ம் அம்ருதாகர்ஷிணி
என்றும் வாழும் அன்னையே! நிலைபேறென்னும் அமிழ்தத்தை எப்போதும் பொழிந்துகொண்டிருப்பவளே! மாறிக்கொண்டே இருக்கும் ஒழுக்கான இவ்வுலகில் ஒரு சிறு மினுக்கமென வந்து பிறக்கும்படி என்னை விதித்தாய். எங்கிருந்து வருகிறேன் நான்? எதில் சென்று மறைகிறேன்? நானறியேன். என் தற்காலிக உறைவிடமென சிதைவுறும் இவ்வுடலை அளித்திருக்கிறாய். இங்குள்ள வாழ்வு நிலையில்லாததுதான் என்றாலும், நீ மாற்றமில்லாதவள் என்பதற்கும் உன் வியத்தகு நாடகத்தில் ஒரு தொடர்ச்சி உள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளன.
ஆற்றுப்படுத்தப்படாத புலன்களும் நெறிப்படுத்தப்படாத மனமும் கொண்டவன் நான். என்றாலும், என் புலன்கள் ஒளிபெறுவதும், உன் இருப்பெனும் புதிரை நான் புரிந்துகொள்வதும் உன் கருணையால்தான் என்பதை நான் உணர்கிறேன். எனது இப்பருவுடலை தனித்த ஒன்றாக உணரச்செய்யவே அறியாமை எனும் எல்லையை எனக்கு விதித்திருக்கிறாய் போலும். மானுடனென விலகிநின்று, அணையிடமுடியாமல் என்னுள்ளில் பெருகும் அன்பால் உன்னை போற்றிப்பாடும் வாய்ப்பை அந்த அறியாமையே அளிக்கிறது. உன் முடிவிலா மெய்மையெனும் ஆழியில் ஒரு நீரணுவைப் போல் நான் இருக்கிறேன். அதனால்தான் பேரன்பின் முழுமையில் கரைந்துவிடாமல் என்னை உன் அன்பன் என தனித்தறிய முடிகிறது.
தன்முனைப்பும், அது தோற்றுவிக்கும் நரகமும், தீமையும் எல்லாம் அறியாமையின் விளைவுகளே. அச்சுறுத்தும் அறியாமையின் இருண்ட கணத்தில் கூட என் காலடிக்கீழ் உன் துணையென்னும் நிலையான அடித்தளத்தை என்னால் உணரமுடிகிறது. அத்தகைய கொடுங்கனவிலிருது என்னை விழிக்கச் செய்து ஞாயிறும் திங்களும் மினுங்கும் விண்மீன்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்ட உனது நட்பு திகழும் பேரில்லத்தில் கிடைக்கும் விடுதலையுணர்வை எனக்களிக்கிறாய். ஒவ்வொரு இரவும் என் எளிய உடலிலிருந்து நீங்கி உன்னுடன் கலந்து உன் இடையறா அமைதியில் திளைக்க என்னை நீ அழைக்கிறாய். மீட்பெனும் கரையை அடைய ஒரு வாழ்க்கைச் சுழற்சி முழுவதும் என்னை காத்திருக்க வைப்பதில்லை நீ. இயக்கமில்லா உடலில் இருக்கும் உயிரிழந்த தன்முனைப்பை உதறி ஆழுறக்கத்தில் ஆழ்கையில் எனக்கு எந்தக் கவலையும் தவிப்பும் இருப்பதில்லை. என் உடலின் செயல்பாடுகளில் எத்தனை இடையூறுகள் இருந்தாலும் என் உடல் எப்போதும் உன் பராமரிப்பில்தான் உள்ளது. நான் உறங்குகையில் நீ அதை கவனித்துக் கொள்கிறாய். கிழக்கில் பொன்வண்ணக் கதிரவன் எழுகையில் அவன் என்னைத் தீண்டி என் உடலை உயிர்ப்பிக்கும்படி செய்கிறாய். எனது நாட்செயல்களை ஆற்றுவதற்கு என்னை மீட்டு வருகிறாய். இப்படியாக, ஒவ்வோர் இரவும் அமைதியான உறக்கத்தில் என்னை ஏந்துகிறாய், ஒவ்வொரு பகலும் வாழ்வுக்கான வேட்கையை என்னில் நிறைக்கிறாய். காலையில் நான் எழுகையில், நனவுலகின் மெய்மை எனக்கே உரியதென உணர்கிறேன். பொறுப்புகளை ஒவ்வொன்றாய் ஏற்கிறேன். தொடரும் வாழ்க்கை நிகழ்வுகளைக் கொண்டு என் இன்பமெனும் வண்ணத் திரையை நெய்கிறேன்.
என் அன்னையே! உன்னிடம் அணிகளையும் செல்வத்தையும் நான் கோரவில்லை. தெளிந்த நோக்கையும் மெய்மையின் உறுதிப்பாடையும் நீ எனக்களிப்பாய் என எதிர்பார்க்கிறேன். உன் குழந்தைகளை விவேகியராக்க அவர்கள் தலையில் நீ சூட்டி அழகுபார்க்கும் சிந்தாமணியே உன்னிடமிருந்து பெறக்கூடிய ஆகச்சிறந்த செல்வம். ஆழியானது எண்ணற்கரிய ஆழமும் அகலமும் கொண்டிருந்தாலும் அதன்மேல் மிதக்கும் ஒரு தோணியில் பாதுகாப்பாக சாய்ந்திருக்க முடியுமென்றால் கரையின் தொலைவு குறித்தோ நீரின் ஆழம் குறித்தோ எண்ணி கலங்கத் தேவையில்லை. என் நம்பிக்கை எனும் துடுப்பு கொண்டே என் இலக்கை அடைந்துவிடமுடியும்.
வாழ்வின் இன்னல்கள் இடையறாதவை, சவாலானவை. ஆனால் உன் கடைக்கண் பார்வையை வீசியே எளியோரை நீ காத்துவிடுகிறாய். அலை ஒன்றை கடலின் ஆழத்திற்கு திருப்பிச் செலுத்தவும் இன்னொரு அலையை எழுப்பி அதை பகலவனின் ஒளியில் மின்னச் செய்யவும் உரிமை கொண்டவள் நீ. நீயே இறைவி, இறைமையே உன் ஆடல். உன் மெய்மையின் மேல், உன் ஞானத்தின் மேல், உன் அழகின் மேல் மையல் கொள்வதுதான் எத்துணை எளிது! இயல்பாலும் அருளாலும் செல்வி நீ என்பதால் உன் மடி மேல் தலை சாய்கிறேன். மீண்டும் என் ஆனந்த அமைதிக்குள் ஆழ்கிறேன்.
|| ம் அம்ருதாகர்ஷிணீ ||
