இதமறிவென்னதிலாத்யமா மிதென்னு
ள்ளது ஸம, தன்றெ விஶேஷமாணு போதம்;
மதி முதலாயவயொக்கெ மாறி மேல் ஸத்
கதி வருவானிதினெப்பஜிச்சிடேணம்
(ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 42)
‘இது அறிவு’ என்பதில் முதலில் வரும் இதென்பது
நிகராம்தன்மை அதன் தகுதிப்பாடு விழிப்புணர்வு
அறிவென்பதெல்லாம் மறைந்து மெய்வழி அடைய
‘இத’னை எப்போதும் வணங்கிடல் வேண்டும்
*
ஒரு பொருளும் அதன் தகுதிப்பாடும் முன்வைக்கப்படும்போது நிகழும் கருத்தாக்கமே அடிப்படையானது. ஒரு பொருள் முன்வைக்கப்படும்போது, ‘இது என்ன?’ என்கிறோம். ஒரு முடிவெடுத்து அதற்கு பதிலளிக்கிறோம். வெளிப்படையான கேள்வி இல்லாத இடத்திலும் ‘இது’ என்ற சொல் இருந்தாலே அங்கு வினா ஒன்று மறைந்துள்ளது. ‘இது இன்னது’, ‘இது பிறிதொன்று’, ‘இது அறிவு’, ‘இது அறிவல்லாதது’. அந்தப் பொருள் திட்பம் கொண்டதாகவோ, இல்லாததாகவோ இருக்கலாம், மெய்யானதாகவோ மெய்யல்லாததாகவோ இருக்கலாம். ஆனாலும் அங்கே ஒரு சுட்டி உள்ளது. அதுவே மனம் எழுப்பிய கேள்வியின் குறியீடு. அடுத்ததாக, கேள்வியைத் தொடர்ந்து ஒரு தீர்ப்பு அல்லது முடிவு வழங்கப்படுகிறது, அதுவே பொருளின் பயனிலை அல்லது தகுதிப்பாடு. ‘இது இன்னது’ என்று சொல்கையில், இன்னது என்பதே அதன் தகுதிப்பாடு. இது என்பதில் அறிவுள்ளது, அறிவே ‘இது’ எனும் பொருளை தகுதிப்படுத்துகிறது.
முந்தைய பாடல் ஒன்றில், இதனை விஷமா – அறிவின் எளிதில் பகுத்தறிய முடியாத பகுதி – என்றார் குரு. அறை ஒன்றிற்குள் இருப்பவரிடம் வெளியில் இருப்பவர் ‘இதைப் பார்த்தாயா?’ என்று கேட்டால், உள்ளிருப்பவர் ‘இது என்றால்?’ என்று கேட்கவேண்டி வரும். ‘இது’ என்ன என்று அறியும் வரை அவருக்கு அதில் ஆர்வமே இருக்காது. ஆக, ‘இது’ என்பது மட்டும் போதாது; இது என்ன என்று விளக்க வேண்டும். உண்மையில், நமது மனதின் மொத்தச் செயல்பாடுமே எப்போதும் ‘இதை’ விளக்குவது மட்டுமே. நமக்கு வேறு வேலையே இருப்பதில்லை. ‘இது’ எனப்படும் அனைத்தையும் விளங்கிக்கொள்ள முயன்றுகொண்டே இருக்கிறோம்.
‘இது இன்னது’ என்ற முடிவுக்கு வருவது நமது நனவின் இன்னொரு கூறு. அதுவே மதி எனப்படுவது. சம்ஸ்கிருத இலக்கணத்தில் நிர்தேஶிகா, ப்ரதிக்ராஹிகா, சம்பந்திகா என மூன்று உண்டு. நிர்தேஶிகா என்பது ஒருங்கிணைப்பது, ப்ரதிக்ராஹிகா என்பது பற்றிக்கொள்வது அல்லது புரிந்துகொள்ள முயல்வது, சம்பந்திகா என்பது ஒன்றை இன்னொன்றுடன் தொடர்புறுத்துவது. இதற்கு இணையான மூன்று வகை மனங்கள் வேதாந்தத்தில் கூறப்படுகின்றன: மனஸ் என்னும் நினைவில்மீட்டெடுக்கும் கூறு, சித்தம் மற்றும் புத்தி என்னும் முடிவுசெய்யும் கூறு. தர்க்கவியலில் இவை பொருள், இணைப்பு, பயனிலை (the subject, the copula and the predicate) எனப்படும்; பொருள் என்பது குறிப்புணர்த்துவது, இணைப்பு என்பது ஒப்பிடுவது, பயனிலை முடிவு செய்வது.
