ஶ்ரீசக்ர தியானம் – 8

ல்ரீம் தை*ர்யாகர்ஷிணீ

தாயே, வலிமையும் வீரமும் நிறைந்த சிங்கத்தின் மீது ஊர்பவள் நீ. சிவன் எனும் வடிவான இருக்கையில் அமர்ந்திருக்கிறாய். பரமேச்வரனின் மடி உன் அரியணை. அரசியருக்கெல்லாம் பேரரசி நீ. உன் சிறுவிரல் பற்றி உன்னைத் தொடரும் என்னை அச்சம் என்பது நெருங்குமோ?

விண்வெளியில் ஒளிரும் பகலவன் மண்ணின் மீது திகழும் ஒவ்வொரு உயிரினமும் இயங்கும்படி சூரிய ஆற்றலை பொழிகிறான். ஓம் எனும் மந்திரத்தின் வடிவெடுத்தவள் நீ. உன் ஒளியைக் கொண்டு நாங்களும் ஒளிர்கிறோம். உன் ஞானமெனும் அமுதைப் பருகும் திறனை எமக்கு நீ அருளியிருக்கிறாய்.

எம்மை அறிவுடை உயிர்களாகப் படைத்திருக்கிறாய் நீ. மெய்த்துணிவு கொண்டோரே மதிநுட்பம் கொண்டோர். உலகிலுள்ள அனைத்தும் உன் மதிநுட்பத்தைச் சார்ந்தே இருக்கின்றன. அன்னையின் மடியிலுறங்கும் மகவு எவரையும் அஞ்சுவதில்லை. உன் இறைவனின் மடியில் நீ அமர்ந்திருப்பதால் நீ துணிவுகொண்டவளாய், அச்சமின்றி இருக்கிறாய். மானுடராகிய நாங்கள் முக்குணங்களின் மடியில் கிடத்தப்பட்டிருக்கிறோம். அரிதாக எம்மில் சத்வ குணம் திகழ்கிறது. அத்தருணங்களில் நாங்கள் துணிவு கொள்கிறோம். நம்பிக்கை அளிக்கும் உன் புன்னகையை காண்கிறோம். ஆனால், ரஜோ குணமும் தமோ குணமும் எங்கள் பார்வையை மறைக்கையில் நிச்சயமின்மையால் தாக்கப்படுகிறோம். உன்னை புரிந்துகொள்ள முடியாமல் துன்பத்தில் ஆழ்கிறோம். 

சொகுசான படுக்கையில் ஆழ்ந்துறங்குபவனும் கொடுங்கனவுகள் கண்டு அச்சத்தில் அலறுகிறான். ஆனால், விழித்துக்கொண்ட பின் தன் மனதிலிருந்த எண்ணமே தான் அடைந்த அனுபவம் என்பதை உணர்கிறான். தெளிவுபெற்று மீண்டும் வலுவடைகிறான். என் மனதின் ஆழிருளுக்குள் நான் நழுவும்போதெல்லாம் என்னை நீ விழிக்கச் செய்யவேண்டும் என்பதே என் கோரிக்கை. உன் அறிவின் நீங்காத தெளிமையை எனக்கும் அருள்வாயாக! இருளில்தான் ஒருவரது தன்முனைப்பு சாத்தானாக மாறுகிறது. அறியாமையிலிருந்தே அச்சம் விளைகிறது. எம் இருளையகற்றத் தேவையான கருவிகளை சரியான தருணத்தில் அருளும் உனக்கு என் நன்றி.

தாயே, சிவானந்தமெனும் ஆழியிலிருக்கும் மாணிக்கத் தீவில் அமர்ந்திருக்கும் உன் திருக்கோலத்தை நான் எப்போதும் காணும்படி அருள்வாயாக! கடம்ப மரங்கள் சூழ்ந்த எழிற்கானகத்தில் சிந்தாமணி எனும் கோயிலில் நீ குடிகொண்டிருக்கும் காட்சியை நான் காண்பேனாக! எப்போதும் சிதானந்தத்தில் நீ மூழ்கியிருக்கக் காண்பேனாக! அதுவே என் வாழ்வை நிறைவுகொள்ளச் செய்யும். என் அறிவின் ஒளி நீ. உன் அருளிலிருந்து எழும் பேரானந்த அலைகளில் அறியாக் குழவியென நான் சிரித்துக் களித்தாடுவேனாக!

|| ல்ரீம் தைர்யாகர்ஷிணீ ||

Leave a comment