ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 41

இது குடம் என்னதில் ஆத்யமாம் இதென்னு

ள்ளது விஷமா, குடமோ விஶேஷமாகும்

மதி முதலாய மஹேந்த்ரஜாலமுண்டா

வதினிதுதான் கருவென்னு கண்டிடேணம்

(ஆத்மோபதேஶ ஶதகம் – பாடல் 41)

‘இது குடம்’ என்பதில் முதலில் வரும்

இது என்பது அறிவதற்கரியது, குடம் என்பது தகுதிப்பாடு

அறிவினைப்போன்ற  பெருமாயம் நிகழ

இதுவென்பதே கருவாவது கண்டிடவேண்டும்

*

இது மிக எளிய பாடலாகத் தோன்றலாம். ஆனால் இது குறியியலின்  (semiosis) மொத்தச் செயல்பாட்டையும் சில சொற்களில் தொகுத்துக் கூறிவிடுகிறது. நனவு, தொடர்புறுத்தக்கூடிய மொழியாக ஆவதற்கு, தன்னை குறிப்பிட்ட கருத்துக்களாக ஆக்கிக் கொள்ளும் செயல்பாடே குறியியல் எனலாம். 

நாமெல்லாம் ஒரே உலகத்தில்தான் வாழ்கிறோம், ஒரு சமூகத்தின் பகுதியாக இருக்கிறோம். ஆனாலும் நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை வெவ்வேறு விதமாகத்தான் முன்வைக்கப்படுகிறது. நாம் சிலவற்றை முக்கியமானதாகக் கருதுகிறோம், பிறிதொருவர் முக்கியமெனக் கருதும் சிலவற்றை நாம் கவனிப்பது கூட கிடையாது. இவ்வுலகைப் படைத்த இறையைப் போலவே நாம் ஒவ்வொருவரும் நம்முடையதேயான ஒரு உலகை படைத்தபடியே இருக்கிறோம்.

இந்தப் படைப்புச் செயல் எப்போதும் நமது நனவை குறிப்பிடுவதிலிருந்து துவங்குகிறது. ஒரு புள்ளியில் தொடங்கி அதை மேலும் விரிவாக்க இது உதவுகிறது. முதல் படியாக, ‘இது என்ன?’ ‘இது யார்?’ என்பது போன்ற கேள்வியை நனவு தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறது. அந்தக் கேள்வி ஒரு தேடலை உருவாக்குகிறது. தெளிவு பிறப்பதற்கு அது தேவையாகிறது. ‘இது’ என்பது தெளிவாக புரிவதில்லை. மனதிற்கு உடனடியாக தோன்றுவது தெளிவாக இல்லை. ‘இது’ என்பதை தகுதிப்படுத்துகையில் தெளிவு பிறக்கிறது.

‘இது என்ன?’ என்ற கேள்வியில் இரண்டு கூறுகள் உள்ளன. ஒன்று ‘இது’ எனும் தன்மை, மற்றொன்று ‘என்ன?’ என்பது. என்ன என்பது இது என்பதன் தகுதிப்பாடு. ‘இது ஒரு குடம்’ என்று சொல்கையில் ‘இது’ என்பது ஒரு குடத்தின் குறிப்பிட்ட பண்புகளால் தகுதி பெறுகிறது. இப்போது ‘இது’ என்ன என்பதை அறிகிறோம். தெளிவு ஏற்படுகிறது.

மனம் அதோடு நின்றுவிடுவதில்லை. இன்னொரு ‘இதை’ முன்வைக்கிறது. ஆக, இன்னொரு கேள்வி பிறக்கிறது: ‘அந்த ஒலி என்ன?’ அதற்கு பதிலளிக்கவில்லை என்றால் மனம் திருப்தியடைவதில்லை. ‘அது ஒரு குழந்தையின் அழுகை’ என்று எண்ணுகிறோம். நிறைவு ஏற்படுகிறது

‘இது’ என்பதை மனம் முன்வைத்துக் கொண்டே இருக்கிறது. முதலில் அது தெளிவற்றதாக இருக்கிறது. பிறகு மனம் ஒரு விளக்கத்தை அளிக்கிறது. ஒரு இயல்நிகழ்வை, ஒரு ‘இதை’ விளக்க, புதிய அனுபவத்தை ஒத்த முந்தைய நினைவுகள் வரவேண்டியிருக்கிறது. இன்னும் தெளிவு பெற, புதிய சூழலை புரிந்துகொள்ள நமது புலன்களையும் பயன்படுத்துகிறோம்.

