சதுர்பி*: ஶ்ரீகண்டை*: ஶிவயுவதிபி*: பஞ்சபி*ரபி
ப்ரபி*ன்னாபி*: ஶம்போ*ர்னவபி*ரபி மூலப்ரக்ருதிபி*:
சதுஶ்சத்வாரிம்ஶத்வஸுதலகலாஶ்ராத்ரிவலய
த்ரிரேகா*பி*: ஸார்த*ம் தவ ஶரணகோணா: பரிணதா:
பாடல் – 11
நான்கு சிவசக்ரங்களும்
ஐந்து சக்திசக்ரங்களும் (மைய பிந்துவான ஶம்பு தவிர்த்து)
ஒன்பது ஆதி இயற்கையாகவும்
மூன்று வட்டங்களுக்குள் அமைந்த
எட்டு இதழ்கள் கொண்ட ஒரு தாமரையும்
பதினாறு இதழ்கள் கொண்ட ஒரு தாமரையும் படிநிலைகளெனவும்
ஆறு கோடுகளுடன்
இந்நாற்பத்திமூன்றும் சேர்ந்து
உன் இல்லமென்றாகின்றன.
**
முந்தைய பாடல்களில் தனி உயிரியின் பிண்ட அடித்தளம் (microcosmic foundation) பிரபஞ்சப் படைப்போடு (macrocosmic creation) இணையாக வைத்து விளக்கப்பட்டது. என்றும் கடந்தநிலையில் இருக்கும் சதாசிவன் அண்டத்தில் படைப்புக் களனாக இருக்கிறான்; பொருட்களையும் நிகழ்வுகளையும் ஒத்திசைவிக்கும் திரிபுரசுந்தரி படைப்பாற்றலாக இருக்கிறாள். பிண்டத்தில் சதாசிவத்தின் இடத்தை உயிரிகளின் இறையான மஹேச்வரன் எடுத்துக்கொள்கிறான்; திரிபுரசுந்தரியின் இடம் மாயைக்கு அளிக்கப்படுகிறது. அடிப்படை ஆற்றல்களை (பிரதானம்) உண்டாக்கவும், பல்கிப் பெருகவும் (ப்ரக்ருதி), தனித்ததை பிரபஞ்சத்திலிருந்து பிரிக்கவும் மறைக்கவும் (அவித்யா), சரியான அறிவை விளைவிக்கவும் (வித்யா), பொய்த்தோற்றத்தை (அபரா) ஏற்படுத்தவும், (அறிவெல்லை) கடந்ததோடு அடையாளப்படுத்திக்கொள்ளவும் தேவையான சக்தி மாயைக்கு உண்டு.
திரிபுரசுந்தரியின் வரம்பாகவும், படைப்புக் கூறாகவும் விளங்கும் மாயையை இந்நூல் குண்டலினீயாக விளக்குகிறது. தனியரில் இயங்கும் குண்டலினீ ஒரு அணுமையமும் (nuclear core) புற விளிம்படுக்கும் (perpheral matrix) கொண்டது. ஏறத்தாழ கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் போன்றது. குண்டலினீ மையமாக அமைந்து மின்காந்த ஆற்றல் போல எதிர்மறையாக இயங்கி விளிம்பை செயலாற்ற வைக்கிறது. விளைவாக விளிம்பு சிந்தையும் உடலும் சார்ந்த அனைத்துச் செயல்பாடுகளையும் ஆற்றுகிறது.
அறுதித் திறப்பும், மெய்யுணர்தலும் நிகழும் வரை அண்டத்திற்கும் பிண்டத்திற்கும் இடையேயான, சதாசிவனுக்கும் மஹேச்வரனுக்கும் இடையேயான, திரிபுரசுந்தரிக்கும் மாயை (அல்லது) குண்டலினீக்கும் இடையேயான இணைப்பாக சஹஸ்ராரம் பயன்படுத்தப்படுகிறது. புலன் தரவுகள் அனைத்தும் ஸஹஸ்ராரத்தின் மையத்தில் குவிந்து பின் மையத்திலிருந்து விலகி கால-இட வெளியில் இயல்தோற்றம் கொண்டதாக மாயையால் படைக்கப்படுகின்றன. இதனால் பல கோணங்கள் பின்னிப் பிணைகின்றன.
