ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் – 25

ஒருவனு நல்லதுமந்யனல்லலும் சேர்

ப்பொரு தொழிலாத்மவிரோதியோர்த்திடேணம்

பரனு பரம் பரிதாபமேகிடுன்னோ

ரெரி நரகாப்தியில் வீணெரிஞ்ஞிடுன்னு

(ஆத்மோபதேச சதகம் – பாடல் 25)

நன்மை ஒருவருக்கும் தீமை பிறருக்கும் 

பயக்குமெச் செயலும் அகத்திற்கெதிரியென அறியவேண்டும்

பிறர்க்குப் பெருவலி அளிப்போர் யாரும்

நரகெனும் எரிகடலில் வீழ்ந்தெரிவார் திண்ணம்

முந்தைய பாடலில் அனைவரின் மகிழ்ச்சிக்குமான நேர்மறை வழியைக் கூறிய நாராயண குரு இங்கே தீமையைக் கொணரும் எதிர்மறை வழியை வைத்து சமன்செய்கிறார். வரலாறு நெடுக, புனிதர்களும், மெய்யியலாளரும், மீட்பர்களும், ஆசான்களும் என மானுடத்தின்மேல் அன்புகொண்ட அனைவரும் தீமை எனும் சிக்கலை கையாண்டுள்ளனர்.

சென்ற மூன்று நான்கு பாடல்களில், பிறர் என்பதைக் குறிக்க ‘அபரன்’ எனும் சிறப்புச் சொல்லை பயன்படுத்தியுள்ளார் குரு. வேறொருவர் அல்லது பிறர் என்ற பொருளை அது தந்தாலும் சரியான கோணத்தில் பார்த்தால் அதன் பொருள் அதுவல்ல. ஆனால் இங்கே அவர் ‘பரன்’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார். இது நிச்சயமாக வேறொருவர் என்பதையே குறிப்பது. நம் வாழ்வில் அத்தகையதொரு இருமை வரும்போது பிறருடன் நமக்கு எந்தவிதமான உறவுப் பிணைப்பும் ஏற்படுவதில்லை. தீமை குறித்த வருத்தம் கூட நம்மில் ஆழமாக ஏற்படுவதில்லை. மனம் ஒருவித நோய் கொண்டதாக ஆகிறது; நாம் மந்தமானவர்களாக, பிறர்க்கு நாம் ஏற்படுத்தும் வலிகுறித்து உணரமுடியாத ஜடங்களென ஆகிவிடுகிறோம். தன்முனைப்பெனும் கூட்டுக்குள் சுருங்கிக்கொள்கிறோம். மெய்மையின் கடந்தநிலையும், அனைத்தையும் ஊடுருவும் அழகும் நமக்கு எட்டாதவை ஆகிவிடுகின்றன.

‘சத்யம் சிவம் சுந்தரம்’ என்பது முழுமுதலுக்கான வரையறைகளுள் ஒன்று. அனைத்திலும் பரவி இருக்கும் உண்மையே சத்யம்; முழுமையான இசைவு கொண்ட நன்மையும் அமைதியுமே சிவம்; மீயுயர் அழகென உணரப்படுவதே சுந்தரம். முழுமுதலின் பேரழகை அதன் உருக்கொண்ட நிலையிலும் உருப்பெறாத நிலையிலும் உணரும்போதுதான், அகம் பற்றிய ஒரு முழுமையான தரிசனம் ஒருவருக்கு கிட்டுகிறது. இந்த தரிசனத்தில் ஏதும் குறைபாடு இருப்பின், அறியாமை தன் நிழலை நம் மீது வீழ்த்துகிறது. அந்த நிழல் வலுப்பெறும்தோறும் உண்மை நம்மைவிட்டு அகன்றுகொண்டே செல்கிறது. இறைத்தன்மைகொண்ட நம் இயல்பிலிருந்து நம்மை பிரிக்கும் நமது உடல்சார் இருப்போடு நம்மை அடையாளப்படுத்திக்கொள்வது அதிகரித்தபடியே செல்கிறது. 

