ப்ரக்ருதி பிடிச்சு சுழற்றிடும் ப்ரகாரம்
ஸுக்ருதிகள் போலுமஹோ சுழன்னிடுன்னு
விக்ருதி விடுன்னதினாயி வேல செய்வீ
லக்ருதி ஃபலாக்ரஹமற்றறிஞ்ஞிடேணம்
(ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 43)
நற்செயல் புரிவோரும் இயற்கையின் பிடியில்
சிக்கிச் சுழல நேரிடும்
விடுதலை தராது செயலற்றிருத்தல்
பலனதை எதிர்பாராததே நலம்
*
இந்திய தத்துவத்தின் மையப்போக்கில் உள்ள ஆறு சிந்தனை அமைப்புகளை சாங்க்யம்-யோகம், ந்யாயம்-வைஶேஷிகம், பூர்வ மீமாம்ஸம்-உத்தர மீமாம்ஸம் என்ற மூன்று இணைகளாகக் கொள்ளலாம்.
கபிலர் முன்வைத்தது சாங்க்யம். எண்ணுவதும், வகைப்படுத்துவதும் அதை பின்பற்றுவோர் செயல். அது எவ்வகையிலும் ஒரு ஆத்திக மதமல்ல. முழுக்க முழுக்க பகுத்தறியும் தத்துவம் அது. அதில் நம்பிக்கைக்கோ, பிடிவாதமான கொள்கைக்கோ இடமே இல்லை. அதன் முடிபுகளெல்லாம் கணக்கியல் அடிப்படையில் அமைந்த புரிதல்களினால் ஏற்பட்டவை. முதன்மையாக அவர்கள் சிந்திப்பது இரட்டைச் செயல்பாடு ஒன்றை – அறிவாற்றல் இயங்கக் கூடிய ஒரு புலத்தோடு கூடிய அறிவாற்றல் அல்லது அந்த அறிவாற்றலின் ஒளியில் இயங்கும் ஒரு புலம். பைபிளில் புனித ஜானுடைய நற்செய்தியில் குறிப்பிடப்படும் தேவனையும் சொல்லையும் இதனோடு ஒப்பிடலாம். சொல்லிலிருந்தே அனைத்தும் உண்டானதென கருதப்படுகிறது. அது தசையாகும் திறன் கொண்டது. அதனால் பொருள் என்பது தேவனுடன் ஒரே விதமான இணைப்பொன்றைக் கொண்டுள்ளது: தேவனின் விருப்பும் சொல்லில் உள்ள அறிவாற்றலும் வேறுவேறல்ல. சாங்க்யம் சொல்வதும் இதையே. ஆனால் பைபிள் போல ஒரு தொன்மமாக அதை சொல்வதிலை. அறிவியலாளரின் மொழி கையாளப்பட்டுள்ளது.
புருஷன் (தூய நனவு), ப்ரக்ருதி (படைப்புப் புலம்) என இரண்டு அடிப்படை மெய்மைகளை குறிப்பிடுகிறது சாங்க்யம். தமஸ், ரஜஸ், சத்வம் என்ற முக்குணங்களை – அதாவது செயலின்மை, செயலூக்கம், உன்னத நிலை என்ற மூன்றை – கொண்டது ப்ரக்ருதி. இவற்றில் தமோகுணமும் சத்வ குணமும் எதிர் துருவங்கள். தமஸ் எனும் செயலற்ற நிலையில் பொருள்கள் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருக்கின்றன; அது மந்தமாக இருப்பது, எளிதில் இளகாதது. அதன் ஒளிபுகா தன்மை காரணமாக அது ஆன்மாவை பெரிதும் எதிர்க்கிறது. சத்வ குணம், அது ஆன்மா அல்ல என்றபோதும், முழுக்க முழுக்க ஆன்மாவைப் போன்றே இருக்கிறது. கண்ணாடி அதனளவில் ஒரு பொருள் மட்டுமே. அது ஒளிர்வது அல்ல. ஆனால் ஒளியை தெளிவாக எதிரொளிக்க அதனால் முடியும். ஒரு கண்ணாடி கொண்டு சூரிய ஒளியை ஒரு இருட்டறையில் எதிரொளித்தால் அந்த ஒளி அறையை ஒளிரச் செய்யும். சூரியனின் இயற்பண்பை செயலும் தன்னொளிர்வும் அற்ற ஒரு கண்ணாடி வழியாக கடத்த முடியும். அதுவே சத்வ குணத்தின் இயல்பு. தூய அறிவாற்றலை உருக்கொண்ட உலகிற்குள் அதனால் கடத்த முடியும். ஆனால் அதுவே தூய அறிவாற்றல் அல்ல.
