மொழியும் பிரபஞ்சமும் – 1

சரித்திரத்தின் புலர்காலையில் எழுந்த பறவைக் குரல் ரிக்வேதம்.  அது இசையானபோது சாமம் ஆயிற்று.  சாம வேதத்தின் துணை நூலான பிரகதாரண்யக உபநிடதம் சொல்லுக்கும் பொருளுக்கும் இடையேயான உறவு பற்றிப் பேசும் இடம் மொழியைப் பற்றிய புராதன இந்தியச் சிந்தனையை அறிந்துகொள்வதற்குரிய சிறந்த தொடக்கப்புள்ளியாகும்.

பிரகதாரண்யக உபநிடதம் முதலில் சூனியத்தைப் பற்றிப் பேசுகிறது.  அந்த சூனியத்தின் பிரதிநிதியான மரணத்தைப் பற்றி விளக்குகிறது.  நிலம், நீர், வாயு, அக்னி, வானம் எனும் ஐம்பெரும் பருக்கள் உருவானதை சித்தரிக்கிறது.  அவற்றிலிருந்து பிரஜாபதி உருவானான். (உடல் வடிவான மானுடம்)  அந்த பிரஜாபதி பிறகு பிராணஸ்பதியானான் (உயிர் வடிவான மானுடம்).  பிராணஸ்பதி பிறகு பிராமணஸ்பதி – பிரபஞ்சத்தின் மகத்தான ஒருமையை உணர்ந்து சாமத்திற்குரியவன் – ஆனான்.  சம பாவனையே சாமம்.  பிரகதாரண்யக உபநிடதத்தில் ஒன்றாம் அத்தியாயத்தில் மூன்றாம் பிராம்மணத்தில் இருபத்துமூன்று வரையிலான நான்கு மந்திரங்களில் இந்தப் பரிணாமத்தின் சித்திரம் உள்ளது.

இதுவே பிரஹஸ்பதி

சொல்லே பிரம்மாண்டம்

அதற்கு இதுவே அதிபதி

எனவே இது பிரஹஸ்பதி

மானுடத்திற்குள் பிராணன் இயங்குகிறது.  பிராணன் என்றால் உயிர் மூச்சு.  அந்த பிராணனே பிரம்மாண்டத்திற்கு அதிபன்.  அந்த பிராணனே சொல்லாகவும் ஆகிறது.  எனவே சொல்லே பிரம்மாண்டத்தை ஆளும் பிருஹஸ்பதியாகும் (பிருஹத் என்றால் பிரம்மாண்டம்.  பதி என்றால் அதிபன்).

பிறப்பெடுப்பதை ‘பிரஜனம் செய்தல்’ என்று கூறுவோம்.  பிறப்பவன் பிரஜை.  ஆணின் விந்து முதல் பெண்ணின் கருவறை வரை விந்துவில் உள்ள உயிர்த்துளி நகர்ந்தாக வேண்டும்.  அதற்கு வழிகாட்டிகள் இல்லை.  துணை இல்லை.  தடைகள் உண்டு.  அவற்றைத் தாண்டி அது தன் அடுத்தகட்ட வளர்ச்சியைக் கண்டடைய வேண்டும்.  வாழ்க்கை பூரணமான தனிமையில் தொடங்குகிறது, முடிகிறது.  பிறந்தெழும் உயிரில் அதன் சிருஷ்டிகர்த்தனும் உள்ளடங்கியுள்ளான்.  அவனே பிரபஞ்சத்தின் பருப்பொருட்களிலிருந்து தன் சுய இச்சையினால் தன்னை பிறக்கச் செய்தான் என்கிறது உபநிடதம்.

பிரபஞ்சத்தில் நிரம்பியுள்ள உயிர் நிகழ்வில் மூன்று அம்சங்கள் உள்ளன.  ஒன்று, படைப்பாக்கம்.  இரண்டு, அதனூடாக தன்னைப் படைத்துக்கொள்ளும் பிரஜாபதி.  மூன்று, படைப்புக்கும் பிறகு உருவாகும் அனைத்து உயிர்ச்சிக்கலுக்கும் அடிப்படையாக அமையும் சிருஷ்டியின் விளையாட்டு (லீலை).  பிரஜாபதி தன் உள்ளார்ந்த இச்சையால் பிறந்தவன்.  ஆனால் மாறாதவன் அல்ல.  முடிவடையாதிருக்க வேண்டுமெனில் அவன் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கவும் வேண்டும்.  மரணமும் பிறப்புமாக ஒரு தொடரை அவன் உருவாக்க வேண்டும்.  இவ்வாறு தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் பிரஜாபதியில் மாறாதிருப்பது பிராணன்.  அதை அங்கிரீசன் என்று உபநிடதம் குறிப்பிடுகிறது.  உடல் எனும் விளக்கிலெரியும் சுடர் அன்னத்தை (பருப்பொருளை) ஆக்கி உண்டு அவன் வாழ்கிறான்.  அவனே பிராணஸ்பதி.

