லை. ஆனால் ஒருமையைக் கொணர முயற்சிக்கையிலேயே நீங்கள் ஒரு பிரிவின் பகுதியாகிவிடுகிறீர்கள். ஒற்றுமை என்ற பெயரில்தான் நீங்கள் இத்தனை பிரிவினைகளை கொணர்கிறீர்கள். ஒரு அறையில் உள்ளவர்கள் கூச்சலிடுவதை ஒரு எடுத்துக்காட்டாக கூறுவார் நடராஜ குரு. ஒருவர் பேரார்வத்துடன் அமைதி ஏற்படுத்த முயல்கிறார். அறையின் நடுவே சென்று கூச்சலிடுகிறார் ‘சத்தம் போடாதீர்கள்! ஏற்கெனவே இங்கு பெரும் கூச்சல் இருக்கிறது!” உண்மையில் அவர் அங்குள்ள ஆரவாரத்தை அதிகப்படுத்துகிறார். தனது மௌனத்தை அளிப்பதற்கு பதிலாக அவரும் கூச்சலிட்டு இரைச்சலை கூட்டுகிறார்.
ஆக, இந்த ரகசியத்தை மெய்யாக அறிந்த ஒருவர் எவ்விதத் தகராறிலும் ஈடுபடுவதில்லை. மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே இந்த ஒரு தகராறு காரணமாக நாம் ஒருவரையொருவர் கொன்றுவந்திருக்கிறோம் என்பதால்தான் குரு இதனை தன் போதனையின் மையப்பொருளாக வைத்திருக்கிறார். ஏழுகடல்களிலும் உள்ள ஒட்டுமொத்த நீரைக்காட்டிலும் அதிக குருதி சமயத்தின் பெயரால் சிந்தப்பட்டிருக்கிறது. மானுட முழுமைக்கும் இது ஒரு முக்கிய கேள்வி. மனிதனுக்குள்ள மதிப்பு மேம்பட வேண்டுமென்றால் கருத்தியலின் பெயரால் ஒருவரையொருவர் கொன்றுதீர்க்கும் தீரா புதிருக்கு விடை காணப்பட்டே ஆக வேண்டும். இவ்வகையான சிந்தனையின் உச்சத்தை சென்றடைய இன்னும் இரண்டு பாடல்கள் உள்ளன.