தம் த*ம் தம் த*ம் னம் அனங்கமதனாதுரா ஸர்வமங்கலா விஜயா
விரும்பத்தக்கதை தேர்வதில் சிறந்தவளே, அன்னையே, சடுதியில் படைப்பதற்கும், உன் உயிரினங்களை பெருக்குவதற்கும் அவற்றில் பாலியல் விழைவை இயங்க வைக்கிறாய். மத்துறு தயிரென உள்ளங்களைக் கடையும் மன்மதனை எல்லோரிடமும் அனுப்பிவைக்கிறாய். கண்களிலும் செவிகளிலும் குறுகுறுக்கச்செய்யும் தோலிலும் ஏறி அமர்ந்துகொள்ளும், உள அமைதியைக் குலைக்கும் இந்த மன்மதன், காதலரில் ஒருவரோடொருவர் பிணைந்துகொள்ளும் அடங்காப்பசியையும் தீராததாகத்தையும் ஏற்படுத்துகிறான். காமக் களியாட்டின் நுட்பங்களை அறியாத உயிரினம் ஒன்றுகூட இங்கில்லை. ஒற்றைப் பார்வை, ஒரு இமைநொடிப்பு பல்லாயிரம் விழைவுகளை கடத்தக்கூடும். ஒருவர் குறிப்பாலுணர்த்தும் எந்த விளையாட்டிலும் கலந்துகொள்வதற்கான சம்மதத்தை இன்னொருவர் மௌனம் மூலமே தெரிவித்துவிடமுடியும்.
எளிய விருப்பொன்று மலர்ந்து நடைமுறைக்கு வருவதை நீயே கட்டுப்படுத்துகிறாய். நீ விரும்பினால், ஒருவரது சுஷுப்தியின் (காரண நனவு) களஞ்சியத்தில் இருக்கும் வேட்கை விதைகளை உறங்கச் செய்ய முடியும். தகுந்த சூழலை நீ ஏற்படுத்திக் கொடுத்தவுடன் விதை முளைவிடுகிறது. அதன் வளர்ச்சி செங்குத்தாகவும் தேவைகள் கிடைநிலையாகவும் இருக்கின்றன. நிகழக் காத்திருக்கும் அனுபவங்கள் நிறைந்த இயல்உலகிற்கு வருமுன், காதலர் அந்தக் காதல்காட்சியை கனவுகளெனும் ஒப்பனை அறையில் நடித்துப் பார்க்கிறார். இயல் உலகில் ஒரே ஒரு சாத்தியக்கூறு மட்டுமே இருக்கையில், ஒருவரது அகவயக் கற்பனையுலகில் ஆயிரக்கணக்கான இயல்கைகள் உள்ளன. இறுதியில், உன் அனுமதியோடும் இயற்கையின் மறைமுக ஆதரவோடும் வாய்ப்புகள் அமைகையில், நிஜத்தில் நிகழவிருக்கும் ஆடலுக்கான மேடை ஒருங்குகிறது. அந்த ஆடல், அதன்பின் நூறுமுறை மீளமீள நிகழக்கூடிய, பல பிறப்புகளிலும் தொடரக்கூடிய வினைச்சங்கிலியில் ஒருவரை பிணைக்கக்கூடியது. பேருவகை கொண்ட வேளையில், காதல் கண்ணை மறைக்கையில், ஒருவர் மற்றவரின் அணைப்பில் மயங்குகையில் காதலர்கள் எதிர்கொள்ளவிருப்பது துன்பியல் நாடகமா மங்கல முடிவுக் கதையா என்று எவரும் அறிவதில்லை.
