சௌந்தர்யலஹரீ – 9

மஹீம் மூலாதா*ரே கமபி மணிபூரே ஹுதவஹம்

ஸ்தி*தம் ஸ்வாதி*ஷ்டா*னே ஹ்ருதி மருதமாகாஷமுபரி

மனோஅபி ப்*ரூமத்*யே ஸகலமபி பி*த்வா குலபத*ம்

ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே

பாடல் – 9

மூலாதாரத்தில் நிலத்தையும், மணிபூரகத்தில் நீரையும்

ஸ்வாதிஷ்டானத்தில் நெருப்பையும், இருதயத்தில் காற்றையும்

மேலே விண்வெளியையும்

புருவமத்தியில் வைக்கப்பட்ட மனதையும் ஊடுருவி

ஆயிரமிதழ்த் தாமரையில்

உன்னிறையுடனான ஆடலை நிகழ்த்துகிறாய்

**

முந்தைய பாடலில் தனியரின் ஆன்மாவுக்கும் பிரபஞ்ச ஆன்மாவுக்குமான உறவு பொதுமையம் கொண்ட ஏழு வட்டங்களால் ஆன மண்டலம் மூலம் விளக்கப்பட்டது. அதற்கான பயன்படு வடிவமைப்பு ஒன்று இந்தப் பாடலில் கொடுக்கப்படுகிறது. பேரளவினதாகிய முழுமை வடமொழியில் பிரம்மாண்டம் எனப்படுகிறது. அண்டம் என்றால் முட்டை என்பது பொருள். அந்த முட்டையிலிருந்து வளரும் பிரபஞ்சம் பல ஒண்மீன் படலங்களாக (nebular)  விண்மீன் (stellar) அமைப்புகளாக விரிந்தபடியே செல்கிறது. அதுவே  பிண்ட (நுண்) உலகின் மூல காரணிக்கு உருமாதிரியாக கொள்ளப்படுகிறது. ஒரு உயிரியின் தனிமுழுமைச் செயல்பாடாக மலரும் ஒரு தனி அமைப்பு பிண்டாண்டம் எனப்படுகிறது. நெருப்புமிழும் விண்மீன்களும், ஒண்மீன்கள் சுழன்றடிக்கும் மேகங்களும் கொண்ட பேரண்டம் அளவிலும், அளவின் காரணமாகவே பண்பிலும் ஒரு தனி உயிரியிலிருந்து வேறுபட்டதுதான். என்றாலும், அனைத்து மூலக்கூறுகளுக்கும், அடிப்படைகளுக்கும் ஊற்றுமுகமாக இருப்பது ஒரே பொதுக் கொள்கைதான்.

வேதாந்தமும் தாந்த்ரீகமும் சாங்கியம் சொல்லும் ஆன்மா – இயற்கை (புருஷன் – ப்ரக்ருதி) என்ற இரட்டைக் கொள்கையை மறுமதிப்பீடு செய்து ஏற்றுக்கொள்கின்றன. வேதாந்தத்தின்படி, முழுமுதல் என்பது மாற்றமில்லா செங்குத்து நிலையையும் (இங்கே சிவம்), எப்போதும் கிடைமட்ட நிலையில் இருக்கும் தோற்றத்தையும் (இங்கே தேவி எனப்படும் சக்தி) கொண்டிருக்கிறது. ஆன்மா அல்லது முழுமுதலின் சிவம் எனும் கூறு பொதுவானதாக, மாற்றமில்லாததாக, பகுக்கமுடியாததாக, முழுமையானதாக, இயற்பண்பு அற்றதாக இருந்தாலும் அனைத்து இருப்புக்கும் (சத்) நிலைக்களமானதாக கருதப்பட வேண்டும். தொடர்புறுத்துவதும், ஒன்றிணைப்பதும், பிரபஞ்சம் தன் பெருவிரிவைக் காண அதற்கு ஒரு விழியை அளிப்பதும், உள்ளிணைவுகளை(complexity) எண்ணிப்பார்க்க ஒரு மனதை அளிப்பதுமான தன்னொளிர்வு கொண்ட தூய நனவும் (சித்) அதுவே. பயனுறுதி (causal efficiency) முதலாக ஐயத்துக்கிடமற்ற நிலை (finality) வரையிலான பல்வேறு விழுமியங்களே இப்பாடல்களில் ஆனந்தம் எனப்படுகின்றன.

