இந்துமதம் – 5. சரஸ்வதி

சரஸ்வதி

கணபதிக்குப் பின் சரஸ்வதி தேவி வருகிறார்.  குருவைத் தொடர்ந்து ஞானம் வருவது இயல்பானதே.  அனைவராலும் சரஸ்வதி ஞானத்தின் கடவுளாக வணங்கப்படுகிறார்.  இந்து மதத்தில் சரஸ்வதி என்ற இறை உருவகத்தின் தோற்றம் குறித்த காலவரிசைச் சித்திரம் மிகவும் ஆர்வமூட்டுவது.  அவர் ஒரு வேதகால தேவதை அல்ல.  இந்திய இறைத் தொகையில் சரஸ்வதி இதிகாச காலகட்டத்தில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறார்.  இக்காலகட்டம் இந்துமத இயக்கத்தில் ஒரு மாபெரும் மாற்றம் மற்றும் மறுமதிப்பீடு நிகழ்ந்த காலமாகும்.  அதன் வழிபாட்டுச் சடங்குகள், குறிப்பாக உயிர்பலி தீவிரமாக மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.  இது மகாபாரத இதிகாசத்தில் வரும் பல்வேறு நீதிக்கதைகளில் புலனாகும்.  மகாபாரதத்தின் குறிப்பிடத்தக்க பகுதியான கீதை, பலி முதலான சடங்களுக்குப் பதிலாக,  இலை, பூ, பழம் மற்றும் நீர் இவற்றை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைப்பதைப் பற்றிப் பேசுகிறது.  பலி (யக்ஞா) பற்றிய மறுமதிப்பீட்டின் போது, “எவ்வித பொருள் பலியை விடவும் அறிவுப் பலி உயர்ந்தது”  என்று அது கூறுகிறது.  கர்ம காண்டத்திலிருந்து (சடங்குகளின் பகுதி) ஞான காண்டம் (ஞானம் பற்றிய உரையாடலின் பகுதி) வரையான நகர்வு, சரஸ்வதியை நீக்கமற எங்கும் நிறைந்து ஒளிரும் அறிவின் சுடராக, என்றென்றைக்குமான படைப்பூக்கமாக நிறுவுகிறது.  இந்திய ஆன்மிக சிந்தனை தளத்தில் சரஸ்வதி தேவியின் அறிமுகம், அதன் கலை இலக்கியம் மற்றும் தத்துவ தளங்களில் ஒரு பொற்காலத்தை தொடங்கிவைத்தது எனலாம். இது இந்தியாவின் பண்பாட்டு, ஆன்மீக மதிப்பீடுகளை வேதகாலம் மற்றும் அதற்கு முந்தைய கால நாகரிகங்களில் தொடங்கி இந்நாள் வரை ஒரு சீரான இணக்கமாகத் தொகுக்கிறது ஆன்மீக ஒருமைப்பாட்டிற்கு அடித்தளமிடுகிறது.

உள்ளார்ந்த இறைமை (Hypostatic)

சரஸ்வதி தீவிர உலகியல் பற்றுடையவர்களின் தெய்வம் அல்ல.  அவரது தளத்தை, பிளேட்டோ குறிப்பிடும் “அறிவுலகு” (The world of intelligibles) என்று வகுத்துக் கொள்ளலாம்.  தேவைகளின் தளத்தில் சரஸ்வதி இல்லை.  இதைத்தான் இந்தியாவில், உலவும் ”சரஸ்வதியின்  பக்தர்கள் வறுமையை பெருமையாகக் கொள்ளவேண்டும்”  என்ற பழமொழி குறிப்பிடுகிறது.  அவரது வாகனமான அன்னப்பறவை அவரது  உள்ளார்ந்த இறைமை (hypostatic)  குணத்தைக் குறிக்கும்.  அன்னப்பறவை காற்று மற்றும் நீரில் இயங்கும் ஒரு பறவை.  நீர் என்பது உயர்ந்த பக்தியையும், காற்று என்பது உள்ளுணர்வையும் சுட்டுவதாகக் கொள்ளலாம்.   அதாவது சரஸ்வதி, நமது உணர்ச்சிபூர்வ மற்றும் உள்ளுணர்வு சார்ந்த வாழ்வை நெறிப்படுத்துகிறார்.  அவரது கனிவு, உள்ளுணர்வாகிய அன்னத்தில் பறந்து நம்மை நோக்கிக் கீழிறங்குகிறது. ஆகவே அவர் உள்ளார்ந்த இறைமைத்தன்மை கொண்டவர்.

