ஶ்ரீசக்ர தியானம் – 2

அ: ஶரீராகர்ஷிணீ

முப்புரங்களையும் எழிலூட்டுபவளே! உயிர் ஒவ்வொன்றிற்கும் உடலொன்றை அளித்து இவ்வுலகைப் படைத்து ஒவ்வொன்றையும் காப்பவள் நீ. என்றென்றைக்கும் நன்றியோடு உன்னை பணிகிறேன். உன் கருணை மகத்தானது. சிவ-சக்தி இணைவின் மையமான பிந்துவில் வெறும் இயல்கைகளாக இருந்த விந்துவும் கருமுட்டையும் உன் கவர்ச்சியின் ஆற்றலால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொழிற்படுத்தப்படுகின்றன. புலனுறுப்புகளும், செயலுறுப்புகளும், அக உறுப்பின் நான்குநிலைகளிலான இயக்க ஒழுங்கமைவும் கொண்ட உடலுடன் கூடிய உயிராக வளரும் நல்லூழை ஒரு உயிரணுவுக்கு அளித்தாய். இந்த ஒற்றை உயிரணுவைக் கொண்ட உடல், உன் விருப்பப்படி, உன் வழிகாட்டலில் அருமையான நலன்கள் கொண்ட எனது இவ்வுயிரென மலர்ந்துள்ளது.

விரிஞ்சி (பிரம்மன்) உன் தாமரயடிகளிலிருந்து எடுத்த துகள்களைக் கொண்டு அக்கறையோடு இந்த அண்டத்தின் உடல்களை இடையறாது படைத்துக்கொண்டிருக்கிறான். தன் கருணையால் அவன் தன் படைப்பில் என்னையும் சேர்த்துக்கொண்டதால் இவ்வுலகில் வாழவந்த பல்லாயிரம் உயிர்களில் ஓர் எளிய உயிரியாக நானும் இருக்கிறேன். எவ்விதத் தூண்டலுமின்றி, என்னையறியாமல் தன்னுணர்வற்ற ஆழ் மௌனத்தில் என் தாயின் கருவில் நான் கிடந்தேன். அந்நாட்களில் என் புலன் நலன்களை என்னுள் ஒருங்கமைத்தவள் நீ. என் செயலுறுப்புகளின் இயக்கத்தை கச்சிதமாக ஒருங்கமைத்தவள் நீ. இவ்வுடலை அடைகையில் நான் தன்னந்தனியனாய் இருந்தேன். நீ என்னை ஒரு மானுடனெனப் படைத்து இக் கால-இட வெளியில் சேர்த்து, உன் படைப்புக் காட்சியகத்தை அலங்கரிக்கும் எண்ணிறந்த பிற உயிரிகளுடன் நான் என் மகிழ்வையும் துன்பத்தையும் பகிர்ந்துகொள்ளும்படி செய்திருப்பது பெருவிந்தைதான். 

முடிவிலா வெளியில், நனவின் ஆழுறக்கத்தில் ஒரு அசைவை நீ உண்டாக்கினாய். அந்த அசைவு தொடர்ந்து ஒலிக்கும் அலையானது. ஆதி படைப்பியக்கமானது. பருவெளியின் அதிர்வுகள் இன்னிசையோடு தோன்றின. ஒன்றன் அலைவரிசை மற்றொரு அதிர்வின் அலைவரிசையிலிருந்து வேறுபட்டது. இப்படியாக, ஒலிக்கோவையாலான உலகில் நான் வந்து பிறந்தேன். சுதி வேறுபாடுகளையும் ஒலிதரும் பொருள்களையும் உணரும் மதிநுட்பத்தை விரைவிலேயே நீ எனக்கருளினாய். ஒலிகள் ஒவ்வொன்றின் பொருளும் இருத்தலியல் மெய்மை கொண்ட கருத்தாக்கங்களாக என்னுள் தங்கிவிட்டன.

ஆக, பிரம்மனுடன் நானும் ஒரு படைப்பாளி ஆகிவிட்டேன். படிமங்களையும் குறியீடுகளையும் படைத்து இவ்வுலகை மேலும் சிறப்புறச் செய்கிறேன். இதனால் நான் வாழும் இவ்வுலகு ஒவ்வொரு கணமும் கவிதையாக, பாடலாக ஆகிறது. கருத்துக்கள் பெருகி என் நினைவு செழிப்படைகிறது. நான் இயங்கும் நினைவின் இறைவனான விஷ்ணுவுக்கு உதவும் கருவியாகிறேன்.

என் மனதில் நான் சேமித்து வைத்திருக்கும் பயனற்ற உதிரி எண்ணங்களையும் உருவங்களையும் ஒரு நாள் உன் பேரிறையாகிய பரமேஶ்வரன் சாம்பலென ஆக்கி தன் உடலில் பூசிக்கொள்வான். அப்பேரழிவு நாளில் அனைத்தும் மறைந்த பின்னரும் உன் இறைவனின் நெற்றியில் நான் தூசாக எஞ்சுவேன். அதன் மூலம் நான் மாயையிலிருந்து மெய்மைக்கும், இருளிலிருந்து ஒளிக்கும், இறப்பிலிருந்து இறவாமைக்கும் செல்வேன்.

ஆகவே, அன்னையே, உன்னுடனான எனது அணுக்கம் ஒருபோதும் மறையப்போவதில்லை. படைப்புச் சுழற்சியின் ஊழிப்பெருக்கிலும் உன்னுடன் சேர்ந்து நானும் உனது மெய்யான இருப்பான ஆழ் நனவிலிக்குள் செல்வேன்.

|| அ: ஶரீராகர்ஷிணீ ||

Leave a comment