ஆக, இந்த மும்மைச் செயல்பாடு எப்போதும் எங்கும் நிகழ்வது. இவற்றிற்குப் பின்னால் ஒரு முகமை உண்டு. ‘நான்’ எனப்படும் அதிலேயே இவையெல்லாம் நடந்தேறுகின்றன.
எந்த வடிவத்திற்கு என்ன பெயர் கொடுப்பது என்பதை அறிவாற்றல் முடிவுசெய்கிறது. அது, பெயரொன்றையும் வடிவொன்றையும், மனமியற்றும் வடிவமொன்றையும் அதற்கிணையான சொற் குறியீடொன்றையும் இணக்கி ஒரு நிலைப்படுத்துகிறது. இது ஒரு குடம் என்று சொல்கையில், குடம் பற்றிய ஒரு வடிவம் இருக்கிறது. அது ஒரு கருத்து. குடம் என்பது ஒரு ஒலி. அது உங்கள் நனவிலிருந்து ஒரு வடிவை மீட்டெடுக்கிறது. பின்னர் அந்த வடிவம் ஒலியோடு இணைக்கப்படுகிறது. ஒவ்வொரு சூழலுக்கும் மிகப் பொருத்தமானதை, பலப்பல கருத்துக்களில் இருந்து ஒன்றை, அறிவாற்றல் தேர்ந்தெடுக்கிறது. அதுவே பின்னர் அடிக்குறியிடப்பட்டு கருத்தாக முன்வைக்கப்படுகிறது.
ஆர்வங்கள் எதுவுமற்ற, செயலற்றிருக்கும் ஒரு மனதில் இது நிகழ்வதில்லை. ஒவ்வொரு கருத்தும் ஒரு தகவைக் குறிக்கும் வகையில் வண்ணப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவுகள் தனியருக்கு மிக நெருக்கமானவை. ‘இதோ ஒரு துண்டு காகிதம்’. ‘வெறும் காகிதம் அல்ல, அது ஒரு ரூபாய்’. அது ரூபாய் என்று சொன்னவுடன் ஆர்வம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஒலியுடனும், ஒவ்வொரு சொல்லுடனும், ஒரு வடிவுடனும் ஒரு குறிப்பிட்ட தகவும் மனதில் எழுகிறது. அது எழுகையில் அதற்கு எதிர்வினையாற்றுகிறீர்கள். அந்த எதிர்வினை பெரும் மோகமாகவோ, தீவிர புறக்கணிப்பாகவோ இருக்கலாம். ஒரு ஒலியோ வடிவோ உங்களில், இவ்விரு எல்லைகளுக்கிடையிலான பல்வேறு ஆர்வங்களை தூண்டக்கூடும்.
கருத்தில்லா புலக்காட்சியும், புலக்காட்சியில்லா கருத்தும் உள்ளீடற்றவை. ஒரு கருத்தே ஒரு புலக்காட்சியிலிருந்து வடித்தெடுக்கப்படுவதுதான், அல்லது அது அகத்தால் அறியப்பட்டதுதான். அகவயமாக அறியப்பட்டாலும் புறவயமாக அறியப்பட்டாலும் அது ஒரு மதிப்புக் கூறாகிறது. அந்தக் கூறு தன்னை மற்றவற்றிலிருந்தும் நமது பிற அறிதல்களிலிருந்தும் துண்டித்துக் கொள்கிறது. நம் முன் ஒரு பொருள் வைக்கப்படுகையில் அதன் மீதான மதிப்பு குறித்தும், ஆர்வங்கள் மீதும் நாம் எடுக்கும் கருத்துமுடிவுகளால் நமது நனவு என்பது பல துண்டுகளாக நறுக்கப்படுகிறது. இச்செயல்பாடு வழியாக அறிவாற்றலால் முடிவு செய்யப்படும் ஒவ்வொன்றும் உலகையே உயிர்ப்பிக்கிறது, நனவை உயிர்ப்பிக்கிறது
