அரநொடியாதியராளியார்ன்னிடும் தே
ருருளதிலேரியுருண்டிடுன்னு லோகம்;
அறிவிலநாதியதாய் நடன்னிடும் தன்
திருவிளயாடலிதென்னறிஞ்ஞிடேணம்
(ஆத்மோபதேச சதகம் – பாடல் 34)
அரைநொடி முதலாய ஆரக்கால்கள்கொண்ட
தேருருளைகளின் மேலமர்ந்து உருளும் உலகு
அறிவிலெப்போதும் நிகழும்
முதலென்பதில்லா திருவிளையாடல் இது
*
நாம் உணரும் உலகு பற்றி எண்ணிப்பார்க்கும்போது, நம்மைச் சுற்றிலும் பெருவெளி ஒன்றிருப்பது நமக்குத் தெரிகிறது. ஒரு வெளியின் மையத்திலேயே நாம் எப்போதும் இருக்கிறோம். அங்கிருந்து எத்திசையில் நோக்கினாலும் தொடுவானம் ஒரே தொலைவில்தான் இருக்கும். தொடுவானை நாம் ஒருபோதும் நெருங்க முடியாது; அதேபோல் மையத்தை விட்டு விலகவும் இயலாது. என்ன முயன்றாலும், என்ன வேகத்தில் ஓடினாலும், தொடுவானம் எல்லைகட்டிய வெளியின் மையத்தில்தான் நீங்கள் இருப்பீர்கள்.
ஏதென்று அறியமுடியாத அப்பெருவெளி தொடுவானத்திற்கு அப்பால் உள்ளது. அதை மறுபுறம் என்று மட்டுமே சொல்லலாம். இடம்சார் சூழலில், இதுவே நமக்குப் பின்னாலும் முன்னாலும் உள்ளது. வெளியின் ஒரு பகுதியையே நாம் உணர்கிறோம் என்றாலும் அந்தப் பகுதி ஒரு முழுமையைச் சார்ந்தது என்பது நமக்குத் தெரிகிறது.
வெளி என்பது உலகு குறித்த சித்திரத்தின் ஒரு பாதி மட்டுமே. மற்றொரு பாதி இக்கணத்தை உணர்தல். இடம் குறித்த நம் அனுபவத்தை ஒரு எல்லைக்குள் அடைக்கும் தொடுவானைப் போலவே, காலம் என்பதன் தொடுவான் ஒன்றும் உள்ளது. வெளியில் முன் பின் உள்ளது போல காலத்தில் கடந்தகாலமும் எதிர்காலமும் உள்ளன. அவற்றிற்கிடையே நிகழ்காலம் உள்ளது.
இந்தியத் தொன்மங்களில், காலம் என்பது சூரியனின் மகனான விவஸ்வான் என்று கருதப்படுகிறது. சூரியனுக்கு இயல்பாகப் பிறப்பது காலம். கதிரவன் எழுந்து மறைவதனால் நாம் விடிகாலை, பகல், நண்பகல், பிற்பகல், மாலை, நடுஇரவு ஆகியவற்றை உணர்கிறோம். காலையும் மாலையும் என காலம் என்பது கதிரவனின் ஒரு சுழற்சியாக கருதப்படுகிறது. காலன், அல்லது காலம், கதிரவனின் மகனாகக் கருதப்படுவது இதனால்தான்.
புனித அகஸ்டின் அவரது ‘Confessions, Book II’-இல் காலத்தைப் பற்றி பேசுகிறார். காலம் ஒழுகிச் செல்லும் புதிரை, முடிவின்மையில் நிகழும் மாற்றத்தை அவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. “முடிவின்மையின் இறையே, காலத்தை ஏன் துளித்துளியாக ஒழுகச் செய்கிறாய்?” என தெய்வத்திடம் கேட்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் நேரத்தை அறிய நாழிகைக் கண்ணாடி (hourglass) பயன்படுத்தப்பட்டது. “ நீ அழைக்கையில், மணித்தியாலங்கள் பறக்கின்றன” என்றார் அவர். அவரது காலத்திலிருந்தே காலம் என்பது மேலைச் சிந்தனையாளருக்கு ஒரு பிரச்சினையாக, புதிராக இருந்து வருகிறது.
