தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண பங்கேருஹப*வம்
விரிஞ்சி: ஸஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம்
வஹத்யேனம் ஶௌரி: கத*மபி ஸஹஸ்ரேண ஶிரஸாம்
ஹர: ஸம்க்ஷுத்யைனம் ப*ஜதி ப*ஸிதோத்தூ*லன விதி*ம்
பாடல் – 2
உன் தாமரை இணையடிக் கீழிருந்து மென்பொடி சேர்த்தெடுத்து
இவ்வுலகெலாம் படைக்கிறான் பிரம்மன்
அவை தம்மில் கலந்து குழம்பிவிடாமல்
அனந்தனின் ஆயிரம் தலைகொண்டு காக்கிறான் விஷ்ணு
அப்பொடியை மேலும் நுண்ணிதாக்கி
உடலெங்கும் பூசி அணிசெய்துகொண்டு
ஊழ்கத்திலிருக்கிறான் சிவன்.
**
இந்திய மதச் சடங்குகளிலும் பக்தி வழிபாடுகளிலும் இறைவனின் திருவடிகளை வணங்குவதே தொடக்கமாக இருக்கும். அதேபோல், சீடன் குருவை சந்திக்கையில் அவர் பாதம் பணிகிறான். இங்கே பாதம் என்பது ஆன்மீகப் பாதையை குறிக்கிறது. குரு நடப்பது பிரம்மத்தின் பாதையில். வடமொழியில் ‘சர்ய’ என்பது பாதையை குறிக்கும் சொல். ஆக, பிரம்மத்தின் பாதையில் நடப்பது பிரம்மசர்யம், குருவானவர் ஒரு பிரம்மசாரி. மெய் மண் பட விழுந்து வணங்குவதன் மூலம், பாதம் பணிவதன் மூலம் குரு செல்லும் பாதையை தான் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கிறான் சீடன். இங்கு பிரபஞ்ச அன்னையின் பாதங்கள் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் ஊற்றுமுகமாக வணங்கப்படுகின்றன. இந்தப் பாடலோடு தியானிப்பதற்கென பரிந்துரைக்கப்படும் யந்திரம் பிரம்மன், விஷ்ணு, மஹேஶ்வரன் ஆகியோரின் இம்முத்தொழில்களின் குறியீடாக உள்ளது. தலைகீழ் முக்கோணமாக இது வரையப்படுகிறது. இதில் ஏறுமுகமான இடதுபுறம் பிரம்மனையும், அடித்தளம் விஷ்ணுவையும், ஏறுமுகமான வலதுபுறம் ருத்ரனையும் குறிக்கின்றன.
‘ஹ்ரீம்’ என்பது இங்கே பீஜ (கரு) மந்திரம். இந்த யந்திரத்தின் துணையோடு, ஒருவரது கீழ்மை நிறைந்த வேட்கைகளை மேன்மையான தளமொன்றிற்கு எடுத்துச் செல்வதற்காக செய்யப்படும் தாந்த்ரீக தியானத்தில், அண்டம் முழுதும் பரவியிருக்கும் இயல்நிகழ்வுகள் அனைத்தும் பிரபஞ்ச அன்னையின் திருவடிகள் மீது படிந்த மென் துகள்களாக உருவகிக்கப்படுகின்றன. தேவியின் இணையடிகள் ஒரு தாமரையெனவும், துகள்கள் அத்தாமரையடிகளின் மகரந்தமெனவும் கொள்ளப்படுகின்றன. பூந்தாது செழிப்பை குறிப்பது. அதன் மிகுதி இனப்பெருக்க வளமையை சுட்டுவது. அண்டத்தில் உள்ள உலகுகள் முடிவற்றவை என்பதால் அவை பாதம் மீது படிந்த எண்ணற்ற துகள்களாக கொள்ளப்படுகின்றன. அவற்றை தியானிப்பது மனதை முடிவற்ற பிரபஞ்ச வெளியிலிருந்து மிக நுண்ணிய புள்ளியை நோக்கி நகர்த்துவது. குறுக்கல்-விரித்தல் என்ற செயல்முறை வழியாக இயல் உலகில் உள்ள தனிப்பட்ட பண்புகள் எல்லாம் மெய்யானவை அல்ல, அவை வெறும் தோற்றங்களே என்பது உணர்த்தப்படுகிறது.