ப்ளேட்டோவின் உரையாடல்களில் ஒன்றான ‘திமேயஸி’ல் இவ்வினா விரிவாக ஆராயப்படுகிறது. அதில் படைப்பு என்பதன் முழுமையான வரலாறும் ஒரு தொன்மம் போல விவரிக்கப்படுகிறது. படிக்கையில் நம்மில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவது அது. படைப்புத் தொழிலைத் தொடங்கிய பிரம்மன், அனைத்துவகை உயிர்களும் நிரம்பிய ஒரு பிரபஞ்சத்தை உருவாக்க விரும்பினான் போலும். நான்கு மூலக்கூறுகளுடன் தனதேயான அழிவற்ற சாரத்தை அவன் கலந்தான். இறைத்தன்மைகொண்ட, கரைத்தழிக்கவியலா அவனது ஆன்மா அழிவற்றது. ஆனால், மூலக்கூறுகள் அவ்வாறானவை அல்ல, அவை ஒன்றோடொன்று கலப்பவை, பின் ஒன்றிலிருந்து ஒன்று விலகுபவை. 

மூலக்கூறுகள் தமக்கேயான தனிப்பண்புகள் கொண்டவை. தீ எரியும்;  வளி காற்றென இயங்கி சூறாவளியை உண்டாக்கும். நீர் பெரும் அலைகளென உருவெடுக்கும், நிலமோ பிணிகொள்ளும். இம்மூலக்கூறுகளும் அவற்றின் பண்புகளும் தனியர் ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. உங்களில் உள்ள மூலக்கூறுகள் பாதிப்படைகையில் அங்கிருந்து வரும் உணர்வுகள் உங்களது அகம் அல்லது ஆன்மாவில் நுழைகின்றன. மற்றொருபுறம், அறிவதற்கும் இயங்கச் செய்வதற்குமான திறன் ஆன்மாவிலிருந்து நான்கு மூலக்கூறுகளுக்கு செல்கின்றது. இவ்வாறாக, மூலக்கூறுகளிலிருந்து அகத்திற்கும், அகத்திலிருந்து மூலக்கூறுகளுக்கும் என இரு வழிச் சுழற்சி நிகழ்கிறது.

ப்ளேடோவின் இந்தக் கொள்கையை, புனித அகஸ்டின் தீமை குறித்த தனது கருத்தை விரித்தெடுக்கையில் பயன்படுத்திக்கொள்கிறார். அவரைப் பொறுத்தவரை தீமை என்பது எதிர்மறைக் கொள்கை. அது, சூரியனால் வீழ்த்தப்படும் நிழல்போல, தன்னளவில் தானாக நிற்க இயலாதது. நேர்மறை அறிவுத் திறனுக்கு மாற்றாக வைக்கப்படும் குறைவுபட்ட அறிவுத் திறம் போன்றது. அது குறைவுபட்ட காரணியும் கூட. 

பகவத் கீதையில் இது வேறுவிதமாக சொல்லப்படுகிறது. ஆறாவது அத்தியாயத்தில் ஐந்தாவது ஆறாவது பாடல்களில், அகம் என்பது அகத்தால் பேணப்படவேண்டும், அகத்தை அகம் ஒருபோதும் கைவிடுதல் கூடாது, அகத்தின் சிறந்த நண்பர் அகமே, அகமே அகத்தின் கொடிய எதிரியாகவும் கூடும் என்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது. அகத்தின் ஒரு பகுதியை நீங்கள் அகமல்ல என்று கருதுவீர்களேயானால், அகமல்லாத அதுவே உங்களது எதிரியாகும், உங்களது எதிரிபோலவே அது நடந்துகொள்ளும்.

