ஶ்ரீசக்ர தியானம் – 22

பம் ப*ம் ம் ப*ம் மம் அனங்ரேகா* நித்யக்லின்னா ப*கமாலினீ

பெருங்கருணை வடிவானவளே, சூரியனிலிருந்து ஒளிக்கற்றைகள் எல்லா திசைகளிலும் ஒளிர்கின்றன. ஆனால் சூரிய ஒளி ஒரு பொருளை ஒளிரச் செய்து அதை புலப்படச் செய்யும்வரை எவரும் அந்த ஒளிக்கற்றைகளை பார்ப்பதில்லை. ஒளிக்கதிர்கள் ஒளிரச் செய்யும் பொருள்களிலிருந்து, ஒளிரும் பகலவன் உய்த்தறியப்படுகிறான். அதே போல், எல்லா திசைகளிலிருந்தும் உன் அன்பின் கதிர்கள் ஒளிர்கின்றன. எம் மனதுக்குகந்தவற்றை அழகுறச் செய்வதும் அவையே. எழிலானவற்றின் பின்னால் உன்னை நீ மறைத்துக்கொள்கிறாய். சிலபோதுகளில் நீ அங்கிருக்கக்கூடும் என்று நாங்கள் ஐயுறுவதுகூட இல்லை. எமக்கு நீ வழங்கும் நலன்களுக்கு நாங்கள் உனக்கு நன்றிதெரிவிக்க வேண்டும் என நீ எதிர்பார்ப்பதில்லை. முழுமுதலால் தீண்டப்படும் அருள்பெற்றவர் முழுமுதலை அறிவதோடு, முழுமுதலாகவே ஆகிவிடுகிறார் என்பதை உபநிடதங்களிலிருந்து அறிகிறோம். ஏறத்தாழ இதற்கு எதிரிணையாக, இருதுருவங்களுக்கிடையே அலைக்கழியும் ஒருவர், ஒரு பொருளை விழைகையில், அவ்விழைவாகவே ஆகிவிடுகிறார்.

ஒரு இரும்புத்துண்டு காந்தத்தோடு உரசியதும் அதுவும் காந்தத் தன்மை பெற்று இரும்புத்துண்டுகளை தன்பால் ஈர்க்கிறது. உன் அன்புநிறை கருணையால் வாழ்த்தப்பட்டவர்களும் அன்பின் ஊற்றுகளாகிவிடுகின்றனர். அவர்களிலிருந்தும் அருள் அனைத்துத் திசைகளிலும் பரவுகிறது. தம் ஆற்றல் முழுதும் கொண்டு இறையின்மீது அன்புசெலுத்துவோரால், தம்மிலிருந்து அண்டை அயலாருக்குப் பரவும் அன்பை கட்டுப்படுத்தமுடிவதில்லை. இறைவன் எல்லோர்மீதும் அன்பு செலுத்துவது போலவே, இறைவனை காதலிப்பவனும் அன்பு செலுத்துகிறான். ஏனெனில், அவனுடையவை அனைத்தையும் காணும் இறையின் விழிகள், அனைத்தையும் அறியும் இறையின் அகம், எங்கும் நிறைந்த இறையின் இருப்பு. எப்போதும் அருள்பவள் நித்யக்லின்னா.

யோகசாதகர், அணையாது எரியும் வேள்வித்தீயில் எரிந்து உருகி தூய்மை பெறவேண்டும். நாங்கள் புனித பலியாக எங்களை இடவேண்டிய வேள்வித் தீ நீயே. எங்களது கசடுகள் எரிந்தழிந்தபிறகு எங்கள் சாரம் உனது நறுமணத்துடன் ஒன்றுகலந்து, அனைவருக்குமான அன்பாக வளிமண்டலத்தை நிறைக்கிறது. கல்லாலும் உலோகத்தாலுமான கோயில் கருவறைத் தெய்வங்களைப் போல், உன் அன்பர்கள் நிறைவேற்றும் வேண்டுதல்களுக்காகவும், பாடும் துதிப்பாடல்களுக்காகவும் நீ காத்திருப்பதில்லை. பவானித் தாயே, உன்னை நாங்கள் ‘பவானீ’ என்றழைத்து முடிப்பதற்கு முன்பாகவே நீ எம் தேவைகளை புரிந்துகொள்கிறாய். நிகழ்காலத் தேவைகளை அளிப்பதோடு நில்லாமல், கடந்தகாலத்தை சரி செய்யவும், எதிர்காலத்திற்கான நிறைவையும் நீ அருள்கிறாய். நீ எமக்குள் நுழைந்து பல பிறவிகளுக்கான நிகழ்நிரலை உன் பொறுப்பென ஏற்கிறாய். ஆன்மீக வரலாற்றில், இதற்கிணையான இருதுருவக் காதலே இல்லை. 