இவ்வாறு பூமியில் நிரம்பியுள்ள பிராணஸ்பதி தன்னையும் உணர்வது எண்ணங்களின் மூலமே.  எண்ணங்களுக்கு சொற்கள் தேவை.  இவ்வாறு மொழி உருவாயிற்று.  பிராணஸ்பதிக்கு காரணமாகிய சாரமே சொல்லுக்கும் மூலம்.  எனவே சொல்லை பிரஹஸ்பதி என்று கூறலாம்.  பிரக்ஞையின் செயல்பாட்டில் ஆகச் சிறிய அலகு ‘வேறுபடுத்தியறிதல்’ ஆகும்.  இதை துண்டுபடுத்தியறிதல் (De-limitation) என்று மேற்கு குறிப்பிடும்.  வேறுபடுத்தியறிந்ததை அடையாளப்படுத்துதல் அடுத்த கட்டம்.  ‘இது இன்னது – ஆனால் இன்னதல்ல’ என்று பிரக்ஞை பிரபஞ்சத்தை அறிந்து அளக்கத் தொடங்குகிறது.  ஐம்புலன்களும் மனமும் உயிரும் இணைந்த ஓர் ஆளுமையாக தன்னை உணரும்போது பிரஜாபதி தன்னைச் சுற்றி வடிவங்களைக் காண்கிறது.  உடல்கள், பிற பருவடிவங்கள், தோற்றங்கள் என பலவகை வடிவங்கள்.  ஒவ்வொரு வடிவத்திற்கும் அது ஓர் ஒலியடையாளத்தை அளிக்கிறது.  அது நாமம் (அல்லது பெயர்).  ஒவ்வொரு பெயருக்கும் ஒரு விசேஷம் (அல்லது சிறப்பியல்பு) உள்ளது.  அவ்வியல்பு நேர்நிலையானதோ எதிர்மறையானதோ ஆகலாம்.  ஆகவே பெயர்களுக்கிடையில் சிறப்புக் குறிப்பும், வேறுபடுத்தும் குறிப்பும் தேவை.  இரண்டு பெயர்கள் எதிர்எதிராக நிற்கையில் தன்னிலையும் படர்க்கையும் உருவாகிறது.  இப்பெயர்களிலிருந்து செயல்கள் தனித்தறியப்படுகின்றன.  செல்களையும் இருப்புகளையும் இணைக்கும் பொருட்டு இணைப்புச் சொற்களும் வினைச்சொற்களும் பிறக்கின்றன.  இவ்வாறு பற்பல கூறுகளுடன் மொழி விரிந்து வருகிறது.  மொழியை அனைவருக்கும் பொதுவாக ஆக்கும்பொருட்டு இலக்கணம் உருவாகிறது.