இதை நம் அன்றாட வாழ்விலேயே உணரமுடியும். ஒருவரை நான் எனது அகம் என்றே கருதமுடியும் என்றால் அவரது அண்மையே பெரும் மகிழ்வை கொணர்கிறது. அவரை காண்பது, அவருடன் பேசுவது, அவரை கொண்டாடுவது என எல்லாமே என் இதயத்தை மலரச் செய்கின்றன. உவகை ஏற்படுவது வேறெங்கோ அல்ல, எனது இதயத்தில்தான். ஆக, அவரிடம் அன்பு செலுத்துவதன் மூலம் நான் மகிழ்கிறேன். ஆனால் அவரையே எனது அகத்தின் பகுதியாக, எனக்கு உரியவராக நான் கருதவில்லை என்றால் அவர் எனது எதிரியாகக் கூடும். அவர் ‘பிறர்’ என ஆகிறார். அவர் என் அறைக்குள் நுழைந்தாலே என்னுள் வெறி ஏறுகிறது. என் உடல் கோபத்தால் நடுங்குகிறது. அவரை வெறுப்பதன் மூலம் எனக்கு நானே பெருவலியொன்றை ஏற்படுத்திக்கொள்கிறேன். அது அவரை சிறிதும் பாதிப்பதில்லை. அவர் எனக்கு தீங்கிழைக்க வந்திருக்கிறார் என்று அஞ்சுகிறேன். என்னை பாதுகாத்துக்கொள்ள அவரை தவிர்க்கிறேன். அவர் எனது பகைவர் என்றும், அவர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்றும் என் உடைமைகளை கவர்ந்துகொள்வார் என்றும் அஞ்சுகிறேன். அச்சத்திலேயே வாழத் துவங்குகிறேன்.

இவை எல்லாமே என்னுள் உள்ள ஒரு மனப்பாங்கு மட்டுமே. எனது நண்பரின் இருப்பில் நான் மகிழக்கூடும், அல்லது எனது மனப்பாங்கை மாற்றிக்கொள்வதன் மூலம் என்னையே நான் பாழ்படுத்திக்கொள்ளவும் முடியும். இதனையே கீதை, ‘அநாத்மா’வை (அகம் அல்லாததை) பகைவர் என நடந்துகொள்ளச் செய்வது என்கிறது. உங்களது அகத்தின் ஒரு பகுதியையே அகம் அல்லாததாகக் கருதுவதன் மூலம் அந்தப் பகுதியை உங்கள் பகைவர் என ஆக்கிவிடுகிறீர்கள். மக்களை அந்நியப்படுத்துவதன் மூலம், மக்களை மறுப்பதன் மூலம், நமக்குள் அதிருப்தியை வளர்த்துக்கொள்வதன் மூலம் இதனை நாம் ஒவ்வொருநாளும் செய்துகொண்டிருக்கிறோம். இது ஒரு கொடுமை, பெருந்தொல்லை. சிலரது இருப்போ, அவர்களது தோற்றமோ, அவர்கள் உண்டாக்கும் ஓசையோ நமக்கு பிடிக்காமல் போனால் அவர்களோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமலாகிறது. இப்படியாக நாம் நம் உலகை துண்டாடியபடி, அத்துண்டுகளை நஞ்சூட்டியபடியே இருக்கிறோம்.

மேலே சொன்ன நண்பர் என்னை நோக்கி வருகையில், உடனிருக்கும் இன்னொரு நண்பரை நோக்கி ‘பார், நம் நண்பர் வருகிறார்’ என்கிறேன். அவரது மனம் ஒளிர்கிறது. இன்னொரு நண்பர் ‘அது யார்?’ என்று கேட்கிறார். ‘நம் நண்பர்’ என்கிறேன். அவரும் மகிழ்கிறார். மகிழ்ச்சி உடனடியாக தொற்றிக்கொள்வது. ஆனால், ‘வருகிறான் பார் முட்டாள். பார்த்தாலே எரிச்சலாக வருகிறது’ என்று நான் சொன்னால் எனது பகைமை பிறரிடமும் தொற்றிக்கொள்கிறது. மற்ற நண்பர்களுக்கு அவரிடம் எந்த பிரச்சினையும் இல்லை. என்றாலும் நான் அப்படி பேசும்போது அவர்களும் எதிர்மறை உணர்ச்சி கொள்கிறார்கள். நான் வெறுக்கும்படி அவர் என்ன செய்திருக்கக் கூடும் என்று எண்ணி அவர் மீது சந்தேகம் கொள்கிறார்கள். எனது எதிர்மறை உணர்வு புற்றுநோயென இதயங்களில் பரவுகிறது. இப்படியாக நாம் எப்போதும் புகைச்சலை கிளப்பிக் கொண்டே இருக்கிறோம். மனங்களை நஞ்சூட்டி எங்கும் பகைமையை பரப்பிக்கொண்டிருக்கிறோம். அதைத் தொடர்ந்து கலகமும், புறம்பேசுவதும், வம்பும் எங்கும் நிறைகின்றன. குரு சொல்லும் நரகாப்தி – நரகமெனும் ஆழி – வேறெங்கோ தொலைவில் இல்லை. இங்கே நாமிருக்கும் இடத்தில்தான் உள்ளது. 

