சௌந்தர்யலஹரீ – 10

ஸுதா*தா*ராஸாரைஶ்சரணயுலாந்தர்விலிதை:

ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாயமஹஸ:

அவாப்ய ஸ்வாம் பூ*மிம் பு*னிப*த்*யுஷ்டவலயம்

ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி

பாடல் – 10

அன்னையே

உடலில் நீ குண்டலினீயாக இருக்கிறாய்

நாடிகளின் அடித்தளத்தில்

நாக வடிவில் ஒரு மண்டலத்தை உருவாக்கி 

அதை உன் இல்லமெனக் கொண்டு

அந்தக் குழிவில் உறங்குகிறாய்

உன் கால்விரல் நுனிகளிலிருந்து சொட்டும் 

அழிவின்மையெனும் அமுதமே 

உன்னை நீராட்டும் ஆனந்தம்

பிரபஞ்சத்தை வளமூட்டும் முப்புரப்பேரழகி நீயே

**

இந்தப் பாடலில் குண்டலினீ, நாடிகள் மற்றும் சக்ரங்கள் பற்றிய முக்கியமான குறிப்புகள் உள்ளன. இடதுபுறம் இடா, வலதுபுறம் பிங்கலை, இரண்டுக்கும் நடுவே ஸுஷும்னம் என்ற மூன்று பெருநாடிகள் ஆஞாவிலிருந்து மூலாதாரத்திற்கு கீழ்நோக்கி செல்கின்றன. இம்மூன்று நாடிகளும் கிடைமட்டமாக மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் உள்ள பகுதி ஆக்ஞேயகண்டம் (நெருப்புப் பகுதி); மணிபூரகமும் அநாஹதமும் உள்ள பகுதி ஸௌரகண்டம் (சூரியப் பகுதி); விஶுத்தியும் ஆஞாவும் உள்ள பகுதி ஸோமகண்டம் (நிலவுப் பகுதி). ஸ்வாதிஷ்டானத்திற்கு மேலே உள்ள பகுதி ருத்ரக்ரந்தி (அழிவின் அமைப்பு) என்றும், அநாஹதத்திற்கு மேலே உள்ளது விஷ்ணுக்ரந்தி (காத்தல் அமைப்பு) என்றும், விஶுத்திக்கு மேலான பகுதி ப்ரம்மக்ரந்தி  (படைத்தல் அமைப்பு) என்றும் அழைக்கப்படுகின்றன.

இடா வழியாக சூரிய ஆற்றலும், பிங்கலை வழியாக சந்திர ஆற்றலும் பாய்கின்றன.  உயிரின் அடிப்படையான இந்த மூல ஆற்றல்கள் சந்திரப் பகுதியில் தோன்றி இடா மற்றும் பிங்கலை வழியாக குண்டலினீக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சந்திர சூரிய ஆற்றல்களெனும் பேரானந்த அமுதம் இடையறாது பாய்ந்துகொண்டிருப்பதால் நாடிகளின் அடித்தளத்தில் அமைந்துள்ள குண்டலினீ கள்மயக்கு கொண்டதுபோல உறங்கியபடி இருக்கிறது. இந்த ஒழுக்கு தொண்டைப் (சந்திரப்) பகுதியிலோ, இருதயப் (சூரியப்) பகுதியிலோ தடைபட்டால் குண்டலினீ புறத்தூண்டல் இன்றி அழியும். இவ்வாறு தூண்டப்படுகையில் குண்டலினீ தனது மண்டலம் போன்ற சுருள்களை இளக்கி ஸுஷும்னத்தில் எழுகிறது. மேல்நோக்கிய நகர்வில் இது ஆறு ஒருங்கிணைவு மையங்களூடாகச் (சக்ரங்கள்) செல்கிறது.   ஸஹஸ்ராரத்தில் (தலையுச்சி) தனித்த (individuated) குண்டலினீ திரிபுரசுந்தரி எனும் பிரபஞ்சப் படைப்பாளினியோடு தன் அடையாளத்தை நிறுவுகிறது. இதன் விளைவாக கீழ்நோக்கிய நகர்வு அல்லது ஸஹஸ்ராரத்திலிருந்து வெளிப்படும் ஆற்றலின் ஒழுக்கு தொடங்குகிறது.