காலத்தை ஆராய்ந்த அகஸ்டின் கடந்தகாலம் என்பது என்ன என்று கேட்கிறார். அப்படி ஒன்று இருக்க முடியுமா? இல்லை என அவர் வாதிடுகிறார். நிகழ்ந்தவற்றைப் பற்றிய நினைவுகளே நம்மிடம் இருக்கின்றன. நினைவு என்பது நிகழ்காலத்தில் மீள நிகழ்ந்தால் மட்டுமே நினைவென்றாகிறது. நீங்கள் முன்பு வாழ்ந்ததை மீட்டிப்பார்த்து நிகழ்காலத்தில் அதை மீண்டும் உணரும்போது அதன் கூறுகள் மங்கிப்போயிருப்பதை காண்கிறீர்கள். முன்பு உயிருடன் இருந்த ஒன்று இப்போது சடலமாக இருக்கிறது. அதன் பொருளற்ற தன்மையே இப்போது ‘கடந்தகாலம்’ ஆகிறது.
‘எதிர்காலம்’ என்றும் ஏதுமில்லை. எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நாம் கற்பனை செய்து பார்க்கையில் அக்கற்பனையின் உள்ளடக்கமே எதிர்காலம் என்றாகிறது. நிகழ்காலத்தில்தான் நாம் கற்பனை செய்கிறோம் என்பதால், காலம் நிகழ்காலம்தான். ஆனால் அது எத்துணை பெரிது? வெளியை நம்மால் அளக்கவாவது முடியும், அளந்து இரண்டு சதுரமைல் அல்லது பத்து சதுரமைல் என்று கூற முடியும். ஆனால் நிகழ்காலம் என்பது எத்துணை பெரிது? அத்துடன், ஒரு கணத்தை அளக்க நீங்கள் முயலும்போதே அரைக்கணம் உங்களிடம் இருந்து நழுவிச் சென்றுவிடுகிறது. அது ஒரு முழுக்கணம் கூட அல்ல.
நாராயண குரு அரை நொடி என்கிறார். காலம் என்பது அரை நொடிகளால் ஆனது. பௌத்த மதத்தின் விஞ்ஞானவாதம், இவ்வுலகு ஒரு கணத்தின் மூன்றில் ஒரு பகுதியில் உருவாகிறது என்றும், இன்னொரு பகுதி உணர்வாக எஞ்சுகிறது என்றும், மீதமுள்ள ஒரு பகுதியில் மறைகிறது என்றும் கூறுகிறது. நாம் அதை கண்டுணர்வதற்குள் முழுகணத்தின் மூன்றில் ஒரு பகுதி காணாமல் போய்விட்டிருக்கும்.
காலத்தை கருதும்போது, முடிவின்மையின் அடிப்படையிலேயே நாம் சிந்திக்க வேண்டும். முடிவின்மையில், விரைந்து மறையும் ஒரு கணத்தை நாம் உணர்வது பெரும் புதிர்தான். மிக எளிதான ஒன்றாக நமக்குத் தோன்றினாலும், தத்துவவாதிகளையும் அறிவியலாளரையும் ஒரே அளவில் குழப்பத்திற்கு ஆளாக்குவதில் காலம் எனும் புதிர் போல் வேறொன்றில்லை. காலம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்; ஆனால் அதே சமயம் காலத்தை அறிந்த எவரும் இங்கில்லை. சுவரில் முட்கள் சுற்றிவரும் கடிகாரம் மட்டுமே நீங்கள் அறிந்தது. காலம் என்பது அதுவல்ல. உலகின் மிகச்சிறந்த மனங்களெல்லாம் அது என்ன என்பதை அறிய முயன்றவைதான்.
