ஈம் ஶப்தாகர்ஷிணீ
அன்னையே, அறிவொளிச் சொல்லையும் உவகைதரும் இன்னிசையையும் ஒழுகியோடச் செய்து, வடிவற்றதிலிருந்து ஒளிரும் வண்ண உருவரைகளையும் ஐயத்துக்கிடமற்ற பொருள்களையும் உண்டாக்குகிறாய். மூலாதாரம் எனும் என் அடித்தளத்தில் புலனறிவு கொண்ட உயிர்கள் எல்லாமே என் உடன்பிறந்தவை. என் மனதிற்கினியவை. மௌனமே ஊடகமென ஒரு மொழியை நீ எனக்களித்திருக்கிறாய். என் புலனுணர் அமைப்புடன் உறவாடி அது எனது இன்பதுன்பங்களை வெளிப்படுத்துகிறது. நீ எனக்கருளியுள்ள குறியீட்டு மொழி ஆற்றல்மிகு தொடர்புமொழியாக எளிதில் புரிந்துகொள்ளப்படுகிறது.
உருவக மொழியை எனக்களித்திருக்கிறாய் நீ. ஒரு தூரிகையோ எழுதுகோலோ கொண்டு என்னால் பேசமுடியும். அதேபோல் எனது எண்ணங்களை பல்வேறு மறைவழிகளில் என்னால் பொறிக்க முடியும். எமது தேவாலயங்களிலும், கோயில்களிலும் பேணப்படும் குறியீடுகள் வழியே நீ எமக்களித்துள்ள முன்னோடி மொழி எமது பண்பாட்டை வளமுறச் செய்கிறது. அண்ட நிகழ்வுகள் குறித்து நாங்கள் பேசுவதில்லை. பதிலாக, அவற்றின் இருப்பை எம் உவகை கொண்ட ஆன்மாவோடு இணைத்துக்கொள்கிறோம். உலகை நோக்குபவர்கள் என்ற நிலையில், அதில் நாங்கள் காண விழையும் பண்புகளை இணைத்து காட்சியை முழுமை பெறச் செய்கிறோம். ஒவ்வொரு மொழியிலும் உன் இயங்காற்றலின் வலுவான தடங்கள் உள்ளன. நீ எமக்குக் கடத்தும் ஏதோ ஒரு செய்தியின் அடையாளமாகவே அனைத்தும் உள்ளன.
நாங்கள் உறங்குகையில், நனவென்பதே எம்மிடம் இல்லாதபோதும், நீ எங்களை பிரிவதில்லை. பயனொழிந்து வீசப்பட்ட கருவிகளின் அசைவிலா பாகங்கள் போல, எங்களை பல வழிகளில் உயிருடன் இருக்கச் செய்கிறாய். விழிப்பு நிலையில் நடவடிக்கைகளாலும், உறக்கத்தில் கனவுகளாலும் நாங்கள் செயல்பட்டுக்கொண்டே இருக்கும்படி செய்கிறாய். புகையென மறைந்து உன் எல்லையின்மையை நிறைக்கும் ஆற்றலை எமக்களிக்கிறாய்.
அறிவெல்லை கடந்த மூலத்திலிருந்து விழைவொன்றின் சலனம் எமது ஆன்ம உடலில் கசிந்திறங்குகையில், அதனை மௌனம் கொண்டு மூடுகிறாய். ஆற்றலின் விந்து ஒரு வடிவெடுப்பதற்கான மாற்றங்கள் நிகழும்போதுகூட அதை கண்டுகொள்ள முடிவதில்லை. நீ ரகசியத்தை எம்முடன் பகிர்ந்துகொள்வதில்லை. எண்ணம் ஒவ்வொன்றையும் சொற்குவை என்னும் ஆடைகொண்டு மூடுகிறாய். இறுதியாக, இதயத்திலிருந்து தோன்றுபவற்றை சுவாசம் குரல்வளைக்கு எடுத்துவரும்போதுதான் குரலொலி வழியே அவை வாய்மொழியாகின்றன. நாங்கள் பேசுவதற்கு முன்பாகவே, எந்த மொழியில் எதை நாங்கள் சொல்லவேண்டும் என்பதை நீ முடிவுசெய்துவிடுகிறாய். நீ தேரும் சொற்களையே கொண்டு ஒரு சொற்றொடரை கோக்கின்றாய். அதன் இலக்கணமும் உன்னாலேயே முடிவுசெய்யப்படுகிறது.
