சௌந்தர்யலஹரீ – 31

சது:ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகலமதிஸந்தா*பு*வனம்

ஸ்தி*தஸ்தத்தத்ஸித்தி*ப்ரஸவபரதந்த்ரை: பஶுபதி:

புனஸ்த்வன்னிர்ந்தா*தகி*லபுருஷார்தை*க*டனா

ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதலமவாதீதரதிதம்

பாடல் – 31

பஶுபதி எனப்படும் உயிர்களின் இறைவன்

ஒவ்வொன்றும் தனக்கேயான வெளிப்படையான இயக்கத்தை உற்பத்தி செய்யக்கூடிய அறுபத்திநான்கு தந்த்ரங்கள் கொண்டு

முழு உலகையும் இயங்கும்படி ஆணையிட்டு

தான் அசையாது அமைந்தான். 

நீ வற்புறுத்தியதால்

அனைத்து தந்த்ரங்களுக்குமான ஒருமித்த குறிக்கோளை எய்தக்கூடிய உனது தந்த்ரத்தை 

இவ்வுலகுக்குக் கொணர்ந்தான்.  

**

அடிப்படையில் மானுடனும் ஒரு விலங்கே. மற்றெல்லா விலங்குகளைப் போலவே, அவனும் செயல்களில் ஈடுபடுகிறான், உண்கிறான், புணர்கிறான், பொழுதைக் கழித்துவிட்டு உறங்கச் செல்கிறான். விழிப்புநிலை, கனவு, ஆழுறக்கம் என்ற மூன்று நனவு நிலைகள் அனைத்து விலங்குகளுக்கும் உரியவை. அறிவெல்லை கடந்தநிலை என்பது மனிதன் நுழையக்கூடிய நான்காவது நிலை. மானுடரின் மொத்த நனவை நான்காக பகுக்கலாம்: விழிப்புநிலை (ஜாக்ரத்), கனவு (ஸ்வப்னம்), ஆழுறக்கம் (ஸுஷுப்தி), கடந்தநிலை (துரீயம்). இந்நிலைகள் பிரபஞ்ச விதிகளின்படி இயங்குபவை.

அணுக்களின் வடிவமைப்பு தொடங்கி வான்மண்டல அமைப்புகள் வரை, கூறுகளின் அளவைப் பொறுத்து கூட்டமைவின் பண்பு மாறுபடுகிறது. ஒன்றன் இயல்பு அதன் உள்ளார்ந்த அமைப்பைப் பொறுத்தது. அந்த இயல்பே அறம் எனப்படுகிறது. பலதலைமுறைக்காலம் முயன்று, தோற்று, கற்று, தேடி, பரிசோதனை செய்து தனது உடல்-உள்ளம் எனும் தொகுதியின் இயல்பையும் அல்லது அறத்தையும், தான் செயலுறவாடும் பிறவற்றின் அறத்தையும் கண்டடைந்திருக்கிறான் மனிதன். உடலளவில், உயிரளவில், ஆன்மிக அளவில், இவ்வுலகில் உள்ள ஒவ்வொன்றையும் அவன் எப்படி இசைவோடு கையாள்வது என்பது குறித்த நடத்தை விதிமுறை அலர்ந்தெழுந்து வந்துள்ளது. காலப்போக்கில், ஒவ்வொன்றின் உள்ளார்ந்த இயல்பையும் புரிந்துகொள்ளும் அறத்தைப் பெற்ற மானுடகுலம் தன் வாழ்வின் நோக்கத்தை  தேடிச் செல்லும் விவேகத்தைப் பெற்றுள்ளது.   

