ஹரிஸ்த்வாமாரத்*ய ப்ரணதஜனஸௌபா*க்யஜனனீம்
புரா நாரீ பூ*த்வா புரரிபுமபி க்ஷோப*மனயத்
ஸ்மரோ அபி த்வாம் நத்வா ரதிநயனலேஹ்யேன வபுஷா
முனீனாமப்யந்த: ப்ரப*வதி ஹி மோஹாய மஹதாம
பாடல் – 5
அடியார்க்கருளும் உன் அருள் பெற்ற அரி
அழகியின் வடிவு கொண்டான்
முப்புரம் எரித்த அரன் மனதில்
மோக அலையை எழுப்பினான்
மன்மதனோ உன் அடி வணங்கி
தன் இணை ரதி மகிழும் வடிவு கொண்டான்
உன் அருளால் முனிவர் மனதிலும் மோகம் எழச்செய்யும்
கலை கைவரப்பெற்றான்.
**
தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்த கதை இங்கு கூறப்படுகிறது. இத் தொன்மத்தின்படி அண்டத்தைக் காக்கும் கடவுளான விஷ்ணுவின் வாழிடம் பாற்கடல். அனைத்து விழுமியங்களின் வெளியும் அதுவே. மெய்யான வாழ்வு திகழும் வெளி அது என்பதால் ஒளியாற்றலும் இருளாற்றலும் போரிடும் களமும் அதுவே. தேவர்களுக்கும் அசுரர்களுக்குமான போர். இவ்விரண்டு ஆற்றல்களும் அழிவின்மை வேண்டியும் வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெறும் நோக்குடனும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன. வாழ்வெனும் கடலைக் கடைந்து அமிழ்தத்தை எடுக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினான் பிரம்மன். ஒரு குழுவால் மட்டும் அது இயலாது என்பதால் அனைவரும் இணைந்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. மந்தார மலை மத்தாக கொள்ளப்பட்டது. வாழ்வெனும் ஆழிக்கு தொடக்கம் கிடையாது என்பதால் அதற்கு அடியாழமும் இல்லை. எனவே, மத்தை ஊன்றிக்கொள்ள ஒரு நிலம் தேவைப்பட்டது. காக்கும் தெய்வமான விஷ்ணு ஒரு ஆமையென மாறி அந்த நிலமாக ஆனார். முடிவிலாக் காலமான அனந்தன் என்னும் பெருநாகம் கயிறாக ஆனது. தேவர்கள் அதன் வாலையும் அரக்கர்கள் தலையையும் பிடித்துக் கடைந்தனர்.
அந்தக் கடையலில் பாலாழியின் மேற்பரப்பில் ஐராவதமென்னும் வெள்ளை யானை, கதை, பாரிஜாத மரம், உச்சைசிரவஸ் எனும் வெள்ளைக் குதிரை, காமதேனு, சங்கு, திங்கள், திருமகள், வில், விண்மீன்களின் கன்னி, கௌஸ்துபம் எனும் அணி, ரம்பை, தன்வந்திரி (மருத்துவத்துக்கான கடவுள்), அமிழ்தம் ஆகிய பதினான்கு அரிய பொருள்கள் திரண்டு வந்தன.
கடைந்து முடிந்ததும் அமைதிகுலைந்த நாகம் காலகூடம் என்னும் நஞ்சை கக்கியது. அதைக் கண்டு தேவரும் அசுரரும் அஞ்சி நடுங்கினர். அனைவரின் அச்சத்தையும் போக்குவதற்கென சிவன் அந்நஞ்சை விழுங்கி உலகை காத்தார். அமுதம் வந்த உடனேயே தன்வந்திரியின் கைகளில் இருந்து அதை கவர்ந்துகொண்டு ஓட்டம் பிடித்தான் ஓர் அசுரன். அசுரர் அதை அருந்தி இறவாமை பெற்றுவிடக்கூடாது என்று அனைத்து தெய்வங்களும் எண்ணின. இந்த இக்கட்டான நிலையில் விஷ்ணு பிரபஞ்ச அன்னையை வேண்டி நின்றான். அவள் அருளால் மோகினி என்னும் அழகியாக உருவெடுத்தான் விஷ்ணு. அவளைக் கண்டு அனைவரும் மயங்கி நிற்க அமுதை எடுத்துக்கொண்டு ஓடிய அசுரனும் வந்து அதை அவளிடம் அளித்தான். இது முடிந்தவுடன், ஒரு பெண்ணாக விஷ்ணு எவ்வளவு அழகாக இருந்தான் என்று எண்ணிய சிவன் அந்த வடிவை மீண்டும் காண விழைந்தான். இதுவே, இங்கே சிவன் உள்ளத்தை விஷ்ணு கலைத்ததாக கூறப்படுகிறது.