ஆக, சாங்க்யத்தில் பொருள்-ஆன்மா (ப்ரக்ருதி-புருஷன்) என்ற இருமை உள்ளது. ப்ரக்ருதியின் உள்ளேயே தூய, தெளிந்த சத்வகுணத்திற்கும் இருண்ட செயலற்ற தமோகுணத்திற்கும் இடையில் உள்ள துருவமாக்கம், ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கான நகர்வை ஏற்படுத்துகிறது. இந்த இயக்கவியலே ரஜோ குணம் எனப்படுகிறது. இயற்பியல் என்பது செயலற்ற தன்மையையும் இயக்கவியலையுமே அடிப்படையாகக் கொண்டது. இவ்விரு செயல்பாடுகளுக்கும் இடையில் ஏற்படும் நிலைகளை அறிவாற்றல் கொண்டு புரிந்துகொள்ள முடியும்.
யோகியர் இந்த தத்துவத்தை தங்களது தனிப்பட்ட வாழ்வில் செயல்படுத்துகின்றனர். சத்வ ரஜோ தமோ குணங்கள் சமமாக இருக்கும் ஒரு நிலையை அவர்கள் அடைய விரும்புகின்றனர். இது ஆன்மாவிற்கும் பொருளுக்கும் இடையிலும் ஒரு சமநிலையை இயல்பாகக் கொணர்கிறது. பின் அந்த இருமை கடக்கப்பட்டு ஒருமைக் கூறு எழுகிறது. மொத்த அமைப்பும் அமைதியடைகிறது. அகத்திலிருந்து அழகொன்று எழுகிறது. செயலற்ற தன்மை ஓங்கியிருப்பதில்லை. பொதுவாக நாம் தெளிவு என எண்ணுவது, அதாவது அகம் ஒரு பொருளை அறிவது, அங்கு இருப்பதில்லை. வேறுபடுத்தல்கள் ஏதுமில்லை. வேற்றுமையற்ற அந்த நிலையில், ஆன்மாவும் பொருளும் முழுமையாக ஒன்றுகலந்த நிலையில், ஒருவர் மீமுழுமையின் தனிமையென ஆகிறார். அந்தத் தனிமை மிக உன்னத நிலையாக கருதப்படுகிறது. செயல்பாடுகளால் ஆன உலகிலிருந்து ஓருவர் தன் ஆதி இயல்புக்குத் திரும்புவது அது. அதுவே யோகியரின் குறிக்கோள்
யோகப் பள்ளிகளில் மிகப் பழமையானது பதஞ்சலியுடையது. யோக சூத்திரங்கள் எனும் அவரது நூல் இறுதிக் குறிக்கோளுடன் தொடங்குகிறது. இறுதிக் காரணத்தை முதலில் கூறிவிட்டு பொருள்சார் காரணங்களையும் திறன்சார் காரணங்களையும் விளக்குகிறார். யோகம் எனும் இசைவு சமாதியுடன் இணைவைக்கப்படுகிறது. உளமாறுபாடுகளை அறவே நிறுத்தலே யோகம் – யோக: சித்த வ்ருத்தி நிரோத* – என்கிறார். ஒருவர் தனதேயான மெய்நிலையை அடைந்து அதில் நிலைபெறுதல் என்பதே பதஞ்சலி அடைய விரும்பும் தரிசனம். சாங்க்யம் இந்த தரிசனத்தின் தத்துவத்தை முன்வைக்கிறது. இதை செயல்படுத்துவது எப்படி என்றும் சாங்க்ய ஞானத்தை அதற்கு பயன்படுத்துவது எவ்வாறு என்றும் யோகம் பேசுகிறது. எனவே, இவ்விரண்டு பள்ளிகளையும் ஒன்றையொன்று நிறைவாக்கும் இணையாகக் கொள்ளலாம்.
