ஶ்ரீசக்ர தியானம் – 42

ம் ஸர்வமங்லகாரிணீ

நன்மையை அருள்பவளே, அன்னையே! உனது கட்டளைப்படி ஒன்று பலவாகி, ஒவ்வொன்றிற்கும் பொருத்தமான ஒரு இயக்கம் விதிக்கப்படுகிறது. ஆதித்யன் எனப் பெயர் கொண்ட சூரியன் ஒருவனே. என்றபோதும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயரால் அவன் அழைக்கப்படுகிறான். அவன் கொணரும் நன்மை ஒவ்வொரு மாதமும் வேறுபடுகிறது. மேஷம் உலகில் நிகழ்பவை அனைத்தையும் தொடங்கி வைக்கிறது. ஞாயிறு அதன் தொடக்கத்தில் விஸ்வகர்மன் எனும் உலகச் சிற்பியாக எண்ணப்படுகிறான். அனைத்து திசைகளையும் நோக்கும் ரவி படைப்புச் செயலுக்கென படிநிலைகளிலான ஒரு திட்டத்தை வகுக்கிறான். அவனது முழுமையான பார்வை (அவலோகனம்) படுவதால் பூமி ‘லோகம்’ எனப்படுகிறது. அதன் பின்னர் பகலவன் ஆழ்ந்த சிந்தனைக்குள் நுழைகிறான். விஷ்ணுவின் கொப்பூழிலிருந்து வந்த தாமரையில் அவன் அமர்ந்திருக்கிறான். பிரம்மன் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு எனும் திசைகளை நோக்கி அமைந்த நான்கு முகம் கொண்ட விஶ்வகர்மனாகிறான்.

வானில் மழைமேகம் திரள்வதைக் காணும் உழவன் தன் நிலத்தை உழுது களஞ்சியத்திலிருந்து நெல்விதைகளை எடுத்து விதைக்கிறான். இப்போது சூரியன் ரிஷபம் எனும் நிலை எய்தி அனைத்திற்கும் ஊட்டமளிக்கும் பூஷன் என்றாகிறான். நிலத்தில் விதைக்கப்பட்டவை எல்லாம் முளைத்தெழுகின்றன. சூரியனின் நெருப்பும் மழையின் நீரும் இணைந்து படைப்புச் செயல்பாட்டை துவங்குகின்றன. பூஷன் காந்திமான் (ஒளிபொருந்தியவன்) என்றும் அழைக்கப்படுகிறான். சூரியனின் இளவல் அவன். சூரியனின் இந்தப் பண்பு அனைத்தையும் மனம்கொள்ளத் தக்கதாக மாற்றும் ஆற்றல் கொண்டது. இவ்வாறாக மாயை பூஷணுடன் நெருங்கிய தொடர்புடையவளாகிறாள். இதனால்தான் வளரிளம்பருவம் இனியதாக உள்ளது. மிதுனத்தில் கார்காலம் இறுதி நிலை எய்துகிறது. இப்போது சூரியனின் பெயர் பர்ஜன்யன். பகலவன், வருடம் முழுவதற்குமென நீர்நிலைகளை நிரப்ப விழைவதுபோல் தோன்றுகிறது. பெருமழையோடு மிதுனம் முடிவுக்கு வருகிறது. அதை தொடர்வது கடகம். மரங்களெல்லாம் கனிகளாலும் கொட்டைகளாலும் நிறைகின்றன. கோதுமை, அரிசி, சோளம் என்பவையெல்லாம் அறுவடைக்குத் தயாராக நிற்கின்றன. இப்போது சூரியன் அம்ஶுமானின் கடகத்தில் வீற்றிருக்கிறான். அடுத்து வரும் சிம்மம் மிகச் செழிப்பானது. எனவே களஞ்சியங்கள் மீண்டும் நிறைகின்றன. கிரேக்கக் கடவுளான அப்போலோவைப் போல் ஆதித்யன் அருளும் செல்வமும் நிறைந்த பகவான் என்றாகிறான். அவனில் இறைமையும் (இஶித்வம்), விழுமியங்களும் (தர்மம்), புகழும், (கீர்த்தி), அருளும் (ஐஶ்வர்யம்), விவேகமும் (ஞானம்), துறவு அல்லது தியாகத்தின் பண்புகளும் நிரம்பியுள்ளன. சிம்மம் கன்னியாகும்போது, சூரியன் மீண்டும் படைப்பாளனாகிறான். பிரபஞ்சச் சிற்பியான அவன் பெயர் த்வஷ்டிரன். ரிபு, விஶ்வரூபன், சவிதா என்ற மூன்று சிறப்புக் கூறுகள் கொண்டவன் அவன். சவிதாவாக அவன் தோன்றுகையில் காயத்ரி மந்திரத்தால் வழிபடப்படுகிறான். கன்னியின் இடத்தில் துலாம் வருகிறது. துலாம் தோன்றுகையில் ஒப்புரவின் இறை என விஷ்ணுவே சூரியனில் வீற்றிருக்கிறான். துலாம் விருச்சிகம் என ஆகும்போது சூரியன் விவஸ்வான் எனப்படுகிறான். அவனிலிருந்தே அஸ்வினி தேவர்களான மருத்துவர்கள் தோன்றுகின்றனர். விருச்சிகத்தின் இடத்தை தனுசு எடுத்துக்கொள்கிறது.