வினைமுதல் மிகமிகச் சிறிதாக இருந்தாலும் விளைவு கால-இட வெளியில் அனுபவத்தால் அறியப்படக்கூடியதாக இருக்கிறது. நடைமுறை தளத்தில் செல்லுபடியாகும் தகுதி அதற்கு ஏற்படுகிறது. ஆகவே, அனைத்துச் செயல்களும் பொருட்களுக்கு நடைமுறை இருப்பை உண்டாக்குவதற்கும் அத்தகுதியை தக்கவைப்பதற்கெனவுமே நடைபெறுகின்றன. இங்கு, விஷ்ணு மிகுந்த இன்னல்களுக்கிடையே, தன் ஆயிரம் தலைகள் கொண்டு ஒருவாறாக இந்த உலகுகளை பாதுகாக்கிறான் என்பது வலியுறுத்தப்படுகிறது. தனிப்பண்பு எதுவும் முழுமுதலின் இயல்பல்ல. எனவே, இயல்நிகழ்வுகள் மாற்றம் பெறாமல் இருப்பதும் இயல்பானதல்ல. மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்பதோடு, அது முழுமையான இன்மையில் போய் முடிவதும் கூட. எனவேதான், அழிக்கும் கடவுளான ருத்ரன் அண்டங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் சேர்த்து முன்னினும் நுண்ணிய துகள்களாக்கி தன் நெற்றியில் அணிந்துகொள்கிறான் என்று கூறப்படுகிறது. பிரபஞ்ச அன்னையின் காலடியிலிருந்து எடுக்கப்பட்ட, தொடர்ந்து உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும் பூந்தாது இறுதியில் சிவனின் – முழுமுதலின் – நெற்றியில் மாற்றமில்லா நிலையை அடைகிறது.
முதல் பாடலுக்கான உரையில் பட்டியலிடப்பட்ட வகைமைகள் இந்த தியானம் மூலம் முறையான மீள்பார்வைக்கு உள்ளாகின்றன. அத்தகைய ஒரு உளப்பயிற்சி மூலம் புலன் சார்ந்த, உளரீதியான கவனச்சிதறல்களை களைய முடியும். இந்த தியானத்தின் நோக்கம் நிறைவேற பிரபஞ்ச அன்னை மீதான முதல் துதியின் நடு மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. முதல் துதி என்பது இங்கே ‘பாலா’ என்பதை குறிக்கிறது. பாலா என்றால் சிறுமி என்று பொருள். முதலில் பிரபஞ்ச அன்னையானவள் ‘ஐம் ஹ்ரீம் சௌம்’ என்ற சிறப்பு மந்திரம் மூலம் சிறுமியாக துதிக்கப்படுகிறாள். இந்த மந்திரத்தை முறையாக குருவிடமிருந்து பெற்ற பிறகு, ‘ஹ்ரீம்’ என்ற பீஜ மந்திரத்தைக் கொண்ட யந்திரத்தை பயன்படுத்த வேண்டும். மெய்த்தேட்டம் கொண்டவன் எளிதாக தன்முனைப்பை அழித்து கால-இட பரிமாணங்கள் அற்ற நனவு நிலைக்குள் அனைத்தையும் அடக்கிவிடும் நிலை ஏற்படும் வரை இதை பயில வேண்டும். இதன் உடனிகழ்வாக, அனைத்திலும் திகழும் பிரபஞ்ச ஆன்மாவோடு அவன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் விழிப்புணர்வும் செறிவடைகிறது.