ந்யாயமும் வைஶேஷிகமும் அடுத்த இணைப் பள்ளிகள். அவற்றிடையே மனதின் அனைத்து தர்க்கக் கூறுகளும் விவாதிக்கப்படுகின்றன. சிந்தனைக்கான ஒரு முறைமையை அவை அளிக்கின்றன. சரியான அறிவை ஒருவர் பெறுவதற்கு சான்று அத்தகைய முறைமை.
எடுத்துக்காட்டாக, உணர்தல் அறிவுக்கு ஒரு சான்று. நான் நேரடியாக ஒன்றை உணர்வதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. இதற்கு அளவை – ப்ரமாணம் – என்று பெயர். அது உறுதியை அளிப்பது. முதல் அளவை என்பது நேரடி உணர்தல். என் கையில் ஒரு பழம் இருந்தால் அதை அறிய நான் எந்த நூலையும் நாட வேண்டியதில்லை. நேரடி அனுபவமான அது ஒரு காட்சியளவை – ப்ரத்யக்ஷம். இரண்டாவது ப்ரமாணம் கருதலளவை – அனுமானம். இதில் பகுதியறிவிலிருந்து முழு மெய்மையை ஒருவர் அனுமானிக்க முடியும். மூன்றாவது ஒப்புமை. நான்காவது ஒரு பொருளை முரண்பாடு வழியாக அறிதல். போதுமான காரணம் என்பது இன்னொரு கொள்கை. இறுதியாக உள்ளது ஒலி. ஞானி ஒருவரால், குருவால், அதிகாரபூர்வமான நூலால் சொல்லப்படுவது. இது மறுக்கவியலாத ஒன்றாக ஆகக்கூடும். ஆனால் அது ஒரு முற்கோள் (a priori). அவற்றின் முறைமைகளில் சில முற்கோளாகவும் சில பிற்கோளாகவும் (posteriori) இருக்கக் கூடும்.
நாம் தனிப்பட்ட நனவை புற உலகுடன் எவ்வாறு தொடர்புறுத்துகிறோம் என்பதே ந்யாயவாதிகள் காண விரும்புவது. அவர்களைப் பொறுத்தவரை, அறிவாற்றல் என்பதே பொருள்களை நாம் அறிவுவழியே கையாள்வதுதான். நமது செயல்களும், செயலின்மைகளும், மொத்த வாழ்வுமே அறிவை அடிப்படையாகக் கொண்டவை. பொருட்களுக்கும் எண்ணங்களுக்கும் இடையே உள்ள தர்க்க ரீதியான உறவையே அவர்கள் பரிசீலிக்கின்றனர். அதன்வழியே சில வகைமைகளை உருவாக்கி உள்ளனர். முதல் வகைமை த்ரவ்யம் – பொருள், இரண்டாவது குணம் – பண்பு. கல் ஒரு பொருள், அதன் பண்பு எடைகொண்டிருப்பது. நீரின் பண்பு ஒழுகுதல். தீ எரிவது. மனிதனும் ஒரு த்ரவ்யமே; அவனிடம் ஒரு திண்மை உள்ளது. திடப் பொருட்களும் அவற்றின் பண்புகளும் அடங்கிய ஒரு மொத்தமே உலகம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
ஒரே போன்ற இயல்புடைய பொருட்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு வகைமைக்குள் அடக்கலாம். இப்படி செய்வது சம்பந்தம் எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக, அனைத்து மானுடரையும் மனிதன் என்ற தலைப்பின் கீழ் கொண்டு வரலாம். அது சாமான்யம். ஒவ்வொரு தனியரையும் தனித்தனியாக ஆராயலாம். அது விஶேஷம் – வைஶேஷிகர்களின் களம். காலம், வெளி, செயல், இன்மை என வகைமைகள் பல உண்டு.
