சௌந்தர்யலஹரீ – 20

கிரந்தீமங்கேப்*ய: கிரணநிகுரும்பாம்ருதரஸம்

ஹ்ருதி த்வாமாத*த்தே ஹிமகரஶிலாமூர்திமிவ ய:

ஸ ஸர்பாணாம் ர்பம் ஶமயதி ஶகுந்தாதி*ப இவ

ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா ஸுக*யதி ஸுதா*தா*ரஸிரயா

பாடல் – 20

உன் உடலுமிழும் கதிர்களை 

படிகத்தின் குளிரொளியென தியானிப்பவர்

அமுதம் போன்ற அக ஆற்றல் பெறுகின்றார்

அரவையும் அடக்கக்கூடிய 

அவர்களின் அருட்பார்வை 

காய்ச்சல் கண்டவரையும் காப்பாற்றுகிறது.

**

உணர்வுருவும் பருவுருவும், ஒன்று மற்றொன்றால் அறியப்படும் அளவுக்கு ஒருமை கொண்டவை. சிவ-சக்தி இணைவும் அதே போன்றது. உணர்வுருவின் தன்னொளி  பருவுருவால் எதிரொளிக்கப்பட்டு அனைத்துத் திசைகளிலும் பலவண்ணங்களில் பரவுகிறது, ஆதிமுதல் படைப்பாளினியின் அங்கத்திலிருந்து அமுத ஒளி ஒழுகுவது போல. அறிவெல்லை கடந்தநிலையிலான இறைவன் உடலற்றவன் (நிரவயவீ); படைப்பாளினியோ பிரபஞ்சத்தையே உடலுறுப்புகளெனக் கொண்டவள் (ஸ அவயவீ).

தன் அகமெனும் கருவறையில் உள்ள இறையுருவின் முன் தன்னிறைவுகொண்ட அமைதியில் அமர்பவரே தியானிக்கும் யோகி. ஆனால் அவரால் புரிந்துகொள்ள முடியாத, உடலில்லாத, அனைத்தும் கடந்த முழுமுதலோடு தொடர்புறுத்திக்கொள்ள இயலாது. எனவே, உள்முகமாகச் சென்று கால்விரல் நுனி முதல் உச்சந்தலை வரை உயிர்ப்புறச் செய்யும் ஆன்மாவோடு அகவயமாக அடையாளப்படுத்திக் கொள்கிறார். தனது நரம்பு அமைப்பில் உள்ள ஒவ்வொரு நாளத்திலும் வாழ்வளிக்கும் இறையருளின் அமுத ஆற்றல் ப்ராணனின் வடிவில் பாய்வதை உணர்கிறார்.

தன்னுள் ப்ராணனின் இயக்கத்தை முழுமையாகக் கண்டபின்னர், அவர் அதனை தன் முன் உள்ள சிலையில் எறிவுகொள்ளச் (project) செய்கிறார். அதன்பின்னர் அச்சிலை இயக்கமற்ற வெறும் பருப்பொருள் அல்ல. வழிபடுபவரது இயல் இருப்பே (phenomenal existence) அந்த உருவத்தை உயிர்ப்பிக்கிறது (ப்ராணப்ரதிஷ்டை). அவ்வுரு, ஒரே சமயத்தில் சிவனாகவும் சக்தியாகவும் இருக்கும் முழுமுதலெனும் பெருவியப்பைக் காண்பதற்கான சாளரமாகிறது. ஒன்றன் உச்சி நிலத்தைப் பார்த்தபடியும் மற்றொன்றின் உச்சி விண்ணை நோக்கியபடியும் இரண்டு முக்கோணங்கள் இணைத்துப் பின்னப்படுகின்றன. அப்பின்னலின் உள்ளே அமையும் மண்டலத்தில் வழிபடுபவர் தன்னை வைக்கிறார். ஐந்து மூலக்கூறுக் கொள்கைகளும் நான்கு தெய்வீகப் படைப்புக் கொள்கைகளும் அவரது இருப்பை சூழ்ந்துகொள்கின்றன. 