நாராயண குருவின் சீடரான நடராஜ குரு இந்தப் பாடலுக்கு உரை எழுதுகையில், குச்சிகளின் குவியல் மேல் ஒரு நெருப்புப் பொறி விழுகையில் அது சிறு பகுதியை மட்டும் எரிப்பதில்லை என்கிறார். ஒரு குச்சியிலிருந்து இன்னொன்றுக்கு என பரவிப் பரவி பெருந்தீயாக அது ஆகிறது. அதேபோல், நாம் விதைக்கும் அதிருப்தி பற்றிப் பரவுகிறது. சிறு மனக்கசப்புகள் கூட ஓரிடத்தில் குவிகையில் மெய்யாகவே எரிநரகை உருவாக்கிவிடுகின்றன.

இரண்டாம் உலகப்போர் துவங்குவதற்கு முன் ஜப்பானில் அச்சடித்து சுற்றுக்கு விடப்பட்ட சிறு துண்டுப்பிரசுரங்களை இதற்கு உவமையாகக் கூறலாம்: “அமெரிக்கா நமக்கு பெரும் எதிரி. நமது கப்பற்படைக்கும், நமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கும் போட்டியாக அமெரிக்காவின் வியாபாரமும் முதலாளித்துவ விரிவாக்கமும் உள்ளன. எனவே அவர்கள் நம் எதிரிகள். இதை ஜப்பானின் ஒவ்வொரு மூலையிலும் பரப்புங்கள்”. ஒவ்வொரு நாட்டிலும் இத்தகைய முன்முடிவுகளும் ஒற்றைப்படையான கருத்துகளும் பெருகி நிலைநிறுத்தப்பட்டன. விரைவிலேயே அமெரிக்க மனங்களிலும், ஜப்பானிய மனங்களிலும் நஞ்சு நிறைக்கப்பட்டது. கொடும் போர் தொடங்கி, உச்சகட்டமாக இரு ஜப்பானிய நகரங்கள் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டன. அது நிஜத்தில் நிகழ்ந்த எரிநரகேதான்: கணநேரத்தில் ஆயிரக்கணக்கானோர் எரித்தழிக்கப்பட்டனர், மேலும் பலர் கொடும் வலிகளை அனுபவித்து மெல்ல மெல்ல இறந்தழிந்தனர்.

நாராயண குரு நமக்கு சொல்வது வெறும் ஒரு கதையல்ல. எக்கணத்திலும் அது மெய்யாகவே நிகழக்கூடிய ஒன்றுதான். மனக்கசப்பின் அல்லது தவறான எண்ணத்தின் ஒரு சிறு பொறியில்தான் அது துவங்குகிறது. தேர்ந்தெடுக்க ஆயிரக்கணக்கான கசப்புகள் நம்மிடம் உள்ளன. இவ்வுலகை பலமுறை அழிக்கத் தேவையான கொடிய ஆயுதங்களை குவித்து வைத்துள்ளது அமெரிக்கா. அண்மைக்காலம் வரை ரஷியாவிடமும் அதேயளவு இருந்தது. மேலும் ஐந்தாறு நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? முழு பிரபஞ்சத்தையும் அழித்தொழிக்கும் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா? ஒருவர் தன் மனப்பிறழ்வை இன்னொருவரிடம் சொல்வதில் தொடங்குகிறது அது. CIA அல்லது Pentagon-இல் உள்ள ஒருவர் “நாளை ரஷியாவோ சீனாவோ நம்மை தாக்கும் என்று எனக்கு தோன்றுகிறது” என்கிறார். அவ்வளவுதான், நாம் பித்துப்பிடித்தவர்களாகிறோம். முன்பெப்போதும் இல்லாத அளவில் அழிவை உண்டாக்குவதற்கு தயாராகிறோம். துரதிருஷ்டவசமாக, அகத்தின் ஒருமை மெய்யுணர்தலில் மட்டுமல்லாது எதிர்மறை அம்சத்தால் மாசுபடுவதிலும் சிறப்பாகவே செயல்படுகிறது.