மாறிக்கொண்டே இருக்கும் பலகோடி கதிர்களும் அதிர்வுகளும் இருப்பதால் ஸஹஸ்ராரத்தில் முடிவிலா பாங்குகள் (patterns) நெய்யப்படுகின்றன. ஒவ்வொரு கதிரும் தனியாக உணரப்படுகையில், ஒரு பொருள் அல்லது ஒரு நிகழ்வு அல்லது ஒரு உறவு குறித்த ஒருங்கிணைந்த கருத்து உருவாகிறது. பல வடிவாக்கங்கள் ஒரே சமயத்தில் உணரப்படுகையில், அது வண்ணங்களின் இசையாடலாகவும் ஒலிகளின் ஓவியத்தீற்றலாகவும் ஆகிறது. ஸஹஸ்ராரம் எனும் அப்பகுதி, ஶ்ரீசக்ர தியானத்திற்கெனவே வைக்கப்பட்டிருக்கிறது. அதில் நான்கு முக்கோணங்கள் கொண்ட ஒரு தொகுதியும் ஐந்து முக்கோணங்கள் ஒரு தொகுதியும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தபடி அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நான்கின் தொகுதி சிவனையும், ஐந்தின் தொகுதி சக்தியையும் சார்ந்தவை.
தலையில் இருக்கும் சந்திரப் பகுதி அனைத்து பிரபஞ்சச் செயல்பாடுகளின் எதிரொளிப்பை குறிப்பதாக இருக்கிறது. இங்கே அது ஶ்ரீசக்ரமாக விவரிக்கப்படுகிறது. ஶ்ரீசக்ரத்தின் மையம் பிந்து எனும் புள்ளியால் குறிக்கப்படுகிறது. பிரபஞ்சத்தின் அடிப்படையான ஐந்து வகைமைகள் ஐந்து சக்திகோணங்கள் எனப்படுகின்றன. ஐந்து மூலக்கூறுகள் (பஞ்சபூதங்கள்), தம்மில் தாமாக இருக்கும் ஐந்து பொருட்கள் (பஞ்சதன்மாத்திரைகள்), ஐந்து புலனுணர்ச்சிகள் (பஞ்சஞானேந்திரியங்கள்), ஐந்து இயக்கங்கள் (பஞ்சகர்மேந்திரியங்கள்), மனம் ஆகிய ஐந்தும் சக்திகோணங்கள். மாயை, தூய அறிவு (சுத்தவித்யா), பேரிறை (மஹேச்வரன்), நிலையான இருப்பு (சதாசிவன்) என்ற நான்கும் சிவகோணங்கள். இந்த ஒன்பது வகைமைகளும் ஶ்ரீசக்ரத்தின் மையத்தில் உள்ள பிந்துவை நோக்கி குவிகின்றன. அங்கிருந்து விரிந்து பரந்து முடிவின்மைக்கு செல்கின்றன. இந்த அடிப்படை வகைமைகளுக்கு மூலயோனிகள் என்ற பெயரும் உண்டு. இப்பிரபஞ்ச வகைமைகளுக்கு இணையாக சருமம், குருதி, சதை, கொழுப்பு, எலும்புகள் என்ற ஐந்து சக்தி கூறுகளும், மஜ்ஜை, விந்து, அடிப்படை ஆற்றல், வாழ்க்கை விழைவு என்ற நான்கு சிவ கூறுகளும் மனித உயிரியில் உள்ளன. பிந்து மூலம் கருப்பையெனத் திகழ்கிறது.