காத்திலும் வெளியிலும் இரண்டு வகைமைகளை நிறுவிவிட முடியும் என்று நியூட்டன் நம்பினார். அங்குதான் சிக்கல் தொடங்கியது. அவரைத் தொடர்ந்து வந்த லாரென்ட்ஸின் சுருக்கங்களும் (Lorentz’ Contractions) ஐன்ஸ்டீனின் தொடர்புவாதமும் (special theory of relativity) நியூட்டனின் அறுதியான காலம் (absolue time) எனும் கருத்துருவை பொய்க்கச் செய்தன. Minkowsky கால-இட அச்சின் சுழற்சி (time-space axis) பற்றி விளக்கினார். இவையெல்லாமே மிகச்சிக்கலானவை.
அகஸ்டினது குழப்பம், கால ஒழுக்கு சார்ந்த குழப்பம் என்று பின்னர் வந்தவர்களால் அடையாளப்படுத்தப்பட்டது: காலம் எதிர்காலத்திலிருந்து நிகழ்காலத்திற்குச் செல்கிறது, எதிர்காலம் எனும் மறைவுப் பகுதி ஒன்றிலிருந்து காலம் தோன்றுகிறது என எண்ணுகிறீர்கள். Alice in Wonderland-இல் வரும் முயல் போல அது வந்து “நேரம் இல்லை, நேரம் இல்லை” என்று சொல்லிவிட்டு ஒளிந்துகொள்கிறது. அந்த முயல் எங்கிருந்து தோன்றியது? அலிஸுக்குத் தெரியாது. எங்கே சென்றது? அதற்குள் வளைக்குள் மறைந்துவிட்டது. தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு “நேரம் இல்லை” என்று கூறியது. அது நிகழ்காலம் மட்டுமே. முயல் திரும்பச்சென்றது மட்டுமே காலத்தின் முழுக்கதை. அகஸ்டினை வாசிக்கும்போது, காலம் எனும் சிக்கலை தீர்த்து வைக்கும்படி இறைவனை அவர் வேண்டி இறைஞ்சுவது போல் தோன்றும்.
வேறு சிலர், அவர் காலம் ஒழுகிச்செல்வதாக எண்ணுவதுதான் சிக்கல் என்கின்றனர். காலம் எனும் ஆழிக்குள், கணம் கணமாக வென்று முன்னோக்கி நடப்பதாக நாம் எண்ணுகிறோம். வெறுமனே இருக்கும் முடிவற்ற ஆழியில் நாம் நுழைகிறோம் என எண்ணுவது ஒரு பிழை. நாம் அசைவற்றிருப்பதாகவும் காலமெனும் ஓடை நம்மைக் கடந்து சென்றுகொண்டிருப்பதாகவும் எண்ணுவது மற்றொரு பிழை. இவையெல்லாமே தத்துவவாதிகளின் குழப்பம். அறிவியலாளரின் குழப்பமோ அதைவிட பன்மடங்கு பெரியது.
தூய கால அளவு (pure duration) என்பதை பெர்க்ஸன் அறிமுகப்படுத்தினார். காலம் என்பதை ஒரு இயந்திரத்தோடு ஒப்பிட்டு அதை இன்னும் கேவலப்படுத்திவிட்டோம் என்கிறார் அவர். நம் வசதிக்காக காலத்தை காலவெளிக்குள் அடக்கி, முத்திரையிட்டு வைத்திருக்கிறோம் என்பது அவர் கருத்து. கால அளவும் இதுவும் ஒன்றல்ல.
இயந்திர காலம் (machine time) என்று ஒன்று உண்மையில் உள்ளதா? ஹோனலூலுவிலிருந்து ஃபிஜிக்கு விமானத்தில் பயணிக்கும்போது வழியில் நமது நவீன – பொதிந்துவைத்த – காலம் என்பது, விளக்கவியலாத வகையில், காணாமல் போய்விடுகிறது. விமானத்தில் கண்களை மூடியபடி அமர்ந்து காலத்தை பற்றிக் கொள்ள முயலலாம். ஆனால், தரையிறங்குகையில் முழு நாள் ஒன்று இல்லாமல் போய்விடுகிறது. இது என்ன அபத்தம்?