புனித அகஸ்டின் ப்லோடினஸிடமிருந்தும் ப்ளேடோவிடமிருந்தும் இரண்டு கருத்துக்களை எடுத்தாள்கிறார் – ஒன்று குறைவுபட்ட காரணி (deficit causation), இரண்டு தீமை குறித்த அழகியல் கருத்துரு (aesthetic conception of evil). மானுடன் தன்விருப்பத் தேர்வு (free will) கொண்டவன். பிரபஞ்ச நன்மை விருப்போடு இசைவு கொண்ட அவனது விருப்பத் தேர்வே மீட்புக்கான காரணியாக அமைகிறது. அந்த விருப்பத் தேர்வே, ஆன்ம ஒளியிலிருந்து துண்டிக்கப்பட்ட தன்முனைப்பின் கட்டற்ற வெளிப்பாடாகவும் ஆகக்கூடும். அவ்வாறு துண்டிக்கப்படுகையில், ஆன்மிக மேன்மையைக் காட்டிலும் புலனின்பங்களும் உடல்சார் நலங்களுமே இன்பம் பயப்பவையாகின்றன. இதுவே குறைவுபட்ட காரணி எனும் கருத்தாக்கம்.

நம் வாழ்வில் தன்முனைப்பின் விருப்பு கொணரும் இத்தகைய மிகைகளுக்கு இயற்கையே எதிரானதாக உள்ளது. ஒருவர் உணவை மிக விரும்பி உண்டு இயற்கைவிதிகளுக்கு மாறாக பெருந்தீனிக்காரராக ஆகும்போது, மிகையான உணவு அவருடலில் நஞ்சாகிறது. செரிக்கக்கூடியதற்கு அதிகமாக உண்கையில் நச்சு உடலில் ஊறி நோயை கொணர்கிறது. ப்லோடினஸும் புனித அகஸ்டினும், தன்முனைப்பெனும் அகத்தின் இருண்ட பக்கத்திலிருந்து தோன்றும் மிகையான தன்விருப்பத் தேர்விலிருந்து நம்மைக் காக்க இயற்கை முயல்கிறது என்கின்றனர்.

உடல்சார் நோயைப் போலவே பிற வகையான மிகைகள் போரையும் பேரழிவையும் கொணர்கின்றன. எடுத்துக்காட்டாக, ஒரே வகையான பயிரை பெரும் பரப்பில் விளைவிக்கையில் பயிர்க்கொல்லிப் பூச்சிகளும், பயிர்நோய்களும் பெருகுகின்றன. காற்றில் நாம் உண்டாக்கும் மாசு காடுகளை அழிக்கிறது, மனிதரில் புற்றுநோயை உண்டாக்குகிறது. கட்டடங்களே கூட அரிக்கப்படுகின்றன. இத்தகைய மிகைகளில் பட்டியல் நீண்டபடியே செல்வது. மானுடரின் தன்விருப்பத் தேர்விலிருந்து தோன்றும் அவை அனைத்துமே தீமைகள்தாம்.

