ஶ்ரீசக்ர தியானம் – 1

அம் காமாகர்ஷிணீ

படைக்கும் தொழிலை பேரன்புடன் நிகழ்த்துபவளே! அன்னையே,  ஒத்திசைவு விதியென தன்னை வெளிப்படுத்திக்கொள்வதும், பரமேஶ்வரன் எனப்படுவதுமான முழுமுதலுக்கும் தொடர்ந்து எய்தப்பெறும் நலன்களுக்கும் இடையிலான பிணைப்பை உன்னில் நான் காண்கிறேன்.  நலன்கள் ஒவ்வொன்றும் உன் மனம் மயக்கும் தொடுகையால் அருளப்படுகின்றன. உன் தொடுகை கழி நிகழ் எதிர்வென்னும் முக்காலங்களையும் எழில்பெறச் செய்கிறது.

மாறிக்கொண்டே இருக்கும் உருவங்களை உயிர்ப்பூட்டும் மீ ஆன்மாவே, பேரொளியே, உன் தாமரையடிகளுக்கு என் வணக்கம். நான் அப்பாவிதான், அறிவிலிதான் என்றாலும் பேரிறை மேல் நீ கொண்ட பற்றில் நான் ஒரு கனல்பொறி என்பதை தெளிவாகவே உணர்ந்திருக்கிறேன்.

கைலாயத்தின் சோலையில் எல்லா விருப்புகளையும் ஈடேற்றும் தருவாக இறைவன் உருவகிக்கப்படுகிறான். அந்த மரத்தை பற்றிப் படரும் பொற்கொடியாக நீ விளங்குகிறாய். அப்பேரின்பக் கொடியில் மலரும் ஒரு  மொட்டாக நான் இருக்கிறேன்.

‘அம் காமாகர்ஷிணீ’ எனும் மந்திரத்தை நான் ஓதுகையில், விரும்பத்தக்க  நாட்டங்கள் மட்டுமே என் உளத்தை நிறைப்பதாக! அந்த நாட்டங்கள் அறத்தொடு பொருந்தியவையாக, உன் அருளால் ஈடேற வேண்டும் என நான் எண்ணும் எனது விழைவுகளுக்கெல்லாம் மீபொருள் அளிக்கக்கூடியவையாக அமையட்டும். அவ்விருப்பங்கள் ஒவ்வொன்றும் உள்ளார்ந்த அன்போடும் பக்தியோடும் நான் உன்னை அர்ச்சிக்கும் புதுமலர்களாக இருக்கட்டும்.

என்னுள்ளிருக்கும் அறங்களெல்லாம் பேரன்போடும் அக்கறையோடும் நீ என் அகத்தில் விதைத்த உன் விருப்பமெனும் விதைகள். தீயவை எனும் முட்புதர்கள் பெருகி, நன்மைகள் என்னும் அவ்விதைகள் முளைத்து வளர்வதை தடுத்துவிடாமல் பாதுகாப்பாயாக! என்னை உன்னிடமிருந்து அயன்மைப்படுத்தும் எதுவும் என்னில் தோன்றினால், அவற்றை என் எண்ணங்களிலிருந்தும், வாக்கிலிருந்தும், செயல்களிலிருந்தும் களைய எனக்கு உதவிபுரிவாயாக! ஒழுக்கத்திலும், ஆன்மீகத்திலும் என் தேர்வை செயல்படுத்த உன் அறிவாற்றல் எனக்கு எப்போதும் வழிகாட்டட்டும். நான் ஆற்றவேண்டியவை ஒவ்வொன்றும் நேர்வழியில் நான் செல்வதற்கான ஊர்தியாய், என் வாழ்வை நிறைவடையச் செய்வதாய் அமையட்டும்.

என் அறியாமையால், சுயநலத் தேட்டத்தால் நீ ஏற்காத ஒன்றை நான் விழையக்கூடும். அங்ஙனம் ஒரு பின்னடைவு நிகழ்கையில், என் விழைவுக்கு உன் அருள் இல்லை என்பதை நான் உடனடியாக உணரும்படி செய்வாயாக! அப்போதுதான் நான் என்னை திருத்திக்கொள்ளவும், ஒழுங்கமைத்துக்கொள்ளவும் இயலும். உன் ஒளியின் ஒரு பொறி என் விழிக்கு ஒரு மின்னை தருகையில், உன் தூண்டல் என் சொற்களுக்கு உண்மைத்தன்மையை அளிக்கையில், நீ என்னுள் பாய்ச்சும் ஆற்றல் என் செயல்களை சால்புகொண்டவையாக ஆக்குகையில் மட்டுமே நான் உன் அருளைப் பெற்றவனாக, அதை என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு கடத்தும் தகுதிகொண்டவனாக ஆகிறேன். என்றென்றும் உனது கருவி என நான் போற்றப்படவேண்டும். இந்த ஒரு விழைவு மட்டுமே என் அகத்தில் திகழும்படி அருள்வாயாக!

மெய்ப்பொருளும் நீயும் இணைகையில் தோன்றும் உருவ வெளிப்பாடே என் தாய்தந்தையர் என நான் கண்டுகொள்ள, சிவ-சக்தி இணைவில் தோன்றும் அன்பு எனக்கு அருளட்டும். அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடையவனாக இருப்பேனாக!

உன் தாமரை இணையடிகளிலிருந்து எடுத்த நுண்ணிய தூசித் துகளினைக் கொண்டு எனது இந்த உடலை படைத்திருக்கிறான் பிரம்மன். என் கூரையென அவன் படைத்துள்ள இந்நல்லுலகு எனது இப்பிறவியின் சரணாலயமாகத் திகழ்கிறது. நீ வழங்கும் அறிவின் உறுதிப்பாட்டோடும், நீ அருளும் அச்சமின்மை எனும் பாதுகாப்போடும், நீ விழையும் காலம் வரை நான் இங்கு வாழ்ந்திருப்பேனாக!

|| அம் காமாகர்ஷிணீ ||

சௌந்தர்யலஹரீ – முதற் பாடல்

Leave a comment