பொதுப்படையான சத், சித், ஆனந்தம் மூன்றும் முழுமுதலின் செங்குத்தான அச்சை (vertical axis) கட்டி எழுப்புபவை. ஆதி சக்தி என்பது அனைத்து திசைகளிலும் பற்றிப் பரவும் மெய்யியல் மற்றும் இருத்தலியல் காரணியாக இருப்பது. அந்த சக்தி எண்ணற்ற உள்ளிணைவுகள் (complexities) கொண்டு பிரக்ருதியாக பெருகுகிறது. பிரக்ருதி என்பதன் நேர்ப்பொருள் இரட்டிப்பது, பல்கிப் பெருகுவது. பிரக்ருதியில் ‘சித்’தோடு பொருந்துவது அதன் வெளிப்பாடு. இது சொல்லப்படும் அல்லது எழுதப்படும் சொல் வழியாக (articulation) குறியீடுகள் (communication) வழியாக அல்லது சொற்பொருள் சார்ந்தோ அறிவு சார்ந்தோ புரிந்துகொள்ள வைத்தல் (passive expression) வழியாக நிகழ்கிறது.

சத், சித், ஆனந்தம் மூன்றும், எதிர்மறைச் செயல்பாடுகள் மூன்றின் மேல் தம் நிழலை வீழ்த்துவது போல, மறுதலையாக்கப்படுகின்றன. இது வேதாந்தத்தில் ‘ப்ரத்யகாத்மா’ (தூய ஆன்மா) ‘சிதாபாச’மாக (உருக்கொண்ட ஆன்மா) மாறுவது எனப்படும். இந்த மூன்று எதிர்மறை ஆற்றல்களால் ஆனதே இயல் உலகு என்பதால் செயலறிவால் உணரப்படுபவை எல்லாம் பருண்மை கொண்டவையாக, புறவயமானதாக தெரிந்தாலும் உண்மையில் எதிர்மறை நிலையையே கொண்டுள்ளன. ஆக, சிவனது நேர்மறை உண்மை எதிர்மறையானதாகவும் எதிர்மறை சக்தி இயக்காற்றல் கொண்டதாகவும், நேர்மறையானதாகவும் கருதப்படுவது ஒரு நகைமுரண்.

