ஶ்ரீசக்ர தியானம் – 20

ஶம் க்ஷம் அனங்மாலினீ சித்ரா ஜ்வாலாமாலினீ

தாயே, ஶம் என்பது உன் அடிப்படை மந்திரம். க்ஷம் என்பது பீஜ மந்திரம். இயல்பிலேயே தன்னொளி கொண்டவள் நீ. ஆதி இறை தூய நன்மையெனும் நிலையில் என்றென்றைக்குமென அமைந்திருக்கிறான். அந்த நிலையில், அலைகளற்ற நீடமைதிகொண்ட தெளிந்த ஆழியெனக் காணப்படுகிறான். உன் இறையின் மெய்மையிலிருந்து ஒரு சிறு பொறியை எடுத்து அதற்கொரு உடலையும், உள்ளத்தையும், அகத் துடிப்பையும் அளித்துப்பார்ப்பது உனதொரு ஆடலாக இருக்கிறது.

ஒரே சமயத்தில் அழகானதாகவும் அருவருக்கத்தக்கதாகவும் இருக்கின்ற, இன்பமும் துன்பமும் ஒருங்கே அளிக்கின்ற இவ்வுலகின் நிலைமையை பிறந்த உடனேயே ஒரு குழந்தை அறிந்துகொள்வது எத்துணை ஆபத்தானது என்பதை நீ அறிவாய். ஒவ்வொருவருக்கும் மன அழுத்தத்தையும் உவகையையும் நீ மாறி மாறி அளிக்கிறாய். இன்ப-துன்பச் சூழல்களின் எண்ணற்ற வகைமாதிரிகளை அனுபவிக்கும்படி செய்கிறாய். அதனால் எல்லோருமே இறுதியில் விடுதலை பெறும் விழைவை பெறுகின்றனர். நல்லெண்ணம் கொண்ட மருத்துவன்போல எப்போதும் நீ அவர்களுடன் இருக்கிறாய். அவர்களுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படும்போது இறுகிய இதயத்தோடு அருகே நிற்கிறாய். ஆனால், தேடல் கொண்டோர் நீ தரும் பயிற்சிகளின் அமிலசோதனையை தாளமுடியாத நிலை ஏற்படும்போது அவர்களை உன் கருணமிகு கைகளில் ஏந்தி உறங்கச் செய்கிறாய். ஒவ்வொருவரும் உன் இறைவனின் பேரமைதியில் மகிழ்பவர்களாக, முழுமையானவர்களாக ஆக வேண்டும் என்பதே உன் அறுதிக் குறிக்கோள்.

எனவேதான், ஜீவன்களை உருமாற்றம் செய்வதற்கான அறுதிக் காரணியைப் போல அடிப்படை மந்திரமான ‘ஶம்’  எப்போதும் உன் முன் வைக்கப்பட்டிருக்கிறது. உன் பீஜ மந்திரமான ‘க்ஷம்’ உனது எதிரெதிர் குறிக்கோள்கள் இரண்டை குறிப்புணர்த்துகின்றன. ஒன்று தேடல்கொண்டவனை மிகவும் கடினமான சோதனைகளுக்கு ஆளாக்குவது. க்ஷ எனும் எழுத்து இன்னலையும் கடின உழைப்பையும் குறிப்பது. ஆனால் அது ‘ம்’ எனும் ஒலியோடு முடிவடையும்போது இறுதி விடுதலையை (மோக்ஷம்) குறிக்கிறது. எமது சொந்த வாழ்வில் நீ மிக அணுக்கமான ஆர்வம் காட்டுகையில், உன்னை நாங்கள் தேடுவது இயல்பானதுதானே? ஆனால் நீ எங்கும் தென்படுவதில்லை. மலர்கள் தொடுக்கப்பட்ட நார் போன்றவள் நீ. மலர்களில் நார் மறைந்துவிடுகிறது. அதுபோல நாங்கள் பார்ப்பதெல்லாம் எமது அழுகைநிறைந்த முகங்களும், புன்னகைக்கும் உதடுகளும், வியப்பில் விரிந்த விழிகளும்தான். உடலிலியான அனங்கனே உன் கருவி. நீயும் அதைப் போலவே இருக்கிறாய். நீ உன்னை மறைத்துக்கொண்டு, அன்பின் நிறப்பிரிகைகளை மட்டுமே எமக்குக் காட்டுகிறாய். தன்னுள் இறங்குவோரை கழுவி, தூய்மைப்படுத்தும் நதியொன்றைப் போல நீயும் எம்மை தூய்மையாக்குகிறாய் – சிலபோது எம் களிச்சிரிப்பு கொண்டும், பிறபோது பொங்கிப்பெரும் கண்ணீர் கொண்டும்.

