சௌந்தர்யலஹரீ – 16

கவீந்த்ராணாம் சேத: கமலவனபாலாதபருசிம்

ப*ஜந்தே யே ஸந்த: கதிசிருணாமேவ ப*வதீம்

விரிஞ்சிப்ரேயஸ்யாஸ்தருணதரஶ்ருங்காரலஹரீ

கபீ*ராபி*ர்வாக்பி*ர்விதத*தி ஸதாம் ரஞ்ஜனமமீம்

பாடல் – 16

அன்னையே

உன்னை செந்நிறமெனவே அழைக்கின்றனர் ஞானியர்

பொய்கையில் தாமரைக்கூட்டமெனத் திகழும்

பெருங்கவிஞரின் இதயங்களை

எழுகதிரின் ஒளியென உன் பேரெழில் மகிழ்விக்கிறது

பிரம்மனின் இணையான சரஸ்வதியின்

இனிமையும் பெருமையும் கொண்ட 

இசைநிறை காதல்சொற்களைக் கேட்கும் 

நல்லூழ் கொண்டவர்கள் அவர்கள்.

சீரழகுக் கவிதைகளை அவர்கள் இயற்றுகையில்

கவிதைச்சுவை அறிந்தோர் மகிழ்ந்து போற்றுகின்றனர்

**

சுயத்தில் தோன்றும் ஒரு சலனத்துடன் தொடங்குகிறது படைப்பின் முதல் செயல்பாடு. அதன் மூலம் சுயம் தன்னிலேயே எதிரொளிக்கப்படுகிறது. உருவமற்றதிலிருந்து உருவம் எழுகிறது. ஏரியின் மேற்பரப்பில் எறியப்பட்ட கூழாங்கல் ஒற்றை அதிர்வை மட்டும் ஏற்படுத்துவதில்லை. அது விழுந்த மையத்திலிருந்து சிற்றலைகள் எழுந்து ஏரியில் பல வட்டங்கள் பரவுகின்றன. ஒற்றை பிம்பத்தை ஏற்படுத்தியதோடு சுயம் அமைந்து விடுவதில்லை. பிம்பங்கள் பெருகுகையில் ஒன்றேபோல் எல்லாம் அமைந்து ஒரு சலிப்பு தோன்றும். பின் அச்சலிப்பு நீங்கும்படி, ஒரு பிரபஞ்ச விதிக்குட்பட்ட தனித்துவம் கொண்ட பல உருவங்கள் தோன்றும். ஆக, அம்முதல் சலனத்திலேயே கவிதையின் தொடக்கம் உள்ளது. சுயமே ஆதிகவிஞன். இயல் உலகோ எண்ணற்ற மனங்களால் கற்பனை செய்யப்படும், எண்ணற்ற வழிகளில் இசைக்கப்படும், வரையப்படும், செதுக்கப்படும் முடிவிலா ஒரு கவிதை.

அனைத்துயிருக்கும் அன்னையானவளே அனைத்து வடிவங்களுக்கும், அனைத்துப் பெயர்களுக்கும், வெளிப்பாட்டுக்கான அனைத்து ஊடகங்களுக்கும் அன்னை. அவள் நிலத்தடியில் ஓடும் ஒரு நதி போன்றவள். இந்தியத் தொன்மத்தில் அந்நதி சரஸ்வதி எனப்படுவது. இதற்கு முந்தைய பாடலில் பேரன்னையின் நான்கு ஆழ்படிம வடிவங்களை பார்த்தோம்: செங்குத்தான எதிர் அளவில் காளி, நேர் அளவில் துர்க்கை, கிடைநிலையான எதிர் அளவில் சரஸ்வதி, நேர் அளவில் லக்ஷ்மி. தூயதான, வடிவற்ற வடிவில் அவள் தூய ஒளியென இருக்கிறாள். ஒரு நிழலை வீழ்த்தும்போது முதல் சலனம் ஏற்படுகிறது. அதன் வழியே அதிதி (உடைவிலாதது) நேர் அளவாகவும் எதிர் அளவாகவும் (plus and minus), ஒளியாகவும் இருளாகவும் ஆகிறது.