உனது அடிப்படை மந்திரமான ‘பம்’, நீ பராசக்தி என்பதை குறிக்கிறது. ‘ப*ம்’ எனும் பீஜ மந்திரம் நீயே ப*லதாயினீ (பலன்களை அளிப்பவள்) என்பதை காட்டுகிறது. பராசக்தியான உன்னிடமே ஆற்றலின் அனைத்து ஊற்றுகளும் குவிகின்றன. குன்றா குறையா நன்மையின், ஒளிரும் ஊற்றுமுகமான நீயே பவானீ. உன் தனித்துவமான அருளை வழங்க என்னைத் தேர்ந்தெடுத்த உன் கருணையை எண்ணி வியக்கிறேன். எனக்கு நீ செய்ய விழையும் உதவிகளைப் பற்றி முடிவெடுக்க வேண்டிய அவசியத்தை நீ என்மேல் திணிப்பதில்லை. எனக்கு உகந்தது எது என்பதை நீ எப்போதும் அறிவாய். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்துளியும், ஒவ்வொரு கணமும் அருளால் ஆன புதிய சோலை ஒன்றிற்கு என்னை இட்டுச்செல்கிறாய். அருட்செயல் ஒவ்வொன்றும் ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. அது எல்லா பக்கங்களிலிருந்தும் ஒளியூட்டப்பட்ட, சுழலும் வைரமொன்றை நோக்கிக் கொண்டிருப்பதுபோல் இருக்கிறது. 

காமம்சார் உலகில் பெண்ணே கவர்ச்சிகரமானவள் என்பதால், மீள மீள அவள் துன்பத்தையே எதிர்கொள்கிறாள். அவள்மீது பொழியப்படும் பாராட்டு ஒவ்வொன்றும், விரைவுடல் கொண்ட அழகிய மான் ஒன்றின்மீது எய்தப்பட்ட அம்பெனவே பாய்கிறது. எனவேதான் அவளுக்கு புதிய ஆற்றலும், புதிய வலிமையும், தூய இருப்பும் அளிக்க நீ இருக்கிறாய் என்பதில் வியப்பில்லை. பகமாலினியாக நீ காட்டும் பரிவு, தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவையைப் போலிருக்கிறது. பகமாலினீ எனும் சொல், நீ தரும் துன்பத்தையும், ஒரு அற்புதமென சரியான தருணத்தில் அதிலிருந்து எம்மை நீ தப்பச் செய்வதையும் குறிக்கிறது. எம்மால் தாங்கமுடியாத துன்பங்களை இறுதிக் கணத்தில் ஏன் அளிக்கிறாய் என்பது எங்களுக்கு புரியவில்லை. கடந்தகாலத்தின் கறைகளைக் களைந்து, நீரல்லியைப் போல தூய்மை பெற்று நாங்கள் எழவேண்டும் என நீ விழைகிறாய் போலும்.

விழைவுகளைக் கடப்பதே தலையாய விழைவு. உன்னோடு எம்மை அடையாளப்படுத்திக் கொள்கையில் மட்டுமே எம்மால் அந்த நிறைவுணர்வை அடைய முடியும். ஆகவேதான், எமக்கருளும்படி வேண்டுகையில் நாங்கள் நீயெனவே ஆகிவிடுகிறோம். விஷ்ணுவும், பிரம்மாவும், இந்திரனும் எல்லாம் உன்னை வணங்க வேள்வித் தீயுடன் வரவேண்டியிருக்கிறது. ஆனால் எனக்கென தனியாக நேரம் எதுவும் நீ ஒதுக்குவதில்லை. தன் குழந்தை தன்னை நாடிவந்து, மடிமீதமர்ந்து, பாலருந்துவதற்கு முலையைத் தேடுவதை எந்த அன்னைதான் தடுப்பாள்? அத்தகைய சுதந்திரத்தை நீ எமக்களித்திருக்கிறாய். உன் இதயம் எனக்கென உருகுகிறது. அன்னையர் தம் மக்களின் நெற்றியை முத்தமிடுகையில் அந்தக் கதகதப்பு ஒரு கணமே நீடிக்கிறது. ஆனால் உன் முத்தமோ அழிக்கவியலா பொற்தடமென என் அகத்தில் வாழ்கிறது. பிறவிதோறும் அதை என்னுடன் ஏந்திச் செல்கிறேன். நீ எனக்கருளியுள்ள சுதந்திரத்தைவிட பெரிய நற்பேறு வேறொன்றில்லை. விடுதலை அருளும் அன்னையே, உன் அடிகளில் தலை பணிகிறேன்.

|| பம் ப*ம் பம் ப*ம் மம் அனங்கரேகா நித்யக்லின்னா பகமாலினீ || 

Leave a comment