இவையெல்லாம் எங்கிருந்து வருகின்றன? ஒற்றை அறிவிலிருந்து. இந்த ஒட்டுமொத்த அறிவிலிருந்து ஒரு சிறு துண்டை நாம் சொல்லிப் பார்க்கிறோம். பின் அதற்கொரு முத்திரை இட்டு தனிப் பொருளாக ஒதுக்கி வைக்கிறோம். நாம் சார்ந்துள்ள உலகே நனவின் இசைவுடன் இருப்பது, பிரபஞ்ச உணர்வு கொண்டது, குறிப்பிட்ட தன்மை என ஒன்றில்லாதது. அப்படியிருக்க, குறிப்பிட்ட ஒன்று மனதை தூண்டுகையில் அறுதியான துண்டொன்று அதிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டு நனவுக்கு வெளியே வைக்கப்படுகிறது. அதோடு முடிவதில்லை. ஒவ்வொரு குறிப்பிட்ட அறிவும் மனநிறைவுக்கான ஒரு இயல்கையை சுட்டி நிற்கிறது. குறிப்பிட்ட ஒன்றை உணர்கையில் உங்களில் உள்ள தனிப்பட்ட ஆர்வமொன்று மனநிறைவுக்கான வாய்ப்பை பெறுகிறது. இந்த ஆர்வத்தொகுதிகள் ஒன்றோடொன்று தொடர்புறுகின்றன. புதிய திரைப்படம் வெளியாகியிருப்பதை ஒருவர் உங்களிடம் சொன்னவுடன், ‘எப்போது போகலாம்? யாருடன் போகலாம்?’ என யோசனை செய்கிறீர்கள். எதிர்வினைகள் ஒன்றுடன் ஒன்று பின்னியபடி தோன்றுகின்றன. இறுதியில் போவதா வேண்டாமா என முடிவெடுக்கிறீர்கள். இப்படியாக, அறிவை குறிப்பிட்டு அணுகுவது உங்களை செயலாற்ற வைக்கிறது. ஒரு செயல் மற்றொரு செயலை தூண்டுகிறது.
அன்றாட வாழ்வின் வலைப்பின்னல் முழுமையும் ‘இது’ ‘இது’ என பல ‘இது’க்களால், அவற்றின் பொருளோடு சேர்த்து பின்னப்படுகிறது. அறிவாற்றலால் நிகழும் இது தனியரின் தன்முனைப்போடு தொடர்புறுத்தப்படுகிறது.
எல்லா அறிவும் ‘இது’ என்று கூறுவதில் துவங்குகிறது. பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் தனது Logical Positivism நூலில் அணுத் தொடர்களை ஆராய்கிறார். அவற்றில் உள்ள அணுக் கூறு ‘இது’ என்பதே. ஒரு சொல் ஒரு அணுகுண்டைப் போன்றது. உங்கள் மீது ஒரு சொல்லெனும் குண்டை வீசுகையில் அது உங்கள் மனதில் வெடிக்கிறது. விளைவாக பொருள் தூண்டப்படுகிறது. சம்ஸ்கிருதத்தில் சொல்லின் இந்த வெடிப்பை ஸ்ஃபோடம் என்பர்.
நாம் ஒருவர் மீது ஒருவர் சொல்லெனும் குண்டை வீசிக் கொள்கிறோம். அவை நம்மை தாக்கும்போது அதற்கு எதிர்வினையாற்றுகிறோம். ஆக, நமது நனவுச் செயல்பாடே சொற்களெனும் குண்டுகளால் உண்டாவது.
அமைதியாக அமர்ந்திருப்பது நல்லது. அந்த அமைதி ஒரு இடுகாட்டின் அமைதி அல்ல. அனைத்தையும் நிரப்பும் ஒரு அமைதி அது. குறிப்பிட்ட ஒன்றை விரும்பி ஏற்காமல், முடிவிலா பேரின்பமெனும் இயல்பான நிலையில் அமைகிறோம் நாம். இந்தப்பாடலில் குறிப்பிட்ட கூறுகள் அனைத்துமே நனவின் கூறுகள் என்கிறார் குரு. அவற்றை ஏற்படுத்தும் அறிவாற்றலை விலக்க முடியும் என்றால் நீங்கள் சத்கதி – நல்வழி – அடைகிறீர்கள். உங்களை சிக்கலுக்கு இட்டுச் செல்வது துர்கதி – தீவழி. அது உங்களை பிணைப்பது. நல்வழியோ உங்களுக்கு விடுதலை அளிப்பது. வேதாந்திகளுக்கும் இரு பாதைகள் உண்டு. ஒன்று ப்ரவ்ருத்தி, ஈடுபடச் செய்வது – உங்களை செயலோடு பிணைப்பது, இன்னொன்று நிர்வ்ருத்தி – விடுதலை அளிக்கும் வழி.
விடுதலையை நாடுவீர்கள் என்றால் ‘இது என்ன?’ என்று கேட்க வேண்டும் என்கிறார் குரு. குறிப்பிட்ட ஒன்றை தெரிந்து கொள்வதற்காக அல்ல, ‘இது’ என்பதன் தன்மையை தெரிந்துகொள்வதற்காகவே இந்தக் கேள்வியை நீங்கள் கேட்க வேண்டும்.