அழகை மேலான மெய்மையாக, நன்மையாகக் கொண்டாடும் வகையில் இயற்றப்பட்ட சௌந்தர்யலஹரீ அழகை மயக்கும் ஆற்றலாகவும் வீடுபேறளிக்கக்கூடிய ஒன்றாகவும் சித்தரிக்கிறது. இதில், மெய்யியலின் முக்கியமான முரண் ஒன்றும் உணர்த்தப்படுகிறது. ஒன்று-பல, இருத்தல்-மாற்றம் (being-becoming), அறிவெல்லை கடந்தது-நிலைபேறானது போன்ற பல சிக்கல்களும் இந்த முரணைச் சுற்றியே நிகழ்கின்றன. அழிக்கும் கடவுளான திரிபுராந்தகன் அழகின் இறைவியான திரிபுரசுந்தரியின் மேல் மையல் கொண்டவனாக உருவகிக்கப்படுகிறான். அவன் தன் இயல்பிலிருந்து திரியாமல் இது நிகழ முடியாது. இந்த முரண் மெய்யியலின் மிகக் கடினமான சிக்கல். சங்கரரின் அநிர்வசனீய க்யாதியை (தெளிவின்மையெனும் பிழை) திருத்தியமைத்து இதை கடக்கிறார் ராமானுஜர். சங்கரரின் கூற்றுப்படி, ‘அலைக்கு நீரல்லாத ஒரு மெய்மை உண்டு’ அல்லது ‘வானின் நீல நிறத்திற்கு வானல்லாத ஒரு மெய்மை உண்டு’ போன்ற ஊகங்களை ஒத்தது இம்முரண். அவரைப் பொறுத்தவரை, இவையெல்லாம் நிலையற்ற புறத்தெறிவுகள். அவை மெய்யும் அல்ல, மெய்யற்றதும் அல்ல. மேற்சொன்ன கதையில், கவர்ச்சிக் கன்னியின் அழகு என்பது, ஒருபோதும் பெண்ணாக இருந்திராத விஷ்ணுவின் மெய்மை மீது ஏற்றப்பட்ட ஒரு கணநேர இயல்நிகழ்வு மட்டுமே. அதே போல், பிரபஞ்சம் என்பது இயற்கை என்னும் வடிவில் சிவன் மீது ஏற்றப்பட்ட இயல்நிகழ்வு. இங்கு சிவன் என்பது இயற்கையின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட அறிவெல்லை கடந்த நிலைபேறு. மெய் என்பது மாறாதது. நீர் மெய்யானது, அது அலையை மெய்யற்றதாக்குவது. அதே போல், உலகம் மெய்யற்றது, சிவன் மட்டுமே மெய்.
சங்கரரின் இந்த நிலைபாட்டை மதிப்பிட்டு, குறையுள்ளது என்று விலக்குகிறார் ராமானுஜர். நீர் இருக்கும் வரை அலைகள் தோன்றிகொண்டே இருக்கும். அலையைத் தோற்றுவிக்கும் நீரின் இயல்பு நீரளவுக்கே மெய்யானது. எனவே, அலைகள் என்பதில் ஒரு மெய்மை உண்டு. அதில் நீரின் மெய்மையே திகழ்கிறது. இதே நிலைபாட்டை சங்கரரின் இந்தப் பாடலில் நாம் காண்கிறோம். பகவத் கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள் ஆகிவற்றுக்கெல்லாம் உரை எழுதிய பின்னர் இதை எழுதிய அவர் தன் முந்தைய நிலைபாட்டை மாற்றிக்கொண்டிருக்க வேண்டும். இதன்படி நோக்குகையில், முப்புரம் எரிக்கும் சிவனே முப்புரத்திலும் அழகு தோன்றுவதற்கான நிலைக்களனையும் அளிக்கிறான்.
சொற்பொருளியல் ‘ஸ்போடதர்ஶனம்’ எனப்படுகிறது. ஸ்போடம் என்றால் வெடித்தல் அல்லது தெறித்தல் என்று பொருள். திடீரென சடுதியில் நிகழ்வது. சொல்லைக் கேட்ட பிறகு பொருள் மனதிலாவதற்கு நேரம் தேவைப்படுவதில்லை. உச்சரிக்கப்பட்ட ஒலியே சொல்லின் பொருளை கடத்தும் செயலை தொடக்கிவிடுகிறது. அழகுக்கும் கருத்தை ஈர்க்கும் இப்பண்பு உண்டு. அது புலன்களையும் மனதையும் பாதிப்பது மின்னல் போல நிகழ்கிறது. ‘ஸாத்ய சித்த ஆசன வித்யா’ என்பதே இங்கே கற்பிக்கப்படும் மறைபொருள். ‘சாத்ய’ என்பது அடையக்கூடிய இயல்கை. ‘சித்த’ என்பது உண்மையில் அடையப்படுவது. ‘ஆசன’ என்பது பாங்கு அல்லது நிலைகோடல். ‘வித்யா’ என்பது அறிவியல். அதாவது, இயல்கையில் உள்ளுறையும் ஆற்றலை எய்தும் அறிவியல் எனலாம்.