ஸுதா*மப்யாஸ்வாத்ய ப்ரதிப*யஜராம்ருத்யுஹரிணீம்
விபத்யந்தே விஶ்வே விதி*ஶதமகா*த்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா
ந ஶம்போ*ஸ்தன்மூலம் தவ ஜனனி தாடங்கமஹிமா
பாடல் – 28
பிரம்மனும் இந்திரனும் இறையோர் பிறரும்
அழிவின்மையளிக்கும் அமிழ்தருந்தியபோதும்
அனைத்துலகோரும் அடைவது மரணம்
ஆலகாலம் எனும் கொடுநஞ்சை அருந்திய
அரனுக்கோ அழிவென்பதே இல்லை
அன்னையே
இது சொல்கிறது
தாடங்கம் எனும் உன் காதணியின் பெருமையை
**
காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நொடியும் காலம் வருகிறது, இருக்கிறது, போய்க்கொண்டே இருக்கிறது. அது போனதும் அடுத்த நொடி வருகிறது. காலத்தின் வரிசைக்கிரமமான நகர்வு போலவே, உள்ளம் தன் எதிர்பார்ப்பை, எதிர்பார்ப்பு மெய்ப்படுவதை, கடந்துசென்றதன் நினைவை கண்டுகொள்கிறது. மொத்த விழிப்புநிலை நனவும் காலத்தின் நகர்வால் குறிக்கப்படுகிறது. ஓயாது செயலாற்றிக் கொண்டிருப்பவர் கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொள்கிறார். கடந்துசெல்லும் காலத்தை பழிக்கிறார். மகிழ்வோடிருப்பவரோ காலம் என்பதையே மறக்கிறார். ஒவ்வொருவருக்கும் நாளின் புத்தம்புது தொடக்கமும், அழகிய தூக்கமும் இருக்கிறது. இந்நாளில் இதோ கடந்து செல்லும் இக்கணத்தில் காலத்தை உணரமுடியும். பிறப்புக் கணத்தில் தொடங்குவது காலம். வாழ்வு முடியும்போது அது ஒரு நனவனுபவம் என முடிவுக்கு வருகிறது. நடுநடுவே நனவு தப்பினாலும், வாழ்வின் தொடர்ச்சியை துண்டாட காலத்திற்கு அனுமதி இல்லை. விழைவுகள் ஒரு நொடியில் நிறைவேறுவதில்லை, ஒரு நாள் கூட போதாது. ஒருவரது முழுமலர்வு நிகழ ஒரு வாழ்நாள் தேவைப்படுகிறது.
இதனால்தான், ஒவ்வொருவரும் தன் அகமலர்வை நிரந்தரமானதாக்க முயல்கின்றனர். ஒவ்வொருவரும் பிறரது கவனத்தை ஈர்க்க விழைகின்றனர். எல்லோரும், தாம் வாழ்கிறோம் என்பதை உலகிற்கு அறிவிக்க எண்ணுகின்றனர். அவர்கள் புகைப்படமாக பதியப்படுகின்றனர். பெயர்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன. கவர்ச்சிக்காக குரல்கள் பண்படுத்தப்படுகின்றன. வாழ்வெனும் களத்தை நீங்காமல், இங்கே, முடிந்தால் இளமையோடு, என்றுமிருக்க வேண்டும் என்பதே அனைவரின் அவா. இந்தியத் தொன்மத்தில், இந்தப் பேரவா, பாலாழியைக் கடைந்து அமிழ்தெடுப்பதாக விளக்கப்படுகிறது. இந்தக் கடையல் இன்றும் நிகழ்ந்துகொண்டிருப்பதுதான். மறைபொதி ரகசியங்களை தெளிவுற அறிவதற்கு உள்ளத்தை செலுத்துவதே கடைதல்.