குழந்தை மொழியினூடாக உலகை அடையாளப்படுத்துகிறது.  மொழியினூடாக வியவகார (புழக்க) உலகிற்குள் வருகிறது.  இந்தப் பரிணாமத்தின் விளைவாக அதன் சித்தம் மூன்று தளங்கள் உடையதாக ஆகிறது.  அவை ஜாக்ரத், ஸ்வப்னம், சுஷுப்தி (விழிப்பு நிலை, கனவு நிலை, ஆழ் மனநிலை).  விழியும் மனமும் திறந்திருக்கும் நிலையே விழிப்பு நிலை.  இதை ‘அ’ என்ற சொல்லால் அடையாளப்படுத்தலாம்.  கனவு நிலையில் தூல உலகம் சூட்சுமம் ஆகிவிடுகிறது.  அதற்கு ‘உ’ என்ற சொல்லை குறிப்பிடலாம்.  ஆழ்மனநிலையில் நாமறிந்தவையெல்லாமே உட்சுருங்கி எங்கோ மறைகின்றன.  அவை தங்கள் விதை வடிவுக்குத் திரும்புகின்றன.  மெளன வடிவமான ‘ம்’ எனும் அரைச் சொல் இதைக் குறிக்கும்.  இந்நிலையில் உலகம் அதன் காரண நிலையில் உள்ளது.  அந்தக் காரணம் தன்னுள் முடிவற்ற சாத்தியங்களை உள்ளடக்கியுள்ளது.  அதில் ஒரேயொரு சாத்தியமே நாமறியும் தூலப் பிரபஞ்சமாக ஆகியுள்ளது.  நமது மன இயக்கம் முதலிரு தளங்களில் மாறிமாறி அலைவதாக உள்ளது.  மூன்றாவது தளம் மெளனமாக கூடவே உள்ளது.  இதையே ‘ஓம்’காரம் சுட்டுகிறது – விரிவாக இதை மறுபடியும் பேசலாம்.

இவ்வாறு பிரக்ஞை இயங்குவதற்கு பருவடிவ சக்தியும், ரசாயன சக்தியும், உயிர்சக்தியும் இணையவேண்டியுள்ளது.  அந்த இணைவு ஐந்து பருக்களும் உருமாற்றம் கொள்வதனூடாக நிகழ்கிறது. இவ்வகை மாற்றம் மூன்று குணங்களின் இணைவு விகிதங்களில் ஏற்படும் பற்பல சாத்தியங்களினூடாக நிகழ்கிறது.  அவை சத்வம், ரஜஸ், தமஸ் என்று குறிப்பிடப்படுகின்றன.  (அமைதி நிலை, செயலூக்கநிலை, எதிர்இயக்க நிலை) இந்த மூன்று குணங்களின் அமைதியின்மையிலிருந்து அறிவின் தன்மைகளும் மாறிமாறி ஏற்படுகின்றன.

ஒருவனை நாம் அறிஞனாகவும் திடமானவனாகவும் உத்தரவிடும் வல்லமை கொண்டவனாகவும் அறியும்போது அவன்மீது மதிப்பு ஏற்பட்டு தலைவனாக ஆக்குகிறோம்.  அவனை துதிக்கவும் வழிபடவும் முற்படுகிறோம்.  அவ்வாறு வணக்கத்திற்கும் வியப்பிற்கும் உரிய மகிமைகளை மனம் திறந்து துதிப்பதே ரிக் வேதம்.  தன்னிடமிருக்கும் எளிய உடைமைகளை அம்மகிமைகளுக்கு முன் பூர்ண சமர்ப்பணம் செய்யவும் வணங்குபவன் முற்படுகிறான்.  எப்படி அந்த சமர்ப்பணத்தைச் செய்வது என்று விளக்குவதே யஜுர்வேதம்.  வணங்குபவனும் வணங்கப்படுபவனும் மகிழ்ந்து சமானமாக உணர்ந்து சேர்ந்திசைக்கும் ஆனந்த கீதமே சாம வேதம்.  அது ஒருமையின் லயத்தின் வேதமாகும்.

மூன்று வேதங்களினூடாக நாம் அடைபவை உலகியல் ரீதியான நன்மைகளும் ஆன்மீக ரீதியான சிறப்புகளும் மட்டுமேயாகும்.  இவற்றை சிரேயஸ், பிரேயஸ் என்று கூறுகிறார்கள். (செல்வமும் புகழும்)  இவையிரண்டுமே அழியக்கூடியவை.  மாறாததும் அழியாததுமான நன்மையானது ஞானத்தினூடாக இவ்விரு நாட்டங்களையும் ஒருவன் கடந்து செல்வதேயாகும்.  இதை நிஸ்ரேயஸ் (துறவு நிலை) என்கிறது உபநிடத மரபு.  அதை அளிக்கும் ஞானமே வேதாந்தம்.  அது வேதத்தின் இறுதியுண்மை.  அதைக் கூறுபவை உபநிடதங்கள்.  வேதாந்தம் வார்த்தையின் முடிவு.  எங்கு வார்த்தையும் பிரக்ஞையும் எதையும் கூறமுடியாது திரும்பி விடுகின்றனவோ அதற்கு அப்பால் வேதாந்த அனுபவம்.

Leave a comment