ஓவியர்கள் குறியீடுகளை படைக்கையில், ஒரு விமர்சகன் அவற்றை விளக்க வேண்டியிருக்கிறது. ஆனால் உன் படைப்பில் நீ தீட்டும் ஓவியங்கள் எல்லாமே நாங்கள் போற்றும் விழுமியத்தின் வரையறைகளாகவும் விளக்கங்களாகவும் திகழ்கின்றன. வடிவம் ஒவ்வொன்றுக்கும் பெயர் கொடுத்து தத்துவம் அளிக்கிறோம். நீ படைக்கும் ஒவ்வொன்றிற்கும் நீ அளித்துள்ள தனிப்பண்புகளை முடிவிலாது ஆராய்ந்துகொண்டே இருக்கிறோம். சில சமயங்களில் மடமை நிறைந்த கேள்விகளை எழுப்புகிறோம்.  தும்பியின் சிறகு ஏன் கண்ணாடி போலிருக்கிறது? அதன் வாலில் எதற்கு ஒளிரும் வண்ணங்கள்?  எம் கண்ணுக்குப் புலப்படாதவகையில் வேகமாக சிறகடிக்கும் பேராற்றல் ஒரு வண்டிற்கு எங்கிருந்து வருகிறது என வியக்கிறோம். சீறும் நாகத்தைக் கண்டால் நாங்கள் அஞ்சி ஓடவேண்டும் என நீ எதிர்பார்க்கிறாய் என்றால்,  வானவில்லின் ஏழு வண்ணங்களும் பூசப்பட்ட அழகிய பத்தியுடன் ஏன் அதை படைத்திருக்கிறாய்? யாம் எமது சிற்றறிவைக் கொண்டு உண்டாக்கும் தர்க்கங்கள் எல்லாம் பொய்த்துப் போக வேண்டும் என்பதே உன் குறிக்கோள் என்பது வெள்ளிடை மலை. வாழ்வின் பரபரப்புகளுக்கும் சலிப்புகளுக்கும் இடையில் மின்னலெனத் தோன்றி எம் உள்ளம் கவர்கிறாய். அக்கணங்களே வாழ்வை பொருள்பொதிந்ததாக்குகின்றன. 

எம் எதிரில் நட்பார்ந்த முகமொன்று தோன்றும்போதும், இனிய குரலொன்று பழைய நட்பைக் கொண்டாட  அழைக்கையிலும், புதிய நட்புகொள்ள அழைக்கையிலும், பூவொன்று வாடி உலர்ந்து உதிர்ந்த இடத்தில் புத்தம்புது மொட்டு விரிந்து எமைநோக்கி புன்னகைக்கும்போதும், பகலவன் மறையும் பேரழகைக் கண்ணுற்ற பிறகு அங்கு முழுநிலவெழுவதை காணும்போதும், கடந்துசெல்லும் காற்று மரத்தை சீண்டிச் சென்று அதன் நிழலை எம் முற்றத்தில் விழச்செய்கையிலும், உடலிலியான காமதேவியின் (அனங்கமாலினியின்) இனிய பாடல்கள் ஒலிக்கும்படி செய்கிறாய். உடலிலியை காண இயலாது என்றாலும், மின்னும் உன் ஒளியை, உன் குரலினிமையை எம் உளம்கொண்ட உணர்வுகள் போலவே எம்மால் நன்றாக அறியமுடிகிறது.

மரபாக வரும் தொன்மங்கள், எம் முன் பல புதிர்களையும் முரண்களையும் வைக்கின்றன. விஷ்ணு அரவின்மேல் துயில்கொள்கிறான்; கருடன் மீதேறி பறக்கிறான். அரவும் பருந்தும் தம்முள் கொடும் பகைமைகொண்டவையாக கருதப்படுபவை. அதே முரண், முப்புரம் எரித்தவனை மூவுலகையும் எழுலூட்டுபவளுக்கு முன் வைக்கிறது. சிவனது வெறிகொண்ட ஆடலும் உனது நடுக்கமில்லா ஒளிர்வுகொண்ட மென் நடனமும் (லாஸ்யம்) ஒன்றையொன்று முழுமை செய்கின்றன. கனலும் தீவிரத்தோடு நீ ஊழ்கத்தில் இருந்தபோது உன் நாவில் எழுந்தான் மன்மதன். ஈசனின் நெற்றிக்கண்ணில் எழுந்த தீ மன்மதனை சாம்பலாக்கியது. உன்னை எரிப்பதற்கு பதிலாக, காதல் ஊறிய ஈசனின் அக எழிலை உன்னில் நிரப்பியது. தீச்சொல்லை வரமென மாற்றுவது எப்படி? துன்பியல் நாடகத்தை களியாட்டென மாற்றுவது எப்படி? என்பதெல்லாம் அறியாமல் நாங்கள் குழம்பிவிடுகிறோம். சிவசங்கரியே, உன் மந்திரத்தின் மறைபொருளை தியானிப்பதன் மூலம் ஞானத்தின் அடிமுடிக்கு நான் வந்துசேர்கிறேன். அங்கே எதிரிணைகள் எல்லாம் எரித்தழிக்கப்படுகின்றன. 

|| ஶம் க்ஷம் அனங்கமாலினீ சித்ரா ஜ்வாலாமாலினீ ||

Leave a comment