அடுத்து இருப்பவை பூர்வமீமாம்ஸமும் உத்தரமீமாம்ஸமும். உறுதியாக நம்பி ஏற்கக்கூடிய அறிவை ஒரு முற்கோளாகக் கொள்வது பூர்வ மீமாம்ஸம் : அதாவது ஒரு அனுபவம் நிகழவேண்டுமெனில், பொருட்களோடு தொடர்புறுத்திக் கொள்ளக்கூடிய அகக்கருவி ஒன்றின் ஒரு வகையான வெளிப்பாடு ஒருவருள் இருக்க வேண்டும். தொடக்கத்திலிருந்தே, உலகை பொருட்கள் பரப்பி வைக்கப்பட்ட வெளியாகவே நாமறிந்து வந்திருக்கிறோம். வெளி என ஒன்றிருப்பதை யாரும் நமக்கு கற்பிக்க வேண்டியதில்லை. அதே போல், சில பொருட்கள் மேலே இருப்பதையும் சில கீழே இருப்பதையும் யாரும் சொல்லாமலேயே நாம் காண்கிறோம். அனுபவத்தின் ஒரு பகுதியாக நேரம் கடந்துசெல்வதையும் அறிகிறோம். இந்த அறிவு நமக்கு பிறப்பிலேயே இருக்கிறது. எனவே, இவ்வகையான அறிவு கற்கப்படுவதில்லை. முற்கோள் என்பது வெளிப்பாட்டின் பகுதியாகவே இருக்கின்றது. அறிவு நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. அதுவே நமது இயல்பு, நாம் நம் இயல்பை உணர்கிறோம்.
நாம் ஒன்றை அறிந்ததும் அதை பிறருக்கு வெளிப்படுத்த எண்ணுகிறோம்; அதை வெளிப்படுத்த சொற்களை பயன்படுத்துகிறோம். சொற்கள் அடிப்படையில் கருத்துருக்களே. நாம் சொற்களின் அடிப்படையிலேயே சிந்திக்கிறோம். அவற்றை உச்சரிக்க உடற் செயல்பாட்டிலிருந்து ஆற்றலை எடுத்துக்கொள்கிறோம். நம் ஆற்றலை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்தி கருத்தாக ஆக்குகிறோம். கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த ஆற்றல் சொல்வடிவு பெற்று வெளிப்படுகிறது. அது தகவல் பரிமாறும் ஆற்றலாகிறது. மக்கள் தங்களுக்குள் தொடர்புறுகையில் பல இயல்கைகளை உண்டாக்குகின்றனர். இதன் காரணமாகவே குறியியல் செயல்பாட்டை (process of semiosis) விரிவாக ஆராய்கின்றனர் பூர்வ மீமாம்ஸகர்
ஒருவருக்குள் நனவெனும் இயல்கை ஒரு ஆழியைப் போல் உறைகிறது. அதிலிருந்து அலைகளென எண்ணங்கள் எழுகின்றன. எழும் ஒவ்வொரு எண்ணமும் அவரதேயான நனவிற்கு ஒரு காட்சியை அளிக்கிறது. ஆக, உருவமற்ற, வடிவமைக்கப்படாத நனவிலிருந்து வடிவம் பெற்ற நனவு எழுகிறது. அது பஶ்யந்தி அல்லது காட்சி எனப்படுகிறது. தான் கண்ட காட்சியை அவர் பிறருக்குக் கடத்த நினைக்கையில் அதற்கு சொற்களின் வடிவமளிக்கிறார். எடுத்துக்காட்டாக, ஒரு பொறியாளர், அசைவற்ற வரைபடத்தில் உள்ளதை விளக்கும்போது ஒலிகளின் வழியாக அவர்கண்ட காட்சியை உயிர்கொண்ட ஒரு இயல்கையாக கேட்பவரும் உணர்கிறார்.