இவையெல்லாம் குறியியலை சார்ந்தவை. அதில் மூன்று நான்கு வளர்ச்சிப் படிநிலைகள் உண்டு. ஒன்று நமது அடிப்படை வேட்கைகளோடும் ஆர்வங்களோடும் தொடர்புடையது. ஒவ்வொரு அனுபவமும் நிகழ்ந்துமுடிந்த பின்னரே அது தன்னை வெளிப்படுத்துகிறது. சொற்பொருள் ஆய்வியலில் (semantics) இதற்கு நடைமுறையியல் (pragmatics) என்று பெயர். மனம் சேகரிக்கும் ஒவ்வொரு தகவலும் ஒரு குறிப்பிட்ட தேவையை நிறைவுசெய்யவே. அது உயிரியல் தேவையாகவோ, உளவியல் தேவையாகவோ, உடலியல் தேவையாகவோ, தர்க்கவியல் தேவையாகவோ, கணக்கியல் தேவையாகவோ, சமூகவியல் தேவையாகவோ இருக்கலாம். மனதை ஒரு குறிப்பிட்ட திசைக்கு திருப்பும் ஆர்வத்தை தூண்டுவதன் மூலமும் அதன் செலுத்தும் ஆற்றலை அதற்கு அளிக்கும் நிகழ்வு வழியாகவும் தேவை நிறைவடைகிறது. நடைமுறை எங்கு நனவில் நுழைகிறது என்பதை நாம் அறியவே முடிவதில்லை. ஏனெனில், அது நம் நனவிலியின் ஆழத்திலிருந்து வருகிறது. இந்திய உளவியலில் இதனை வாஸனா என்பர். நனவிலியில் பொதிந்து கிடக்கும் நினைவுகளும் வேட்கைகளுமே அது. உங்கள் கவனத்தைக் கவரும் மணியோசை போல, குறிப்பிட்ட ஆர்வத்தின் விதை முளைவிடத் தொடங்கியதும் நனவின் வாயிலில் அது வந்து நிற்கும். அதையே ‘இது’ என நீங்கள் கண்டுகொள்கிறீர்கள். அதன்பின் ‘இது என்ன?’ என்ற கேள்வி எழுகிறது.  

உங்களது எண்ணங்கள் எல்லாம் நுட்பமானவை. முன்வார்ப்பு செய்யப்பட்ட கருத்துக்கள். நீங்கள் ஒரு நூலகர் என்றால், ஒரு குறிப்பிட்ட நூலை தேடித் தரும்படி உங்களிடம் கோரப்பட்டால், நீங்கள் ஒரு பட்டியலில் அதை தேடலாம். ஒரு அறையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் அந்தப் புத்தகம் உள்ள அலமாரியின் எண் உங்களுக்கு கிடைக்கும். அதுபோல நம் மனமும் ஒரு வகையான பட்டியலை பயன்படுத்துகிறது. மனம் இடும் எல்லா பெயர்களுடனும் தகவல் குறிச்சொல் இணைக்கப்படுகிறது. புறத்தே உள்ள ஒவ்வொன்றிற்கும் அதற்கிணையான அக ஒளிர்வு ஒன்று இருக்க வேண்டும். அதை உள்ளிருந்து எடுத்து புலன்களால் அளிக்கப்படும் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒன்றுடன் ஒன்று பொருந்தினால், முன்வைக்கப்பட்டதை பிரதிபாவுடன் – இணையான கருத்துடன் – அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். அவை ஒன்றுடன் ஒன்று பொருந்திப்போன பின் அகத்திலிருந்து வந்ததற்கும் வெளியே உள்ளதற்கும் பிரிவென்பதே இல்லை. அதன் பின் அகமும் புறமும் இணைந்ததையே நீங்கள் உணராதபடி உங்கள் மனதில் அது ஒரு இடையறா முழுமையாகிறது. 