சத்வ, ரஜோ, தமோ குணங்களே இங்கு மும்மை ஆற்றலாக சொல்லப்படுகின்றன ‘ஆனந்தம்’ சத்வமாகவும் ‘சித்’  ரஜஸாகவும், ‘சத்’ தமஸாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அனைத்துப் படைப்புகளும் தோற்றங்களும் சத்வத்தின் ஒரு கூறு மற்றொன்றாக மாறும் செயல்பாடுகளே. மாற்றம் நிகழும் பொருளின் இயல்புநிலை, மாற்றம் எனும் நிகழ்வு, மாற்றத்தின் அறுதி விளைவு என அனைத்துமே ‘சித்’தில் நிகழும் குறிப்பிட்ட மாறுபாடுகளால் கையாளப்ப்படுகின்றன. மாற்றம் நிகழும் பொருளில் உள்ள விழுமிய இயங்காற்றல் ஒரு காரணியாக இருப்பதும் அறுதி இலக்கு மெய்ப்படுதலும் ஆனந்தத்தோடு தொடர்புடையவை. வேதாந்தம் பொருளிலோ(material), பயனை விளைவிப்பதிலோ (efficient), அறுதி இலக்கிலோ (final cause) எந்த இருமையும் இருப்பதாகக் கருதுவதில்லை. அதனால் வடமொழியில் படைப்பின் இருமையற்ற இயல்பு ‘அபின்னநிமித்த உபாதான காரண’ எனப்படுகிறது. ‘அபின்ன’ என்றால் பிரிக்கமுடியாதது; ‘நிமித்த’ என்பது பயன்விளைவிப்பது (efficient); ‘உபாதான’ என்பது அறுதி இலக்கு மூலமாக மாற்றத்திற்குள்ளாகும் பொருள் (final cause). குயவன் பாண்டம் வனைகையில் களிமண் பொருட்காரணியாக (material cause) இருக்கிறது. குயவன் பயன்விளைவிப்பவனாக (efficient) இருக்கிறான். குயவன் மனதில் இருக்கும், இறுதியில் பாண்டமாக உருவெடுக்கும் பானையின் பிம்பம், அறுதி இலக்காக (final cause) இருக்கிறது. அப்படிப் பார்க்கையில் மேலே உள்ள விண்மீன் நிறைந்த வானும், பல உள்ளிணைவுகளும் (complexities) தார்மீக, சமூக முறைமைகளும் கொண்ட இங்குள்ள உயிரமைப்பும் அடங்கிய அனைத்தியற்கையும் மாற்றங்களின் நிரல் மட்டுமே.

உருமாற்றத்தின் முதல் படிநிலையாக கருதப்படுவது ஐந்தாக்கம் (quintuplication). ஐந்து மூலக்கூறுகள் எனும் கொள்கை முன்வைக்கப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் அதற்கேயான தனிப்பண்புகள் உண்டு. முதலில் வருவது ஆகாயம். விண், விசும்பு, வெளி, காலம், நிலம் போன்ற பல்வேறு சொற்கள் சுட்டுவனவற்றின் கூறுகளை ஒன்றாக சேர்த்தால் வரும் ஒருங்கிணைந்த கருத்துப்படிவமே ஆகாயம் என்பது. சாங்கிய தரிசனம் ஆகாயத்தை ‘அவகாஶதாத்ரு’ என்று வரையறை செய்கிறது. அதாவது, ஒரு பொருளின் இருத்தலை சாத்தியமாக்குவது.  ஒரு பொருள் அது திகழ்வதற்கு எடுத்துக்கொள்ளும் இடம் அல்லது வெளி ஆகாயத்தால் கொடையளிக்கப்பட்டதாகும். ஒட்டுமொத்த வெளியும் ஆகாயத்தின் ஒரு கூறு என்றும் கூறலாம். பிரபஞ்சத்தின் ஊடும் பாவும் ஆகாயம் என்றும் முழுமுதலின் வடிவமைப்பு ஆகாயத்தில் உள்ளது என்றும் பிருகதாரண்யக உபநிடதத்தில் யாக்ஞவல்கியர் கார்கிக்கு கற்பிக்கிறார். ஆன்மா சார்ந்ததாகவும் ஆன்மா சாராததாகவும் அறியப்படவேண்டியது அது. அதிர்வே அதன் பண்பு. அதிர்வென்பது இயக்கத்தின் திசையையும், இயக்கத்தின் நிகழ்வடுக்கையும் (kinetic frequencies), இயக்க ஆற்றலையும் சுட்டுவது போல ஆகாயத்தின் தொடர்வினைப் பண்பு (sequential quality) நேரத்தை (காலத்தை) உருவாக்குகிறது. இதனால், ஆகாயம் என்பது தோற்றம் கொண்ட மெய்மை என்ற வகையில் கால-வெளித் தொடர்ச்சியாக ஆகிறது. ஒவ்வொரு மூலக்கூறுக்கும் விதிக்கப்பட்ட இயல்புக்கேற்றவாறு ஒவ்வொன்றும் இயங்கும் ஒருங்கிணைந்த களனாக அதை கருத வேண்டும். உண்மையில், ஆகாயம் பௌதிகப் படைப்பின் முதல் படியாக இருக்கிறது. கருத்தாக்கத்தையும் வெளிப்பாட்டையும் தன் படிப்படியான இயக்கம் மூலம் கட்டுப்படுத்தும் ஒலியைப் போல, ஆகாயம் மூலக்கூறுகளாலான உலகில்  உள, ஆன்மீக தோற்ற வெளிப்பாடுகளின் நிலைக்களனாகிறது.