நிறமற்ற தன்மை

சரஸ்வதி கண்ணாடிப் படிகம் போல நிறமற்றவர்.  ஆனால் முப்பட்டகம் (prism) போல நிறமாலையை உருவாக்குபவர்; நிறங்களாலான உலகைப் பெயர்களாக, வடிவங்களாகச் சமைப்பவர்.   அவரது மூடுபனி போன்ற முகத்திரை காலம் மற்றும் வெளியால் நெய்யப்பட்டது எனக் கொள்ளலாம்.  இந்த மர்மமான பனித்திரை, யதார்த்தத்தை மறைக்கும் அடிப்படையாகிறது (Avarana).  எட்டிங்டன் (Eddington) பொருள்வய பிரபஞ்சத்தை “பெரு வெளியின் சுருக்கங்கள்” என்று சொல்வதைப் போல, நாம் உணரும் புறத்தோற்றங்கள் யாவும், சரஸ்வதியின் முகத்திரை வடிவங்கள் என்று கொள்ளலாம்.  அவர் ஒளிபொருந்தியவை அனைத்தையும் துலக்கும் புலப்படா ஒளியாக இருக்கிறார்.  ஒளிகளின் ஒளி புலப்படாமலே இருக்கும் எனக் குறிப்பிட்டால் அது தவறாகாது.  உயர் அதிர்வலை கொண்ட “X” கதிர்களே வெற்றுக் கண்களுக்குப் புலப்படாமல் இருக்கும் போது பூரணத்தின் ஒளியைப்பற்றி என்ன சொல்வது..!

வார்த்தை

சரஸ்வதியைப் பற்றிய கவிதையொன்றில் ஒரு கவிஞர் “ஸ்போகத தர்சன கலா குதுகலா” என்று அழைக்கிறார். “ஸ்போகதா” என்றால் வார்த்தை அல்லது சின்னம் என்ற பொருள்படும்.  விழித்திருக்கையில் மனம் ஒரு போதும் எண்ணங்கள் ஒழிந்து காலியாக இருப்பதில்லை.  மூளையின் ஒவ்வொரு துடிப்பும் ஒரு எண்ணத்தின் அலகாக வெளிப்படுகிறது.  ஒவ்வொரு எண்ணமும் அவற்றிற்கேயான வடிவம், பெயர், தரம், மதிப்பு என்று ஒரு தனித்த பண்பையும், வேதனை, மகிழ்ச்சி, உதாசீனம் என ஏதோ ஒரு உணர்வையும் தனித்துவமாகக் கொண்டிருக்கின்றன.  இதனை திரையில் தெரியும் ஒரு திரைப்படத்தின் வெளித்தோற்றம் என்று கொள்ளலாம்.  காட்சிகள் பின்னால் இயங்கும் பட இயந்திரத்தால் உருவாக்கப்படுகின்றன.  ”ஸ்போகதா” என்பதை அவ்வாறு படங்களின் ஒரு தொடர் ஒளியை திரையில் காட்டும் பின்னணி இயந்திரத்துடன் ஒப்பிடலாம். இது எண்ணங்களின் ஒரு தொடரை விழித்திருக்கும் மனதில் நிகழ்த்துகிறது.   சரஸ்வதியின் மற்றொரு பெயரான “பாரதி” எனபதற்கு, “ஒளியூட்டுவதில் உவகைகொள்பவர்” என்பது பொருள்.  நமது மனங்களை தனது ஒளியால் நிரப்புவதில் சரஸ்வதி மகிழ்கிறார்.  புனித ஜான் தனது சுவிசேஷத்தை, “ஆதியில் வார்த்தை இருந்தது.  வார்த்தை தேவனோடு இருந்தது.  தேவன் வார்த்தையாயிருந்தார்” என்று தொடங்குகிறார்.  அது போல, பாரதி, ஒளி தருபவள் “வார்த்தைகளின் தேவதை” (வாக்தேவி), “கிர்வாணி” அல்லது “பிரணவ ஸ்வரூபிணி” என்று அழைக்கப்படுகிறார்.  “வாக்” மற்றும் “கிர்”  ஆகியவை வார்த்தையைக் குறிக்கும் சொற்கள்.  “பிரணவ” என்பது பூரணத்தைக் குறிக்கும் “அம்” (HUM) எனும் ஒற்றை ஒலியைக் குறிக்கிறது.  மாண்டூக்ய உபநிஷத்தில் ”அம்” எனும் சொல்லுக்கு ”பிரம்மன்” என்று அர்த்தம் கொடுக்கப்படுகிறது.  இவ்வாறு, சரஸ்வதி பிரம்மனும், பூரணமும் ஆகிறாள்.  அதனாலேயே “பிராமணி” என்று பெயர் பெறுகிறாள்.

எழுத்துக்களின் கோர்வை

சரஸ்வதி நான்கு கைகளுடன் காட்சி தருபவர்.  ஒரு கையில் எழுத்துக்களின் மாலையொன்றை தாங்கியிருக்கிறார்.   கீதையில் கண்ணன் “யாவும் என்னால் கோர்க்கப்படுகின்றன; முத்துக்களின் வரிசை ஒரு சரடால் கோர்க்கப்படுவது போல” (G VII – 7) எனக் குறிப்பிடுகிறார்.  சரஸ்வதி, மொழிகளின் எழுத்துக்கள் கோர்க்கும் அர்த்தங்களின் சரடைக் கொடுக்கிறார்.  மனித மனம் காணும் வெளித் தோற்றங்கள் பெயர், அது தொடர்புறுத்தும் எண்ணம் மற்றும் இவை இரண்டையும் உறுதிப்படுத்தும் ஆதாரமான ஒரு பருப்பொருள் ஆகிய மூன்று கூறுகளால் ஆனது.  இவ்வாறாக, யதார்த்தம் என்பது, திரித்து உணரப்படாத ஒன்றாக (Caitanya) இருப்பினும், அனுபவ உலகு, வியவஹாரா (vyavahara) என்பது வார்த்தைகளால் நெய்யப்பட்டுள்ளது.