ஆக, நடைமுறையிலிருந்து தகவுப் பொருத்தத்திற்கு (from pragmatics to logistics) செல்கிறீர்கள். அமைப்பு ரீதியாக உங்கள் கருத்தாக்கத்தை பொருளுள்ளதாக ஆக்குவதே தகவுப் பொருத்தம். எடுத்துக்காட்டாக, பொருளும் அதன் கணிப்பும் தொடர்புறுத்தப்படும்போது உங்கள் கணிப்பு உங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். அதன் பின், பிறிதொருவருக்கு ஒன்றை கடத்த நேரிடும்போது அதை எப்படி வெளிப்படுத்தப் போகிறோம் என்பதை நீங்கள் முடிவுசெய்கிறீர்கள். அதுவே தொடரமைப்பியல் (syntax). நடைமுறை, தகவுப் பொருத்தம், தொடரமைப்பியல் ஆகிய மூன்றும் இருந்தால்தான் குறியியல் செயல்பாடு நிறைவடைகிறது. ‘இது ஒரு குடம்’ எனும் எளிய தொடருக்கும் இது பொருந்தும்.

இப்போது முதற்பாடலுக்கு செல்வோம். அதில் ‘அறிவிலும் ஏறி’ என்றார் குரு, அதாவது அறிவெல்லை கடத்தல் அல்லது அறிவின் இழைகளுக்குள்  நுழைதல் என்றார். ‘ஏறி’ என்பதற்கு கடத்தல் என்றும் உள்ளுறைதல் என்றும் பொருள் கொள்ளலாம். புலன்களை அடக்கி உங்கள் தன்முனைப்பை ஒப்பளித்து கருவினை பக்தியுடன் மீண்டும் மீண்டும் விழுந்து வணங்க வேண்டும் என்கிறார் குரு. கரு என்பது இந்த அண்டமும் அதன் அக இணையும் தோன்றியதற்கு காரணமாக இருப்பது.   

அதை இறை என்று விளக்குவதற்கு பதிலாக, தத்துவார்த்தமான ஒரு மதிப்பீடை மேற்கொள்கிறோம். மீகாரணம் (supreme cause)  என்பது முழுமுதல் குறித்த மேன்மையான ஒரு கருத்து. பக்தியுடன் அதை மீண்டும் மீண்டும் வணங்க வேண்டும் என்பது பிரபஞ்ச தளத்தில் சொல்லப்படுவது. அன்றாடத்தில், இயல்நிகழ்வுத் தளத்தில் அதுவே ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் வடிவங்களில், ‘இது என்ன?’ என்ற எளிய கேள்வியாக நம் வாழ்வில் தோன்றுகிறது.

மனதின் வினவும் கூறைத் தொடர்ந்து நினைவு வரவழைக்கப்படுகிறது. நினைவு பொருத்தமான கருத்தை மேல்தளத்திற்கு கொண்டு வருகிறது. அது நம் முன் வைக்கப்படும் பொருளோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது. அதன் பின் அதனை நீங்கள் கணிக்கிறீர்கள். பின் உணர்கிறீர்கள். மனதின் நான்கு உறுப்புகளான விசாரணை, நினைவு, தீர்ப்பு, மதிப்பீடு ஆகிய நான்கும் தொடர்ந்து வருகின்றன. மதிப்பீடு நிகழ்ந்தபின்னரே நடைமுறை முன்வைக்கப்படுகிறது. உண்மையில் மனம் மொத்தச் செயல்பாடுகளிலும் ஈடுபட அதுவே காரணம் என்றாலும் அது இறுதியாகவே வருகிறது.