படைப்பெனும் இயல்பான நிகழ்வின் அடுத்த பண்பாக இருக்கக் கூடியது தொடுகை, தொடர்பு, ஒன்றியிருத்தல், எதிர்வினை என்பதே. இவையெல்லாம் இரண்டாவது மூலக்கூறான காற்றின் பண்புருவானவை. காற்று மேலும் பருண்மை கொண்டது.  ஒரு வகையில் வாயு என்பது மேலும் கிடைமட்டமான ஆகாயம் எனலாம். வாயு என்ற வடமொழிச் சொல்லை காற்று என்று மொழிபெயர்க்கலாம். என்றாலும் அதை ஒரு வளிமமாக கருதக்கூடாது. உருகியிளகுதலும், எரித்தலும் நடைபெறும் கருவறையாக அது இருக்கிறது. வளிம, நீர்ம, திண்ம மூலக்கூறுகள் அனைத்தையும் அதுவே உற்பத்தி செய்கிறது. இந்திய மெய்யியல் பள்ளிகளில் நியாயமும், வைஶேஷிகமும் இயல் பிரபஞ்சத்தின் அடிப்படைப் பொருளாக பரமாணுவை குறிப்பிடுகின்றன. ‘பரமம்’ என்பது முழுமுதலையும், அணு என்பது மூல உயிரணுவையும் (monad) குறிப்பது. கணக்கியல் ரீதியான ஒரு இட அமைவைத் (mathematical location) தவிர அதற்கு பரிமாணம் எதுவும் கிடையாது. பல பரமாணுக்கள் ஒன்றிணைந்து அமைப்பியல் ரீதியாக ஒத்திசையும் போது ஒரு அணு (atom) உருவாகிறது. அணுக்கள் உற்பத்தியாவதற்கான களனாக இருப்பது வாயு. எனவே, பருவெளியின் உருத்தோற்றம் மட்டுமேயான காற்றுடன் வாயுவை அடையாளப்படுத்துவது தவறு. சாத்தியம் மெய்ப்படுவதன் குறியீடாக இருப்பது வாயுவின் இன்னொரு பண்பு. ஆக, ஆன்மீக தரிசனங்கள் (spiritual visions), அக அனுபவங்கள் (psychic experiences), உள்ளுணர்வுகள்(intuitions), மறைவெளிப்பாடுகள் (revelations) போன்றவற்றில் மனதின் மீஇயக்கம் வாயுவின் கூறுகளாக கருதப்படுகின்றது. 

மூன்றாவது மூலக்கூறு நெருப்பு (அக்னி). வெப்ப விசையோடும் ஒளிர்வோடும் தொடர்புடையது. பிரக்ருதியிலிருந்து தோன்றிய ஆகாயம் மற்றும் வாயுவின்  அடிப்படைக் கூறுகள் மேலும் கிடைமட்டமாகையில் உராய்வுகளும், எரிதல்களும், பிளவுகளும் பல்லாயிரக்கணக்கில் பெருகி ஒருங்கிணைந்த ஆகாயப் பரப்பு முழுவதும் ஒளியும் வெப்பமும் நிறைந்த எண்ணற்ற கதிர்கள் தோன்றுகின்றன. இந்த மூன்றாவது மூலக்கூறு புறவய மெய்மையில் நெருப்போடு அடையாளப்படுத்தப்பட்டாலும் நனவுலகில் அது கீழுள்ள மனமாகவும் அதன் பலதரப்பட்ட பாங்குகளாகவும் கருதப்படுகிறது.  

