ரும் ரஸாகர்ஷிணீ
அன்னையே, அனைத்திலும் நீ களிப்படைகிறாய். அனைத்துயிர்களின் களிப்பெனவே திகழ்கிறாய் நீ. மையப் புள்ளியிலிருந்து மெய்நகர்வின்றி மாயமான முறையில் நகர்கிறாய். அதன் வழியே கோடுகளையும் முக்கோணங்களையும் வட்டங்களையும் ஏற்படுத்துகிறாய். எளியதும் சிக்கலானதுமான அனைத்து வடிவத் தோற்றங்களையும் உண்டாக்குகிறாய். உனது எண்ணற்ற மண்டலங்களே இந்தப் பேரண்டமெனத் திகழ்கின்றன. எனது மொழி கொண்டு நான் உன்னை போற்றுகையில் நான்கு சிவதத்துவங்களின், ஐந்து சக்திதத்துவங்களின் சாரமெனவே உன்னை காண்கிறேன்.
அன்னையின் மடியிலிருக்கையில் குழந்தை மெய்மறந்து கிடக்கிறது. அந்த மகிழ்வு அச்சமின்மையில் முகிழ்ப்பது. அன்னைமடி இறை அரசுசெய்யும் பரப்பு (துஷீத சுவர்க்கம்) எனப்படுகிறது. உன்மீது கொண்ட ஆர்வத்தினால்தான் உன் இறைவன் நஞ்சையுண்டு திருநீலகண்டனானான். அதன் வழியே உனக்கும் எனக்கும் இம்முழுவுலகுக்கும் ஒற்றை இறையென ஆனான். ஒவ்வொரு அணுவும் சிவனின் நடனத்தையே குறிப்புணர்த்துகிறது. எனினும், அவனே சதாசிவன். ஆடாமல் ஆடுபவன், என்றும் ஒளிரும் மெய்யொளி. தன்னொரு பாகத்தை நீயென ஆக்கியவன் அவன். அதனால் நீ எங்கள் பரமேச்வரியாய், எங்களை ஆட்டுவிப்பவளாய், காப்பவளாய் ஆனாய்.
அறியமுடியாமையின் ஆழிருளில், இறையின் படைப்பூக்கத்தால் சிற்றசைவு ஒன்று ஏற்படுகையில் ‘இங்கு’ என்பதும் ‘அப்பால்’ என்பதும் தனியாகப் பிரிகின்றன. அறிதலும் அறியாமையும் இயல்பாகப் பிரிகின்றன. அமைதியின் இருக்கைவிட்டு சொற்கள் வெளியெழுகின்றன. அவற்றை மீண்டும் அமைதியிலாழ்த்திவிடக்கூடியது உன் களியாடல். ஒலித்த சொல் அமைதியில் ஒடுங்கிய பின்னரும், மற்றொன்று அதன் இடத்தை எடுத்துக்கொள்வது வரை, அச்சொல்லின் பொருள் ஒளிர்ந்தபடியே இருக்கும். அழிவதிலிருந்து அழிவின்மையை உண்டாக்குகிறாய் நீ. சொல் தரும் குறியீடுகள் மூலம் அழிவின்மை என்னை வந்தடைகிறது. என் சந்ததிக்கு விட்டுச்செல்வதற்கென என் நினைவில் அதை போற்றிக் காக்கிறேன்.
உன் இறைமையை, தூய பண்பை, மாயத்தை எங்கும் பரப்பியபின், வெளி, காற்று, தீ, நீர், மண் என்ற மூலக்கூறுகளைக் கொண்டு அவற்றிற்கெல்லாம் இருத்தல் மெய்மையை அளிக்கிறாய். நீ படைத்த உலகு எத்தனை பெருமையுடைத்தது என்றாலும் உன் படைப்பனைத்தையும் ஓர் எண்ணமாக, கனவாக, கனவுருப் புனைவாக சுருக்கி எனக்குள் வைத்துக்கொள்ளும்படியான கருவிகள் என்னிடம் உள்ளன. மொத்த இருப்பென இருக்கும் அதே சமயம் ஒரு மறைபுதிர் குறியீடாகவும் இருக்கும் உலகை ஶ்ரீசக்ரமாக காண்கிறேன். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுடன் பின்னிப் பிணைந்திருப்பதால் என் புலனின்பங்களில், மனம்கொள்ளும் உவகைகளில், உள்ளுணர்வால் தோன்றும் களிப்புகளில் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும் உன் மனப்பாங்குகளையும் ஊசலாடிக்கொண்டிருக்கும் மெய்மைகளையும் காண்கிறேன்.
புறமும் அகமும் அற்றவள் நீ. ஈர்க்கக்கூடியவை பல இருந்தாலும் உனது சாரமான மகிழ்ச்சியே (ரஸம்) எங்கும் நிறைந்ததென இருக்கிறது. ஆனந்தம் என்பதே ஆன்மா. ஆன்மாவே முழுமுதல் (பிரம்மன்). இதுபோல் எப்போதும் என் ஆன்மா ஒளிரக்கூடியதாக இருக்குமென்றால் என் புரிதலில் பிழையே ஏற்படாது. இடம் சார்ந்தும் காலம் சார்ந்தும் என் அகத்தையும் புறத்தையும் நீ நீறைக்கிறாய். எனவே, எப்போதும் உன் சாரத்தின் (ரஸம்) இடைவிடா அதிர்வை நான் உணர்ந்துகொண்டே இருக்கிறேன்.
|| ரும் ரஸாகர்ஷிணீ ||
