அவித்யானாமந்தஸ்திமிரமிஹிரத்வீபநகரீ
ஜடானாம் சைதன்யஸ்தபகமகரந்தஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணிகுணனிகா ஜன்மஜலதௌ*
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபுவராஹஸ்ய ப*வதீ
பாடல் – 3
உனது இணையடித் துகள்
அறியாமையில் மூழ்கியோருக்கு இருளகற்றும் ஒளிர்தீவாகவும்
அசைவற்றிருப்போர்க்கு நனவெனும் மலரின் மகரந்த ஒழுக்காகவும்
ஏழ்மையிலிருப்போர்க்கு விரும்பியதையளிக்கும் அருமணியாகவும்
பிறவிப்பெருங்கடலில் மூழ்கியோர்க்கு அழிவிலிருந்து உலகைக்காத்த
வராகத்தின் கொம்பாகவும் இருக்கிறது.
**
“அர்ஜுனா, துயருற்றோர், அறிவுத்தேட்டம் கொண்டோர், வாழ்வின் நன்மைகளை நாடுவோர், விவேகிகள் என்ற நான்கு வகை மக்கள் என்னை உளம்கொள்கின்றனர்” – இது பகவத்கீதையில் கிருஷ்ணன் சொல்வது. இதே போன்ற நான்குவகை மக்கள் தேவியின் திருவடிகளில் அடைக்கலம் பெறுவதை சௌந்தர்யலஹரீயில் காண்கிறோம். பிறப்பிறப்பு, கர்மவினைத் தொடர்ச்சி என்பனவற்றால் ஆன, அனைத்துவகை இருமைகளாலும் நிரம்பிய இவ்வுலகு சம்சாரம் அல்லது பவா*ப்தி (இருத்தல் எனும் ஆழி) எனப்படுகிறது. தூய ஆன்மாவின் மேல் வைக்கப்படும் இவ்வியல்நிகழ்வு அறியாமையால் (அவித்யா) தோன்றுவது. வேதாந்தத்தில், தனி மனதில் ஏற்படக்கூடிய பிழை அவித்யா எனப்படுகிறது; பிரபஞ்ச மனம் அல்லது கடவுளின் (ஈஶ்வரன்) மனதில் தோன்றும் பொதுவான பிறழ்வு மாயை எனப்படுகிறது. தனியொருவனின் அறியாமையே துன்பத்திற்கான ஆதி காரணம் என்பதால் முதலில் அறியாமையில் மூழ்கியிருப்போர் (அவித்யானாம்) சுட்டப்படுகின்றனர். பொதுவாக, தனியரின் ஆன்மா கடலின் மேற்பரப்பில் தோன்றும் அலையோடு ஒப்பிடப்படுகிறது. கடலின் நீரைத் தாண்டி அதற்கென பொருண்மையான இருப்பு ஒன்றில்லை. எனவே, இங்கே தனி ஆன்மாவின் அக-புறச் சூழல் இருண்ட கடலோடு ஒப்பிடப்படுகிறது. அன்னையின் அருள் ஒளிர்தீவொன்றில் தோன்றும் ஞாயிறாக உருவகிக்கப்படுகிறது. வடமொழியில் இருளை அகற்றுபவர் குரு எனப்படுகிறார். இங்கே தேடல்கொண்டவனின் இதயத்தில் உறையும் மெய் குருவாக தேவியே இருக்கிறாள். மந்திரம் என்பது இறைவியின் ஒலியுடல் என்பதால் இங்கே தேவியே குருவாக கருதப்படுகிறாள்.
இரண்டாவதாக குறிப்பிடப்படுவோர் மந்தமான அறிவாற்றல் கொண்டோர். வடமொழியில் ஜடம் என்பது இதற்கான சொல். சைதன்யம் என்பதன் எதிர்ச்சொல் ஜடம். சைதன்யம் என்பது உருவற்றது, ஜடம் என்பதன் முக்கியப் பண்பே அதன் நோயுற்ற தன்மை. விருத்தி என்பது நவீன உளவியல் கூறும் முன்வரையறை செய்யப்பட்ட நிலை (conditioned state). ஒருவரது அகம் குழந்தைப்பருவ மனப்பதிவுகளாலும், குறுகிய சமூக ஆசாரங்களாலும் நோயுற்றிருந்தால் அதற்கு முழுமுதலை தரிசிக்கும் விரிந்த பார்வை இருப்பதில்லை. அந்த நிலையில், ஒரு புதிய திறப்பு தேவைப்படுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது எல்லாவற்றையும் நன்மை, அழகு என்ற விழுமியங்களின் வெளிப்பாடுகளாக ஒருங்கமைக்கும் தொடர் செயல்பாடே. அத்தகைய புரிதலுக்கான திறப்பைத் தேடி ஏங்குவோர் வாழ்வின் இடர்களை அதிகமாகவே உணர்வார்கள். அத்தகைய ஒருவர் உண்மையை அறிய தன்னால் இயலவில்லை என்று புலம்புகிறார். அதற்கான தூண்டலை அருளும்படி இறைவனை வேண்டுகிறார். ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் இடம்பெறும் காயத்ரி மந்திரம் இதையே வேண்டுகிறது. அக இருட்டை நீக்கி அறிவாற்றலைத் தூண்டும்படி இறையொளியிடம் கோருகிறது. நாராயண குரு அத்தகைய திறப்பொன்றை விவரிக்கிறார்:
ஓராயிரம் சூரியன் ஒன்றாகச் சேர்ந்து
ஒரேசமயம் எழுவதுபோல ஞானமது எழும்
அறிவினை மூடியிருக்கும் நிலையாமையே மாயை என்பது
அவ்விருளினைக் கிழித்தெழுவான் ஆதிசூரியன்
(ஆத்மோபதேச சதகம் – பாடல் – 35)
இந்தக் கருணையே நனவெனும் புனித மலரின் தேனொழுக்காகக் குறிப்பிடப்படுகிறது.