இப்போது சூரியனின் பெயர் அர்யமான். ஞானத்தையும் நிறைவையும் கொணர்பவன் அவன். தனுசு முடிந்ததும் மகரம் தோன்றுகிறது. மகரத்தில் வீற்றிருக்கும் சூரியன் மித்ரன் எனப்படுகிறான். அனைத்துயிருக்கும் நன்மையைக் கொணர்வதையே தன் நோக்கமாகக் கொண்ட அவன் எல்லா உயிரிகளுக்கும் தோழன். கும்ப வாழ்வுக்கு அனைத்தையும் தயார் செய்கிறான். கும்பம் எழுகையில் சூரியன் யமன் எனப்படுகிறான். அவன், எதிர்காலத்திற்கான ஒரு குறிக்கோள் அனைவரிலும் நிறையும்படி, ஒரு இடைநிறுத்தத்தை, ஒரு வகையான தவணையை அளிக்கிறான். மரணம் மறுபிறப்பை சுட்டி நிற்கிறது. கும்பம் விந்துவை ஏந்திய பானையால் குறிக்கப்படுகிறது. எல்லையிலா ஆழியில் நீந்தும் ஒரு கயல், மீனத்தின் குறியீடாகத் திகழ்கிறது. சூரியன், அருள்மழை பொழியும் வருணனாகிறான். 

தாயே, உனது மகுடம் சூரியனின் இப் பன்னிரண்டு ஒளிக்கூறுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவ்வொளியை நீ உன் மகவுகளோடு பகிர்ந்துகொள்கிறாய். வானின் இப்பன்னிரு அருமணிகளுக்கு மேலே மேன்மை நிறைந்த பிறைநிலவை மற்றுமொரு அணிகலனாகக் கொண்டுள்ளாய். அத்துடன் உனது எழில் உச்சத்தை அடைகிறது. சொல்லுக்கப்பாற்பட்டாதாகிறது. குழம்பிப் போகும் ஓவியன் தூரிகையை கைவிடுகிறான். சிற்பிக்கு உளியை எடுக்கும் துணிவில்லை. உவமைகளும் உருவகங்களும் கிட்டாமல் கவிகள் தியானத்தில் ஆழ்கின்றனர். நீ கருணை நிரம்பியவள் என்பதில் ஐயமில்லை. இன்னும் பல அணிகளை நீ மறைத்து வைத்திருக்கக் கூடும். பித்தெழச் செய்யும் எழிலெனும் பேரலையை சௌந்தர்யலஹரீ என்று கவி அழைப்பதில் வியப்பேதுமில்லை. சொற்களும் மனமும் வர்ணனைகளிலிருந்து விலகி மீளமீள உன் தாமரை இணையடிகளையே சேர்கின்றன. 

|| தம் ஸர்வமங்கலகாரிணீ ||

Leave a comment