ஔம் ஆத்மாகர்ஷிணீ
பேரறிவானவளே, அன்னையே! உன் இருப்பு அனைத்தையும் ஒளிரச் செய்கிறது. என் அறியாமை எனும் தடையை மீறி எங்கும் பரவியிருக்கும் உன் ஞானத்தின் ஒரு பகுதியாகும் தகுதி எனக்குண்டாகட்டும். பேரிறையான சிவனின் முடிவிலா அமைதியும் பிரபஞ்சத்தைப் படைக்கும் இடையறா இயக்கமுமே உன் இணையடிகள். இறைவனின் விண் நெருப்பை என் மனமாய், என் மதியாய், தன்முனைப்பாய் என்னில் எரியச் செய்கிறாய். உயிரமுது பாயும் உடலின் திண்மையை, என் ஆன்ம வேட்கையெனும் தீக்கொழுந்தை உன் கொடையாக அருளியிருக்கிறாய். வாழ்வெனும் நாடகத்தை இயற்ற எல்லையிலா வெளியை எனக்களித்திருக்கிறாய். உன் அரவணைப்பில் அமைதியான வாழிடத்தை நான் கண்டடைந்தேன்.
நயமற்ற என் செயல்களை நீ கண்காணித்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், அது என்னை தண்டிப்பதற்காக அல்ல. உன் நோக்கத்தை நான் பிழையின்றி புரிந்துகொள்ள வேண்டும்; அதற்கு என் கவனம் ஒற்றைப் புள்ளியில் குவிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவே அந்தக் கண்காணிப்பு என்பதை நான் அறிவேன். ஒருவரது அறிவே அவரது மானுட உரு. ஆகவே, என் தாயே, என்னுள் நுழைந்து என் அகத்தின் அறிவொளியாய் நீயே இருப்பாயாக!
கடவுளரை மனம் குளிரச் செய்வதற்காக மக்கள் பலியிடுகின்றனர், படையல் இடுகின்றனர், நோன்பிருக்கின்றனர். யாரையும் வெறுப்பது உன் இயல்பல்ல. மானுடர் மீது நீ கொண்டிருக்கும் அன்பிற்கு எல்லையே இல்லை. அவர்கள் எண்ணவும் முடியாத அளவு அவர்கள் மேல் கருணயை பொழிகிறாய். எனவே, நாம் ஒருவரோடொருவர் தொடர்புறுத்திக் கொள்வதற்கென எந்த நிபந்தனையையும் நான் நிறைவேற்ற வேண்டியதில்லை. நீ விளக்கென்றால் அதன் ஒளி நான். நீ சொல் என்றால் அதன் பொருள் நான். விளக்கை இருளில் பொதிந்து வைத்து ஒளியை மறைக்கவியலாது. இயல்பிலேயே ஒளிர்பவள் நீ. என் உடலெனும் கோயில் கருவறையில் இறையென நீ நீங்காதிருக்கையில் என் ஆழ் நனவிலியைக்கூட இருள் சூழமுடியாது. என் நனவிலிருந்து எழும் உனது நோக்கங்களே என்னில் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் கனவிலும் நனவிலும் உன் மாய உருமாற்றங்களை என்னால் காணமுடிகிறது.
அச்சமின்மையே உருவானவள் நீ. உன்னை புகலடைதல் என்பது அச்சத்திலிருந்து முற்றாக விடுபடுதலே. ஆன்மா ஆன்மாவை அஞ்சுவதில்லை. அநாத்மாவிலிருந்தே (ஆன்மா அல்லாதது) அச்சம் எழுகிறது. அநாத்மாவின் அச்சத்தை என்னிலிருந்து விரட்டுவாயாக! கூர்நோக்கு கொண்ட உன் விழிகளென ஞாயிறும் திங்களும் மின்னுகின்றன. எமது பாதையில் ஒளி பாய்ச்சி பொருட்களை ஒளிரச் செய்யும் ஒளிப் பிழம்புகள் அவை. எம் உடலையும் ஆன்மாவையும் பேணுபவையும் அவையே.
இவ்வுலகை மேம்படுத்துவதற்கென நாங்கள் ஆற்றும் எளிய செயல்களுக்குக் கூட மகிழ்ந்து வெகுமதியளிக்கிறாய். ஒரு மரக்கன்றை நாங்கள் நடுமிடத்தில் அதை ஆயிரம் மடங்கு பெருக்குகிறாய். உனது மறைமுகமான ஆதரவு இல்லையெனில் எந்த உழவனும் இம்மாயத்தை நிகழ்த்திவிட முடியாது. பகலவனின் ஒளியையும், நீரையும், புத்தம்புதுக் காற்றையும் எம்முடன் பகிர்ந்துகொள்ளும் நீ அவையெல்லாம் கற்றோருக்கும், சான்றோருக்கும், நல்லோருக்கும் மட்டுமே உரித்தானவை என விதிப்பதில்லை. வாழ்வெனும் பரிசை உம்மிடமிருந்து பெற்றவர்கள் அனைவருக்கும் உன் படைப்பெனும் பெருஞ்செல்வத்தை முழுதாக அனுபவிக்கும் உரிமையும் உள்ளது. என் இருப்பை நான் உணரும் முன்னரே, ஒவ்வொரு கணத்தையும் பொருள் பொதிந்ததாகவும், முழுமையானதாகவும் ஆக்கிக்கொள்ளும் கருவிகளை நீ எனக்களித்துள்ளாய். தாயே, உன் அடிகளே இறைவனின் பாதங்கள். உன் திருவடிகளை சரணடைகிறோம் நாங்கள்.
|| ஒளம் ஆத்மாக்ர்ஷிணீ ||
