ஶ்ரீசக்ர தியானம் – 53

ஸௌம்

நிறைவளிக்கும் அன்னையே! எம்மை தளைப்பதற்கும் எமக்கு மீட்பளிப்பதற்கும் உரிமை கொண்டவள் நீ. உன் விருப்பம் அதுவென்றால், இன்றுடன் எமது வாழ்வெனும் ஆடல் முடிவுக்கு வரும். அவ்வாறில்லையெனில், எமது பெற்றிக்கேற்ப இன்னொரு உருமாற்றச் சுழற்சிக்குள் செல்வோம். தளைப்பதற்கும், உருமாற்றச் சுழற்சிக்கும் என ஒரு விதியை (tribasic law) வைத்திருக்கிறாய். ஆன்மாவை, முழுமையான விடுதலை கொண்ட அதன் ஆட்சிப்பீடத்தில் மீண்டும் நிறுவுவதற்கு வேறொரு விதியை வைத்திருக்கிறாய். 

படைப்பெனும் விண்மீன் கூட்டத்தில் பல மும்மைகள் உன்னால் வைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக இறைக் கூறை எதிரொளிப்பதன் மூலம் அதன் சுற்றெல்லையை தேர்ந்தெடுக்கிறாய். அதில் தூய நனவின் சுய ஒளிர்வின் சாயல் தங்கியிருக்கிறது. வேதாந்தம் இதனை, பிரத்யங்க சைதன்யத்தை ஆபாச சைதன்யமாக மாற்றுவது என்று குறிப்பிடும். பிரத்யங்க சைதன்யம் என்பது மாசுறாத மூலத்தை குறிப்பது; ஆபாச சைதன்யம் என்பது அதன் இயல் மாற்றத்தை சுட்டுவது. சித், சைதன்யம், சேதனா (தூயது, தோன்றக்கூடிய ஆற்றல், தோன்றியது) என்ற மும்மை இதில் குறிப்பாக சுட்டப்படுகின்றது. இதைத் தொடர்ந்து, மாயையாலும் மெய்யல்லாப் பதிவின் மேற்சுமத்தீடாலும் (superimposition of an unreal impression)  மறைக்கப்பட்ட ஒரு நிலைக்களம் எழுகின்றது. மறைக்கப்படுவதாலோ (ஆவரணம்), மேற்சுமத்தீடுகளாலோ (விக்ஷேபம்) இந்த நிலைக்களம் சிறிதும் பாதிப்படைவதில்லை. 

மெய்யான நிலைக்களம் என்பது தூய நனவன்றி வேறில்லை. அதன் சுற்றெல்லை காரணமாக, அறியப்படும் தன்முனைப்பெனும் (cognizing ego –  ஞாதா) நிலையொன்றை அது அடைகிறது. அதில் அகவயத்தன்மை எழுகையில் இயல்பாகவே புறவயமாக்கம் (ஞேயம்) நிகழ்கிறது. மேலோங்கி நிற்கும் நனவில் உள்ள ஊசலாட்டம் நிறைந்த ஆற்றலின் காரணத்தால், அறிவானது ஒரு கணம் தன்முனைப்பிலும் (அகம்) மறுகணம் பொருளிலும் (விஷயம்) இருக்கிறது. இந்த ஊசலாட்டம் எனும் இயல்நிகழ்வே அறிவெனக் (ஞானம்) கருதப்படுகிறது. தனியர் சுயம் எனும் ஆத்மனையே நிலைக்களனாகவும், அந்தகரணம் எனும் உள்ளுறுப்பையே எண்ணுவதற்கான கருவியாகவும் கொண்டு புலனுறுப்புகள் வழியே பதிவாகும் அனைத்தையும் அனுபவமாக உணரும்படி விதிக்கப்படுகிறார்.   