காலத்தை எப்படி அளப்பது என்பதும் அகஸ்டினுக்கு புதிராக இருந்தது. வெளியை அளப்பதுபோல உங்களால் காலத்தை அளக்க முடியாது. ஒரு மேசையை அளவுகோல் கொண்டு அளந்துவிடலாம். நிகழ்வுகளை அப்படி அளந்துவிட முடியாது. அப்படி முயன்றீர்கள் என்றால், நிகழ்வின் சில பகுதிகள் அதற்குள் கடந்துசென்றுவிட்டிருக்கும். நீங்கள் அளப்பதற்காக அவை நிற்பதில்லை, மாறிக்கொண்டே இருக்கின்றன. மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கையில், ஒப்பிடுவதற்கு ஒரு அடிப்படை இல்லாதபோது, மாற்றத்தை எப்படி அளக்கமுடியும்?
உலகின் முதல் கடிகாரமான கதிரவன் ஒரே இடத்தில் இருப்பதில்லை. மொத்த சூரிய மண்டலத்தோடு மிக வேகமாக நகர்ந்தபடியே இருக்கிறது. சூரிய மண்டலத்தில் இருக்கும் கோள்கள் அத்தனையும் தமக்கென தனி இயக்கத்தை கொண்டிருப்பவை. இந்த சூரிய மண்டலம் அமைந்துள்ள வான்மண்டலம் முற்றிலும் வேறுவகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அணு அமைப்பிலிருந்து வான்மண்டல அமைப்பு வரை ஒவ்வொரு அமைப்பும் அதனதற்குப் பொருத்தமான அளவைகளை கொண்டது. மணிக்கு ஐநூறு மைல் வேகத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானத்தில் அமர்ந்தபடி காற்றில் எதையும் வீசினீர்கள் என்றால் அது கீழே விழுவதற்குள் உங்களிடமிருந்து குறைந்தது ஐந்துமைல் பின்னால் சென்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழ்வதில்லை. உங்கள் கைக்கே திரும்ப வருகிறது. விமானத்திற்கு வெளியே அது நிகழலாம், ஆனால் விமானத்தினுள் அது நடப்பதில்லை. உட்பக்கம் உள்ள வெளி, விமானம் வேகமாக பறந்துகொண்டிருக்கும் வெளியிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. சூரிய மண்டலத்தில் இருக்கும் கோள்களுக்கும் இதுவே நிகழ்கிறது: எவ்வளவு வேகமாக நகர்ந்தாலும் உள் அமைப்பில் ஒரு வகை எதிராற்றல் இருக்கிறது, அங்கே ஒரு நடுநிலைத் தேக்கம் இருக்கிறது.
அமைப்பின் ஒவ்வொரு படிநிலையிலும், நீங்கள் அளக்க முயலும் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு திசையங்கள் (vectors) பயன்படுத்தப்படுகின்றன. அதிகமானவற்றை கணக்கில் கொள்ளும்போதெல்லாம், சிக்கல் அதிகமாகிக் கொண்டே போகிறது. இறுதியில் எல்லாம் வெறும் குழப்படியான மாற்றத்திற்குள்ளாகிக் கொண்டிருக்கின்றன என்பதைத் தாண்டி வேறேதுமில்லை. ஒவ்வொன்றையும் நிறுவ முயன்று நீங்கள் மனம் பிறழலாம். அவ்வளவே.
“இதைப் பற்றி குழப்பிக்கொள்ள வேண்டாம். அனைத்தும் தெய்வீக ஆடல் மட்டுமே. அதைப் பற்றி ஏன் வருந்துகிறீர்கள்? உலகைப் படைத்து விளையாட எண்ணியது யாரோ, அவர் இது இப்படி இருக்கட்டும் என்றுதான் படைத்திருக்கிறார். ஆகவே, அமைதி பெறுக! இது ஒரு நகைச்சுவைதான்” என்கிறார் குரு. பழம்பெரும் ரிஷிகள் காலம் பற்றி கவலையே படவில்லை. அதைப் போற்றி ஒரு பாடலை மட்டுமே பாடினர். புனித அகஸ்டினால்தான் குழப்பம் தோன்றியது. தத்துவாதிகளின் சகாப்தத்தில் ஹென்றி பெர்க்ஸனும் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் ஒருவரை ஒருவர் வசைபாடுவதை காண்கிறோம்.
