எம் ஸ்ம்ருத்யாகர்ஷிணீ
தாயே! தூய நனவின் தெளிவு நீ. பிரபஞ்ச நினைவின் காந்தப் புலம் நீ. பகலிலும் இரவிலும் செய்ய வேண்டியவற்றை நிரை மாறாமல் நினைவில் வைத்திருக்கும் இல்லாளைப் போல நீ பரிவுகாட்டுகிறாய். ஒவ்வொருவரும் உன் குழந்தையென, ஒவ்வொரு வீடும் உன் இல்லமெனக் கருதி முழு உலகையும் ஒன்றேபோல் புரக்கிறாய். எதிர்வரும் காலத்தில் நின்றபடி, நினைவுத் தளிர்களை நிகழ்காலத்திற்கு அனுப்புகிறாய். இவ்வாறாக, ஒரே சமயத்தில் கடந்தகாலத்தை அணிசெய்து, நிகழ்காலத்தை எழில்பெறச் செய்து, துடிப்புடன் மலரும் எதிர்காலமாக இருக்கிறாய்.
விடியலுக்கு முன்பாகவே கீழ்வானில் நீ தீட்டும் ஒண்சிவப்புச் சாயம் இன்னொரு திருநாளின் நல்வரவை அறிவிக்கிறது. புதுநாளின் நற்செய்தியை அறிவிக்க சேவற்கோழிகளை கூவும்படி பணிக்கிறாய். மலரக் காத்திருக்கும் மொட்டுகள் அவிழ்வதற்காக உன் இளந்தென்றலை அனுப்புகிறாய். பகலவன் வருவதற்கு முன் மூடுபனி வந்து ஒவ்வொரு மலரிதழிலும் பனித்துளியை விட்டுச் செல்கிறது. மலர்கள் பேரழகு கொள்கின்றன. சோர்ந்து ஆழ் உறக்கத்தில் கிடக்கும் ஆணும் பெண்ணும் புதிய நாளுக்கு வரவேற்கப்படுகின்றனர். உலகு விழித்தெழுகையில் இனிய பால் நிறைந்த மடியுடன் நிற்கின்றன பசுக்கள்.
நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. பல்லாயிரம் கருவிகள் கொண்டு அனைத்தையும் நீயே நடத்துகிறாய். ஆனால் தாங்கள் விரும்பும் செயலை தாம் செய்வதாகவே ஒவ்வொருவரும் கருதுகின்றனர். அவர்கள் விரும்பும் அந்த அடையாளத்தை நீ அனுமதிக்கிறாய். இடையறாது இயங்கும் உலகில் அவர்கள் தம் செயலை செய்துமுடிக்கும்படி தூண்டிக்கொண்டே இருக்கிறாய். முடிவிலா உன் நடனத்திற்கேற்ப அனைவரும் அடிவைக்கின்றனர். எண்ணிலடங்கா நாத லயங்களுடன் ஒலிக்கிறது உன் வெள்ளிக் கொலுசொலி.
வளம்தரும் அன்னையே! எங்குபார்த்தாலும் ஊட்டம் தரும் உன் வளமுலைகளின் சாயல் தெரிகிறது. கவிஞர்கள் யானையின் மத்தகத்தில் அவற்றை காண்கின்றனர். வளர்பிறையிலும் தேய்பிறையிலும் உனது நடுப்பகுதி கண்ணில் படுவதே இல்லை என்பது பெரும் புதிராக உள்ளது. நெடுக்கை வளைவுகளில் எல்லா திரிபுகளையும் ஏற்படுத்துகிறாய். உருமாற்றம் நிகழ்கையில் உன் லயம் மாறுவதில்லை. சில போது எமக்கு முழுமையான விடுதலை அளிக்கிறாய். பின்னர் எம்மை வார் கொண்டு பிணைத்து நடத்திச் செல்கிறாய். சிலபோது கவலையற்று இருக்கச் செய்கிறாய். பிற சமயங்களில் தவிர்க்க முடியாதவற்றை நாங்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும் என்பதில் உறுதியாயிருக்கிறாய்.
எமக்கென நீ சேர்த்து வைக்கும் பெரும் வரலாற்றில், பல்லாயிரம் கோடி உயிர்களின் நினைவில் பதியும் ஒரு சிறு நிகழ்வுகூட மறைந்துபோவதில்லை. எழுதப்பட்ட நூல் உன் உருவெனவே திகழ்கிறது. எழுதப்பட்ட ஒவ்வொன்றும், விளக்கப்பட்ட ஒவ்வொன்றும் ஒரு புதிய சவாலை எமக்களிக்கிறது. ஒவ்வொன்றையும் மீள்பார்வையிட்டு, மறுமதிப்பீடு செய்து புதியதாய் எழுதிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அழிக்கும் இறைவனான உன் இணையன் ஊழிப்பெருக்கெனும் வெற்றிடத்தை மீள மீள உருவாக்குகிறான். கண்களைத் திறந்தால் உலகு மீளத்தோன்றுவது போல, ஒவ்வொன்றையும் சிறப்புறச் செய்து நிறுவுகிறாய். நீயே முப்புரப்பேரழகி.
|| எம் ஸ்ம்ருத்யாகர்ஷிணீ ||
