சௌந்தர்யலஹரீ – 4

த்வன்ய: பாணிப்*யாமப*யவரதோ தைவதண:

த்வமேகா நைவாஸி ப்ரகடிதவராபீ*த்யபி*னயா

ப*யாத் த்ராதும் தாதும் ப*லமபி ச வாஞ்சாஸமதி*கம்

ஶரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ

பாடல் – 4

அனைத்துலகுகளுக்கும் அடைக்கலம் தரும் அன்னையே!

அஞ்சலும் அருளலும் காட்டி நிற்கின்றன தெய்வங்கள் எல்லாம்

நீயோ எந்த சைகையும் காட்டுவதில்லை

உன்னடியார் விழைவதற்கும் மேலானவற்றை

உன்னடிகளே வழங்கிவிடுகின்றன.

**

விஷ்ணு, சிவன் போன்ற பெரும்பாலான கடவுளர் சிலைகள் வலதுகரம் தூக்கி அருள் வழங்கும் சைகையும், இடதுகரம் விரித்து அடைக்கலம் தரும் சைகையும் காட்டுவதாய் அமைந்திருக்கும். பக்தன் வரங்கள் வேண்டி நிற்கும் காக்கும் தெய்வமாக தேவி கருதப்படுவதில்லை என்பதால் தேவியின் சிலைகளில் பொதுவாக இந்த சைகைகள் இருப்பதில்லை. உயிரைப் படைத்து, அதனைக் காத்து, அதனை வேறொன்றாக்கி தனியனை முழுமை பெறச் செய்பவள் அவள். அவளது பாதங்கள் மெய்ப்பொருளின் எதிர்மறைக் கூறாகவே கொள்ளப்படவேண்டும். அவற்றின் இருப்பு உணரப்படுவதில்லை என்றாலும் மரத்தின் கிளைகளுக்கும் இலைகளுக்கும் ஊட்டம் அளித்துக்கொண்டே இருக்கும் கண்ணுக்குத் தென்படாத வேர்களைப் போன்றவள் அவள்.

மரபாக, தேவி தன் நான்கு கரங்களில் பாசம் (கயிறு), அங்குசம் (கொக்கி), இக்ஷுகோதண்டம் (வில்லும் அம்பும்), புஷ்பபாணம் (பொதுவாக ஐந்து மலர்களாலான அம்புகள்) என்ற நான்கு ஆயுதங்களையும் ஏந்தியிருப்பதாக சித்தரிக்கப்படுகிறாள். கலஹாரம் (செங்காந்தள் – மண்ணின் குறியீடு), கமலம் (தாமரை – நீரின் குறியீடு), ரக்தகைவரம் (செந்தாமரை – தீயின் குறியீடு), இந்தீவரம் (கருங்குவளை – காற்றின் குறியீடு), சஹகாரம் (மாம்பூ – வெளியின் குறியீடு) என்ற ஐந்து மலர்களும் அம்பில் இருக்கும். இம்மலரம்புகளை தேவி தானே எய்வதில்லை. அவளது அனுமதி பெற்று பக்தனின் மனதில் காதலைத் தூண்டும் வண்ணம் மன்மதன் அந்த அம்புகளை எய்கிறான். ஒற்றைக் குறிக்கோள், கவனம், பிற அனைத்திலும் ஆர்வமொழிதல் என்பவற்றைக் குறிக்கும் இலக்கொன்றை நோக்கி எய்தப்படுவதே அம்பு. இங்கே ஒரு அம்புக்கு பதிலாக ஒற்றை இலக்கு நோக்கி ஐந்து அம்புகள் பாய்கின்றன.

மனிதனின் உடல் அதன் அடிப்படை வேட்கைகளுக்கு இசையாத போது, அவ்வேட்கைகள் அவனது பகுத்தறிவின் ஒப்புதலை பெறமுடியாதபோது, அவனது உள்ளுணர்வுகள் அவனது தர்க்கத்தோடு ஒத்திசையாதபோது, அவனது ஆன்மீக விழுமியங்களோடு ஒத்துப்போகாத மனக்குழப்பங்கள் அவனுக்கு ஏற்படும்போது அவனது வாழ்வின் ஒழுங்கு குலைகிறது. முரண்கள் தோன்றுகின்றன. இங்கு வாக்களிக்கப்படும் அருளை பெறுகையில், அன்பாலும், தூய பக்தியாலும் ஐம்பூதங்களிடையேயான ஒத்திசைவை பக்தன் அடைகிறான்.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கும் வாழ்வின் குறிக்கோள்கள். அறம் எனும் ஒழுக்கத்தை ஒருவர் தன் குருவின் காலடியிலிருந்து பெறுகிறார். அதிலிருந்தே அவர் தன்னறம் எது என்பது குறித்த தெளிவை அடைகிறார்.  புற உலகோடு தன்னை நேர்மையான முறையில் தொடர்புறுத்திக் கொள்வது எப்படி என்பதை அறிகிறார். பொருள் என்பது ஒருவரது மகிழ்ச்சிக்கான வழிமுறை அல்லது கருவி. ஒருவரது வாழ்வு பொருள் பொதிந்ததாக ஆவதற்கு அவர் கொண்டிருக்க வேண்டிய இயற்கையான நேர்மையான விழைவுகளே இன்பம் எனப்படுவது. வினையின் தளைகளிலிருந்து விடுபடுதலும், கடந்த காலத்தின் பதிவுகள் (வாசனா) ஏற்படுத்தும் பூச்சுகளையும் சூழல்களையும் முழுதாக அழித்தலுமே வீடுபேறாகும். இயல் உலகை தோற்றுவித்து அதிலிருந்து விடுதலை அளிப்பவளும் அவளே என்பதால், இந்நான்கு வாழ்க்கைப் பேறுகளையும் தன் பக்தனுக்கு அருள்கிறாள் தேவி. நோயற்ற உடலையும், உள்ளத்தையும் அவனுக்களித்து அவனுக்கென படைக்கப்பட்ட வாழ்வின் ஏராளமான சாத்தியங்களில் அவனை பங்குபெறச் செய்கிறாள். அவனுடை நேர்மையுணர்ச்சியாலும், நல்வாய்ப்புகளாலும் நேர்மறை விழைவுகளை அவன் உள்ளத்தில் நிறைக்கிறாள். அறுதியாக தக்க மலர்வின் மூலம் அவனது இறுதி விடுதலையை, வீடுபேற்றை அளிக்கிறாள்.

இதற்கான யந்திரம் எட்டு உள்ளிதழ்களும், எட்டு புற இதழ்களும் கொண்ட முழுதும் மலர்ந்த தாமரையின் வடிவை கொண்டுள்ளது. முந்தைய பாடலுக்கானதைப் போலவே இதன் தியான மந்திரமும் ‘ஸ்ரீம்’ என்பதே. உபநிடதங்கள் சுயம் என்பதை சுவராஜ்யம் (ஒருவர் பிறப்புரிமை கொண்ட நாடு) என்கின்றன. ஒருவர் தன் சுவராஜ்யத்தில் முழுமையாக நிலையூன்றுகையில் அவர் சாம்ராட் (பேரரசர்) எனும் தகுதி பெறுகிறார்.  இந்த தியானத்தின் மூலம் பக்தனானவன் அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கிலும் தன்னை நிறுவிக்கொள்கிறான். தோற்றம் கொண்டதும் தோற்றம் பெறாததுமான முழுமுதலுடன் ஒன்றிணைகிறான்.

ஶ்ரீம்

Leave a comment