ரமண மகரிஷி அனைவரிடமும் ‘நான் யார்?’ என்ற கேள்வியை கேட்டுக் கொள்ளச் சொல்வார். ‘இது’ என்பதற்கும் ‘நான்’ என்பதற்கும் இடையில்தான் மனதின் மொத்தச் செயல்பாடும் நிகழ்கிறது. ‘அது நீயே’ என்பதே ஒரு குரு பெரும்பாலும் சீடருக்குச் சொல்வது. ‘அதாம் தன்மை’யே நீ என்பது. ‘அது’ என்ன? அனைத்தையும் உள்ளடக்கியது. மனம் குறிப்பிடக்கூடியவற்றில் அடங்கும் எல்லாமே ‘அது’ தான். ‘இது’வும் ‘அது’வும் வேறுவேறல்ல. குறிப்பிட்டு சொல்லக்கூடிய புலம் அனைத்துமே ‘அது’ தான். ‘அது’ என்பதும் ‘நீ’ என்பதும் வேறுவேறல்ல. எனவே, ‘அது’ என்பதை தியானிக்க வேண்டும். ‘இந்த அகமே முழுமுதல்’ என்ற பெருஞ்சொல்லில் ‘இந்த’ என்பதை நீங்கள் தியானிக்க வேணும். ‘நானே முழுமுதல்’ என்பதில் ‘நான்’ என்பதையும். முழுமுதலின் அறிவெல்லை கடந்த நிலையை எய்துவதற்காகவே ரமணர் ‘நான்’ என்பதை (அஹம் ப்ரம்மாஸ்மி) தியானிக்கச் சொல்வார்.
தத்வமஸி – அது நீயே, அயம் ஆத்ம ப்ரஹ்மா – இந்த அகமே முழுமுதல் என்ற இரு உபநிடதப் பெருஞ்சொற்களை புரிந்துகொள்ள ஒரு தியான முறையை இங்கு கூறுகிறார் நாராயண குரு. இரண்டையும் ஒன்றாக இணைத்து ‘இதினெ பஜிச்சிடேணம்’ என்கிறார். ‘இதை தியானம் செய்’. செய்தால், வினவுதல், தொடர்புறுத்தல், முடிவு செய்தல் என்ற முச்செயல்பாடுகள் குறித்த தெளிவு மனதில் பிறக்கும். இவை மூன்றும் தனித்தனியானவைதான் என்றாலும் ‘இது’ எனும் தன்மையிலிருந்தே பிறப்பவை.
முந்தைய பாடலில், ‘இது’ என்பது அனைத்தையும் உருவாக்கும் கருவெனக் கூறப்பட்டது. முதல் பாடலில், அனைத்துமான அந்த அறிவையே போற்றி மீண்டும் மீண்டும் வணங்க வேண்டும் என்று சொன்னார். தியானம் செய்பவர், தான் பலவற்றோடும் தொடர்புறுத்திக் கொண்டிருந்தாலும் அவை அனைத்துமே ‘இது’ என்ற ஒற்றை நனவிலிருந்து தோன்றியவைதான என்று அறியும் அளவுக்கு பற்றற்று இருத்தல் வேண்டும்.
நாம் எல்லோருமே விந்தையான மந்திரவாதிகள்தான். நாம் உருவாக்கும் மாயத்தில் நாமே சிக்கிக் கொள்கிறோம். நாம் உருவாக்கும் மாயங்கள் வேடிக்ககைக்காக மட்டுமே என்பதில் நாம் தெளிவுடன் இருக்க வேண்டும். அதில் ஒருபோதும் சிக்கிக் கொள்ளக் கூடாது.
நான் வாழ்ந்த ஒரு வீட்டுச் சுவரில் ஒரு முறை ஒரு பூதத்தை வரைந்திருந்தேன். இரவு நேரங்களில் அதற்கு அஞ்சி அது இருந்த அறைக்கே செல்ல மாட்டேன். சுண்ணக் கட்டியால் வரைந்ததுதான் என்பதால் பகலில் ஒரு குவளையில் நீரெடுத்துச் சென்று அதன் மேல் வீசுவேன். ஈரமாக இருக்கையில் பூதம் தெரியாது என்பதால் பயம் விலகும். ஆனால் அடுத்த நாள் இரவு மீண்டும் முளைத்தெழும்.
அதைப்போல, நம் மனதிலிருந்து பூதங்களை உருவாக்கி கொண்டே இருக்கிறோம், அவற்றை அஞ்சியபடியே இருக்கிறோம். இந்த மாயத்தில் சிக்கிக் கொள்ளாதே என்கிறார் நாராயண குரு.