அனுபவம் ஒவ்வொன்றும் விழிப்புநிலையை பாதிக்கிறது. அதைத் தொடர்ந்து அது செயல்வினைக்குட்படுத்தப்பட்டு (ஸம்ஸ்காரம்) நினைவில் (சித்தம்) சேமிக்கப்பட்டு பின்னர் மீட்டெடுக்கப்படுகிறது (அனுஸ்மரணம்). புலன் வழி அறிதல் (ஞானம்), வினை (கர்மம்), உணர்வுசார் மதிப்பீடு (இச்சை) என்ற மூன்றிலும் உனது படைப்பியல்பின் முக்குணங்கள் தூய-தெளிமையாக (சத்வம்), உணர்ச்சிப் பெருக்காக (ரஜஸ்), செயலற்ற தேக்கமாக (தமஸ்) நுழைகின்றன. மெய்மையை மதிப்பிடும் புலன்சார் உலகில், முழுமெய்மையை வெளிப்படுத்தல் (பரமார்த்தம்), அனுபவ மெய்மையை புரிந்துகொள்ளுதல் (யதார்த்தம்), மெய்யற்றதன் மாயக்காட்சி (பிரதிபாசம்) என்ற  மற்றுமொரு மும்மையை நீ கொணர்கிறாய்.

இந்த முன்னேற்பாடுகளைத் தொடர்ந்து, பிறப்பிறப்புச் சுழற்சியெனும் நாடகத்தில் ஒரு இடைக்காட்சிக்கான வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் தனியர் முழுமையடைய முயல்வாரென்றால் அவர் மீட்புக்கு தகுதி பெறுகிறார். இந்த ஆடலை நீ கூர்ந்து நோக்கிக்கொண்டே இருக்கிறாய். நீக்கப்பட வேண்டிய முதிரா நினைவு இன்னும் எத்துணை எஞ்சியுள்ளது என்பதை உனது மதிப்பிடும் விழி பார்த்துக்கொண்டே இருக்கிறது. சத், சித், ஆனந்தம் எனும் ஆன்மாவின் முக்கூறுகளுக்கேற்ப சத்வ, ரஜஸ், தமஸ் எனும் அவற்றின் எதிர்மறை நிழல்களை நீ தக்கவைக்கிறாய். எண்ணற்ற முறை நாடகம் நிகழும் தூய களனில் ஊடுவழி ஒன்றை கண்டடையும்போது, எமது இதயங்களில் உள்ள அறியாமையின் தளைகளெல்லாம் தாமாகவே அறுபட்டு, அச்சமின்மை எனும் தூய நிலையில் நாங்கள் விழித்தெழுவோம். அத்துடன் ஆடல் முடிவுக்கு வரும்.

சிறிதளவு ஐயமோ, அச்சமோ, முதிரா நினைவோ எஞ்சியிருக்குமெனில் உன் பார்வைக்கு அது தப்புவதே இல்லை. அப்போது ஆடலை மீண்டும் முதலிலிருந்து தொடங்குகிறாய். உனது இந்த ஆடல் தொடக்கமற்றது. அதன் ஆதாரமாக இருப்பது அறியாமையே. பலவண்ண வகைமைகள் கொண்டது அது. திரையிடும் கொள்கையும் (ஆவரணம்) மேற்சுமத்தீட்டுக் கொள்கையும் (விக்ஷேபம்) அதனுடன் சேர்ந்திருக்கின்றன. உனது பரிவு கொண்டு, ஆடலுக்குப் பொருத்தமான முடிவொன்றை வைக்கிறாய். அழிக்கமுடியாத உனது விதி இவ்வாறிருக்கையில் எமக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. பிழையா உன் ஞானத்திடம் எம்மை முழுதளிக்கிறோம்.

அருள்வடிவானவளே, கருணாமயீ, இந்த அறுதி அர்ப்பணிப்பை, முழுதளிப்பை ஏற்பாயாக! இம்மனித வடிவாய் அமைந்த உள்ளார்ந்த விழுமியங்கள் அனைத்தும் இங்கு இப்போது கைவிடப்படுகின்றன (ஸர்வதர்மான் பரித்யஜ்ய). உன்னில் புகலடைகிறோம்.

|| ஸௌம் ||

Leave a comment