பூர்வ மீமாம்ஸகரைப் பொறுத்தவரை, மொத்த அண்டமும் சொல்லின் உருத்தோற்றமே. அதை சொற்களைக் கொண்டே இல்லாமலாக்கலாம், மாற்றியமைக்கலாம். மானுடனிடம் உள்ள மிக முக்கியமான கருவி அவனது சொல்லே. அவனே அச்சொல்தான். அவனே கருவி. கருவியைச் செய்பவனும் அவனே. அவனும் கருவியும் நனவெனும் ஒருமையால் இணைந்து செயல்பட முடியும்.
வேதாந்தம் என்று அறியப்படும் உத்தர மீமாம்ஸம், சாங்க்யம் குறிப்பிடும் இயற்கை, அறிவாற்றல் என்ற இரண்டு கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறது. உணர்தல், அனுமானம், உவமானம், முரண்பாடு, சொல்லுறுதி போன்ற நியாய-வைஶேஷிகப் பள்ளிகளின் முறைமைகளையும் அது ஏற்றுக்கொள்கிறது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த நாராயண குரு, அவர் விளக்கும் அறிவு நம் அன்றாட வாழ்வில் எப்படி செயல்படுகிறது என்பதை நாமறிய வேண்டும் என்கிறார்.
தேவைகளுடனும் செயலுடனும் ஏற்பட்டிருக்கும் பிணைப்புகளை எல்லாம் அறுத்தெறிந்து முழுமையான விடுதலை பெறுவதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கும்போதுதான் முழுமையான விடுதலை இயலக்கூடும். உங்கள் உடல் என்பதே ஒரு கட்டுப்பாடுதான். உடல் சார்ந்த, உயிர்சார்ந்த, உளம் சார்ந்த, வேதிவினைகள் சார்ந்த பலவும் பல வழிகளில் உங்களை கட்டுப்படுத்துகின்றன. காட்டாக, உங்கள் உடல் எடைமிக்கது; அதை உங்களால் காற்றில் உயர்த்த முடியாது; அது புவியீர்ப்பு விசையுடன் கட்டுண்டது. இவ்வாறு பல விதிகளின் பிடியிலிருந்து விடுதலை பெற்ற தன்னாட்சியை நீங்கள் விரும்புகிறீர்கள்.
இந்தப்பாடலின் தொடக்கத்தில், நல்ல நோக்கம் கொண்ட ஒரு மனிதனை குறிப்பிடுகிறார் குரு. முந்தைய பாடலில், நமது நனவு இரு திசைகளில் செலுத்தப்பபடக்கூடும் என்றார் – ஒன்று நம்மை முழுமையின் பகுதியாக உணர்வது; இன்னொன்று தனித்த ஒன்றாகக் காண்பது. நீங்கள் தனித்தவர் என்று உறுதியாக உணர்ந்தால், தன் மையம் கொண்டவராக, உங்கள் உடலுக்கும் அதன் இன்பங்களுக்கும் முதலிடம் அளிப்பவராக ஆகின்றீர்கள். உடைமை கொள்வதில், பிறர் பொருள் கவர்வதில், உங்கள் அடிப்படை வேட்கைகளை நிறைவு செய்வதில் உங்கள் நாட்டம் செல்கிறது. செயல்படுவதற்கான பெருந்தூண்டல் ஏற்படுகிறது. அந்தச் செயலை உங்களது சொந்த விருப்புகளே ஆள்கின்றன. அந்நிலையில் அன்யம் அல்லது பிறிதாம் தன்மை உங்கள் உளத்தை ஆட்டுவிக்கிறது.