தனியரில் உள்ள ஆன்மா (சுயம்) சிவனின் ஒரு கூறு, குண்டலினீ திரிபுரசுந்தரியின் ஒரு கூறு. அனைத்தும் கடந்த முழுமுதல் என்ற வகையில் சிவன் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை என்றாலும் மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்ச செயல்பாடு திரிபுரசுந்தரியின் இயக்கம் மூலமாக சிவனுடன் சேர்ந்தே திகழ்கிறது. தனியரின் ஆன்மா திரிபுரசுந்தரியின் ஒரு சிறு கூறான குண்டலினீயின் தாக்கத்திற்கு கட்டுப்பட்டது. இந்தக் கருத்தாக்கத்தில் மிகப்பெரிய புதிராக இருப்பது கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்லாது விடுவிப்பதற்குமான ஆற்றல் குண்டலினீயில் உள்ளுறைவதுதான். உடலையும், புலன்களையும், மனதையும் ஆன்மாவோடு அடையாளப்படுத்திக் கொள்வது அறிவு திரிபடைகையில் நிகழ்வது. அவ்வாறு அறிவுத்திரிபு ஏற்படுகையில் ஞானம், இச்சை, கர்மம் என்ற மும்மை ஆற்றல்கள் தளைகளாகின்றன. தவறான அடையாளப்படுத்தல் தவறான விழைவுகளுக்கும் தேர்வுகளுக்கும் வழிவகுக்கிறது. அவை கர்மம் எனும் தளையை உண்டாக்குகின்றன. ஒரு வினை மற்றொன்றுக்கு இட்டுச் செல்கிறது. இதனால் ஞானம், இச்சை, கர்மம் இவை மூன்றும் தீய ஆற்றல்களாகிவிடுகின்றன. இவ்வாறு தளைக்கப்பட்ட ஒரு வாழ்வு உடலைச் சார்ந்து இருக்கிறது. எனவே அழிவிலா ஆன்மா உடலெனும் வலைக்குள் அடைத்துவைக்கப்பட்ட ஒரு பொறியாகி விடுகிறது. இதிலிருந்து விடுபடலே மோக்ஷம் அல்லது முக்தி எனப்படுகிறது. திரிபடைந்த ஞானம், இச்சை, கர்மம் இவற்றின் பொய்யான ஆற்றல்களிலிருந்து மனதை திருப்ப வேண்டும் என்றால் குண்டலினீ எழுப்பப்பட வேண்டும். குண்டலினீ விழித்து ஸுஷும்னத்தில் எழுகையில் ஒவ்வொரு சக்ரங்களிலும் உள்ளுறையும் ஆற்றல்கள் மலர்வதை யோகி உணர்கிறார். அது அவருக்கு அதிதூய இன்பம் நிறைந்த ஆறு நகரங்களை தான் கடந்துபோவது போல் இருக்கிறது. முந்தைய பாடலில், சக்ரங்கள் மூலாதாரத்திலிருந்து ஸஹஸ்ராரத்திற்கு மேல்நோக்கி செல்வது போல் அமைக்கப்பட்டிருப்பதை கண்டோம். இப்பாடலில், வெளிப்படும் ஆற்றல் ஸஹஸ்ராரத்திலிருந்து ஆறு சக்ரங்கள், ஒன்பது நாடிகள், மூன்று கிரந்திகள், 72000 நாடி மையங்கள் வழியாக கீழ்நோக்கி செல்வது விவரிக்கப்படுகிறது.

பொதுப்படையான பொருளில், குண்டலினீ என்பது ஒரு உயிரியின் ஒட்டுமொத்த வாழ்வையும், நரம்பியல் அமைப்பையும், செயல்பாட்டையும் சுட்டி நிற்கிறது. சிறப்புப் பொருளில், முதுகெலும்பின் அடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள உறங்கும் ஆற்றலை அது குறிக்கிறது. எழுப்பப்பட்ட குண்டலினீயை உடலற்ற நிலை என்பர் யோகியர். மூலாதாரத்திற்கும் ஸஹஸ்ராரத்திற்கும் இடையில் மின்னுகின்ற, பெரும் அக அதிர்வுகளையும், ஒளிர்வையும் உண்டாக்குகின்ற மின்னாற்றல் போன்ற ஒன்றாக அதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஶ்ரீ சக்ரத்தின் துணையோடு இந்தப் பாடல் தியானிக்கப்படுகிறது. மெய்த்தேடல் கொண்டவன் பத்மாசனத்தில் அமர்ந்து உணவுக்குழலின் வாயை மூடி, அபானனை மேலிழுத்து, ஸஹஸ்ராரத்தில் அக்னியை எழுப்ப வேண்டும். 

Leave a comment