ஶ்ரீசக்ர தியானம் – 10

ரூம் ந்தா*கர்ஷிணீ

என்றும் மகிழ்ந்திருக்கும் அன்னையே, அனைத்து உதடுகளிலும் புன்னகையாக இருப்பது நீயே. எல்லா இதயங்களிலும் சிலிர்ப்பென விளங்குவது நீ. முகிழ்த்து உதிர்ந்த பிரபஞ்ச சுழற்சிகள் அனைத்தின் அழிவற்ற சாரமும் அவற்றின் நடைமுறை, கனவு, ஆழுறக்கம், (அறிவெல்லை) கடந்த நிலை என்ற நால்வேதங்களில் உள்ளது. இந்த நான்கு மறைகளிலிருந்து உன் படைப்புக்கான கருத்துகளை எடுத்துக்கொள்கிறாய். அது பல்வண்ணக் காட்சிக் கருவி போல (kaleidoscope) புத்தம் புது வடிவில், தனிச்சிறப்பான வண்ணக்கலவையாக, ஆழ்படிமங்களுக்கு புதிய அர்த்தங்கள் தருவதாக இருக்கிறது.

உனது பேரின்பத்திற்கு எளிய வடிவங்கள் அளிக்கும்பொருட்டு அங்கொரு மலையையும், அதற்கப்பால் நீல வானொன்றையும், அவ்வானில் மினுங்கும் விண்மீன்களையும் கொண்ட பருப்பொருளாக இப்பிரபஞ்சத்தை நீ படைத்திருக்கிறாய். அதே பரிவோடு செங்கருநீல மலரையும், வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளையும் எழிலூட்டுகிறாய். இவ்வாறாக, எங்கோ தொலைவானில் தொடங்கி, அண்டத்தை எதிரொளிக்கும் பனித்துளியை தாங்கி நிற்கும் புல்லின் இதழ்கள் செறிந்த எம் இருப்பிடம் நோக்கி இறங்கும் ஒரு படைப்புச் சரிவை நீ உருவாக்குகிறாய். எண்ணற்ற பருப்பொருள்கள் ஒவ்வொன்றிலும் நீ நுழைந்து ஒவ்வொன்றையும் அழகின், நன்மையின் தூய கருத்துவடிவாக ஆக்குகிறாய். எங்கெல்லாம் பருண்மை கொண்டிருக்கிறாயோ அங்கெல்லாம் நீ நுட்பமாகவும் திகழ்கிறாய். உன் நுண்மை தற்காலிகமானதாகவும், அறிவெல்லை கடந்ததாகவும் ஆகிறது.  

அடித்தளமான மூலாதாரத்திலிருந்து படிப்படியாக எழும் உன் படைப்பு ஆயிரமிதழ் கொண்ட ஸஹஸ்ராரமெனும் முகட்டினை அடைகையில் வாய்மொழிகளெல்லாம் விண்ணிலிசைக்கும் உன் மௌனத்தில் உருகிக் கரைகின்றன. எம் காலடியில் மண்ணும், நதிகளின் வெள்ளப் பெருக்கும், பற்றிப்படரும் நெருப்பும், நில்லா காற்றும், ஆழியும் அதன் அலைகளும், என்னில் உள்ள அறிபவனும், வினைமூலம் நிறைவுகொள்ளும் விழைவும் எல்லாம் தொலைதூரத்தில் விண்ணேகும்போது ஒளிரும் சொல் குறித்த தூயநனவு மட்டுமே எஞ்சுகிறது.

மூவுலகையும் எழிலூட்டும் உனக்கு இந்த அண்டமே கலைக்கூடம். எமது கற்பனை மிகுந்த மனங்களையே உனது வண்ணத் தூரிகைகளென்றாக்கி ஒளிர்வும் அடர்வும் கொண்ட வண்ண ஓவியங்களை நீ அன்றாடம் தீட்டுகிறாய். மெல்லிசை பயிற்றும் புட்களும், பூத்துக்குலுங்கும் மரங்களும், தேன் திரட்டும் ஈக்களும், உன் கட்டளைகளை நிறைவேற்ற ஓய்வறியாது உழைக்கும் எம் முயற்சியுடன் போட்டியிடுகின்றன. ஞாயிறு மறைகையில் இவ்வுலகை நீ இருளில் ஆழ்த்திவிடுவதில்லை. ஒவ்வொரு இரவிலும் பல வடிவத்தில் திங்களையும், தம்மைக் காணும் விழிகளுக்கு ரகசியமொன்றைச் சொல்லும் மினுங்கும் விண்மீன்களையும் கொணர்ந்து இவ்வுலகுக்கே மாயத் தோற்றம் ஒன்றை அளிக்கிறாய்.

உன் குழவிகளெல்லாம் கண்களை மூடி, கவிஞருக்கும் கைகூடாத கவிதைகளை கனவு கண்டபடி கிடந்துறங்கும் தொட்டிலாக இவ்வுலகையே மாற்றிவிடுகிறாய். ஆகக் கொடூரமானவனும், வாழ்வின் முரட்டு யதார்த்தங்களால் இறுகிப் போனவனும் கூட உறக்கமெனும் உன் மென்தீண்டலில் பேதைமையின் உருக்கொள்வது நீ செய்யும் மாயவித்தையன்றி வேறென்ன! என் இனிய அன்னையே, ஒவ்வொரு இரவும் என் உடல்சோர்ந்து ஓய்ந்து அமைகையில் உன் அரவணைப்பை நானும் நாடுகிறேன்.

ஒவ்வொரு காலையிலும் விழித்தெழுகையில் பூவின் மலர்ச்சியும் பகலவனின் ஒளிர்வும் கொண்டவனாக என்னை ஆக்குவாயாக! மலர் தன் மணத்தை கொண்டிருக்கிறது. பகலவன் தன் ஒளியை கொண்டிருக்கிறான். என் பொலிவாலும் மெய்மையின் ஆழத்திலிருந்து எழும் இனிய சொற்களாலும் உன் ஒளிர்வையும் மணத்தையும் இவ்வுலகுக்கு நான் கொணர்வேனாக! காற்று வந்து மலர்மணத்தை எடுத்துச் செல்கிறது. அதுபோல, ஒவ்வொரு இரவும் என் நனவை எடுத்துச் சென்று உன் காப்பில் வைக்கட்டும். அடுத்து வரும் நாளில் அதுவே என் உறுதிப்பாடென என்னை வந்து சேரட்டும். அதுவே நீ விரும்பும்படி என்னை மெய்யறிவனாய் வைத்திருக்கச் செய்யும்.

|| ரூம் கந்தாகர்ஷிணீ ||

Leave a comment