புலன்களின் தளைகளிலிருந்தும், ‘வாசனை’களின் தாக்கத்திலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு, அனைத்திலும் உள்ள ஒருமையை தன் அகம் வழியே காணும்போதுதான் மானுடன் மெய்யான தன் விருப்பத் தேர்வை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிகிறான். இத்தகைய முன்வரையறைகளிலிருந்து விடுபட்ட பிறகு வருவதே மெய்யான விருப்பத் தேர்வு. இல்லையெனில், உங்களுக்கு தன்விருப்பத் தேர்வு இருப்பதாக நீங்கள் எண்ணிக்கொண்டாலும்,  உண்மையில் உங்களது புலன்களுக்கும் விழைவுகளுக்கும் அடிமையாகவே  நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் பகுத்தறிவை, தீமை சவாரி செய்யும் ஒரு கழுதையென ஆக்கி, அழிவுக்கு இட்டுச் செல்கிறீர்கள். 

புனித அகஸ்டின் காட்டும் இரண்டாவதும் பகவத் கீதையில் உள்ளது. நீங்கள் முழுமுதலென ஆகும்போதுதான் உங்களை தளைகளிலிருந்து விடுவித்துக் கொள்கிறீர்கள் என்கிறது கீதை. படைப்பெனும் பேரழகைக் கண்டடைந்து, பிரம்மனின் மனதோடு இணைந்து இசைக்கையில்தான் உங்களுக்கென எழிலுலகொன்றை படைத்துக்கொள்கிறீர்கள் என்பது புனித அகஸ்டினின் கவித்துவமான கூற்று. தங்கத் தகடென கீழ்வானில் எழும் ஒளிநிறை பகலவனையும், உப்புக் கடல்களிலிருந்து எழுந்துவரும் தென்றல்களையும், நம் சோலைகளுக்கு மழைகொணரும் மேகங்களையும், இசைக்கும் புட்களையும், பூத்துக்குலுங்கும் மலர்களையும், மனிதருக்கும் மாக்களுக்கும் உணவளிக்கும் பல்வகைத் தாவரங்களையும் பார்க்கையில் முழுமுதலின் பேரழகை நாம் தரிசிக்கிறோம். அதன் பெருமை கண்டு நிறைவடைகிறோம். அதன்பின் முழுமுதலின் பெருநன்மையிலிருந்து நம்மை பிரித்துப் பார்க்க இயலாதவர்களாகிறோம். 

இங்குதான் தீமையின் அழகியல் காரணி வருகிறது. அனைத்தையும் அழகியல் நோக்குடன் காணும் உணர்வை நாம் இழக்கும்போது படைப்பின் அழகை காணத் தவறுகிறோம். நமது தூய்மை கெடுகிறது.

இந்தப் பாடலின் வழியே, செயலை நேர்கோட்டில் வைத்து புரிந்துகொள்ளும் பிழை நிகழக்கூடும். நமது அனைத்து செயல்களையும் அவற்றின் பண்புநலன்களையும் எண்ணும்போது நம்மில் ஒருவகையான தன்னேர்மையுணர்வு தோன்றுகிறது. நாம் அவற்றை செய்தே இருக்கமாட்டோம் என்று எண்ணுகின்ற செயல்களுக்காக நாம் அவதியுறும் அநீதியை காண்கிறோம். இது ஒரு நேரியல் பார்வை (linear vision). கர்மம் என்பதை ஒருபோதும் நேரியலாக புரிந்துகொள்ளக்கூடாது. இது மிகவும் சிக்கலானது. நமது செயல்கள் எல்லாம் சேர்ந்து ஒரு தொகுதியென ஆகின்றன. நாம் ஒருவருக்கொருவர் எல்லையிலாது கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம். இந்த எல்லையிலா கடப்பாட்டை நாம் புரிந்துகொள்ளாமல் ஒருபக்கச் சாய்வு கொண்டோமெனில் நமது புரிதல் முழுமையானதாக இல்லாமல் போகிறது.