ஒன்பது அடிப்படை வகைமைகளின் அண்ட-பிண்ட இணைகள் (macrocosmic and microcosmic pairs) பிரபஞ்சக் கொள்கையின் ரகசியத்தை வெளிப்படுத்துபவை என்பது தாந்திரீகத்தின் கருத்து. சதாசிவனில் தொடங்கி மாயை வரை முழுமுதலில் நான்கு படிநிலைகளிலான கிடைநிலையாக்கம் நிகழ்கிறது. தொடக்கமாக சதாசிவன் – என்றுமுள இருப்பு – எனும் கொள்கை சொல்லப்படுகிறது. அதனை இருமையற்ற, (அறிவெல்லை) கடந்ததாக, எதனோடும் தொடர்பற்ற தூய செங்குத்து அச்சாக புரிந்துகொள்ள வேண்டும். இரண்டாவது (படிநிலை) இருமையை உருவாக்கும் சாத்தியத்தை குறிப்பிடுகிறது. அது தூய அறிவு (சுத்தவித்யா) எனப்படுகிறது. வித்யா (அறிவு) என்பதன் எதிரிணை அறியாமையில் (அவித்யா) உள்ளது. தூய அறிவு என்பது அறிவுப் பயன்பாட்டையும் குறிக்கிறது. இந்த மூன்றாவது வகைமை மஹேச்வரன் (இருப்புக்கான இறை) எனப்படுகிறது. இவ்வாறு பார்க்கையில், தாந்திரீகம் சொல்லும் தோற்றம் மூன்றாவது படிநிலையான கடவுள் எனும் கொள்கையோடு தொடங்கவில்லை. படைப்பு நிகழ்வதற்கு முன் படைப்பவன் மெய்மையை மேலும் கிடைநிலையாக்கம் நோக்கி நகர்த்துகிறான். பேரிறை பயன்படுத்திய படைப்பு மூலப்பொருள் மாயை.
இனி நாம் முழுமுதலின் களத்திலிருந்து தொடர்பியல் களத்திற்கு (field of relativism) செல்கிறோம். மாயையின் முக்குணங்களிலிருந்து ஐந்து மூலக்கூறுகள் தோன்றுகின்றன. அடுத்த படிநிலையில் அவை பருண்மை கொள்வது தொடங்குகிறது. ஒவ்வொரு மூலக்கூறின் தன்மாத்திரையிலிருந்து அடிப்படைப் பொருள் உருவாகத் தொடங்குகிறது. தன்மாத்திரையின் அளவுக் கூறமைப்பிலிருந்து கேட்டறிதல், தொட்டறிதல், கண்டறிதல், முகர்ந்தறிதல் எனும் பண்புகள் தோன்றுகின்றன. இயக்கம், கையாளுதல், இணைதல், புறத்தெறிவு, வெளிப்படுத்தல் போன்ற ஐவகை செயல்கள் மூலம் வடிவமைப்பு மேலும் துல்லியமாகிறது. இவை முறையே கால்கள், கைகள், இனப்பெருக்க உறுப்புகள், வெளியேற்ற உறுப்புகள், பேச்சுறுப்புகள் ஆகியற்றோடு பொருந்துபவை.
ஶ்ரீசக்ரத்தில் ஊழ்கத்தில் ஆழ்ந்திருக்கும் மெய்த்தேடல் கொண்டவன் பிரபஞ்சத் தோற்றத்தையும் தனியான ஒன்றின் பிறப்பையும் உணர்கிறான். தனி வாழ்வின் முறைவகுப்பைபயும் அனைத்தையும் திட்டமிடும் பிரபஞ்ச வாழ்வையும் ஒன்றோடொன்று தொடர்புறுத்தி, தான் இருப்பது பொருள்பொதிந்த ஒரு அமைப்பில் என்பதை உணர்கிறான்.