ஒரு குயவன் குடம் வனையக் கருதுகையில் குடம் என்பது எதிர்காலத்தில் இருக்கிறது. அவன் இன்னும் அதை செய்துமுடிக்கவில்லை என்றாலும் எதிர்காலக் குடத்தின் இயல்கை அவனை உந்துகிறது. ஒரு பொருளின் இன்மை – அபா*வம் – நம் மனதில் ஒரு இயல்கையாக இருக்கிறது. அந்த இயல்கையே நம்மை நிகழிலிருந்து எதிர்காலத்திற்கு கொண்டு செல்கிறது. பொதுவாக, நாம் கடந்தகாலத்திலிருந்து நிகழ்காலம் வழியாக எதிர்காலத்திற்குச் செல்வதாக எண்ணுகிறோம். ஆனால் அது அவ்வாறு நிகழ்வதில்லை. எதிர்காலம் என்பது மாறிக்கொண்டே இருப்பது. அது உங்களை ஒரு இயல்கையிலிருந்து இயல்பாக்கம் நோக்கி நகரச் செய்வது. அப்படி இயல்பாக்கம் பெறுவது பின்னர் உறைந்து அழிவிலா நிகழ்வாக, நிறைவேறிய இயலுண்மையாக நிலைபெறுகிறது.

இந்தச் செயல்பாடு முழுவதும் கணம் கணமென உங்களுக்கு நிகழ்கிறது, ஒவ்வொரு நாளும் இது நடைபெறுகிறது என்பதைக் காணும்போது உங்கள் அகத்தையும் புறத்தையும் நீங்கள் இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். இந்தப் பாடல் இதை மிக எளிய ஒன்றாகக் காட்டுகிறது: “இது ஒரு குடம்”, ‘இது’ என்பது பகுத்தறிய முடியாதது, ‘குடம்’ என்பது தகுதிக் கூறு.” மொத்த உலகின் படைப்பிலும் நீங்கள் பங்கேற்கிறீர்கள். எனது உலகிற்கு அதற்கேயான பண்பு உள்ளது; உங்கள் உலகின் பண்பு வேறு. அறிவெல்லை கடந்ததை ஆராய்பவனது உலகு என்னுடையது; நிஜின்ஸ்கியுடையதும், வான் ஹாஹினுடையதும் அறிவெல்லை கடந்த அழகியலாளருடையது; தோரோவுடையதும் விட்மானுடையதும் கவிஞர்களுடையது. உங்களுடையது வேறொரு உலகமாக இருக்கலாம். நோயாளிகளது வலிகளை தீர்ப்பதும், அவர்களை நலம் பெறச் செய்வதுமே ஒரு மருத்துவருக்கான உலகம். பிறருக்கு வணிகம்,  சிலருக்கு பொருளாதாரம். எங்கிருந்தென்றில்லாமல் பலதும் முளைத்தெழுந்து நமது தனிப்பட்ட விழுமியங்களாக ஆகின்றன.

நுட்பமான மனதிலிருந்து திண்மையை உருவாக்க முடியும் என்பதை பலராலும் புரிந்துகொள்ள முடிவதில்லை. எடுத்துக்காட்டாக, அங்கிருக்கும் தட்டச்சுப் பொறி திண்மை கொண்ட ஒன்று. தூக்கினால் கனமாக இருக்கிறது. தொடுகையில் திடமாக இருக்கிறது. இயக்குகையில் செயல்படுகிறது. அதை இயக்கி தேவையான விளைவை உங்களால் உருவாக்க முடியும். அது திட்பம் கொண்டதுதான் என்றாலும் அந்தத் திண்மை, அதன் எடை போன்றவை, உங்களது நனவில்தான் உணரப்படுகிறது.