காலத்தை மற்றொரு பரிமாணமாகக் காட்ட முயன்றவர் ஐன்ஸ்டீன். ஒரு பொருளுக்கு வெளிசார் பொருத்தப்பாடு மட்டுமில்லாமல் காலம்சார் பொருத்தப்பாடும் உண்டு. அனைத்துமே கால-வெளித் தொடர்ச்சியில்தான் இருக்கின்றன. நாராயண குரு ஐன்ஸ்டீனையோ அவரது சார்பியல் கோட்பாட்டையோ படித்திருக்கவில்லை. ஆனால் மொத்தமும் கணங்களின் துளிகளால் ஆனவை என்று கண்டார். உலகை உருளைகள் கொண்டு நகரும் ஒரு தேராக உருவகித்தார். அந்தத் தேருருளைகள் அரைக்கணங்களென்னும் ஆரக்கால்களால் ஆனவை. அரைக்கணங்களே உந்து சக்தியாக அமைந்து முடிவிலாது சுழன்றுகொண்டிருக்கிறது உலகு.
இப்பாடலில் குரு மாற்றத்தை எண்காரணியாகவும் (numerator), முடிவிலாமையை வகுத்தல் காரணியாகவும் (denomiator) முன்வைக்கிறார். முதல் இரு வரிகளில் சென்று மறையும் காலத்தைப் பற்றியும் பிற்பகுதியில் முதலற்றதைப் பற்றியும் பேசுகிறார். ஒன்றை ஒன்று நாடும் இரண்டு காரணிகளும் மிக அழகாக இணைத்துக் காட்டப்படுகின்றன. அதன் வழியே, காலம் பற்றிய குழப்பம் ஏதுமின்றி முழுமையின் தெய்வீக இருப்பை நீங்கள் உணர்கிறீர்கள்.
இந்த ‘ஆதி’ என்பது என்ன? ஆதி என்பதற்கு முதலானவை என்று பொருள். நமது உலக அனுபவம் என்பது பெயராலும் வடிவாலும் ஆனது என்பதை ஏற்கனவே கண்டோம். பலவற்றையும் வடிவுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறோம். சிலவற்றை அவ்வாறு ஒருபோதும் செய்யமுடியாது. காட்டாக, இறை எனும் பெயரை எல்லோரும் கேட்டிருக்கிறோம். ஆனால் இதுதான் இறை என்று எவராலும் அடையாளப்படுத்திவிட இயல்வதில்லை. தவறான அடையாளப்படுத்தல்கள் ஏராளம் உள்ளன என்பதும் உண்மைதான். பலரும்/பலதும் தெய்வம் என அழைக்கப்படுகின்றனர்/ன. உண்மையில் தெய்வம் எங்கோ அமர்ந்தபடி இதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கக் கூடும். “என்னை நான் ஒருபோதும் வெளிப்படுத்தப்போவதில்லை. அவர்கள் எதையெல்லாம் பார்க்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதையெல்லாம் பார்த்துக்கொள்ளட்டும்” என்று இறை சொல்லக்கூடும். தெய்வமே, நீ ஏன் உன்னை வெளிக்காட்ட விரும்பவில்லை? “ஏனெனில், நானல்ல. நானாக இருந்தால் யாரோ ஒருவர் என்னை கண்டடைந்துவிடுவார். நானல்ல, இருந்தும் இந்த மடையர்கள் எனக்கு பல பெயர்களை கற்பனை செய்து வைத்திருக்கிறார்கள். அது அவர்கள் பிழை. நான் என்ன செய்ய?”
இப்படியாக, அடையாளமில்லாத பல்லாயிரக்கணக்கான பெயர்கள் உள்ளன. அதே போல் பற்பல மாய வடிவங்களும் உள்ளன. அவை என்ன என்று நமக்கு துல்லியமாகத் தெரியாது. ஆனால் நாம் தோல்வியை ஏற்க விரும்பாமல் அவற்றிற்கெல்லாம் பெயர்களை இட்டுவிடுகிறோம். காலம் என்றால் என்ன என்பதும் நமக்குத் தெரியாது. கடவுளுக்கே வெளிச்சம். வெளி குறித்து சிறிது அறிகிறோம். உதாரணமாக, இங்கிருந்து தெருக்கோடியில் இருக்கும் கடை வரை நடந்து செல்வது எப்படி என்று நாமறிவோம். நமக்குத் தெரிந்தது அவ்வளவே.