பிரபஞ்ச தரிசனம் மற்றொரு இயல்கை. அதில் மானுடத்தையே ஓர் இயல்பான முழுமையாகக் காணமுடியும். அந்நிலையில் உங்களது விருப்புகள் தன் மையம் கொண்டதாக இருக்காது. சமூகத்தின், இயற்கையின் நன்மையைச் சார்ந்ததாகவே இருக்கும். நீங்கள் சூழியலாளராக, ப்ரபஞ்சத்தை விரும்புபவராக ஆகிறீர்கள். வாழ்வின் ஆன்மாவுடன் ஒன்றுகலக்கிறீர்கள். அனைத்தின் நன்மை நோக்கி நீங்கள் செல்கையில் சமம் அல்லது நிகர்தன்மை உங்கள் அகத்தில் செயல்படுகிறது.
பிரபஞ்ச நன்மைக்கு நீங்கள் உங்களை ஒப்புக்கொடுப்பீர்கள் என்றால், உங்களது செயல்கள் அனைத்தும் அதை நோக்கியே இருக்கும் என்றால் நீங்கள் ஒரு சுக்ருதியாகிறீர்கள். சுக் என்பது நன்மை, க்ருதி என்பது செய்பவர். இது நல்ல குறிக்கோள்தான் என்றாலும் நீங்கள் செயல்படத் துவங்குகையில் பல குறுக்கீடுகள் நிகழ்கின்றன. இயற்கையில் ப்ரக்ருதி என்னும் பிரிக்கும் போக்கு இருப்பதால் நீங்கள் விரும்பியபடி எல்லாம் செயல்பட முடிவதில்லை. ஆக, மக்களில் சிறந்த சுக்ருதி எனப்படுபவரும் சமூகக் கொள்கைகளுக்கு, அரசாங்க விதிகளுக்கு கட்டுப்பட வேண்டியுள்ளது. நாடு போரில் இறங்கப் போகிறது என்றால், நீங்கள் எவ்வளவு எதிர்த்தாலும், ஏதோ ஒரு வகையில் அதற்குள் இழுக்கப்பட்டுவிடுவீர்கள். சுக்ருதராக நீங்கள் சரியான பாதையில் சென்றாலும் எல்லா திசைகளிலிருந்தும் பல கட்டுப்பாடுகள் உங்களை தடுக்கக் கூடும். உங்களது நன்மையே தீமையாக மாறுவதை நீங்கள் காணக்கூடும். சில சூழல்களில், நீங்கள் மிக நல்லவராக இருந்தால், அதற்காகவே மக்கள் உங்களை கொல்லக் கூடும். ஆக, உங்களது நன்மையே கூட சூழலுக்கேற்ப மிதப்படுத்தப்பட வேண்டும்.
சில சூழல்களில் சுக்ருதரே தன் விருப்புக்கெதிரானவற்றை செய்ய வேண்டி வரும். மிகப் பரந்த மனம் கொண்டவர்கள் கூட கைவிடப்பட்டவர்களாக உணர்வதை நாம் காண்கிறோம். இத்தகைய இக்கட்டிலிருந்து வெளியேறுவது எப்படி? சமம் நோக்கி நீங்கள் செல்லும்போதும் அன்யம் என்பது உங்களை வழியில் தடுக்கக் கூடும் என்கிறார் குரு. உங்கள் செயலின் விளைவை குறிப்பிட்ட காலத்திற்குள் காண நீங்கள் விழையக் கூடும். இப்படி செய்கையில், நீங்கள் முழுமையோடு ஒன்றியவராக இருந்தாலும், அன்யம் – பிறிதாம் தன்மை – ஒன்றை நீங்களே அதில் புகுத்திவிடுகிறீர்கள். கீதை சொல்வதைப் போலவே, குருவும் இங்கே செயலுக்கான பலனை எதிர்பார்க்காதே என்கிறார். நிகழ்ந்துகொண்டிருப்பவற்றில் உங்கள் பங்கை நீங்கள் ஆற்றிவிட்டு, பலன்கள் உங்களுக்கென இல்லாமல் மானுட குலத்துக்கென ஏற்படும் என்று நீங்கள் எண்ணினால், உங்களுக்கு எந்தக் கடப்பாடும் இல்லாமலாகிறது. நீங்களே நோக்கிநிற்பவராகவும் – சாட்சியாகவும் – பங்காற்றுபவராகவும் ஆகிறீர்கள்.