மனதிற்கும் பொருளுக்கும் இடையே நிகழும் பல நேர்மறைச் செயல்பாடுகளிலும், உயிரியல், வேதியியல், உளவியல் செயல்முறைகளிலும் அக்னியின் பங்கை காணலாம். என்றாலும் ஒலியை முழுமையாக்குவதும், அனைத்து கட்புல அனுபவங்களையும் உண்டாக்கும் காட்சி வடிவங்களின் எல்லையிலா வலைப்பின்னலை உருவாக்கும் காரணியாக இருப்பதுமே அதன் முக்கிய பங்கு. அனுபவத்தால் அறியப்படும் உலகை, பெயரும் வடிவும் இணைந்த ஒன்றாகக் காணலாம். இதனால்தான் இயற்பியல் அறிஞர் எர்வின் ஷ்ரோடிங்கர் புலன்காட்சியும் கருத்துப்படிவமும் கொண்ட ஒரு எண்ணமே உலகம் என்கிறார். ஆகாயம், வாயு, அக்னி என்ற இம்முதல் மூன்று மூலக்கூறுகள் வாழ்க்கைக்கு மிக அடிப்படையானவை. படைப்பின் முதல் மூன்று படிநிலைகளாக இருப்பவை. அடுத்ததாக வரும் நீர் மற்றும் நிலம் எனும் மூலக்கூறுகளிலிருந்து பருண்மை கொண்ட பொருள் தோன்றுகிறது.

ஒரு வளிமம் நீர்மமாவது மிகப்பெரும் விந்தைகளில் ஒன்று. இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒரு ஆக்ஸிஜன் அணுவுடன் சேர்கையில் இரு வளிமங்களும் தங்கள் இயற்பண்புகளை இழந்து முற்றிலும் புதிய ஒன்றை உண்டாக்குகின்றன. கண்ணுக்குத் தெரியாதது புலப்படுகிறது. அதை தொட முடியும். அதன் வடிவை காணமுடியும். பரு உலகம் என்பது பற்றிய நமது கோட்பாடுகள் உண்மையாகின்றன. மேலும், பரிணாம வளர்ச்சியில் உயிரற்ற ஒன்று உயிர்த்துடிப்பு பெறும் முக்கியமான படிநிலை இது. நவீன அறிவியல், முதல் உயிர் வடிவம் உண்டாவதற்கு முக்கியமான ஊடகமாக நீரை கருதுவது போலவே, இந்தியத் தொன்மமும் முதலில் உயிர் நிகழ்ந்தது நீரில்தான் என்று கருதுகிறது. நீரில் வாழ்பவன் என்று பொருள்படும் நாராயணன் என்ற பெயர் கடவுளுக்கு சூட்டப்பட்டிருக்கிறது. நீர் என்பது உயிராற்றலின் குறியீடு. அழகியல் உணர்ச்சி தொடங்கி இறையுணர்வு வரையிலான அனைத்து உணர்ச்சிகளின் குறியீடு. பருவடிவின் கடைசி எல்லையாக நிலம் தோன்றுகிறது.  அடிப்படையில் பருவடிவம் கொண்ட அனைத்தையும், புறவயமான அனைத்தையும் சுட்டி நிற்பது நிலம். வாழ்வின் அகவய, புறவய உண்மையின் அடிப்படையாக இருப்பது நிலம். மணமே நிலனின் பண்பு. 