நனவின் ஒவ்வொரு நிலையும் மனிதருக்கென ஒரு நிகழ்நிரலை வைத்திருக்கிறது. தனியர் ஒரு சூழலில் இருந்து இன்னொன்றிற்கு செல்கிறார். ஒவ்வொன்றும் ஒரு சவாலாக, ஒரு புதிராக, ஒரு விடுகதையாக இருக்கிறது. ஒரு சூழ்நிலையைக் கடக்க அதன் பொருளை புரிந்துகொள்ள வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அர்த்தத்திற்கான தேடல் தவிர்க்கமுடியாதது. அர்த்தத்தைக் கொண்டே எச்செயல் விரும்பத்தக்கது, எச்செயல் விரும்பத்தகாதது என்பதை முடிவுசெய்ய முடியும். ஒரு செயல் என்பது கர்மம். செயலுக்கான தூண்டல் ஒரு விழைவிலிருந்து (காமம்) வருகிறது. விழைவின் பொருத்தப்பாடு ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அதன் மதிப்பைப் பொறுத்து அமைகிறது. எனவே அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்) ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று இயைந்து செல்வன.

இந்த மூன்று நிலைகளிலும், ஒருவரது பொது நனவு உயிர்ப்பு கொண்டு மாறுதல்களுக்கு (விருத்திகள்) உள்ளாகிறது. மாற்றமில்லா தூய நனவு, வீடுபேறு (மோக்ஷம்) எனும் நான்காவது வகையை சார்ந்தது.  அறிவெல்லை கடந்தநிலையை அடைய விழையாதவரில்கூட, அவர்களது நனவின் மூன்று நிலைகளிலும் ஓரளவுக்கு கடந்தநிலை உள்ளார்ந்து அமைந்திருக்கும். ஆக, அனைவருமே நான்மடிப்பு கொண்ட நனவிற்குள்தான் வாழ்கின்றனர். ஒரு விலங்கென்ற நிலையில், ஒருவர் விலங்குக்கான தன்னுணர்வுக்கேற்றவாறு செயல்படும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்.  சமூக ஒழுக்கத்தை பயில வாய்ப்பில்லாத ஒருவர் காட்டுவிலங்கைப் போல்தான் நடந்துகொள்வார். அவரை காட்டாள் என்கிறோம். இங்கு அவர் எதையும் எண்ணி திட்டமிட்டு செயல்படுவதில்லை. இயற்கைக் கருவிகளின் கைப்பாவையாக இருக்கிறார் அவர். ஒருவர் எப்போது தன்னை விலங்கியல்பிலிருந்து விடுவித்துக்கொள்கிறாரோ அப்போதுதான் அவரால் தன் நனவை மேம்படுத்திக்கொண்டு அறுதி விடுதலையைப் பெற முடியும். எனவே தந்த்ரம் என்பதை ஸ்வதந்த்ரம் என்றும் சொல்லலாம். அறுதி விடுதலை பெற்று இயங்கும் சுயம் அது. மாறாக, பரதந்த்ரம் என்பது பிறரது விழைவுக்கேற்றவாறு வற்புறுத்தல்களால் இயங்குவது.

பல்லாயிரம் வருடங்களாக மானுடர் தம் உயிரியல் தேவைகளுக்கேற்பவே இயங்கிவந்திருக்கின்றனர் என்பதையே பரிணாம வளர்ச்சி காட்டுகிறது. இதனையே இப்பாடல், உயிர்களின் இறைவன் ஒவ்வொரு உயிரினத்தையும் தன்னியல்புப்படி இயங்க வைத்துவிட்டு இயக்கமிலா இயக்குபவனென அமைந்துவிட்டதாகக் கூறுகிறது. இன்றும்கூட, பல்லாயிரம் பேர் மெய்யான விழுமியம் ஏதுமற்றவராகவே இருக்கின்றனர். அன்றாட வாய்ப்புகள் இட்டுச்செல்லும் பாதையில் அவர்கள் வாழ்கின்றனர். பலரும் தமக்கு நாட்டமில்லா செயல்களிலே ஈடுபட்டிருக்கின்றனர். உள்ளம் ஒன்றை விரும்ப, உடலை பிற எவருக்கோ அடிமைப்படுத்தி, விருப்பமில்லாததை செய்கின்றனர். பரதந்த்ரத்தில் வாழ்தலுக்கு இது சரியான எடுத்துக்காட்டு. இப்பாடலில், கண்மூடித்தனமான இயற்கைத் தளைகளிலிருந்து நாம் விடுபடுவதற்கு எழும் குரலாக பேரன்னை உருவகப்படுத்தப்பட்டிருக்கிறாள். தன்னால் படைக்கப்பட்டவற்றில் எல்லாம், ஆகச்சிறந்த தரிசனத்தை நோக்கிச் செல்லும் விழைவை தூண்ட விழைகிறாள் அன்னை. 