இனிய பால் கொண்டு முலையூட்டி எமக்கு நீ ஊட்டமளிப்பது கண்கூடு. ஆனால் உன் சுவாசத்தை செலுத்தி எமது உறுப்புகளை எல்லாம் உயிர்ப்பிக்கிறாய் என்பதை யாரும் காண்பதில்லை. அதேபோல் எமது மூளை அணுக்களின் சிக்கலான செல்பாதை ஒவ்வொன்றையும் வளமான உருவகங்களால் நிரப்பி, உனது கருவிகளென அமைந்து நாங்கள் அழியாக் கவிதைகளையும் வற்றாத கலைகளையும் படைக்கும்படி நீ செய்வதும் யாருக்கும் தெரிவதில்லை. நான் எதனால் சூழப்பட்டிருக்கிறேன் என்பது தெரியவில்லை. என்னை எம் சுற்றத்தாரோடும், என் தோட்டத்து மரங்களுடனும், சாலையில் கடந்துசெல்லும் நிழல்களோடும் தொடர்புறுத்த மென்மையான வழிகளை கடைபிடிக்கிறாய். மலர்கின்ற பூவுடன் கிசுகிசுப்பதற்கு மென்மையான சொல்லொன்றை என் மனதில் வைக்கிறாய். விண்மீன்களின் நட்பார்ந்த மினுங்கலை காணும்படி என் விழிகளை திருப்புகிறாய்.
நான் சோர்ந்து போனதை அறிந்ததும் நீ என் இமைகளை மெல்ல தடவி உறங்கச் செய்கிறாய். நான் உறங்குகையில் நான் உண்ட உணவை என் உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றுவதில் மும்முரமாக ஈடுபடுகிறாய். மூகாம்பிகை என அருள் பொழிகிறாய். என் அன்னையின் கருப்பையில் உயிரணு நுழைந்த முதற்கணம் தொடங்கி என் அருகிருந்து கருவின் வளர்ச்சியை கண்காணித்துக்கொண்டிருக்கிறாய். அன்னையின் கருவறைவிட்டு வந்தவுடன் உழைப்பதற்கேற்ற வலுவான கரங்கள் எனக்கு அமைவதை உறுதிசெய்கிறாய். என் வாழ்நாள் முழுவதும் இப் பூமிக்கோளத்தின் தளத்தில் உலவும்படி வலுவான கால்கள் எனக்கு அமையும்படி பார்த்துக்கொள்கிறாய்.
அனைத்தையும் முழுமையான நிறைவுடன் ஆற்றுபவள் நீ. என் இளமையின் உச்சத்தில் உன் அருளால் அழகே வடிவுகொண்டதுபோல் ஆனேன். என் உந்தியில் மறைந்திருக்கும் உன் ஆற்றலைக் கொண்டு என்னை ஒளிரும்படி செய்கிறாய் நீ. என் ஆன்மாவின் மையத்தில் அமர்ந்தபடி என் ஆளுமையை நீ மலரச்செய்கிறாய். முனைப்பு குன்றாதவனாய், அடங்காத பேரவா கொண்டவனாய் என்னை ஆக்குகிறாய். எத்துணை சிறியதானாலும், கணக்கிடமுடியாத மதிப்பு கொண்டதானாலும் அனைத்தையும் நான் விழைகிறேன். ஒன்றை எய்தியபின் இன்னொன்றை நாடும்படி என்னை தூண்டிக்கொண்டே இருக்கிறாய்.
என்னுள்ளில் உறையும் தாளக் கருவிகளில் எத்தனை வகைவகையான லயங்களை நீ உருவாக்குகிறாய்! என் நெஞ்சுப்பையின் விரிவியக்கமும் சுருங்கியக்கமும் நீயே. ஏறுவதும் இறங்குவதுமான மூச்சுக்காற்றும் நீ. என் இமைகொட்டல் கூட பிசிறில்லா லயம் கொண்டிருக்கிறது. மாறிக்கொண்டே இருக்கும் என் மனநிலை வாழ்வெனும் ஆடல் விரிந்துவிரிந்து செல்வதைப் போலிருக்கிறது.
என் வாழ்வை வருடங்களென பகுத்திருக்கிறாய். வருடங்களை மாதங்களெனவும், மாதங்களை வாரங்களெனவும், வாரங்களை நாட்களெனவும், நாட்களை மணித்துளிகளெனவும், மணித்துளிகளை நொடிகளெனவும். ஒவ்வொரு நொடியும் அகக்களிப்பின் கொண்டாட்டத்தால் நிரப்பப்பட வேண்டும். இங்கு, இவ்வுலகில் அத்தகைய வளமிக்க வாழ்வொன்றை எனக்களித்திருக்கிறாய் நீ. கடந்துசெல்லும் ஒவ்வொரு கணமும், அன்போடும் பாசத்தோடும் நீ எம்மை பாதுகாப்பதுபோல ஒரு மானுட அன்னையால்கூட செய்ய இயலாது. நீ என்னை அரவணைப்பதற்காகவும், பிரேமையுடன் நான் உன்னை பற்றிக்கொள்வதற்காகவும்தான் உனக்கும் எனக்கும் தனித்தனி அடையாளங்களை நீ அளித்திருக்கிறாய் போலும்!
|| ஈம் ஶப்தாகர்ஷிணீ ||