நம்மில் ஒருவரது குறைபாடு முழுமையின் குறைபாடேதான். ஒருவர் ஆற்றும் குறைவுபட்ட செயல் மொத்த அமைப்பையுமே ஓரளவிற்கு வலுவிழக்கச் செய்கிறது. அத்தகைய வினை (கர்மம்) ஏற்படுத்தும் விளைவு ஒரு சீழ்க்கட்டியைப் போன்றது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இன்னல் ஏற்படுத்துவது என்றாலும் அது உருவாக்கும் நச்சு உடல் முழுவதும் சுற்றிவரும். வேறொரு வகையில் சொல்வதென்றால், மொத்த உடலின் நஞ்சே ஓரிடத்தில் சீழ்க்கட்டியாக தோன்றுகிறது. இதுபோலவே, குறிப்பிட்ட ஒருவர் வழியாக நமது ஒட்டுமொத்தச் செயல்பாடு தோன்றுகிறது. அந்த நபர் தனது சொந்த வாழ்வை திரும்பிப் பார்ப்பாரேயானால், அவருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய வலியை நியாயப்படுத்தும் காரணம் எதுவும் அவருக்கு புலப்படாமல் போகலாம். இங்கே துயருறுவது தனியரல்ல, ஒட்டுமொத்த அகமே.

இப்படி பார்த்தால் மட்டுமே கிறிஸ்து அடைந்த வேதனை பொருள்கொண்டதாக இருக்கும். இல்லையெனில், இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகு அவரது சிலுவையேற்றம் எவரை பாதிக்கக் கூடும்? அது எவ்வகையில் பயனளிக்கக் கூடும்? அது ஒற்றை மனிதனின் செயல் அல்ல. திரளொன்றின் தியாகம் அது. ஒருவர் செய்த தியாகமே அது என்றாலும் அதில் முழுப் பிரபஞ்சத்தின் சாரத்தை நம்மால் காணமுடிகிறது.

ஒரு வகையில் அது அனைவருக்கும் என ஒருவர் செய்த தியாகம், இன்னொரு வகையில் ஒவ்வொருவரையும் பாதிக்கும் பலரது தீமை. இது தொடர்பாக, ப்ளேடோவின் உரையாடல்களையும் புனித அகஸ்டினின் City of God (Chapter XII, 6-7)  & Confessions (Chapter VII, 13) ஆகியவற்றை நீங்கள் வாசிக்கலாம். இது நமது அன்றாடப் பிரச்சினை. இது குறித்த நுண்ணிய அவதானிப்பு இருப்பது நல்லது. இவ்வுலகில் வாழ்ந்த சான்றோர் சிலர் இதுகுறித்து தமது அரிய சிந்தனைகளை சொல்லிச் சென்றுள்ளனர். இந்நூல்கள் அவர்களது பெருந்தேடலை நமக்கு சொல்கின்றன. 

இப்பாடலிலும் முந்தைய பாடலிலும் நாராயண குரு தன்னையுணர்தலின் அடிப்படையில் அமைந்த சமூக அறத்தை  உலகின் முன் வைக்கிறார். நம் வாழ்வின் முதன்மைக் கொள்கையாக நாம் இதனை கைக்கொள்ள வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டுமானதல்ல. ஒரு புறம், அனைத்திலும் உங்கள் அகத்தைக் கண்டு அதனுடன் தோழமை கொள்ளும்படி கோரப்படுகிறீர்கள். இன்னொரு புறம், எதிர்மறைக் கோணத்தில், உங்கள் அகத்தை உங்களிடமிருந்து விலக்கிப் பார்ப்பீர்களேயானால் அது தற்கேடாக அமையும் என்பது கூறப்படுகிறது. ஆக, உங்களது மன அமைதிக்காக, தடையற்ற மகிழ்ச்சிக்காக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் பொதுநன்மைக்கான உங்கள் பங்களிப்பை ஆற்றிக்கொண்டே இருத்தல் வேண்டும். அனைவரது சிலுவையையும் சுமக்கும் எல்லையிலா பொறுப்பை நாம் ஏற்றெடுத்துக் கொள்கையில் நம் உடன்பிறந்தோரின் காவலர்களாக நம்மை ஆக்கிக் கொள்கிறோம். உலக மறைகளிலெல்லாம் கூறப்படும் ஆகச்சிறந்த போதனை இங்கே எட்டு சிறிய வரிகளில் செறிவாக அளிக்கப்பட்டுள்ளது.  

பாடல் 26

Leave a comment