‘நான் ஒன்றை செய்வதால்தான் எனக்கு சிக்கல் உண்டாகிறது. எதையோ செய்பவர்தான் தவறு செய்து மாட்டிக் கொள்கிறார். ஆதலால், அதிலிருந்து தப்ப நான் எதுவும் செய்வதில்லை’ என்று சொல்லி ஒன்றும் செய்யாமலிருப்பதும் நடக்கக் கூடியதே. இதற்கு அக்ருதி – செயலின்மை – என்று பெயர். இது உதவுமா? செயலாற்றாதிருந்தால் முழுமுதலுடன் ஒன்றிவிட முடியுமா? முடியவே முடியாது. உங்களில் உள்ள இயல்கைகளுக்கு அவற்றிற்கேயான செயலூக்கங்கள் உண்டு. அவை வெளிப்பட்டு உங்கள் நடத்தையையே உருமாற்றக் கூடும். அவை உங்களை விபரீதமாக நடந்துகொள்ளச் செய்யும். அடக்கிவைப்பதோ, செயலின்மையோ மட்டும் மாற்று மருந்தாகிவிடாது. விக்ருதி – நெறிதவறிய, வக்கிரமான செயல் – எதிர்வினையாக, உள்ளுறை வேட்கையாக வெளிப்படுவது. அது வெளிப்படுகையில் நீங்கள் விந்தையாக, மடத்தனமாக நடந்துகொள்வீர்கள். இது எல்லோரிடமும் ஓரளவு உள்ளதுதான். நற்செயல்கள் எனும் போர்வையைக் கொண்டு எல்லாம் சரியாக இருப்பதுபோல் நடிக்கிறோம். ஆனால் மிகையுணர்ச்சி கொள்கையில் அதையெல்லாம் மறந்துபோகிறோம். செயலற்றிருத்தல் இதையெல்லாம் தடுத்துவிடாது. உண்மையில் வக்கிரச் செயல்களை எளிதில் அது வெளிக்கொணரக் கூடும்.
ஆக, நீங்கள் ஒரு அக்ருதி – செயல்படாதவர் – அல்லர். நல்லதை உடனே உணரவேண்டும் என நினைப்பவர் என்ற கோணத்தில், சுக்ருதியும் இல்லை. வக்கிரம் ஓங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதால் நீங்கள் நிச்சயமாக விக்ருதி இல்லை. அனைத்திலும் நன்மையக் காண்பவர், அனைத்திற்கும் நன்மையை விரும்புபவர். அதற்கு உங்களால் முடிந்ததை செய்பவர். அதே சமயம் இங்கு-இப்போது அதை உடனே உணர வேண்டும் என்றும் நீங்கள் அடம் பிடிப்பதில்லை. பலனுக்கான விருப்பம் உங்களிலிருந்து விலகினால் மட்டுமே நீங்கள் விடுதலை பெறமுடியும். ஆனால் பொதுவாக நன்மை நிகழ வேண்டும் என்ற விருப்பு உங்களில் எப்போதும் தங்கியிருக்க வேண்டும். உங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது, ஆனால் அது உங்கள் சொந்த நிறைவுக்காக மட்டுமல்ல. இதில் உள்ள மேலதிக நுணுக்கங்களை அடுத்த பாடலில் பார்ப்போம்.