பெயரும்-வடிவும், வெளியும்-காலமும், வினையாற்றுபவரும்-வினையும். இப்போது நான் பேசிக்கொண்டிருக்கிறேன், ஆகவே நான் ஒரு நடிகன். நான் செய்வது நடிப்பு. உலகைப் பற்றி சிந்தித்தால், யார் அதை இயக்குவது என்றும் அதன் இயக்கம் எப்படி என்பதையும் சிந்திக்க வேண்டும். காரண-காரியம் இருக்கிறது. காரணத்திலிருந்து முளைக்கும் விளைவு என்று எல்லாவற்றையும் தொடர்புறுத்த வேண்டியுள்ளது. காரணம் எங்கு விளைவாகிறது என்பதை துல்லியமாக நாமறிய முடியாது. காரணமாக இருப்பது பழமா, விதையா, அல்லது முளையா? அவையெல்லாம் விளைவும் அல்லவா? உண்மையில் நாமறிய மாட்டோம் என்பதால் இவையெல்லாமே நாம் உண்டாக்கும் தன்னிச்சையான வேற்றுமைகள்தான் அல்லவா?
பிரபஞ்சத்தன்மையும் ஒற்றைத்தன்மையும். காடும் மரங்களும். எத்தனை மரங்கள் சேர்ந்தால் ஒரு காடாகும்? ஐம்பத்திரண்டு அல்லது ஐம்பத்து மூன்று? எத்தனையோ வகைமைகள். அவை அத்தனையையும் நமது நனவென்னும் சிறு ஒளிப்பொறியில் கூட்டி வைக்கிறோம். அவை எதற்கும் மெய்யான இருப்பு இல்லை, சிறு பொறியின் தற்காலிக ஏற்பு மட்டுமே அவை. மாபெரும் மாயாவி ஒருவரின் வித்தைதான் அவை. கால-வெளி, பெயர்-வடிவம், காரண-காரியம் போன்றவற்றின் வீழல்களை (projections) அது நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.
இது என் மகிழ்வு. நனவிலியில் மூழ்கி பின் நனவுக்குத் திரும்பி இவற்றையெல்லாம் படைத்து, அவற்றுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு பின் திரும்பிச் செல்கிறேன். பின் மீண்டும் வந்து அதையே செய்யத் தொடங்குகிறேன். அந்த நகைச்சுவையே தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நமது நனவின் மையத்தில் அமர்ந்திருக்கும் சின்னஞ்சிறு குழந்தைதான் தெய்வம். எங்கிருந்தென்றில்லாமல் அவர் ஒரு முடிவற்ற வெளியை படைக்கிறார். அரைநொடியிலிருந்து தூய கால அளவை உண்டாக்குகிறார். முடிவற்ற அந்த வெளியும் காலமும் கொண்டு வியத்தகு உலகொன்றை நிரப்பி மகிழ்கிறார்.
அந்த உலகிலேயே இருந்துகொண்டு ‘அவனோடு எனக்கு ஒத்துப்போகாது. அவன் மிக மோசமாகிவிட்டான்’ என்றும் ‘இன்று அனைத்தும் எதிர்மறையாகவே நிகழ்ந்தது. என்னை வருந்தச் செய்தது’ என்றும் இன்னும் ஒருபடி மேலே சென்று ‘ இனி என்னால் இந்த வாழ்வை தாங்க முடியாது. நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன். வேறு வழியே இல்லை’ என்றும் கதறுகிறோம். இவையெல்லாம் ஒரு நகைச்சுவைத் துணுக்கு என்பதை அறிந்தபின் உங்களை எண்ணியே நீங்கள் ஏன் நகைத்துக் கொள்ளக்கூடாது?
அது மட்டுமே நாம் செய்ய வேண்டியது.