ஶ்ரீசக்ர தியானம் – 9

ல்ரும் சித்தாகர்ஷிணீ

கண்டுமகிழ கண்களிரண்டையும், முகர்வதற்கு மூக்கையும், ஒவ்வொரு நாளும் மாயமென எம் முன் இலையில் வந்தமரும் அறுசுவை உணவை ருசிக்க வாயொன்றையும் எமக்களித்திருக்கிறாய். எம் அகத்தில் பொங்கும் அன்பை எப்படி பிறரிடம் செலுத்த முடிகிறதோ அதேபோல் பிற உயிர்கள் எம்மிடம் காட்டும் அன்பையும் எளிதில் ஏற்கும் இதயங்களை எமக்கு கொடுத்திருக்கிறாய். உனது தேன் எம் நாவில் திகழ்கிறது. நாங்கள் சொல்லெடுக்கையில் உன் அன்பின் இனிமை பொழிகிறது. எம் இதயத்தின் மையத்தில் அமர்ந்தபடி எம் வாழ்வை நடத்திச் செல்கிறாய். ஆணைகள் பிறப்பிக்கும் உன் விருப்பு வெறுப்புகளை கூர்ந்து கவனித்து உனது கட்டளைகளை நிறைவேற்றும் கருவிகளாக எம் உடல்களை ஆக்கிக்கொள்கிறோம்.

உன் ஒப்புதல் பெற்ற விழுமியங்களாலான களஞ்சியம் என் இதயத்தை நிரப்பியிருக்கிறது. கடந்தகாலத்தில் வாழ்ந்த ஞானியரின் மூலம் நீ கடத்தியிருக்கும் இணையிலா ஞானத்தின் வாரிசாக நான் திகழ்கிறேன். என் இதயமே, என் ஞானமரபை போற்றவும் வழிபடவும் தேவையான வலிமையை நீ அருள்க! உன் பக்தர்களுக்கு நீ அருளும் மீஞானம் என் புருவமையத்தில் அமைந்து என்னை வழிநடத்தட்டும்!

கிடைநிலை எனும் கானகத்தில் நான் அலைகையிலும் கூட என் அடித்தளமான மூலாதாரம் உன்னில் நிலைகொள்கிறது. அதிதூயதான உன் நோக்கத்தை நான் நினைவுகூர்கையில் என் இதயம் தூய்மையாய் எளிமையானதாய் துலங்குகிறது. காலையிலும் மாலையிலும் என் நினைவுகளையே அருமலர்களெனக் கொண்டு உன்னை வணங்குகிறேன். நாட்கள் கடந்துசெல்கையில், முழு உலகும் உன்னைக் காண்பதற்கு உன் உருவைக் காட்டும் கண்ணாடியாக நான் ஆகிறேன். உன் அருள் எப்போதும் என்னுடனிருக்கிறது.

|| ல்ரும் சித்தாகர்ஷிணீ ||

Leave a comment