கிளி

சரஸ்வதியின்  மற்றொரு கையில் கிளி இருக்கும்.  கிரேக்க தொன்மத்தில் வரும் “மினர்வாவின் ஆந்தை” *** ( Owl of Minerva ) என்ற படிமத்தை இதற்கு ஒப்பாகக் கொள்ளலாம்.  இது அவர் தரும் உள்ளுணர்வு சார்ந்த உத்வேகத்தைக் குறிக்கும் ஒன்று. “மனிதக் குரலை நகலெடுக்க முயலும் காற்றில் உலவும் பறவை.”  அந்தக் கிளி இவ்வாறு உள்ளுணர்வின் வழி உந்துதல் பெற்ற கலை எழுச்சியைக் குறிக்கிறது.  “கலை இயற்கையை நகலெடுக்க முயல்கிறது” என ஒரு வரையறை உண்டு.  கவிஞர்கள், சிற்பிகள், ஓவியர்கள் என்று அனைத்துக் கலைஞர்களும் இயற்கையை நகலெடுக்க, மறு ஆக்கம் செய்ய, எதிரொலிக்கவே ஓயாமல் முயல்கிறார்கள்.

*** கிரேக்க இறை தொன்மங்களில், அறிவின், ஞானத்தின், படைப்பூக்கத்தின் தேவதைஏதினா” , அவளுக்குமினர்வாஎன்றும் பெயர் உண்டுஅவளது சின்னங்களில் ஒன்று ஆந்தைஇருளிலும் காணும் தன்மையுடைய ஆந்தையை ஞானத்தின் தேவதை கொண்டிருக்கிறார்

வேதங்கள்

மற்ற இரு கைகளில் சரஸ்வதி கிரந்தங்கள் (வேதங்கள்) மற்றும் வீணையை ஏந்தியிருப்பார்.  வேதங்கள் காலாதீதமான வார்த்தைகளையும், வீணை நிகழ்காலத்தின் பேச்சுக்களையும், இசையையும் குறிக்கின்றன.  அதாவது, வேதங்கள் நித்திய சத்தியத்தையும், வீணை ஐந்து சுவரஸ்தானங்களின் ஒத்திசைவையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.  இந்த ஐந்து சுவரங்கள், வாழ்வின் பௌதிக, உணர்வுபூர்வ, அறிவார்ந்த, உள்ளுணர்வு சார்ந்த, மற்றும் ஆன்மீகம் சார்ந்த நோக்குகளின் ஒத்திசைவைக் குறிக்கின்றன.

பாதம் தாங்கும் வெள்ளை அல்லி மலர்

நீர் மலரான அல்லி, பக்தியின் தூய நிலையைக் குறிக்கிறது.  அல்லி சந்திர ஒளியில் உயிர்ப்பு கொள்கிறது.  சூரியன் உண்மையை அதி தூய நிலையில் குறிக்கையில், அதன் பிரதிபலிப்பாக சந்திரன், அதனை சாஸ்திரங்களாகத் தருகிறது.  சந்திரனால் விரியும் அல்லிமலர், இவ்விதம் சாஸ்திரங்களைத் துணையாகக் கொள்ளும் பக்தியை உணர்த்துகிறது.  சரஸ்வதியின் பக்தர்கள் தற்செயல்களால் ஆன வாழ்க்கையை வாழ்பவர்கள் அல்ல.  கீதையின் மொழியில் “சாஸ்திரங்களின் பாதையை விட்டு நெறி விலகிச் செல்வது தீமையான அசுர குணமாகும்.” (G – XVII – 5)

சாரதா க்ஷேத்ரம்

சரஸ்வதி ஒருமையின் ராணி (Queen Monad).  ஆம்! ஒருமைகளின் ஒருமையின் ராணி.  மிக்க ஒளி பொருந்தியவள், மேன்மையானவள்.  அவளது பேரொளியை அனைத்து ஜீவன்களும் பல தெளிநிலைகளில், நேர்த்தியின் பல கோணங்களில் பிரதிபலிக்கின்றன.  பூமியின் மண்மூடிய பரப்பு முதல், ஸ்ரீசங்கரரின் அதிநுட்பமான மூளை வரை  வேற்றுமைகள் முடிவற்றவை.  அவற்றுள், ஒளி பொருந்தியதும், தூயதுமாக எழுந்து நிற்பவை சாரதா ஆலையங்கள்.  அவற்றில் நாம் சரஸ்வதியின் கருணையும் ஒளியும் பொருந்திய வடிவைத் தரிசிக்கலாம்.

Leave a comment