ஶிவ: ஶக்தி: காம: க்ஷிதிரத* ரவி: ஶீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: ஶக்ரஸ்ததனு ச பராமாரஹரய:
அமீ ஹ்ருல்லேகா*பி*ஸ்திஸ்ருபி* ரவஸானேஷு க*டிதா
ப*ஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்
பாடல் – 32
அன்னையே,
ஶிவ, ஶக்தி, காம, க்ஷிதி என்ற நான்கும்
அதன்பின்
ரவி, ஶீதகிரண, ஸ்மர, ஹம்ஸ, ஶக்ர என்பவையும்
அவற்றைத் தொடர்ந்து
பர, மாரஹர என்பவையும்
ஹ்ரீம் எனும் மந்திரத்தோடு முடிவடைகையில்
உன் பெயரின் எழுத்துக்கூறுகளாகின்றன.
**
எல்லா உசாவல்களும், நினைவூட்டல்களும், மதிப்பீடுகளும், செயல்தீர்மானங்களும், பாராட்டுதல்களும், கண்டனங்களும் மறுக்கவியலா ஒரு இருப்பினால் தூண்டப்படுபவை. இதுவே தொடக்கப் புள்ளி. ‘இது என்ன?’ என்ற கேள்வி உருப்பெறுவதற்கு முன் எதுவும் அறியப்படுவதில்லை. அதற்கு பெயரில்லை, வடிவுமில்லை. அது ஆர்வத்தை தூண்டுவதில்லை. தூய அமைதியின் தொடக்கமில்லா நிலை போன்றது அது. அதுவே சிவம், தன்னில் தானிருக்கும் தூய இருப்பு. இதுவே அடித்தளம் அல்லது மூலாதாரம். யோகியர் இதனை உடலளவில் தண்டெலும்புகளின் கீழ்நுனி எனக்குறிப்பர். நரம்புமண்டல அமைப்பு மூளையின் இயக்க மையமாக செயல்படுகிறது. முதுகெலும்பின் கீழ்நுனியிலிருந்து தலையுச்சி வரை உள்ளதை ஒரு செங்குத்துக் கோடாக கற்பனை செய்தால், கீழ்ப் புள்ளியை தொடக்கம் என்றும் உச்சியை முடிவு என்றும் குறிக்கலாம். தொடக்கம் என்பது ஒருவர் தன்னில் தானென இருக்கும் நிலை.
விறகுள் உறையும் தீ எரியத்தொடங்கும் வரை தன்னை வெளிப்படுத்துவதில்லை. விறகு பற்றி எரிவதைப் போலவே, வாழ்வென்பது நம்மில் நிகழும் ஒரு எரிதல், உள்ளுறையும் ஆற்றல் மெய்ப்படுதல் அது. இருத்தல் நிலையிலேயே, தோன்றல் தொடங்கிவைக்கப்படுகிறது (within the state of being the process of becoming is initiated). தோன்றுதல் என்பது இருத்தலுக்கு வெளியே இல்லை, அதுவும் இருத்தலே அன்றி பிறிதில்லை. சக்தி இயக்குகிறது. அது ஒரு செய்முறை, அது உணர்வை ஏற்படுத்துகிறது. ஆற்றலின் ஒழுக்கு, அது உயிர்சார்ந்ததாக இருந்தாலும் உளம் சார்ந்ததாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்தவே முன்செலுத்தப்படுகிறது. அதுவே காமம், ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்கு மாறும் ஆற்றலின் சாரம். ஒரு விதை செடியாகி, செடி மலரும் நிலைக்குச் சென்று, மலர்ச்செடி பழங்களை உண்டாக்கி, பழங்கள் விதைபரப்பும் அமைப்பாக மாறுவது அது. பயனுள்ள மாற்றங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தோன்றுகின்றன. இந்தச் செயல்நிகழ்வின் முழுமையான உருவையே, நாம் வாழும் இவ்வுலகில் காண்கிறோம். உலகில் எதுவும் மாறாமலோ, மாற்றமுடியாததாகவோ இருப்பதில்லை. எனவே, வடமொழியில் உலகு க்ஷிதி எனப்படுகிறது. க்ஷிதி என்பது கரைந்தழிவது. சிவ, சக்தி, காம, க்ஷிதி என்ற நான்கும், மூலாதாரத்தில் முறையே வடமொழி எழுத்துக்களான க, ஏ, ஈ, ல என்ற நான்கையும் குறிப்பன. இம்மையத்திலிருந்து வாழ்வின் தீக்கொழுந்து எழுகிறது. இதனை தியானிப்பவர், தன் நனவில், படைப்பின் தொடக்கமாக உருவகித்துக்கொள்கிறார். அழிவற்ற முழுமுதலில் தொடங்கி அழியும் உலகு வரை, தூய இருப்பெனும் சிவனும், படைப்புத் தோற்றமான சக்தியும், தோற்றுவிக்குவும் விழைவான காமமும், பருநிலையில் மாற்றம் மெய்ப்படும் க்ஷிதியும் பரவியுள்ளன. ஆக, தூய ஆன்மாவும் பருப்பொருளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை.