பழைய ஏற்பாட்டின் ‘தோற்ற’த்தில், படைப்பு ஒளியில் தொடங்குகிறது, ஒளி இருளிலிருந்து பிரிக்கப்படுவதில் தொடங்குகிறது. படைக்கப்படும் ஒவ்வொன்றும் அந்த இருளென்னும் பேராழத்திலிருந்தே தோன்ற வேண்டும். தோற்றம் என்பதே வடிவம் சார்ந்தது. ஒரு வடிவத்தைவிட, பொருட்களின் வரைவெல்லையைவிட புதிரானது எதுவுமில்லை. பரிமாணமற்ற மெய்மை இருபரிமாண மெய்மையாக முகிழ்க்கிறது. ஆதி வடிவத்திற்கு வண்ணமோ, சாயலோ, பருண்மையோ தேவையில்லை. ஒரு தாளில் வெறும் வட்டம் ஒன்றை வரைந்தே சூரியனை காட்டிவிடலாம். ஒரு எறும்பின் எளிய கோட்டுச் சித்திரத்தை ஒரு யானையைவிடப் பெரிதாக்கினாலும் அந்த வடிவத்தை சட்டென அடையாளம் காணமுடியும். அனைத்தையும் நிறைக்கும் ஒளியில் ஒளியற்றதை மிகக்குறைவாகக் கையாண்டு எல்லைக்கோடு குறிக்கப்படுகிறது. எல்லை வரையப்பட்டவுடன் ஒரு குறிப்பிட்ட வடிவம் என்றென்றைக்குமென நிறுவப்படுகிறது. 

உருவகம் நனவை கட்டமைக்கிறது. அது பார்வைக்கு நிறமேற்றுகையில் கட்டமைப்பு தீவிரமாகிறது. நிறம் ஆழமாக உணர்வதிர்ச்சியை உண்டாக்குகிறது. எனவேதான் அது ராகம் எனப்படுகிறது. நிறம் ஊதாவாக அல்லது சிவப்பாக இருக்கும்போது தீவிரமாக நிறமேற்றப்பட்ட நிலை எழுகிறது. கரு நீலம் துவக்கத்தில் இருக்குமென்றால் முடிவில் ஒண்சிவப்பு இருக்கிறது. எனவேதான் காளி கருமை அல்லது கருநீலமாகவும், துர்க்கை ஒண்சிவப்பாகவும் வர்ணிக்கப்படுகின்றனர். இவை முறையே தொடக்கமாகவும் முடிவாகவும் இருப்பதை நாம் பார்த்தோம். வடிவத்தை படைப்பதற்கு ஒளியின் தூய்மை தக்கவைக்கப்பட வேண்டும். எனவே, கிடைநிலையான எதிர் அளவில் இருக்கும் சரஸ்வதி, படிகம் போன்ற ஒளியூடுருவும் தன்மை கொண்டவளாக இருக்கிறாள். வெண்பட்டாடை உடுத்தியிருக்கிறாள். அவளது நேர்நிலை எதிரிணையான லக்ஷ்மி வானவில் போல வண்ணங்களில் ஒளிர்கிறாள். எந்த நிறமும், அனைத்து நிறங்களும் அவளுக்கு பொருந்தும். இப்போது வண்ணங்களின் மொத்த அமைப்பையும், அந்நிறங்களின் பிரதிநிதியான ஆழ்படிம அன்னையரையும் நாமறிவோம். நாம் இன்னும் வடிவங்களின் உலகிலேயே இருக்கிறோம்.

எந்தச் சலனமும் ஒரு அதிர்வை உண்டாக்காமலிருப்பதில்லை. முழுமுதலோடு அடையாளப்படுத்தப்படும் ஆகாயம் சலனத்திற்குள்ளாகாத வரை ஆழ்ந்த மௌனத்தில் இருக்கிறது. சலனம் உண்டானதும் ஒலிவடிவாக, நாதமாக அதிர்வெழுகிறது. ஒலி இசையாகவோ, உணர்ச்சிகலந்த குரலாகவோ ஆகும்போது குறிப்பிட்ட தொனிகள் (pitches) ஒரு ஒலிக்குறிப்பாக, சொற்றொடராக, இசைப்பாடலாக வடிவெடுக்கின்றன. அதுவும் நனவிற்கு நிறமேற்றுகிறது. ஒலிக்கே நிறமுண்டு என்று தோன்றுகிறது. அதனால்தான் இந்திய இசையில் வர்ணமும் ராகமும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒலியும் ஒளியும் என அழகியல் வெளிப்பாட்டின் இரண்டு ஊற்றுமுகங்களாக சரஸ்வதியின் இரு முலைகள் கருதப்படுகின்றன. பெயரையும் வடிவையும் ஆள்பவளாக அவள் இருக்கிறாள். பெயர்-வடிவம் என்ற இரண்டு ஊடகங்களும் படைப்பவனிடமிருந்தே வருகின்றன. பிரம்மன் படைப்பவன், படைப்பின் ஊடகம் சரஸ்வதி. இக்காரணத்திற்காக சரஸ்வதி பிரம்மனின் மகளாக உருவகிக்கப்படுகிறாள். பெயரையும் வடிவையும் மீண்டும் மீண்டும் கருவுறச் செய்யாமல் பிரம்மனால் படைப்புத் தொழிலை ஆற்றமுடியாது. அவ்வகையில் சரஸ்வதி அவனது துணைவியாக இருக்கிறாள். 