அது உங்களுக்கு மட்டும் ஒரு திண்மை அல்ல, எனக்கும்தான். ஆக, நாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளக் கூடிய பொதுத் திண்மை. பொதுவான திண்மை என்பது அனைத்து மனங்களும் பங்கெடுக்கும் செயல்பாடு. மனங்களின் ஒருமை காரணமாக, பரிமாற்ற ரீதியாக (in a transactional sense) நாம் முழுமையாக ஒருவருக்கொருவர் சொல்வதை ஏற்கிறோம். நாம் இணைந்து உருவாக்கும் பொதுத் திண்மை நம் உலகிற்கு பரிமாற்ற ரீதியான தகுதிப்பாட்டை அளிக்கிறது. விழிப்பு நிலையில், இருவர் இணைந்து செயல்படுகையில் அவர்கள் பொதுவான திண்மையை கைக்கொள்கிறார்கள். குறியியல் செயல்பாடு வழியாக அகவயக் கூறும் புறவயக் கூறும் அவர்களது அறிவில் இணைகிறது என்பதை அவர்கள் அறிவதில்லை.

இந்தக் கருத்தை தத்துவவாதிகள் பல்லாயிரம் பக்கங்களில் விளக்க முயன்றுள்ளார்கள். மொத்தத்தையும் ஒரு சிறு பாடலின் முதல் பாதியில் விளக்கிவிடுகிறார் நாராயண குரு: “‘இது ஒரு குடம்’; அதில் ‘இது’ என்பது தெளிவற்றது; ‘குடம்’ அதை தகுதிப்படுத்தும் கூறு”. இவை இரண்டையும் இணைத்து உருக்கொண்ட குடம் எனும் கருத்தை நீங்கள் அடைகிறீர்கள். அந்தத் திண்மை பொதுவானது. அதைக் கண்டதுமே நீங்கள் உண்டாக்குவது ஒரு நிகழ்காலத்தை மட்டுமல்ல; அந்த அனுபவம் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிகழ்வாக உங்கள் வாழ்வில் உங்களுடன் இருக்கப்போவது என்பதால் கடந்தகாலத்தையும் நீங்கள் ஏற்படுத்திவிடுகிறீர்கள். அது உறைந்து என்றென்றுக்குமாக இருக்கப்போவது.

ஆக, கடந்தகாலம் முழுவதும் எதிர்காலத்தின் வாக்குறுதிகளாலும் இயல்கைகளாலும் இக்கணத்தில் உருவாக்கப்படுகிறது. இது பெரும் விந்தை அல்லவா? ஒரு பெரும் மந்திரவாதிதானே இதை செய்யமுடியும்? அது நீங்களேதான். ‘நீங்கள்’ என்றால் உங்களது தன்முனைப்பு அல்ல. எளிய தன்முனைப்பையும் ஒரு கருவியாக உங்களில் உள்ள மந்திரவாதி பயன்படுத்திக்கொள்கிறார். அந்த மந்திரவாதி எறும்பிலும், பூச்சியிலும், வண்டிலும், பறவையிலும், முட்டாளிடமும், அறிவாளியிடமும் இருப்பவர்தான். தொடர்ந்து அனைத்தும் உருவெடுப்பதை நிகழ்த்திக்கொண்டிருப்பவர்.

அடுத்த பாடலில், ‘இது’ என்பதை இன்னும் தெளிவாக அறியவேண்டும் என்று கூறுவார் குரு. அது போற்றுதலுக்குரியது, உங்கள் உள்ளே உள்ள விந்தை அது. கோவிலில் உறைவதாக, உங்களுக்கு வெளியே உள்ள ஒரு பர வஸ்துவாக இறையைக் காண்பதைவிட, இவ்விதமாக புரிந்துகொள்ளும்போது அந்த இறையுடன் மிகவும் நெருக்கம் கொள்கிறீர்கள். இங்கு நீங்களேதான் அது, கணம் கணமென உங்களில் நிகழ்வது. படைப்புச் செயலே இங்கு-இப்போது, உங்கள் மனதில், உங்கள் அறிவில், உங்கள் புரிதலில், உங்கள் உணர்வில் நிகழ்வதால், படைப்பாளியை நெருங்கிவிடுகிறீர்கள். 

Leave a comment