ஓம் பீஜாகர்ஷிணீ
இப்பேரண்டத்தின் முதல் விதை நீ. பிரபஞ்சக் கருவறையான உன்னிலிருந்தே அனைத்தும் தோன்றுகின்றன. உன்னிலிருந்ந்து தோன்றாத விளைவென்று ஒன்றுமில்லை. அவையனைத்தும் சிறிதும் சிதைவில்லாமல் உன்னில் மீளக் கலக்கின்றன. அன்னையே, எண்ணற்ற உருக்களின் விதையாக என்னை சுருக்கி எத்தனை கருவறைகளில் விதைத்தாய்! புத்தம் புது மலரென எத்தனையெத்தனை அன்னையரிலிருந்து என்னை பிறக்க வைத்தாய்! உன் ஆணைப்படி பிரம்மனும், மாலும், ஈசனும் இடையறாது படைத்தல், காத்தல், அழித்தலெனும் முத்தொழிலை புரிந்துகொண்டிருக்கின்றனர். கழிநிகழ்எதிர்வெனும் முக்காலத்திற்கும் இறையான விஷ்ணுவையே அரைக்கணத்தில் மயக்குறு பாவையென மாற்றினாய் நீ. காமத்தால் தீண்டப்படாத, இறையோருக்கெல்லாம் இறையான ஈசனை காதல் பித்தனாக்கினாய். உன் யோக மாயையால் உன்னால் செய்யக் கூடாதென ஏதுமில்லை.
இயற்கையின் முக்குணங்களும் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நீ விண், வெளி, மண் என்ற மூவுலகங்களையும் கழி நிகழ் எதிர் எனும் மூன்று காலங்களையும் எப்போதும் எழிலூட்டுபவள். இன்று என் நனவிலியில் விதையெனக் கிடக்கும் ஒன்றுதான் நாளை என் எண்ணமாக, செயல்திட்டமாக, நான் அடையும் நிறைவாக ஆகிறது. விதையொன்று முளைவிடுகையில் வானோக்கி வளர்ந்து கிளைவிடும் மரத்தில் எத்தனை இலைகள் தோன்றும் என எவரும் சொல்லிவிட முடியாது. என் நனவிலியில் நீ தளிர்க்கச் செய்யும் எண்ணங்களோ அவற்றைவிட ஏராளம். புலப்படுவனவற்றின் மீது கருத்துகளை ஏற்றவும் நீ படைத்தளிக்கும் வடிவங்களுக்கெல்லாம் எப்படி பெயரிடுவதெனவும் என் அகத்தில் இருந்தபடியே எனக்கு வழிகாட்டுகிறாய் நீ.
என்னுள்ளிருக்கும் நீ கனவு காண்கையில், அக்கனவுக்கு இணையான பெயரும் வடிவும் கொண்ட மாய உலகம் ஒன்று என்னைச் சுற்றி விரிகிறது. அனைத்தையும் ருசிக்கும் என் நாவுபோல, என் புலன்கள் ஒவ்வொன்றையும் ருசிக்கின்றன. உனதன்பின் ஒரு துளியால் அல்ல, பல்லாயிரம் இனிமைகளால் நான் வாழ்த்தப்பட்டவனாகிறேன். வால்மீகி, வியாசன் போன்ற பெருங்கவிஞரெல்லாம் உன் படைப்பின் எழிலில் மயங்கி, தம் படைப்புத் திறன் கொண்டு பெருங்காப்பியங்களை எழுதினர். கலையார்வலர்கள பல நூற்றாண்டுகளாக அப்படைப்புகளில் திளைத்து வருகின்றனர்.
இன்பம் தரும் அழகையெல்லாம் சுருளவிழ்த்து பின் அனைத்தையும் உன் மாய ஆற்றலுக்குள் மறைத்துக்கொள்கிறாய். இதுவே உனது பெரும் ஆடலாக இருக்கிறது. உருவம் சொல்லுக்குள் திரும்புகிறது. சொல் ஒலியுடன் கலக்கிறது. ஒலி மனதிற்குள் அமைகிறது. மனம் உயிர்மூச்சுக்குள் (ப்ராணனுக்குள்) ஒடுங்குகிறது. ப்ராணன் உனது இளவெம்மை கொண்ட ஒளியில் (தேஜஸில்) இரண்டறக் கலக்கிறது. அறுதியாக, அனைத்தும் சிவ சைதன்யமாகிய உன் ஒளிர்வுக்கே திரும்புகின்றன. ஆதி முதல் அன்னையே, வினைமுதலுக்கெல்லாம் முதலானவளே, உன் உருமாற்றத்தில் கடந்தநிலை என்பது இடைநிறுத்தமாக இருக்கிறது.
|| ஓம் பீஜாகர்ஷிணீ ||