ஆழ்படிம அன்னைக்கும் – தேவி எனப்படுபவளுக்கும் – நான்கு குறிப்பிட்ட வடிவங்களுக்கும் இடையிலான உறவைப்பற்றிய தெளிவு நம்மில் இருக்கவேண்டும். இயல்நனவில் நான்கு அடிப்படை படிமங்களாக எதிரொளிக்கும் இரண்டாம்நிலை வகைமைகள் இவை. இவற்றை நான்கு ஆதிப்படிமங்கள் எனலாம். பிரம்மன் எனும் படைப்பாளியே முதற்கவி. அவனது நான்மடிப்பு கொண்ட படைப்பே மஹாகாளி, மஹாசரஸ்வதி, மஹாதுர்க்கை, மஹாலக்ஷ்மி. மஹாகாளிக்கும் மஹாதுர்க்கைக்கும் இடையிலான தொடர்பை படைப்பின் ஒளி-ஒலி செங்குத்தாக்கத்தில் காணமுடியும். எளிதில் நிகழ்த்திக்காட்டக்கூடிய உண்மை இது. கருஞ்சாயம் கொண்ட திண்ணிய கோடொன்றை வரைந்துவிட்டு சற்றுதொலைவில் நின்று ஒரு பட்டகை (prism) வழியாக அதை பாருங்கள். கருஞ்சாயம் மனம்மயக்கும் சிவப்பாக மாறும் விந்தையை உங்களால் காண முடியும். மொத்த ஒளிநிழற்பட்டையும் (spectrum) அங்கே சிவப்பென உச்சமடைகிறது. ஒரு விந்தையென கருஞ்சாயம் காணாமலாகிறது. இந்த ரகசியங்களை நம் உள்ளில் வைத்துக்கொண்டு, கவிதையின், காட்சிக் கலையின் படைப்பூக்க ஆழத்திற்குள் நம்மால் குதிக்க முடியும். துவக்கப் புள்ளி ஆழ்படிமக் கவியான பிரம்மனிலிருந்து வருமென்றால், ஆதித் தூண்டல் தேவியின் செந்நிறத்திலிருந்து வருகிறது. வடிவமைதியும், இசைமையும் மேலோங்கி வருகையில், கவிதைக்கும், கலைக்கும், இசைக்குமான தூண்டல் அடியாழத்தில் ஒழுகும் சரஸ்வதியிடமிருந்து பெறப்படுகிறது. 

பெருங்கவிஞர்கள் தாம், செங்குத்து-கிடைநிலை இவற்றிற்கிடையேயான தொடர்பின் மையத்தில் இருப்பதாக உணர்கின்றனர். அழகின் செல்வழியை அவர்கள் அறிவார்கள். அது அவர்களுக்கு செந்நிறமாகத் தெரிகிறது. சரஸ்வதியின் தெய்வீக வீணையிலிருந்து அன்னையின் அருள்பொழிவிற்கென அவர்கள் காத்திருக்கின்றனர். காலைநேரப் பகலவனால் முத்தமிடப்படும் பொய்கைத் தாமரையைப் போன்றவர்கள் இந்த ஞானியர்கள். இறையின் அருட்கதிர்களால், அவர்களது நிறமேற்றப்பட்ட உள்ளங்கள் மெருகேருகின்றன. தம்மைத் தழுவும் கதிரவனோடு இணையும் தாமரைகள் பேருவகை கொண்டு தம் காதற்பாடல்களை இசைக்கின்றன. அப்பாடல்கள் ஞாயிறின் கதிர்கள் போலாகின்றன. அத்தூய எழிற்கிரணங்களுக்கென கலையார்வலர்களின் உள்ளங்களில் காத்திருக்கும் மலர்களை கவிதையழகும், கலையழகும், அன்பின் அழகும் தீண்டுகின்றன. வெளிப்புறமாக இருக்கும் சிற்றலைகள் ஏரியின் கரையை அடைகின்றன. முழுமுதலின் பண்பான தூய ஆனந்தம் (கலப்பற்ற பேரின்பம்) சொற்களில், தொனிகளில், நிறங்களில், வடிவங்களில் எல்லாம் வெளிப்பட்டு விழிகளுக்கெல்லாம், செவிகளுக்கெல்லாம் விருந்தாகிறது. படைப்பாளினியின் எழில் அனைத்து உயிரிகளோடும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. ‘வம்’ எனும் மந்திரம் கீழ்க்காணும் யந்திரத்திற்குள் தியானிக்கப்படுகிறது. 

Leave a comment