ஆற்றல் வெளிப்படுகையில் அத்துடன் விழைவு நிறைந்த ஒரு வழிகாட்டலும் உள்ளது. நமது உலக அனுபவத்தில், நாம் காணும் வடிவென்பது நன்றாக வெளிப்படும் கூறுகளே. அதை பெயர் மூலம் நாம் அடையாளம் காண்கிறோம். ஒளி என்பதில் வடிவம் என்பது ஓரெல்லைக்குட்பட்டது. பெயர் என்பது குரல்வழித் தோன்றும் ஒரு ஒலியடையாளம். ஒளிக்கு வடிவமில்லை. ஒலிக்கும் வடிவு கிடையாது. ஆதி இருப்பான சிவத்தை, அனைத்தையும் நிறைக்கும் ஒளியாக, நிழலெனும் மறுவற்ற தூயஒளியாக தியானிக்கலாம். அனைத்தையும் நிறைக்கும் ஒலியாகவும், கேட்கப்படும் சாத்தியத்திற்கும் அப்பாலுள்ள ஒலியாகவும் சிவத்தை தியானிக்கலாம். அங்கு ஒளியும் ஒலியும் வேறுவேறு அல்ல. இந்த ஒருமையை சுரத்தின் பாலையில் (octave) கேட்கலாம், நிறமாலையில் (spectrum) காணலாம்; ஏழு ஒலிகளும் ஏழு வண்ணங்களும் ஒன்றையொன்று நிறைக்கும் ஆதி ஆற்றலின் கூறுகள். தனிமனித உருவாக்கத்தில் (process of individuation) தன் சுயத்தையும் அதைச்சுற்றி உள்ள ஒவ்வொன்றையும் வண்ணமயமான வடிவங்களில், அழகாக அமைந்த வடிவமைப்புகளில் காணும் விழைவு கூடிக்கூடி வருகிறது. காணப்பட்ட எதுவும் பேசப்படுகிறது, பாடப்படுகிறது. மனித நனவில் ஒலிப் புலம் கட்புலனைவிட தீவிரமானது, அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. பல இசையொலிகளை கேட்க முடியும், ஆனால் அவற்றை வரைந்தோ எழுதியோ காட்டிவிட முடியாது. என்றாலும், வண்ணங்களும் ஒலிகளும் இதயத்தை மகிழ்விப்பவை. அங்குதான் உணர்வின் சாயல்கள் எல்லாம் உணரப்படுகின்றன. ஒருவரது இதயத்தில் உறையும் விழைவு மலர்ந்து மகிழ்ச்சிக்கான தேடலாகிறது. அந்தத் தேடல் தொடர்ச்சியானது. அநாஹதமே (இருதயம்) தியானத்திற்கான இரண்டாவது பகுதி.
சூரிய ஒளியின் பிரகாசத்தை காணவிழைந்தாலும், நம்மால் ஒன்றன் தூய நிலையை எட்டிவிட முடிவதில்லை. சூரியஒளியை எதிரொளிக்கச் செய்து அதனால் ஏற்படும் உருவத்தை மனதில் எழச்செய்வது மட்டுமே இயலக்கூடியது. ஒளிர்விக்கப்படுவதற்கும் காணப்படுவதற்கும் இடையே நேரடித் தொடர்பு உள்ளது. ஒளியூட்டப்பட்டது புலனுணர்வு சார்ந்தது (presentative). காணப்படுவது உருமாதிரி (representative). அவை சூரியனையும் சந்திரனையும் போன்றவை. சூரியன் தன்னொளி கொண்டது; சந்திரனுக்கோ தனக்கென ஒளி இல்லை. என்றாலும் சூரியஒளியை எதிரொளிக்கையில் சந்திரனும் ஒளிவீசுகிறது. இது சிவ-சக்தியைப் போன்றது. சூரியனின் ஒளி இன்றி சந்திரனை காண முடியாது. ஆனால், ஒருவர் ஒன்றை அறியவேண்டுமென்றால் அதனை அவர் தன் மனதின் சந்திரனிலிருந்து – அவர் கண்டவற்றோடு தொடர்புடைய, எதிரொளிக்கப்பட்ட உருவங்களிலிருந்து – அறியவேண்டும். மனதில் உருவாகும் உருவங்கள் தன்னிச்சையாக இருப்பதில்லை. பல உருவங்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டு பொருள்பொதிந்த கலவை ஒன்று உருவாகிறது. பொருத்தமான நினைவுகள் மீட்டப்பட்டு மனம் தனக்குத்தானே பல முழுமைகளை (gestalts) அளித்துக்கொண்டிருக்கிறது. சூரிய-சந்திரனைப் போல, ஒளி-நிழல் போல, நனவின் மீட்டெடுக்கப்பட்ட உருவம் இருக்க வேண்டும். அது ‘ஸ்மரன்’ எனப்படுகிறது. தொடர்புடைய கருத்துக்கள் ஆயிரம் இருக்கலாம்; அவற்றிலிருந்து மிகப் பொருத்தமான ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு கணம்கணமென நிகழ்வதை புரிந்துகொள்ள வேண்டும்.