இயக்கமற்ற ஒன்று அசையும் நிலையை எய்துவதன் கச்சிதமான குறியீடுதான் சிவலிங்கம். அன்னைத்தையும் அசைக்கும் உன் பாலுணர்வூற்று, அசையா அடித்தளமென உறுதியாக அமைந்திருக்கிறது. சிவனும் சக்தியுமென நீங்கள் இருவரும், இறுதித்துளி பகுத்தறிவையும் என் உள்ளத்திலிருந்து அகற்ற, என்னென்ன புதிர் விளையாட்டுகளையெல்லாம் ஆடுகிறீர்கள்! பேரிறைவன் அவமானப்பட்டு சினந்தபோது, மன்மதனை எரித்து சாம்பலாக்கியபோது அவனுக்கெனப் பரிந்து அவன் நிரந்தரமாக தங்கிக்கொள்ள உன் பிறப்புறுப்பின் ரகசிய அறையில் இடம் அளித்தாய் என்பதை நாங்கள் தொன்மக் கதைகளில் படித்திருக்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் உன் உருவநேர்படியாக (replica) இருக்கையில், மோகம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியிடமிருந்தும் வெளிக்கிளம்பும் காதல்கடவுளிடமிருந்து இவ்வுலகு எப்படி தப்பிப்பிழைக்க முடியும்?
‘ஹர’ என்ற ஒலியிலேயே வியப்பைக் குறிக்கும் ‘ஹ’ வும், கொண்டாட்டத்தைக் குறிக்கும் ‘ர’ வும் அடங்கியிருக்கின்றன. நன்மையைக் கொணர்பவனாகப் போற்றப்படும் உன் இறையான சங்கரன் உன்னுடன் கலந்திருக்கையில் தன் அடிப்படைப் பண்புகளையே மாற்றிக்கொள்கிறான். வெறிகொண்ட தன் ஆடலில் உலகே பங்குபெறவேண்டும் என எண்ணுகிறான். அதன் பின்னரே மகிழ்ச்சியோடு ‘போற்றி, போற்றி’ எனப் பாடுகிறான். என் ஆழுறக்கத்தில் விதைபோல இருக்கும் நான் எழுப்பப்பட வேண்டும் என்றால் உடலிலியான மன்மதனை எனை நாடி வரும்படி அனுப்பாதே! பதிலாக அவனை அழித்தொழிக்கும் இறைவனையே அனுப்பி வை! நன்மையைக் கொணரும் இறைவனைத் தவிர வேறெவரிடமும் நான் அன்பு பாராட்டக் கூடாது. அதற்கு உதவ நான் என்னை உன்னில் அடையாளம் காணும்படி அருள்வாயாக!
நான் உனக்கிடும் பூக்களும் படையல்களும் மாந்தர் ஆடும் எந்தக் காதல் விளையாட்டுக்கும் ஈடானதே. கண்களைக் கட்டியபடி நான் நடக்கவேண்டி வந்தால் எப்போதும் நீ இருக்கும் திசைநோக்கி செல்வேனாக! நான் அரவணைக்கப்படுவதாக இருந்தால் உன் அருளே என்னை எப்போதும் போர்த்தியிருக்கட்டும். என்னை ஒரு துகளெனவே படைத்தபோதும் பிரபஞ்சத்தின் அனைத்துக் கூறுகளையும் அதில் மறக்காமல் சேர்த்திருக்கிறாய். ஆக, நீயும் நானும் படைத்தல்-அழித்தல் எனும் ஒரே சுழற்சியால்தான் வழிநடத்தப்படுகிறோம். உனக்கும், முழு அண்டத்திற்கும் விதிக்கப்பட்டதைத் தவிர வேறேதும் எனக்கு நிகழ்ந்துவிடாது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. இந்த ஆடல் எளியதல்ல என்பதை நான் அறிந்தே இருக்கிறேன். ஆனால் அதன் வெகுமதி மிகவும் விரும்பத்தக்கது என்பதும் எனக்கு தெரிகிறது. எரித்தழிக்கும் உணர்ச்சிக் கொழுந்துகளினூடாக நான் கடந்துசெல்ல வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தால் அவ்வாறே ஆகுக! அதன் பிறகு என் தன்னம்பிக்கை மீதும், நம் இருவருக்கிடையிலான பொறுப்பாண்மை மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் என்னால் வாழ முடியும். விஜயேஶ்வரிக்கு என் வணக்கங்கள்!
|| தம் த*ம் தம் த*ம் னம் அனங்கமதனாதுரா ஸர்வமங்கலா விஜயா ||