இங்கே ஏழைகள் என்று சொல்லப்படுவோர் வாழ்வின் நன்மைகளை நாடுவோர் (அர்த்தார்த்திகளை போன்றோர்). அன்றாட வழக்கில் இது செல்வம் நாடும் எளியோரை குறிப்பதாகத் தோன்றினாலும் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்றை குறிக்கிறது. செல்வச் செழிப்பில் திளைப்பவனுக்கு தான் அனுபவிப்பதில் ஆன்மிகச் சிறப்பு ஒன்றுமில்லை என்று தோன்றும் தருணம் ஒன்று உருவாகும். அப்போது அவன் தன்னை இழிந்தவனாக மதிப்பற்றவனாக உணர்கிறான். இத்தகைய ஆன்மீக ஏழ்மை குறித்த விழிப்புணர்வுக்கு உதாரணமாக தன் செல்வ வாழ்வை உதறி யேசு கிறிஸ்துவை நோக்கி சென்ற மேரி மகதலேனாவை சொல்லலாம். அத்தகைய திருப்புமுனைத் தேடலின் நிறைவேற்றமே சிந்தாமணியில் இருந்து வரும் அருள் என்கிறது இப்பாடல். வடமொழியில் சிந்தா என்பது கடந்தகாலத்திற்காக வருந்தும், எதிர்காலத்தை எண்ணி பதற்றம் கொள்ளூம் மனதை குறிப்பது. மணி என்பது அருமணியை குறிப்பது. இங்கே, அதனை கடந்தகாலத்தின் துயர்களை நீக்கும், எதிர்கால விழைவுகளையெல்லாம் நிறைவேற்றும் அருளாக புரிந்துகொள்ளவேண்டும்.
இன்னொரு வகையில் சிந்தாமணி என்பதை ஒருவரது விழுமியத்தின் சாரமாக கொள்ளலாம். ஒரு பொருளின் புறவயமான மதிப்பை காணும்போதுதான் அதை அடைய விழைகிறான் மனிதன். முறையான தியானம் மூலம் அகம்-புறம் என்ற இருமையை கடக்கும்போது தன் சுயம் என்பதைவிட மதிப்புள்ளது வேறொன்றில்லை என்பதை அவன் உணர்கிறான். அதாவது, சிந்தாமணியை தன்னுள் கண்டடைகிறான்.
இந்திய மறைநூல்களின்படி வாழ்வின் அறுதிக் குறிக்கோள் என்பது தன்னை அறிதலும், அனைத்துப் பிணைப்புகளிலிருந்தும் முன்வரையறைகளிலிருந்தும் விடுபடுதலுமே. கட்டுண்ட மனநிலை என்பது இங்கே சம்சாரமெனும் ஆழியில் மூழ்கியிருப்பவர்கள் என்று சொல்லப்படுகிறது. அனைத்து மதங்களும் இறைவனை மீட்பவன் என்று குறிப்பிடுகின்றன. தனியனின் மீட்பில், தேடல் கொண்டவனளவுக்கே இறையும் ஆர்வம் கொண்டிருக்கிறது. எனவே அருளென்பது இங்கே தேடல் கொண்டவனின் காலடியிலிருந்து எழும் உண்மையான மீட்புக் காரணியாக சுட்டப்படுகிறது. அன்றாட நிகழ்வுகள் மெய்த்தேடல் கொண்டவனின் காலடிகளை மீட்பின் பாதைக்கு இட்டுச் செல்லும் என்பதே இங்கே உணர்த்தப்படுகிறது. எனவேதான் விஷ்ணுவின் அவதாரமான வராகமென்னும் பன்றியின் தேற்றையோடு அது ஒப்பிடப்படுகிறது.
இங்கு தியானத்திற்கான யந்திரம் ஶ்ரீ சக்ரத்தின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் இருக்கிறது. ஒன்றையொன்று குறுக்கிடும் இரு சமபக்க முக்கோணங்களை கொண்டது. ‘ஶ்ரீம்’ என்பது பீஜ மந்திரம்.