நினைவைத் தொடர்ந்து பகுத்தறிதல் நிகழவேண்டும். விவேகியின் பகுத்தறிவு அன்னப்பறவையாக (ஹம்சம்) உருவகிக்கப்படுகிறது. பார்த்தது, கேட்டது, தொட்டது, சுவைத்தது, முகர்ந்தது, நினைவிலிருந்து கண்டெடுத்து பகுத்தறிந்தது என அனைத்தும் ஒரு பொருளென ஆகி அதைக்கொண்டே செயல் நிகழவேண்டும். செயல் தவிர்க்கமுடியாததாகிறது. செயல் இந்திரனோடு தொடர்புடையது. எனவே, தியானிப்பவர் தன் இதயத்தில் ரவியை (சூரியன்), ஶீதகிரணனை (சந்திரனை), ஸ்மரனை (விழைவை உண்டாக்கும் நினைவுக் கடவுளை), ஹம்சத்தை (மெய்யையும் மெய்யற்றதையும் பிரித்தறியும் திறன்), ஶக்ரன் அல்லது இந்திரனை (செயலின் இறை) எண்ணுகிறார். ஹ, ஸ, க, ஹ, ல என்னும் மந்திரங்கள் அவர்களைக் குறிப்பவை.
வாழ்வென்பது தோற்றம் எனும் தொடக்கத்திலிருந்து மீமெய்யுணர்தல் எனும் முடிவு நோக்கி முன்செல்வது. மூலாதாரத்திலிருந்து அநாஹதத்திற்குச் சென்ற யோகசாதகர் இப்போது ஆஞா சக்ரத்தில் (புருவ மையம்) ஏறுகிறார். மூலாதாரமென்னும் அடித்தளத்திலிருந்து இருதயத்தில் உணரப்படும் மெய்ச்சூழல் நோக்கி எழும் யோகசாதகர், வண்ணமயமான, இசைகலந்த, திளைக்கத்தக்க அழகு கொண்ட கானல்நீர் அனுபவங்களில் தன் தேடலை தொலைக்க விரும்பமாட்டார். இவற்றையெல்லாம் கடந்து தன் நனவு மீதான முழுக்கட்டுப்பாடு கொண்ட ஆஞாவிற்கு ஏறவே முற்படுவார். இங்கு-இப்போது என்ற மெய்ச்சூழலில் இருந்து எப்போதைக்குமென அனைத்தையும் நிறைத்துநிற்கும் சூழலுக்குச் செல்வதென்பது, ஒருவர் எண்ணியவுடன் தாவிச்சென்றுவிடக் கூடியது அல்ல. ஒருவரை, அவரது தனிப்பட்ட நனவுடன் பிணைக்க பல கடப்பாடுகளும், பல நினைவுகளும், பல விழைவுகளும் உள்ளன. இருத்தலில் இருந்து தோன்றி பின் தூய இருப்பென்னும் ஆதி நிலைக்கு செல்ல வேண்டும். (In the light of being, the process of becoming is to be transmuted into its original state of pure being again). மாயத் தூண்டல்களை அழிப்பவன், உடலில் உள்ள கட்புலன் கொண்ட கண்களின் இடையில் அமைந்த ஆஞாவில் தியானிக்கப்படுகிறான். அதாவது, யோகசாதகர் புறப்பொருள்களை நோக்க உதவும் தன் கண்களைச் சார்ந்திருப்பதை விடுத்து, அவற்றின் இடத்தில் அழிவற்றதைக் காணச்செய்யும் மூன்றாவது விழியை வைக்கிறார். மெய்யற்றதன் நிச்சயம் மெய்யின் ஐயமற்றநிலையை கொணர்கிறது. முழுமுதல் ‘அது’ என்றும் ‘அல்லது’ என்றும் உணரப்படுகிறது. இம்மூன்று கொள்கைகளும் ஸ, க, ல என்ற குறியீடுகளாக ஆஞாவில் வைக்கப்படுகின்றன.
மூலாதாரத்திலும் (முதுகெலும்பின் நுனி), அநாஹதத்திலும் (இருதயம்), ஆஞாவிலும் (புருவமையம்) அமைந்த இம்மூன்று மந்திரத் தொகுதிகளோடு ‘ஹ்ரீம்’ சேர்க்கப்படுகிறது. மூலாதாரத்தில் க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்; அநாஹதத்தில் ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்; ஆஞாவில் ஸ, க, ல, ஹ்ரீம்.