ஐம் நாமாகர்ஷிணீ
நில்லா நீங்கா ஒலியின் இறைவியே! சிவனது வில்லே உன் இயக்கமாய் இருக்கிறது. சொற்களை எண்ணியெடுத்து அம்புகளெனத் தொடுத்து என் நாவில் செலுத்துகிறாய். அம்பு உடலை காயப்படுத்துவது. ஆனால், உனது அம்புகள் அழிவின்மை எனும் அமுதை என் நெஞ்சில் செலுத்துகின்றன. என்னை பேரின்பத்தில் ஆழ்த்துகின்றன. அன்பே உருவான தாயே, ஒவ்வொரு சொல்லும் உன் பெருமையைப் பாடும் பாடலாய் அமைகிறது. வசந்தத்தில் மலரும் பூப்போல, அதன் நறுமணம் என் மூச்சுக்காற்றை நிறைக்கிறது. என் பார்வைக்கு இனியதாய் இருக்கிறது. தேனாய் இனிக்கிறது. பகலவனால் எரிக்கப்படும் நிலமும், வாடிப்போகவிருக்கும் செடிகொடிகளும் மலையிலிருந்து வீசும் தென்றலின் தண்மையில் புத்துயிர் பெறுகின்றன. அதேபோல், உன்னைப் போற்றும் சொற்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் இனிய தென்றலென வீசுகின்றன.
இமையவன் மகளே, பனிமலையின் அருள்நிரம்பிய கண்ணீர் போல, விண் கங்கை இம்மண்ணில் இறங்குகிறாள். நிலத்தை புதுப்பித்து பலகோடி உயிர்களுக்கு உணவு விளைவிக்கிறாள். உணவால் உடல் செழிக்கிறது. அதுபோல், அறிவுப் புலங்களுக்கும், கவிதைக்கும், இசைக்கும் எல்லாம் தாயாக, நீ கலையின் ஆராதகர்கள் மனதில் பேரின்பத்தை நிறைக்கிறாய்.
இருவரிடையே பரிமாறிக்கொள்ளப்படும் சொற்கள், உடலிலியான மன்மதனைப் போன்றவை. கண்ணுக்குப் புலப்படாதவை. எனினும், இதயங்களை பிணைப்பவை. அன்பு நிறைந்த ஒரு சொல் என்பது நட்போடு நீட்டப்படும் நேசக்கரம். உன் சொல்லைக் கொண்டே நாங்கள் ஒருவரையொருவர் சீர்செய்து கொள்கிறோம், வாக்குறுதிகள் பரிமாறிக் கொள்கிறோம், அகமலர்வை பகிர்ந்து கொள்கிறோம். இதயமற்றோர் பெருங்கூச்சலோடு போருக்கெழுந்து தாக்க முற்படுகையில், நீ புன்முறுவலோடு தோன்றி அவர்கள் ஆயுதம் துறக்கும்படி செய்கிறாய். உன் இனிய சொல் கொண்டு அவர்களை அமைதிப்படுத்துகிறாய். மனதை குளிர்விக்கிறாய்.
உன் யாழிலிருந்து ஆன்மாவின் இசை எழுந்து தன் இனிமையால் இவ்வுலகை நிறைக்கிறது. மக்கள் உடல் சோர்ந்து மனம் வெதும்பி நம்பிக்கையிழந்து வாழ்வை முடித்துக்கொள்ள நினைக்கும்போது ஒரு குருவென நீ தோன்றி ஒளிரும் சொல் ஒன்றால் அவர்களில் அறிவொளி ஏற்றுகிறாய். அதுவே அவர்களுக்கு நிரந்தரமான வழிகாட்டியாய் அமைகிறது. சொல் வடிவானவளே, உன் அருள்தான் என்னே!
|| ஐம் நாமாகர்ஷிணீ ||
