உம் ஸ்பர்ஶாகர்ஷிணீ
வாழ்வளிக்கும் அன்னையே, உன் அதிர்வுகொண்ட குரலெனும் விரிந்த பரப்பில் அகவெளி என்றும் அண்டவெளி என்றும் பகுப்பேதும் இல்லை. அறிவெல்லை கடந்த உன் ஒளி உள்ளுறை ஆற்றலென இறங்கி இவ் இயலுலகில் உள்ளவற்றை எல்லாம் உயிர்ப்பு கொள்ளச் செய்கிறது. உடலின் சுவாசக் கருவி மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுகையில் உடல் ஆற்றல் பெற்று தன் செயல்களையெல்லாம் ஆற்றுகிறது. அதுபோலவே, இம் முழு உலகுக்கெனவும் நீ சுவாசிக்கிறாய். உண்மையில் அங்கு ஒரு ஆளென நீ இல்லை. எமது நாடிகளிலும் குருதி நாளங்களிலும் இருக்கிறாய். ஒவ்வொரு நரம்பணுவிலும் நாளத்திலும் ஓடிச்சென்று எம் மனநிலையையும் உடல்நிலையையும் வேவு பார்க்கிறாய்.
இழைத்து மெருகேற்றப்பட்ட மரத்திலிருந்து தோன்றியதாக இருந்தாலும், முட்புதரிலிருந்து தோன்றியதாக இருந்தாலும், பற்றிப் படர்ந்து பெருந்தீ என ஆகும் நெருப்பு ஒன்றேதான். ஒளிர்வது, வெம்மையானது, அவ்வளவே. உனது அருள் எல்லோருக்கும் ஒரே அளவில்தான் பகிர்ந்தளிக்கப்படுகிறது. என்றாலும், நடுக்கமின்றிச் சுடரும் உன் ஞானக்கொழுந்தில் நிலைகொண்ட அரிதான ஞானியர் சிலர் உன் பிரதிநிதியெனத் திகழ்கின்றனர். அத்தகையோரால், வாழ்வளிக்கும் உன் ஒளியை இருளில் உறைவோருக்கு காட்ட முடியும்.
அன்னையின் முலையுறிஞ்சும் குழவி தன் வாய்க்குள் செல்லும் பாலை கண்ணால் பார்ப்பதில்லை. பாலின் இனிமையிலிருந்து அதன் ஊட்டத்தை அறிகிறது. அருந்தும் பாலில் எப்படி கவனம் குவியவேண்டும் என்பதை யாரும் அதற்கு கற்றுத்தர வேண்டியதில்லை. அதுபோன்ற ஒரு மறை உறவின் மூலம்தான் உனது அருளை நாங்கள் நுகர்கிறோம். அது கிண்ணத்தில் வார்க்கப்படுவதில்லை. குவளையில் ஊறி நிறைவது அது.
மொத்த உடலும் தொடுபுலனுறுப்பான ஒற்றைத் தோலால் மூடப்பட்டிருக்கிறது. அதுவே கண்ணில் கண்ணாடிவில்லையாகிறது, காதில் செவிப்பறைச் சவ்வாக, நாக்கில் சுவையுணர் மொட்டுகளாக, மூக்கில் முகர்வுக் கணுக்களாக ஆகின்றது. மண்டையோட்டை மூளையென நிறைக்கிறது. எலும்பின் உட்புழையாக கிளைக்கிறது. சடுதியில் தோன்றி, இருண்ட முகில்கூட்டத்தை துளைக்கும் மின்னல் போல மின்னி நீ எம் அகத்தை ஒளிரச் செய்கிறாய். ஒரு சிறு தீப்பொறிக்கும், முழு உலகையும் ஒளிரச் செய்யும் பகலவனுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இரண்டுமே நெருப்புதான். அனைத்தையும் அரவணைக்கும் அன்னை நீயே. உன் தோற்றத்தில் முடிவிலாது வளரும் பல்வண்ண வகைபாடுகளைக் காண்கையில், நீரின் சுவையாக, மண்ணின் மணமாக நீ இருப்பதை மறந்துவிடுகிறேன். ஒவ்வொரு தொடுகையும் முழுமுதலிடமிருந்து வரும் அக்குளுப்பு என்பதை, பிரம்மஸ்பரிசம் என்பதை நான் உணர்வேனாக!
|| உம் ஸ்பர்ஶாகர்ஷிணீ ||