பரிணாம வளர்ச்சியில், மேலே குறிப்பிடப்பட்ட மூலக்கூறுகள் ஒன்றை ஒன்று சாராமல் தம் தூய வடிவில் திகழ முடியாது என்கிறது சாங்கியம். ஒரு குறிப்பிட்ட வீதத்தில் ஒன்றோடொன்று கலந்தே இருக்க முடியும். ஐந்தாக்கம் வடமொழியில் பஞ்சகரணம் எனப்படுகிறது. இந்தச் செயல்நிகழ்வில் ஒவ்வொரு மூலக்கூறும் இரண்டாக பகுக்கப்பட்டு அந்த இரண்டும் நாலாக பகுக்கப்படுகிறது. ஒவ்வொரு மூலக்கூறின் நாலில் ஒரு பங்கு மற்ற நான்கு மூலக்கூறுகளுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆக, ஒவ்வொரு மூலக்கூறிலும் அனைத்து மூலக்கூறுகளின் எட்டில் ஒரு பங்கு இருக்கும்.

பிரபஞ்ச இயக்கம், மூன்று தளங்களிலான எழிலாக இருக்கும் திரிபுரசுந்தரியால் நிகழ்வது. அதன் எதிரிணையாக தனி உயிரி ஒன்றில் இயங்குவது குண்டலினீ எனப்படுகிறது. அதன் பருண்மைப் பண்பில், மைய நரம்பு அமைப்பையும், சுவாச அமைப்பையும், சுழற்சி அமைப்பையும் கருவிகளாகக் கொண்டு செயல்படும் உயிராதார ஆற்றலாக கருதப்படுகிறது. காற்றையும், ஆற்றலையும், நீர்மங்களையும் உடலின் ஒரு பகுதியிலிருந்து இன்னொன்றுக்கு கடத்துவது நாடி எனப்படுகிறது. குதத்திற்கும் பிறப்புறுப்புகளுக்கும் இடையிலான பகுதியே நாடி அமைப்பின் அடித்தளம் என்று தாந்திரீகம் கருதுகிறது. அங்கிருந்து ஒன்பது பெரு நாடிகள் கிளைவிட்டு, அவை ஒவ்வொன்றும் மேலும் பல அமைப்புகளாகப் பிரிந்து அவற்றிற்கான செயல்களை ஆற்றுகின்றன. உடலில் உள்ள பல்லாயிரம் நாளங்களைத் தவிர்த்து, இத்தகைய தனி அலகுகள் 72000 உள்ளதாக தாந்திரீகம் நம்புகிறது. உண்மையில், உடலின் ஒவ்வொரு அணுக்கூறும் அதற்கான தனி ஆன்மீகப் பண்பையும் பருண்மைப் பண்பையும் கொண்டுள்ளது.

மேலே சொன்ன அடித்தளத்திலிருந்து, மூன்று நாடிகள் செங்குத்தாக முதுகெலும்பின் வழியாக தலையுச்சியை சென்றடையும்படி அமைக்கப்பட்டுள்ளன. இம்மூன்று நாடிகளும் இடா (இடதுபுறம்), பிங்கலா (வலதுபுறம்), ஸுஷும்னா (மையச் செல்வழி) எனப்படுகின்றன. இந்த செங்குத்து அமைப்பில் ஆறு இணைந்தியங்கு களங்கள் (synergic fields) உள்ளன. அவை மூலாதாரம் (அடித்தளம்), ஸ்வாதிஷ்டானம் (அக அடித்தளம்), மணிபூரகம் (கொப்பூழ்), அனாஹதம் (இருதயம்), விஷுத்தி (தொண்டை), ஆஞா (புருவ மத்தி) எனப்படுகின்றன. 72000 நாடி அமைப்புகளும் இந்த ஆறு களங்களோடு தொடர்புடையவை. இந்த நாடிகள் இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியாசக்தி என்றமூன்று வகையான இயங்காற்றலை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன. உடலின் நனவிலிச் செயல்பாடுகள் மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் உடலின் க்ரியாசக்தியால் நடைபெறுகின்றன. பல்வேறு பிரபஞ்ச அமைப்புகளின் இயக்கமும், இயல்நிகழ்வுகள் காரணமாக உலகில் ஏற்படும் மாற்றங்களின் சுழற்சியும் எதனால் நிகழ்கிறதோ அந்த மறைத் திட்டம் திரிபுரசுந்தரியின் கர்மசக்தியால் தோன்றுவது. முழுமுதலின் ஆதி ‘சித்’ என்ற கூறிலிருந்து வருவது ஞானசக்தி. அதன் தூய நிலையில் அது இருமையற்றது, அகம் புறம் என்று இரண்டாக பிரிக்கப்படாதது. ‘சித்’ கிடைமட்டமாகையில் அது சைதன்யமாகிறது, தனிப்படுத்தப்பட்டதாகிறது. மேலும் கிடைமட்டமாக்கம் நிகழ்ந்த நிலையில் அது தனியரின் சைதன்யமாகிறது (உயிர்த்துடிப்புள்ள நனவு).