தெளிவு, இயக்கம், மழுப்பம் என்ற மூன்றுமே இயற்கையின் முக்குணங்கள். வடமொழியில் இவை சத்வ, ரஜஸ், தமஸ் எனப்படுகின்றன. சத்வம் வெண்மையாகவும், ரஜஸ் செம்மையாகவும், தமஸ் கருமையாகவும் கருதப்படுகிறது. இவை ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்கமுடியாமல் இணைந்திருப்பவை. வாழ்வின் பொறிகளில் இருந்து வெளியேற தெளிவு பெற வேண்டும். தெளிவான கருத்துக்கள் வழியே மேம்பட்ட அறிவியலும், கடின உழைப்பு வழியே உயர் தொழில்நுட்பமும் நம் வசமாகியுள்ளன. மானுட சாதனையில் நாம் முன்னேறியிருக்கிறோம் என்றாலும் துரதிருஷ்டவசமாக தமோகுணமும் தோன்றியிருக்கிறது. பாலாழியை கடைவதில் எதிர்மறை முனைக்கோடி (negative pole) உலகை அழிக்கும் நஞ்சாக இருக்கிறது. இன்று அந்த எதிர்மறையை நடுங்கியபடி நாம் எதிர்கொள்கிறோம். அறிவாற்றலைக் கடைந்து பல நன்மைகளை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், இன்று பூமியில் உயிரழிவை அண்மையிலெனக் காண்கிறோம். இதிலிருந்து தப்ப வழி ஏதும் உள்ளதா? இயல் உலகை பகுப்பாய்வு செய்வதே இதுவரையிலான தேடலாக இருந்து வந்துள்ளது. செல்வம் நாடும் வேட்டையில் தேடல் என்பது மையத்திலிருந்து விலகிவிட்டது. மையத்தை மீளவும் அடைவதே இனி நாம் செய்ய வேண்டியது. அத்தேடல் செங்குத்தான ஏற்றப்பாதையில் அமையவேண்டும்.
ஐயம்திரிபற உள்ளதை நாம் காண்பதே இல்லை. உலகில் உள்ள ஒவ்வொன்றும் ஒன்றோடொன்று எவ்வாறு பிணைந்துள்ளது, ஒவ்வொன்றின் தொடர்ச்சியிலும் ஒரு நோக்கம் உள்ளது என்பதையெல்லாம், நம் சுற்றத்தார் மீதும், நம் செல்லப்பிராணிகள் மீதும், நம் தோட்டத்துச் செடிகொடிகள் மீதும் நாம் காட்டும் பாசத்திலிருந்தும் அக்கறையிலிருந்துமே அறியமுடியும். ‘யாருக்காக?’ என்ற ஒரு வினாவை எழுப்பிக் கொண்டாலே போதும், வாழ்வில் மறைந்துள்ள ஒரு பரிமாணம் நம் கண்களுக்கு புலப்பட்டுவிடும். தொலைதூரத்து விண்மீனும் நம் உடலில் உள்ள திசுக்களும் கைகோத்துக் கொள்ளும். பிரபஞ்சத்தின் மொத்த இயக்கமும் காலமின்மையில் நிலைகொள்ளும். இதுவே இப்பாடலில், தீயால் எரிக்கமுடியாத, நஞ்சால் கொல்லப்படமுடியாத முழுமுதல் இறையான சிவன் என சுட்டப்படுகிறது. நிலன் என ஒன்று இல்லையேல் மேற்சுமத்தீடு இல்லை (If there is no ground, there also cannot be any superimposition). நிலனை அகற்றுவது ஆடலை கைம்மை கொள்ளச் செய்தல். இந்திய மரபில், பெண் கைம்மை அடைந்ததன் அடையாளமாக அவளது காதணி (தாடங்கம்) அகற்றப்படும். எண்ணற்ற சுழற்சிகளுக்குப் பிறகும் உலகை நிலைபெறச்செய்யும் செயல்முறை கைம்மை கொள்வதில்லை. அதே மறுக்கவியலா மெய்மையே நம் இருப்பின் நிலனாகவும் உள்ளது.
வாழ்வின் செயல்பாட்டு மெய்மையை மட்டுமல்லாமல் (அறிவெல்லை) கடந்தநிலையிலான அதன் மேன்மையையும் நாம் உணரவேண்டும். நமது விழைவுகளும், தேர்வுகளும், செயல்களும் புற எல்லையில் அமைந்துள்ளன. விழைவு, விஷ்ணு எனும் முதிரா நினைவுகளிலிருந்து வருகிறது; படைப்புக்கான தேர்வு பிரம்மனிலிருந்து; செயல் இந்திரனிலிருந்து. அனைத்து வழிபாடுகளும் நமது விழைவுக்கும், தேர்வுக்கும், செயல்களுக்கும் செய்யப்படுவையே. நோக்கிநிற்கும் உணர்வுருவை, அனைத்தையும் விஞ்சிநிற்கும் அதன் பிரபஞ்ச விருப்பை வழிபடுகையில் நமது ஆன்மிக ஒழுக்கம் முழுமையடைகிறது. அதன் பிறகு நம் வாழ்வின் செயல்நோக்கம் ஒருபோதும் கைம்மை எய்துவதில்லை.
‘ட*ம்’ எனும் மந்திரம் யந்திரத்தின் உள்ளே அமைந்திருக்கிறது.