தலையுச்சி, அநாஹதம், ஸ்வாதிஷ்டானம் ஆகிய மூன்றிலும் இவை நிகழ்கின்றன. ௐ எனும் ப்ரணவத்தை தன் ஸஹஸ்ராரத்தில் தியானிக்கிறார் யோகி. உலகைப் படைக்கும் ஆற்றலின் கதிர்களால் அது நிரப்பப்பட வேண்டும். அதிலிருந்து, அன்னப்பறவையைப் போல, எங்கோ தொலைவில் அழிவிலா இருப்பாக உள்ள துரியத்தின் கடந்த நிலையை அவரால் வடித்தெடுக்க முடியும். இதற்கு நேர் எதிராக, தைஜஸத்தின் கற்பனைகளில் எழும் ஆதி காரணத்தையும், செயல்நிகழ் உலகின் பருமெய்மையாக அது ஆவதையும் அவர் காண்கிறார். ஆக, இரக்கம் மூலமாகவும், இருதுருவமாக்கம் மூலமாகவும் தன்முனைப்பை அழித்து பருவுருவும் உணர்வுருவுமான அனைத்திலும் பரவுகிறார். இங்கு, யோகி சமாதியில் இருக்கிறார். அவரது அக ஆற்றலில், உலகைப் படைக்கும் ஆன்மாவின் அதே படைப்பூக்க ஒளிர்வு நிரம்பியிருக்கிறது.

அடுத்ததாக, யோகி தன் கவனக் குவிவை அநாஹதத்திற்கு கடத்துகிறார். க்ஷ, ப என்ற மந்திரங்களை தியானிக்கிறார். தீவிர ஊழ்கத்தில் முழுமையாகக் கரைவதற்கு இந்த தியானம் யோகியின் அகத்தை தயார் செய்கிறது. அடக்கப்படுவதற்கும், மேன்மையானதாக்கப்படுவதற்குமெனவே அவரது பாலியல் விழைவாற்றல் எழுப்பப்படுகிறது. அபானன் வழியாக அவ்வாற்றல் வெளியேற்றப்படுவதற்கு பதிலாக அவர் அதனை மேல்நோக்கி செலுத்துகிறார். உணர்ச்சிமிகுந்த பாலியல் ஆற்றல், சிறையிடப்பட்ட நாகமென தன் பத்தியை விரிக்கிறது. அது, அகவயமாக, முழுமுதலின் தூய ஒளியால் உயிர்ப்பூட்டப்பட்ட பருந்துபோன்ற அறிவாற்றலோடு (புத்தி) பிணைக்கப்பட்டது. இனப்பெருக்க ஆற்றலானது ஓஜஸாக, யோக ஒளிர்வாக மாற்றப்படுகிறது. இங்கு, சாதகர் ஸ்வாதிஷ்டானத்தில் எரிக்கப்படவேண்டிய எஞ்சிய தன்முனைப்பை இறையின் மீதான தன் தீவிரக்காதல் என்னும் தீயிலிடுகிறார்; ‘ஸ்வாஹா’ என்னும் முழுநிறைவு மந்திரத்தை தியானிக்கிறார். 

இரும்புத் துண்டொன்று காந்தத் தன்மை ஏற்றப்பட்டபிறகு காந்தம் போலவே செயல்படுகிறது. அதே போல், யோகி ரசவாதத்தின் கலமென ஆகிறார். வெறும் பார்வை மூலமே, பிறரை வருத்தும் பாலியல் விழைவை அவரால் கட்டுப்படுத்த முடியும். பாலியல் சேர்க்கைக்கான பெருவிழைவுக்கு பதிலாக அங்கே உன்னதமானதன்மேல் காதல் எழுகிறது. போட்டியும் பொறாமையும் நிறைந்த வாழ்வின் பதற்றங்கள் இல்லாமலாகின்றன. அங்கே பகைமை இல்லை, அச்சம் இல்லை. யோகி மற்றெல்லோருக்கும் அமைதிப் புகலிடமென ஆகிறார். தேடலுக்கான அர்த்தங்களும், சிக்கலுக்கான தீர்வுகளும் அவரிடம் கிடைக்கின்றன. அரிதான, என்றென்றைக்குமான அருட்பேறு அமைகிறது. ௐ க்ஷிப ஸ்வாஹா.

45o கோணத்தில் ஒன்றன்மேல் ஒன்றாக வைக்கப்பட்ட இரண்டு சதுரங்களுக்குள்  ௐ, க்ஷிப, ஸ்வாஹா என்ற மூன்று மந்திரங்கள் கொண்ட யந்திரம் தியானிக்கப்படுகிறது.

ௐ க்ஷிப ஸ்வாஹா

Leave a comment