தேவை – விடுதலை எனும் இரண்டு விழுமியங்களுக்கு இடையில் வாழ்க்கை அமைந்துள்ளது ஒரு புதிர்தான். அகம் அகத்தில் மகிழ்வது என்பது விடுதலையின் அறிகுறி. சிலர் விடுதலை பெற விழைவதில்லை. ஊழுக்கு தம்மை ஒப்புக்கொடுத்து அடிமையென வாழ்பவர்கள் அவர்கள். வாழ்வில் விடுதலைக்கான விருப்பம் இல்லாமை அவர்களை இழிநிலைக்குத் தள்ளுகிறது. அவர்கள் சூத்திரர் எனப்படுகின்றனர். வேறு சிலர் தம் மனத்தின் சூழ்ச்சியை பயன்படுத்தி சிறிது விடுதலையை பெறுகின்றனர். விடுதலையைப் பெறுவதற்கான வழிமுறைகளுக்கே அவர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அவர்கள் வைசியர்கள் (வணிகர்). ஏதொன்றையும் கணக்கிட்டு மதிப்பிடுவது அவர்களின் வழக்கம். சிலர், பிறரது விடுதலையை காப்பவர்களாக ஆவதன் வழியே, ஒப்புநோக்க அதிக விடுதலை பெறுபவர்கள். இவர்கள் க்ஷத்ரியர்கள். இன்னும் சிலர், ஞானத்தின் வழியே தம் விழைவுகளை கட்டுப்படுத்துபவர்கள். ஆன்மிகப் பேரின்பம் எனும் கடந்தநிலையின் உச்சத்திற்கு மீளமீளச் செல்வதற்கென தம் விடுதலையை மேம்படுத்திக்கொண்டே செல்பவர்கள். அங்கிருந்து அவர்கள் அடைவது அறுதி விடுதலையை. அன்னை தன் பக்தர்களுக்கு அறுதியான ஆன்ம விடுதலையை காட்டித்தருகிறாள். இந்த நிர்பந்தம், கண்மூடித்தனமான நிர்பந்தங்களை நீக்கி கடந்தநிலைக்கு இட்டுச்செல்கிறது.

பல்லாயிரவர் தமது அண்மை உலகைத் தாண்டி எதையும் பார்க்க முயலாமல், விலங்குணர்வோடு வாழத் தலைப்படுகையிலும், ஆன்ம வாழ்வை விழைவோருக்கு வழியொன்று இருக்கவே செய்கிறது. அந்த வழியே பேரன்னையின் தந்த்ரம் எனப்படுகிறது. அது, அனைத்தின் இயல்பையும் அறியும் தர்மத்தையும், அனைத்தின் பொருளையும் அறியும் அர்த்தத்தையும், விரும்பத்தக்கதை விழையும் காமத்தையும்; ஒருவருக்கு அறுதி விடுதலை அளிக்கும் மோக்ஷத்தையும் ஒன்றென இணைக்கிறது. 22-ஆவது பாடலில் சொன்ன மகாவாக்கியமான ‘தத்வமஸி’ (அது நீயே) இங்கு மீண்டும் குறிப்புணர்த்தப்படுகிறது. எந்த அறிவு விடுதலையை அளிக்கிறதோ அதுவே மீஉயர் அறிவு. அறிந்து, விடுதலை அடைக!

Leave a comment