‘நான்’ என்ற கருத்தை மையமாகக் கொண்ட அகவய நனவு ‘அகந்தை’ எனப்படுகிறது. மனப்பதிவுகள், வடிவ அடையாளப்படுத்தல்கள், தொடர்பு, விழுமியம் போன்ற கருத்துக்களின் வடிவிலான புறவய நனவு ‘இடந்தை’ எனப்படுகிறது. அறிவுக்கு அகவயமானதாகவோ புறவயமானதாகவோ எல்லை வகுக்கையில் அது ‘சோபாதிகம்’ எனப்படுகிறது. இந்த எல்லைகள் அகற்றப்பட்டு தூய நனவாக ஒளிரும் அறிவு ‘ஆத்மஞானம்’ எனப்படுகிறது. எண்ணற்ற பொருள்களாலும் அவற்றிற்கிணையான தன்முனைப்புத் தொடர்புகளாலுமான அனுபவ அறிவு (empirical consciousness) அநாத்மஞானம் எனப்படுகிறது. ஒன்றை அதன் மெய்யான இயல்பில் அறிகையில் அந்த அறிவு யதார்த்தம் எனப்படும். ஒன்றை வேறொன்றாக அறிவது அயதார்த்தஞானம். ‘நான்’, ‘எனது’ என்பவற்றோடு தொடர்புடைய எல்லா அறிவும் ஜீவஞானம்.  புலனுணர்ச்சிப் பதிவுகள் எல்லாம் இந்திரியஞானம். இங்கு சொல்லப்பட்ட அறிவு வகைமைகள் எல்லாம் குண்டலினீயின் ஞானசக்தி எனும் வகைமைக்குள் அடங்குவன. பிரபஞ்சத்தின் அந்தப் பகுதியே இறையின் விருப்பென்று சொல்லப்படுவது.

ஒரு ஒலியமைப்புக்கேற்றவாறு சக்ரங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இடாவும் பிங்கலையும் மூலாதாரத்தில் தொடங்கி முறையே இடது மூக்கிலும் வலது மூக்கிலும் சுவாசத்தை சீரமைக்கும் நாடிகளில் சென்று முடியும் இரண்டு சுருள் நரம்புக்கணுக்கள் போன்றவை. நவீனக் கருத்தாக்கமான டி என் ஏ மற்றும் ஆர் என் ஏ இரட்டை திருகுசுழல்கள் (double helixes) இடாவையும் பிங்கலையையும் பெரிதும் ஒத்திருக்கின்றன. இரண்டும் இறுதிக் கலப்புக்காக (சமாதி) இணையும் மூன்றாவது நாளமையமாக ஸுஷும்னம் இருப்பதுதான் ஒரே வேறுபாடு. இந்த வடிவமைப்பை முந்தைய பாடலில் விவரிக்கப்பட்ட மண்டலங்களை முழுமை செய்யும் சித்திரமாக புரிந்துகொள்ள வேண்டும்.

Leave a comment